மங்கலான சுவர்களைக் கொண்ட இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் அஸ்லான் அஹமது தனது அறையின் ஒரு மூலையில் அமர்ந்து தனது கைபேசியை நோண்டிக் கொண்டிருக்கிறார். அவரது கைகள் நடுங்குகின்றன, அவர் தனது தாயிடம் காஷ்மீரி மொழியில் "எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை", என்று அழுகிறார். தனக்கு தலைவலி மற்றும் உடல்வலி இருப்பதாகக் கூறுகிறார். அவரது தாயார் சகீனா பேகம் தண்ணீர் கொண்டு வருவதற்காக சமையலறைக்கு விரைகிறார், அஸ்லானின் அழுகையை கேட்டு அவரது தந்தை பஷீர் அஹமது அறைக்குள் வந்து, போதைப்பொருளை உடனடியாக நிறுத்திவிட்டால் இத்தகைய அறிகுறிகள் இருக்கத்தான் செய்யும் என்று மருத்துவர்கள் அவருக்கு தெரிவித்ததாகக் கூறி, அவரை ஆற்றுப்படுத்த முயற்சிக்கிறார்.
காலப்போக்கில், சகீனா பேகம் மற்றும் பஷீர் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) 20 வயதாகும் அஸ்லானின் அறையை பூட்டு போட்டு பாதுகாக்கத் துவங்கினார்கள். தவிர அவர்களது வீட்டில் உள்ள 10 ஜன்னல்களும் மூடப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன. அவரது அறை, தாயின் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக, சமையல் அறைக்கு அருகிலேயே உள்ளது. "உங்களது குழந்தையை பூட்டி வைப்பதை போன்ற கொடுமையான விஷயம் வேறு எதுவும் இல்லை, ஆனால் எனக்கு வேறு வழியில்லை என்கிறார் சகீனா பேகம். எங்கே தனது மகன் வெளியே சென்றால் மீண்டும் போதை மருந்தை தேடுவானோ என்கிற அச்சம் அவரது குரலில் இருக்கிறது.
வேலை இல்லாமலும், பள்ளியைவிட்டு இடைநின்றவருமான அஸ்லான் ஹெராயினுக்கு அடிமையாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. இந்தப் பழக்கம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போதைக்காக ஷூ பாலிஷை நுகர்வதிலிருந்து துவங்கி, பின்னர் அபினி மருந்துகள் மற்றும் கஞ்சா ஆகியவை ஆகி இன்று ஹெராயினில் வந்து நிற்கிறது.
தெற்கு காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் சுர்சூ பகுதியில் வசிக்கும் அஸ்லானின் குடும்பத்திற்கு இந்த போதை பழக்கம் ஒரு பலத்த அடியாகும். 55 வயதாகும் நெல் சாகுபடியாளர் பஷீர், "எங்களிடம் இருந்த மதிப்பு மிக்க பொருட்களை எல்லாம், அது அவரது தாயின் காதணிகள் ஆகட்டும் அல்லது அவரது சகோதரியின் மோதிரம் ஆகட்டும், எல்லாவற்றையும் விற்றுவிட்டார்", என்று கூறுகிறார். அஸ்லான் அவரது ஏ டி எம் கார்டை திருடி கிட்டதட்ட 50,000 ரூபாய் அளவிற்கு அவரது கணக்கில் இருந்து எடுத்த பிறகு தான் அவருக்கு அஸ்லானின் போதை பழக்கம் பற்றி தெரிய வந்திருக்கிறது. "எங்கள் வீட்டில் தங்கியிருந்த விருந்தினர்களும் அவர்களது பணம் இங்கே காணாமல் போனதாக புகார் கூறினர்", என்று கூறுகிறார்.
ஆனால் சில மாதங்களுக்கு முன்பு தனது மகன் ஹெராயின் வாங்க 32 வயதான சகோதரியின் விரலிலிருந்து மோதிரத்தை கழற்றுவதை பஷீர் கண்டபோது தான் பிரச்சனை தீவிரத்தை உணர்ந்து இருக்கிறார். “மறுநாளே ஸ்ரீநகரில் இருக்கும் போதை மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றேன். நான் அவனை கண்மூடித்தனமாக நம்பினேன், அவன் போதைக்கு அடிமையாவான் என்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை", என்று கூறுகிறார்.
