சித்ரதுர்காவின் மிகவும் பிரபலமான உணவகமான ஸ்ரீ லக்ஷ்மி பவன் சிற்றுண்டி உணவகத்தின் சுவரில் உள்ள அறிவிப்பு பின்வருமாறு கன்னடத்தில் தெரிவிக்கிறது:
வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு
எங்களிடம் 2000 ரூபாய்க்கான சில்லறை இல்லை. தயவுசெய்து சரியான சில்லறையை வைத்துக் கொள்ளுங்கள் அல்லது சிறிய அளவிலான தொகையினை கொடுத்துப் பரிவர்த்தனை செய்யுங்கள்.
2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பணமதிப்பு நீக்கம் செய்த பிறகு முதல் சில நாட்களில் இந்த அறிவிப்பு ஹோட்டலில் இடம்பிடித்தது. ’இது உண்மையில் எங்களை பாதித்தது” என்று மேலாளர் S. முரளி கூறுகிறார். "முதல் மூன்று நான்கு மாதங்களுக்கு எங்களது வியாபாரத்தில் 50% இழப்பு ஏற்பட்டது. மக்கள் இங்கு வந்து விட்டு சாப்பிடாமல் திரும்பிச் சென்றனர். அது அவ்வளவு மோசமான நேரம்". கர்நாடகாவின் சித்ரதுர்கா நகரத்திலும், அம்மாவட்டத்தின் தலைநகரிலும் செயல்படும் தலைசிறந்த சிற்றுண்டி உணவகத்திற்கே இது தான் நிலைமை.
ஆனால், நாங்கள் கேட்டோம், நிதி நிலைமை சரியாகி விட்டது, பணமும் திரும்பிவிட்டது, இப்போது ஒரு வருடம் கூட ஆகிவிட்டது இருப்பினும் ஏன் இந்த அறிவிப்பை வைத்திருக்கிறீர்கள்? முரளி புன்னகைக்கிறார். ஆம், நிலைமை இப்போது சரியாகிவிட்டது, ஆனால் இதை இப்படியே வைத்துக் கொள்ளவே நாங்கள் விரும்புகிறோம் ". இதில் சொல்லப்படாத செய்தி: உங்களுக்கு தெரியாது... இது மறுபடியும் நடக்கலாம். மேலும் யாருக்கு தெரியும் அடுத்த முறை அவர்கள் எதைக் கொண்டு வருவார்கள் என்று?
எங்களிடம் தேவையான சில்லறை இருந்ததில் எனக்கு மகிழ்ச்சி. இங்கே கிடைக்கும் தோசை மிகவும் பிரமாதம். புகழ்பெற்ற சித்ரதுர்கா கோட்டைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளும், அருகில் உள்ள பிற நகரங்களை சேர்ந்தவர்களும் இதை சாப்பிடுவதற்காகவே இங்கு வருகின்றனர். நான் இந்த சிற்றுண்டி உணவகத்தை பரிந்துரைக்கிறேன். எந்த ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை மட்டும் நீட்டாதீர்கள்.
தமிழில்: சோனியா போஸ்