மகராஷ்டிராவின் யாவத்மால் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய கூட்டுக் குடும்பத்தின் தலைவரான 70 வயதாகும் கிசான் சக்ரு பவார் மிகவும் கவலையுடன் இருக்கிறார். உயர்ந்து வரும் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அவரது கவலைக்கான முக்கிய காரணம் அல்ல.
அவரது கவலை: விற்பனையாகாமல் இருக்கும் பருத்தியைப் பற்றியது.
எங்களிடம் 350 குவிண்டால் பருத்தி, 100 குவிண்டால் துவரம் பருப்பு மற்றும் குறைந்தது 50 குவிண்டால் பச்சைப்பயறு உள்ளது என்று வருத்தத்துடன் பவார் தொலைபேசியில் பாரியிடம் தெரிவித்தார். பருத்தி கடந்த பருவத்தில் பறிக்கப்பட்டது. முந்தைய காரீப் பருவத்தில் இருந்து துவரம் பருப்பு அவரிடம் கையிருப்பில் இருக்கிறது. மீதமுள்ள விளைச்சல்கள் யாவும் இந்த ராபி பருவத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் அறுவடை செய்யப்பட்டவை.
நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பவாரின் நிலையிலேயே உள்ளனர் - அவர்களால் பருத்தியை விற்க முடியவில்லை.
ஆனால் புதிரே இங்கு தான் இருக்கிறது: கிசான் பவாரும் அவரை போன்ற ஆயிரக்கணக்கான விவசாயிகளும் இந்த காரீப் பருவத்திலும் மீண்டும் பருத்தியைதான் விதைக்க திட்டமிட்டுள்ளனர்.
*****
நாக்பூரில் இருந்து 170 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கட்டன்ஜி தாலுகாவில் இருக்கும் பார்தி (நாஸ்கரி) கிராமத்தில் உள்ள அவரது குடும்பத்திற்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தில் இருந்து அறுவடை செய்யப்பட்ட பயிரின் விலை 25 முதல் 30 லட்சம் ரூபாய் பெறும். "அதுதான் எங்களது ஒரே வருமானம்", என்று கிசான் பவார் கூறுகிறார்.
அந்த 50 ஏக்கர் நிலமும் கிசான் பவார் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களின் குடும்பத்தில் உள்ள மொத்தம் 30 உறுப்பினர்களால் கூட்டாக பராமரிக்கப்படுகிறது. நிலத்தில் அவரது தனிப் பங்கு 18 ஏக்கர், ஆனால் குடும்பங்கள் தனித்தனியாக அல்லாமல் மொத்தமாக நிலத்தை பராமரித்து வருகின்றன.
முன்பே பவார் தனது பருத்தியை விற்கவில்லை. காரணம், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட கீழே சென்றுவிட்டது குவிண்டால் ஒன்றுக்கு 5,500 ரூபாய் என்ற நிலைக்கு கீழே. பின்னர் பிப்ரவரி இன் பிற்பகுதியில் அவர் 40 முதல் 50 குவிண்டால் பருத்தியை குவிண்டால் ஒன்றுக்கு 4,500 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார், தொழிலாளர்களுக்கான ஊதியத்தை கொடுப்பதற்காக.
ஏப்ரல் மாதத்தில் தேவை அதிகரிக்கும் என்று எண்ணி மீதியை நிறுத்தி வைத்திருந்தார். சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள போக்கு என்னவென்றால் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் பருத்தியின் விலை குறைந்து மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மீண்டும் அதிகரிக்கும்.
ஆனால் மார்ச் மாதத்தில் வந்தது என்னவோ ஊரடங்கு தான்.
இப்போது உருவாகியுள்ள கோவிட்-19 நெருக்கடி மோசமடைந்து, ஊரடங்கு அதன் மூன்றாவது மாதத்தில் இருப்பதால் இதனை வாங்குவதற்கு யாரும் இல்லை, அதனால் விவசாய விநியோகச் சங்கிலி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மகராஷ்டிரா முழுவதிலுமிருந்து, சொல்லப்போனால் நாடு முழுவதிலும் இருந்து எண்ணற்ற விவசாயிகளில், விற்கப்படாத பருத்தியுடன் இருக்கும் விவசாயிகளில் பவாரும் ஒருவர். (அவர்களிடம் ராபி பருவத்திற்கான விளைச்சலும் குறிப்பாக பணப்பயிர்கள் தேங்கிக் கிடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது)
மத்திய அரசின் இந்த துறைக்கான உச்ச சந்தைப்படுத்துதல் அமைப்பான இந்தியன் காட்டன் கார்ப்பரேஷன் (சிசிஐ) மற்றும் மாநில அளவிலான குழுக்கள் மகராஷ்டிராவில் சுமார் 150 கொள்முதல் மையங்களை திறந்து வைத்துள்ளன. இருப்பினும் கொள்முதல் செய்யப்படுவதற்கு முன்னால் ஆன்லைன் பதிவுகள் மற்றும் நீண்ட மின் வரிசைகளுக்கு உட்பட வேண்டியிருப்பதால் பவார் போன்ற விற்பனையாளர்களின் பொறுமையை அது மிகவும் சோதிக்கிறது.