சுர்சூவில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீ நகரின் புறநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் இந்த போதை மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது. அஸ்லான் போன்ற போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட பலர் காஷ்மீர் முழுவதிலுமிருந்து உதவிகோரி இங்கு வருகின்றனர். இந்த மையத்தில் 30 படுக்கைகள் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு உள்ளது மேலும் இது ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (IMHANS) மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
அவர்களில் வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த கைசர் தார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் அடங்குவார். ஜீன்ஸ் மற்றும் கடுகு நிற ஜாக்கெட் அணிந்துள்ள 19 வயதாகும் அவர் மனநல மருத்துவரைப் பார்க்க தனது முறை வரும் வரை காத்திருக்கும் போது பாதுகாப்பு காவலர்களுடன் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருக்கிறார். உள்ளே செல்ல வேண்டிய நேரம் வரும்போது அவரது புன்னகை மறைந்துவிடுகிறது.
குப்வாராவில் உள்ள அரசு கல்லூரியில் மாணவராக இருந்த போது, அவரது நண்பர் மூலம் கஞ்சா அவருக்கு அறிமுகமாவதற்கு முன்பு வரை, கைசர் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடுவதை மிகவும் விரும்பினார். அஸ்லானைப் போலவே அவர் வெவ்வேறு ஊக்க மருந்துகளை முயற்சித்து விட்டு, பின்னர் ஹெராயினுக்கு மாறிவிட்டார். “நான் முதலில் கோரக்ஸ் (இருமல் மருந்து) மற்றும் பிரவுன் சுகர் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தேன், இப்போது ஹெராயினுக்கு மாறிவிட்டேன்”, என்று கைசர் கூறுகிறார் இவரது தந்தை அரசு நடத்தும் பள்ளியில் துவக்கப்பள்ளி ஆசிரியராக வேலை செய்து மாதத்திற்கு 35,000 ரூபாய் சம்பளம் பெறுகிறார். "ஒரு முறை அதை சுவைத்த பிறகு என் எல்லா துக்கங்களில் இருந்தும் நான் விடுபட்டது போல மகிழ்ச்சியாக உணர்ந்தேன். நான் அதற்காக மேலும் ஏங்க ஆரம்பித்தேன். இரண்டு முறை எடுத்துக்கொண்டதிலேயே நான் அதற்கு அடிமையாகிவிட்டேன்", என்று கூறுகிறார்.
காஷ்மீர் முழுவதும் ஹெராயின் பயன்பாடு ஒரு தொற்றுநோய் போல பரவி உள்ளது என்று ஸ்ரீநகர் ஶ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் பணியாற்றும் மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். "பல காரணிகளும் இதற்கு பொறுப்பாக இருக்கின்றன - நடந்துகொண்டிருக்கும் மோதல்கள், வேலையின்மை, குடும்ப கட்டமைப்புகளை உடைத்தல், நகரமயமாதல் மற்றும் மன அழுத்தம் ஆகியவையே பொதுவான காரணங்கள்", என்று IMHANS இன் பேராசிரியர் டாக்டர் அர்சத் உசேன் விளக்குகிறார்.
2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு போதைப்பொருள் பயன்பாடு காஷ்மீரில் அதிகரித்துள்ளது என்று சிலர் கூறுகின்றனர். "2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஹெராயின் போதைப் பொருள் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது, ஹிஜ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதியான புர்கான் வானி (பாதுகாப்பு படையினரால் ஜூலை 8, 2016 அன்று) கொல்லப்பட்ட போதிலிருந்து நோயாளிகள் அதிகரிப்பதை பார்த்தோம். 2016 ஆம் ஆண்டு 489 நோயாளிகள். 2017 ஆம் ஆண்டு வெளிநோயாளிகள் பிரிவு பிரிவில் 3622 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர் அதில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஹெராயினுக்கு அடிமையானவர்கள்", என்று போதை மறுவாழ்வு மையத்தின் தலைவரான டாக்டர் யசீர் ராத்தர் கூறுகிறார்.
இந்த எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டில் 5,113 ஆக உயர்ந்தது. அதுவே 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை போதை மறுவாழ்வு மையத்திற்கு வந்த நோயாளிகளின் எண்ணிக்கை 4,411 இதில் 90 சதவீதம் பேர் ஹெராயினுக்கு அடிமையானவர்கள், என்று கூறுகிறார் டாக்டர் ரத்தர். போதைப் பொருளுக்கு அடிமையாவது அதிகரித்து வருவதற்கு முக்கியமான காரணம் அதன் எளிதாக கிடைக்கும் தன்மை, எளிதாக கிடைப்பது மற்றும் எளிதாக கிடைப்பதே", என்று அவர் கூறுகிறார்.
