“தினமும் நான் ஒன்றரை கிலோமீட்டர் நடந்து கிராமத்திற்கு வெளியே சென்று தண்ணீரைக் கொண்டு வருகிறேன். ஒரு நாளுக்கு நான்கு முறை இதைச் செய்கிறேன். எங்கள் கிராமத்தில் தண்ணீர் கிடையாது. கோடைக்காலம் இன்னும் கடினமானது. கிணற்றில் நீரின் அளவும் சரிந்து வருகிறது...” என்கிறார் கடந்த ஆண்டைப் போன்று இந்த வாரம் நடைபெற இருந்த நாஷிக்-மும்பை விவசாயிகள் பேரணியில் பங்கேற்க வந்த பீமாபாய் டாம்பலே.

“மழையின்மையால் கடந்தாண்டு எனது நெற்பயிர்களை இழந்தேன். ஆண்டுதோறும் எங்கள் ஐந்து ஏக்கர் நிலத்தில் 8-10 குவிண்டால் நெல் கிடைக்கும. இந்த பருவத்தில் இரண்டு குவிண்டால்கூட கிடைக்கவில்லை. நிலம் எங்கள் பெயரில் இல்லை என்பதால் நஷ்டத்திற்கு இழப்பீடு கூட கிடையாது. அது வனத்துறைக்குச் சொந்தமானது,” என்கிறார் நாஷிக் மாவட்டம் பீன்ட் தாலுக்காவில் உள்ள நிர்குடி கரஞ்சலி கிராமத்தில் வசிக்கும் 62 வயது பீமாபாய்.

நெல் அறுவடைக்குப் பிறகு பீமாபாய் கேழ்வரகு, உளுந்து, துவரை போன்றவற்றை பயிரிடுவார். இந்த பட்டத்தில் அனைத்தும் நின்றுவிட்டது. எனவே பீமாபாய் அன்றாடம் 30-40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டியோலாலி, சோன்கிரி கிராமங்களுக்குச் சென்று திராட்சை, தக்காளி, வெங்காயம் பறிப்பது போன்ற வேலைகளைச் செய்ய தொடங்கிவிட்டார்.  “நான் தினமும் ரூ.150 ஈட்டுகிறேன், ஷேர் ஆட்டோவில் வருவதற்கு ரூ.40 செலவிடுகிறேன். நான் அன்றாடம் சம்பாதித்து, அன்றாடம் செலவு செய்கிறேன்,” என்று அவர் பெருமூச்சு விடுகிறார்.

Two women farmer
PHOTO • Jyoti

வறட்சி, நீர்பாசன வசதியின்மை போன்ற காரணத்தால் பீமாபாய் (இடது), இந்துபாய் (வலது) விவசாயத்தை கைவிட்டு விவசாய தொழிலாளர்களாக மாறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்

கடந்தாண்டு பங்கேற்றதை போன்று இந்தாண்டு நடைபெறும் விவசாயிகள் பேரணியிலும் பங்கேற்க 55 வயது இந்துபாய் பவார் வந்துள்ளார். “தண்ணீர் தேடி நாங்கள் 2-3 கிலோமீட்டர் நடக்க வேண்டும். மழையின்மையால் கடந்தாண்டு எனது கேழ்வரகு பயிர்களை நான் இழந்தேன்,” என்றார் அவர். “இப்போது விவசாயக் கூலியாக இருப்பது மட்டும் வருமானத்திற்கு ஒரே வழி. தண்ணீரை தேடி அலைந்து கொண்டிருந்தால் எப்படி நாங்கள் வேலைக்குச் செல்ல முடியும்? எங்கள் வலியை இந்த அரசு பார்க்கவில்லையா?”

இந்த வார தொடக்கத்தில் நடைபெற்ற பேரணியில் (இப்போது நிறுத்தப்பட்டது) பீன்ட் தாலுக்காவிலிருந்து சுமார் 200 விவசாயிகள் பங்கேற்றனர். பீமாபாய், இந்துபாய் போன்று பெரும்பாலானோர் மஹாதேவ் கோலி எனும் பட்டியல் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள். அனைவருமே தங்கள் கிராமங்களில் நிலவும் மழையின்மை, தண்ணீர் தட்டுப்பாடு குறித்துப் பேசுகின்றனர்.

மகாராஷ்டிரா அரசு அக்டோபர் மாதம் 26 மாவட்டங்களில் உள்ள 151 வட்டாரங்களில் வறட்சி ஏற்படும் என அறிவித்துள்ளது. அவற்றில் 112 வட்டாரங்களில் கடும் வறட்சி நிலவுகிறது.