இதுவரை சிசிஐ, இந்தியா முழுவதிலும் 93 லட்சம் பேல் பருத்தியை (சுமார் 465 லட்சம் குவிண்டால் கொள்முதல் செய்துள்ளது) இதற்கு முன்னதாக 2008 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 90 லட்சம் பேல்களை கொள்முதல் செய்ததே அதன் அதிகபட்ச கொள்முதல். கடந்த தசாப்தத்தில் தேசிய அளவில் அதன் சராசரி ஆண்டு கொள்முதல் செய்ததை விட கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு இது அதிகம். மார்ச் பிற்பகுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும் தனியார் வர்த்தகர்கள் யாரும் மார்ச் நடுப்பகுதிக்கு பிறகு பருத்தி வாங்குவதை நிறுத்தி விட்டனர் எனவே அது இவ்வாறு தலையிட வேண்டியதாகிவிட்டது.
மேலும் கோவிட் 19 அதற்கு முந்தைய விலையான குவிண்டால் ஒன்றுக்கு 5,000 ரூபாய் வர்த்தகர்கள் விலை கொடுத்தனர் ஆனால் சிசிஐ குவிண்டால் ஒன்றுக்கு 5,500 ரூபாய் கொடுத்து கொள்முதல் செய்கின்றது. இப்போது வர்த்தகர்கள் பருத்தி கொள்முதலையே நிறுத்திவிட்டனர். இதற்கிடையில் சிசிஐ மற்றும் மாநில அரசு தங்களது பலவீனமான நிலையை மேலும் திணற வைக்க தயங்கி மேலும் கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டன.
மே மாத இறுதிக்குள் சுமார் 2 லட்சம் விவசாயிகள் குறிப்பாக விதர்பா, மராத்வாடா (விவசாயத் தற்கொலைகளால் அதிகம் பாதிக்கப்பட்ட இரண்டு பகுதிகள்) மற்றும் வடக்கு மகராஷ்டிராவில் உள்ள காண்டேஷ் ஆகிய பகுதிகளில் இருந்து தங்களது பருத்தியை விற்க ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். ஆனால் பிற ஆயிரக்கணக்கான விவசாயிகள் அவ்வாறு செய்யவில்லை, சிக்கலான செயல்முறை மற்றும் நிச்சயமற்ற தன்மையை மேற்கோள்காட்டி மாநில அதிகாரிகள் அவர்களை பதிவு செய்யவில்லை.
2018 - 19 ஆம் ஆண்டில் விவசாயிகளின் தலைவரும் விவசாயத்தில் தேர்ந்தவருமான விஜய் ஜவாண்டியா கூறுகையில், வறட்சியான ஆண்டில் பருத்தியின் விலை நன்றாக இருந்தது. கால்நடைகளுக்கு தீவனம் இல்லாததால் பருத்தி புண்ணாக்குக்கு கூட தேவை அதிகமாக இருந்தது (ஒரு குவிண்டாலுக்கான எடையில் 65% விதையிலிருந்து வருகிறது). "இந்த வருடம் அது அப்படி இல்லை. பருத்தி பஞ்சு மற்றும் பருத்தி விதை ஆகிய இரண்டின் விலையும் கீழ்நோக்கி தள்ளப்பட்டுள்ளது. கடந்த வருடம் நாங்கள் 50 லட்சம் பேல் பருத்தியை ஏற்றுமதி செய்தோம், அதில் பெரும்பகுதி சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டும் அதே சாதனையை நாங்கள் செய்தாலும் அது மிக குறைந்த விலைக்கு தான் போகும். தவிர ஊரடங்கு, விலை மற்றும் விநியோக சங்கிலி இரண்டையுமே நாசம் செய்துவிட்டது", என்று கூறினார்.
அதனால் விற்கப்படாத பருத்தி, மலை போல உயர்ந்து கொண்டே வருகின்றது.
இருப்பினும் கிசான் பவாரும் பிற விவசாயிகளும் மீண்டும் இந்த பருவத்தில் பருத்தியைத் தான் பயிரிடப் போகின்றனர்.
*****
மகாராஷ்டிர மாநில பருத்தி விவசாயிகளின் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு விற்கப்படாத பருத்தியை சுமார் 80 லட்சம் குவிண்டால் அல்லது 2019 - 20 ஆம் ஆண்டிற்கான மாநிலத்தின் மதிப்பிடப்பட்ட உற்பத்தியில் சுமார் 25 சதவீதம் என்று கூறுகிறது. குறைந்த பட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு 5,500 ரூபாய் என்று கணக்கிட்டால் விற்பனையாகாத பருத்தியின் விலை மதிப்பு 4,400 கோடி ரூபாய் ஆகும்.