போதை பழக்கம் பொதுவாக இன்பத்திற்காக போதை மருந்துகளை பயன்படுத்துவதில் இருந்து ஆரம்பிக்கிறது என்று டாக்டர் உசேன் விளக்குகிறார். ”பரவசநிலை காரணமாக, நீங்கள் பயன்படுத்தும் போதை மருந்தின் அளவு அதிகரிக்கிறது. பின்னர் நீங்கள் அந்த போதை பொருளைச் சார்ந்து இருப்பீர்கள் அல்லது அதிகப்படியான அளவு காரணமாக இறந்து விடுவீர்கள் அல்லது வேறு பல சிக்கல்களை உருவாக்கி இருப்பீர்கள்", என்று போதை மறுவாழ்வு மையத்தில் பணியாற்றும் மனநல மருத்துவரான டாக்டர் சலீம் யூசுப் கூறுகிறார். போதைக்கு அடிமையானவர்களின் மனநிலை மாறிக்கொண்டே இருக்கும், பதட்டம் மற்றும் மன சோர்வும் ஏற்படலாம் மேலும் அவர்கள் தாங்கள் தங்கள் அறையில் இருப்பதையே விரும்புவர்", என்று கூறினார்.
அஸ்லானின் பெற்றோருக்கு இது நன்றாகவே தெரியும். சகீனா பேகம் அவரது மகன் அவருடன் நிறைய சண்டை போடுவார் என்று கூறுகிறார். ஒருமுறை அவன் சமையலறையில் இருந்த ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி அவனது கையில் காயம் ஏற்பட்டு தையல் போடுவதற்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டி இருந்தது. "இந்த போதை மருந்து தான் அவனை இவற்றையெல்லாம் செய்ய வைத்தது", என்று அவர் கூறுகிறார்.
ஹெராயின் வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தப்படலாம் - ஊசி மூலம் நரம்பு வழியாக செலுத்தப்படலாம், அல்லது பொடியாக நுகரப்படலாம் அல்லது புகைக்கப்படலாம். எனினும் ஊசிமூலம் செலுத்துவதுதான் இந்த போதைக்கு அடிமையானவரை மிக உச்ச பரவசநிலையை அடையச் செய்யும். நீண்ட காலமாக ஹெராயின் பயன்படுத்தி வருவது இறுதியில் மூளையின் செயல்பாட்டினையே மாற்றிவிடும் என்று டாக்டர் ரத்தர் கூறுகிறார். மேலும் இது ஒரு விலை உயர்ந்த பழக்கமாகும், ஒரு கிராம் போதை மருந்தின் விலை சுமார் 3,000 ரூபாய். இப்போதைக்கு அடிமையானவருக்கு குறைந்தபட்சம் நாளொன்றுக்கு இரண்டு கிராம் அளவு இந்த போதை மருந்து தேவைப்படும் என்று கூறுகிறார்.
குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதாகும் டாக்ஸி ஓட்டுநரான தௌசீப் ரசாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒருநாள் சம்பளம் 2,000 ரூபாய். தனது அன்றாட ஹெராயின் பயன்பாட்டுக்குத் தேவையான 6,000 ரூபாயை விட அது மிகக் குறைவாகவே இருந்திருக்கிறது. எனவே அவர் தன்னை சந்தேகப்படாத நண்பர்களிடம் இருந்தும் தனது சக போதைக்கு அடிமையான நண்பர்களிடம் தனக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு பணம் தேவைப்படுகிறது என்றும் பொய் கூறி கடன் வாங்க ஆரம்பித்திருக்கிறார். இதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் அவர் வசூல் செய்து விட்டார், அந்தப் பணத்தை வைத்து தனக்கு ஹெராயின் போதைப்பொருளை ஊசி மூலம் போட்டுக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்.