Framers getting in truck.
PHOTO • Jyoti

கடந்தாண்டு நடந்த நீண்ட பேரணியில் பங்கேற்ற விட்டல் சவுத்ரி சொன்னார், 'ஓராண்டு ஆகிவிட்டது. எங்களுக்கு என்ன கிடைத்தது? இப்போது வறட்சியும் வருகிறது'

பேதாமால் கிராமத்தைச் சேர்ந்த 62 வயது சஹாடு ஜோகரி பேசுகையில், “கடந்தாண்டை விட இம்முறை கடும் வறட்சி இருந்தும் எங்கள் கிராமம் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கப்படவில்லை. தண்ணீர் கிடைப்பது மிகவும் கடினமாகிவிட்டது. நாங்கள் தண்ணீருக்காக பல கிலோமீட்டர் நடக்கிறோம். இருந்தும் எங்கள் மீது அரசு எவ்வித கவனமும் செலுத்தவில்லை.”

தங்கள் கிராமத்தில் உள்ள விவசாயிகள் கால்நடை தீவனங்களுக்காகவும், தண்ணீருக்காகவும் போராடி வருவதாக அவர் தெரிவித்தார். “கால்நடைகளால் பேச முடியாது. தங்களின் உரிமைக்காக அவை போராடாது. எங்கள் கிராமத்திற்கு அருகே எந்த தீவன முகாமும் கிடையாது. பசுக்கள், எருமைகள், ஆடுகள் அனைத்திற்கும் தண்ணீர் வேண்டும். அவற்றை நாங்கள் எங்கிருந்து பெறுவது?”

தில்பத் கிராமத்தைச் சேர்ந்த 70 வயது விட்டல் சவுத்ரியும் வறட்சி குறித்து பேசினார்: “எதுவும் மிஞ்சமில்லை. அனைத்து பயிர்களும் நாசமாகிவிட்டன. இப்போது குடிக்கக்கூட தண்ணீர் கிடையாது.” நல்ல மழை பெய்த ஆண்டுகளில் விட்டல் நெல், உளுந்து, கொள்ளு போன்றவற்றை தனது ஐந்து ஏக்கர் நிலத்தில் பயிர் செய்து வந்தார்.

“நான் கடந்தாண்டுகூட இங்கு வந்தேன். ஆறு மாதங்களில் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு உறுதி அளித்துள்ளது,” என்றார் அவர். “ஓராண்டு ஆகிவிட்டது. எங்களுக்கு என்ன கிடைத்தது? இப்போது வறட்சியும் முன்னால் நிற்கிறது.”

தில்பத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து விட்டல் பிப்ரவரி 20ஆம் தேதி 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மும்பையை நோக்கி நடக்க தயாரானார். நாஷிக் திடலில் இரவு விவசாயிகள் தங்கியபோது அவர் தனது கண் கண்ணாடிகளை இழந்தார். “கண்ணாடியின்றி என்னால் பகல் வெளிச்சத்தில் சிறிதளவு பார்க்க முடியும், ஆனால் இருட்டில் நடப்பதற்கே யாருடைய துணையாவது தேவைப்படுகிறது. அரசும் என்னைப் போன்று காண முடியாமல் இருக்கிறதா? நாங்கள் எவ்வாறு போராடி வருகிறோம் என்பதை அவை காணாமல் குருடாக உள்ளதா?”

பின் குறிப்பு: அரசுப் பிரதிநிதிகளுடன் ஐந்து மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அனைத்து இந்திய கிசான் சபா ஒருங்கிணைத்த பேரணியை பிப்ரவரி 21ஆம் தேதி நள்ளிரவு திரும்பப் பெற்றது. விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக அரசு எழுத்துப்பூர்வ உறுதி அளித்தது. “குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஒவ்வொரு பிரச்னையையும் சரி செய்வோம், ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ஒருமுறை அதுபற்றி தொடர் கூட்டம் நடத்துவோம்,” என்று கூட்டத்தினரிடம் அறிவித்தார் மாநில நீர் வளத்துறை அமைச்சர் கிரிஷ் மஹாஜன். “நீங்கள் [விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும்] மும்பை வரைக்கும் கஷ்டப்பட்டு நடந்து வர வேண்டாம். இதை அரசு பார்த்துக் கொள்ளும். நீங்கள் மற்றொரு பேரணியை நடத்த வேண்டாம் என்பதற்கான உறுதிகளை இப்போது அமல்படுத்துகிறோம்.”

தமிழில்: சவிதா

ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.

Other stories by Jyoti
Translator : Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.

Other stories by Savitha