அவரது நண்பர்கள் போதை பொருட்களை பயன்படுத்தியதால் தௌசீபும் அதை பயன்படுத்தத் தொடங்கினார். "அதை முயற்சிக்க நான் முடிவு செய்தேன். விரைவில் நான் அதற்கு அடிமையாகிவிட்டேன். என்னால் போதைப் பொருளை வாங்க/ கண்டுபிடிக்க முடியாத நாட்களில் எனது மனைவியை போட்டு நான் அடிப்பேன்", என்று அவர் நினைவு கூர்கிறார். "நான் மூன்று ஆண்டுகளாக ஹெரோயின் பயன்படுத்தினேன் எனது உடல்நிலை மோசமாகிவிட்டது. குமட்டல் வருவது போல உணரத் துவங்கினேன் மேலும் கடுமையான தசை வலியும் இருக்கிறது. எனது மனைவி தான் என்னை ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார், அப்போதிலிருந்து நான் இங்கு சிகிச்சை பெற்று வருகிறேன்", என்று கூறினார்.
போதை மறுவாழ்வு மையத்தின் வெளிநோயாளிகள் பிரிவுக்கு வரும் நோயாளிகள் மனநல மருத்துவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு போதை மருந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு மருந்துகள் மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வாரத்திற்கு பின்னர் அவரது முன்னேற்றத்தை மதிப்பீடு செய்து அவருக்கு செய்த சிகிச்சைக்குப் பலன் இருப்பதைக் கண்டறிந்தால், நாங்கள் அவரை வெளியேற்றுவோம்", என்று ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியின் மனநல துறையின் மருத்துவரான டாக்டர் இஃரா ஷா கூறுகிறார்.
மருத்துவர்கள் போதை மருந்து பயன்பாட்டினை நிறுத்துவதற்கு மருந்துகள் கொண்டு சிகிச்சை அளிக்கின்றனர். "போதைப் பொருள் எடுத்துக் கொள்வதை நீங்கள் நிறுத்தியவுடன், உங்களுக்கு அதிகமாக வியர்க்கும், கை கால் நடுங்கும், குமட்டலாக இருக்கும், உறக்கம் வராது, தசைவலி இருக்கும் மற்றும் உடம்பு வலிக்கும்", என்று டாக்டர் யூசுப் கூறுகிறார். போதைப் பழக்கத்தின் காரணமாக வெறி பிடித்த பல நோயாளிகள் IMHANS இல் அனுமதிக்கப்படுவர் என்று டாக்டர் உசேன் கூறுகிறார்.
காஷ்மீரில் போதைக்கு அடிமையான பெண்களும் உள்ளனர், ஆனால் அவர்கள் ஸ்ரீநகரில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெறுவது இல்லை. பெண்களும் ஹெராயின் மற்றும் பிற போதைப் பொருட்களை உட்கொள்ளும் நிலை இருக்கிறது ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. "எங்களிடம் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் இல்லை என்பதால் நாங்கள் அவர்களை வெளிநோயாளிகள் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கிறோம், அவர்களை கவனமாக பார்த்துக் கொள்ளும்படி அவர்களது பெற்றோரிடம் அறிவுறுத்துகிறோம்", என்று கூறுகிறார் டாக்டர் யூசுப். டாக்டர்கள், பிள்ளைகளை எவ்வாறு கையாளுவது என்பதை குறித்து பெற்றோர்களுக்கு அறிவுறுத்துகின்றனர், போதைக்கு அடிமையாதலின் தீங்கு குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றனர் மேலும் சரியான நேரத்தில் அவர்களது குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யும் படி கேட்டுக் கொள்கின்றனர், மேலும் அவர்களை தனித்து விடாமல் இருக்கும்படி கூறுகின்றனர்.
2019 ஆம் ஆண்டு டிசம்பர் வரை ஸ்ரீநகரில் உள்ள போதை மறுவாழ்வு மையமே, காஷ்மீரில் இதற்கு சிகிச்சை அளிக்கும் வசதி கொண்ட இடமாக இருந்தது. இது 20 மனநல மருத்துவர்கள், 6 மருத்துவ உளவியலாளர்கள், 21 நிலை மருத்துவர்கள் மற்றும் 16 மருத்துவ உளவியல் ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட IMHANS உடன் தொடர்புடைய 63 பணியாளர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு மாநிலத்தில் மேலும் மூன்று போதை மறுவாழ்வு மையத்தை அரசு துவங்கியிருக்கிறது, அவை பாரமுல்லா, கத்துவா மற்றும் அனந்த்நாக் ஆகிய இடங்களில் இருக்கிறது என்று டாக்டர் உசேன் கூறுகிறார், மேலும் மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள மனநல மருத்துவர்கள் தங்களது வெளிநோயாளிகள் பிரிவில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்க துவங்கி இருக்கின்றனர்.
காஷ்மீரில் உள்ள குற்றப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில் 2016 ஆம் ஆண்டு முதல் பிரவுன் சுகர் மற்றும் பிற போதை மருந்துகள் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அப்பாலிருந்து வரத் துவங்கியிருக்கிறது. (யாரும் இது குறித்து அதிகம் பேச விரும்பவில்லை அல்லது காரணங்களைப் பற்றி பதிவு செய்யத் தயாராக இல்லை.) இதன் விளைவாக பிடிபடும் போதைப் பொருட்களை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டின் ஜம்மு மற்றும் காஷ்மீர் குற்றவியல் பதிவேட்டின் படி கிட்டத்தட்ட 22 கிலோ ஹெராயின் அந்த வருடம் மட்டும் கைப்பற்றப் பட்டுள்ளது. ஹெராயின் தவிர 248.150 கிலோ கிராம் கஞ்சா மற்றும் சுமார் 20 கிலோ பிரவுன் சுகர் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளது.
காஷ்மீர் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பாப்பி - அபின்கள் மற்றும் ஹெராயினின் மூலப்பொருள் - அழிக்கப்பட்டதாகவும் போலீசார் தொடர்ந்து வெளியிட்டுவரும் அறிக்கை தெரிவிக்கிறது. இப்பிரச்சனை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. புல்வாமா மாவட்டத்தில் உள்ள ரோஹ்முவைச் சேர்ந்த 17 வயதான மெக்கானிக் முனீப் இஸ்மாயில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), "எங்களது பகுதியில் சிகரெட்டைப் போல ஹெராயின் கிடைக்கிறது என்று கூறுகிறார். அதை வாங்குவதற்கு நான் சிரமப்பட தேவையில்லை". போதை மறுவாழ்வு மையத்தில் உள்ள மற்ற போதைக்கு அடிமையானவர்களும் தங்களுக்கு போதைப் பொருட்களை வாங்குவது சுலபம் என்றே கூறுகின்றனர். உள்ளூரை சேர்ந்த இடைத்தரகர்கள் வாய் வார்த்தையாக இதனை பரப்புகின்றனர். முதலில் அவர்கள் இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் போதைப் பொருட்களை இலவசமாக கொடுத்து அவர்களை ஈர்க்கின்றனர் மேலும் அவர்கள் போதைப்பொருளின் கட்டுக்குள் வந்தவுடன் அவர்களுக்கு போதைப் பொருட்களை விற்க ஆரம்பித்து விடுகின்றனர்.
உதாரணத்திற்கு, தெற்கு காஷ்மீரில் ஒரு பகுதியில் உள்ள ஒரு போதைப்பொருள் வியாபாரியின் வீட்டில் பகிரங்கமாக போதைப் பொருளை பயன்படுத்துவதற்கு போதைக்கு அடிமையானவர்கள் செல்கின்றனர் என்று போதை மறுவாழ்வு மையத்தில் பணியாற்றும் பெயர் வெளியிட விரும்பாத மனநல மருத்துவர் ஒருவர் கூறுகிறார். "அவர்கள் என்னிடம் இந்த வீட்டைப் பற்றிய தகவல் போலீசாருக்கு ஏற்கனவே தெரியும் இருந்தும் அவர்கள் எதுவும் செய்வதில்லை", என்று ஏற்கனவே தெரிவித்திருக்கின்றனர் என்று கூறுகிறார். இதைப்போல பல வீடுகள் பள்ளத்தாக்கு முழுவதிலும் இருக்கிறது. (அட்டைப்படம் போதைக்கு அடிமையானவர் ஒருவர் படுகாமில் உள்ள வீட்டிற்கு வெளியே, புகைத்த பிறகு அவர் உலவுவதை காட்டுகிறது.)
இருப்பினும் ஸ்ரீநகரின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளரான ஹசீப் முகல், போதைக்கு அடிமையாதல் என்பது ஒரு மருத்துவ பிரச்சனை என்று கூறுகிறார். இது மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய பிரச்சனை மேலும் பல போதை மறுவாழ்வு மையங்கள் காஷ்மீர் முழுவதும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு வர வேண்டும்", என்று அவர் இந்த செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜம்மு காஷ்மீருக்கான முதல் போதைப் பொருள் கொள்கையை மாநில அரசு பொதுமக்களின் கருத்தை கேட்ட பிறகு இறுதி செய்தது. அது படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு தசாப்தங்களாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் போதைப் பொருள் பயன்படுத்தும் பிரச்சனை அதிகரித்திருப்பதால் அதை குறிப்பிட்டு, "சமீபத்திய ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் பெண் பயனாளர்கள் அதிகரித்திருப்பதாகவும், போதைப்பொருள் பயன்பாட்டின் முறை அபாயகரமானதாக மாறி இருப்பதையும் காட்டுகிறது, முதல் முறை பயன்படுத்துபவர்களின் வயது வரம்பு குறைந்து கொண்டே வருகிறது, கரைப்பான்களை பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது, (அதிக அளவில் போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் இறப்பு மற்றும் விபத்துகள்) மேலும் ஊசியால் போட்டுக் கொள்ளக்கூடிய அபின்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது", என்று இந்த ஆவணம் தெரிவிக்கிறது.
இந்தக் கொள்கை அரசு மருத்துவக் கல்லூரிகள், காவல்துறை, புலனாய்வு பிரிவு, போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம், சுகாதார சேவைகள் இயக்குனரகம், மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் அத்துடன் போதைக்கு அடிமையானவர்கள் தொடர்பாக செயல்படும் அரசு சாரா நிறுவனங்கள் உட்பட 14 மாநில நிறுவனங்களை போதைப்பொருள் பயன்பாட்டினை கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரம் கொண்ட மையமாக குறிப்பிடுகிறது.
பள்ளிகளும் மற்றும் மதநம்பிக்கை அமைப்புகளும் இப்பிரச்சனையை தீர்ப்பதற்கு உதவும்படி கூறப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஸ்ரீநகரில் ஒரு கழிப்பறையில் ஒரு இளைஞர் போதைப்பொருள் பயன்படுத்தி இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் மரணத்திற்குப் பின்னர் ஸ்ரீநகரின் துணை ஆணையர் ஷஹீது இக்பால் சௌத்ரி மசூதிகளில் உள்ள மதபோதகர்களிடம், "அதிகரித்து வரும் போதைப் பழக்கத்துக்கு எதிராக உரக்கப் பேச வேண்டும்", என்று வலியுறுத்தி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஒரு பிரசங்கத்தில் ஹுரியத் தலைவரும் ஸ்ரீநகரின் ஜுமா மஸ்ஜிதின் தலைமை போதகருமான மிர்வாஸ் உமர் பரூக், ஏராளமான இளைஞர்கள் போதை பொருளுக்கு அடிமையாவது ஆபத்தானது என்று கூறினார். "எளிதாக பணம் கிடைப்பது மற்றும் எளிதாக போதைபொருள் கிடைப்பது, பெற்றோரின் அறியாமை மற்றும் சட்டத்தை அமல்படுத்தக் கூடிய நிறுவனங்கள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஆகியவையே இப்பிரச்சனைக்கு வழிகோல்கிறது", என்று பரூக் கூறுகிறார். "இந்த அச்சுறுத்தலை சமாளிக்க இந்த எல்லா முனைகளிலும் நாம் பணியாற்ற வேண்டும்", என்று அவர் கூறுகிறார்.
ஆனால் இப்போதைக்கு இந்த 'அச்சுறுத்தல்' தொடரத்தான் செய்கிறது, அஸ்லானின் குடும்பத்தினரை போல பலர் தங்களது பிள்ளைகளை வழிக்குக் கொண்டு வருவதற்காக முயற்சி செய்து அவர்களை வீட்டில் அடைத்து வைத்திருக்கின்றனர். "போதை மறுவாழ்வு மையத்தில் அஸ்லான் அனுமதிக்கப்பட்ட போது, நானும் அங்கு பல வாரங்கள் தங்கினேன்", என்று கூறுகிறார் பஷீர். "இப்போதும் கூட எனது வேலையை விட்டுவிட்டு நான் வீட்டிற்கு வந்து அஸ்லான் நலமாக இருக்கிறாரா என்று பார்க்க வேண்டி இருக்கிறது. நான் உடல்ரீதியாகவும், பணரீதியாகவும் உறிஞ்சப்பட்டு விட்டேன். அஸ்லானின் போதைப்பழக்கம் எனது குறுக்கை ஒடித்துவிட்டது", என்று அவர் கூறுகிறார்.
தமிழில்: சோனியா போஸ்