நாடு முழுவதும் இயங்கக்கூடிய ஒரு தொழில்துறை அமைப்பான பருத்தி சங்கம் 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான உற்பத்தி சுமார் 355 லட்சம் பேல்கள் (1775 லட்சம் குவிண்டால்) மற்றும் மகராஷ்டிராவின் 80 லட்சம் பேல்கள் (400 லட்சம் குவிண்டால்) உற்பத்தியாகியுள்ளது என்று மதிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டில் விதர்பாவில் பருத்தி சாகுபடியின் கீழ் மாநிலத்தில் மொத்தமுள்ள 44 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 15 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் பருத்தி பயிரிடப்பட்டு இருந்தது. ஒட்டு மொத்த இந்தியாவில் இது 175 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு என்று இருந்தது என்று கூறுகிறது.
பருத்தி கூட்டமைப்பின் ஓய்வுபெற்ற பொது மேலாளரான கோவிந் வைராலே, 1600 கோடி மதிப்புடைய சுமார் 30 லட்சம் குவிண்டால் பருத்தி விற்கப்படாத நிலையில் மகராஷ்டிராவில் உள்ள விவசாயிகளிடம் கையிருப்பாக இருக்கிறது என்று கூறுகிறார்.
எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள பல கிராமங்களில் விற்கப்படாத பருத்தி அதிக அளவில் கையிருப்பில் உள்ளது என்று கிசான் பவார் கூறுகிறார். இது அவரிடம் இருக்கும் கையிருப்பை விட அதிகமான அளவில் இருக்கும் என்று கூறுகிறார்.
பவாரின் மகன் கிரண் சில நாட்களுக்கு முன்பு இந்தியன் காட்டன் கார்ப்பரேஷனில் ஆன்லைனில் பதிவு செய்தார். கட்டன்ஜியில் உள்ள சிசிஐ மையத்தில் 2000 லாரிகள் தயார்நிலையில் இருக்கின்றன. ஆனால் அவர்கள் நாளொன்றுக்கு சுமார் 20 லாரிகள் அளவிற்குத் தான் கொள்முதல் செய்கின்றனர். "என் முறை எப்போது வரும் என்று யாருக்கு தெரியும்?" என்று கூறுகிறார்.
MSCGCMF இன் தலைவரான அனந்த்ராவ் தேஷ்முக், "நாங்கள் கொள்முதலை விரைவு படுத்துகிறோம்", என்று கூறுகிறார்.
இருப்பினும், பருவமழை துவங்குவதற்கு முன்பே விவசாயிகளிடம் கையிருப்பு இருக்கும் அதிக அளவிலான பருத்தி கொள்முதல் செய்யப்படுவது என்பது மிகவும் சாத்தியமற்றதாகத் தான் தெரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் துவங்கும் பருத்தி கொள்முதல் காலம் தொழில்நுட்ப ரீதியாக அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முடிவடையும். எனவே விற்பனையாகாத பருத்தி குவிந்து கொண்டே தான் போகப் போகிறது.
இருப்பினும், கிசான் பவாரும் பிற விவசாயிகளும் மீண்டும் இந்த பருவத்தில் பருத்தி தான் விதைக்க போகிறோம் என்று உறுதியாக இருக்கின்றனர்.
*****
நாக்பூர் மாவட்டத்தின் கட்டோல் தாலுகாவில் உள்ள மினிவாடா கிராமத்தில் உள்ள ஒரு இளம் விவசாயியான வைபவ் வான்கடே, "எங்களது வீடுகளில் விற்கப்படாத பருத்தி குவிண்டால் குவிண்டாலாக குவிந்து கிடக்கிறது", என்று தொலைபேசியில் தெரிவித்தார்.
"இந்த ஆண்டு குறைவான ஏக்கரில் நாங்கள் பருத்தியை பயிரிடலாம். ஆனால் எங்களால் அதை பயிரிடாமல் இருக்க முடியாது", என்று கிசான் பவார் கூறுகிறார்.
கொரோனா வைரஸ், ஊரடங்கு மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள், ஆகிய பிரச்சனைகள் தீவிரமடையும்போது பசியின் ஆபத்தும் சேர்ந்தே வருகிறது. "பயப்படுவதற்கு ஒன்றுமில்லை", என்று வான்கடே கூறுகிறார். இங்குள்ள பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவையான உணவு தானியத்தை பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வாங்கிக் கொள்கின்றனர் அது எந்த ஒரு நெருக்கடியிலும் தங்களை காப்பாற்றும் என்று அவர்கள் நம்புகின்றனர். எங்களது வறண்ட நிலத்தில் பருத்தியைத் தவிர வேறு எதையும் விளைவிக்க முடியாது. விலையைப் பற்றி தான் நாங்கள் கவலை கொள்கிறோம் - பசியைப் பற்றி அல்ல", என்று கூறுகின்றார்.
"அவர்களுக்கு வேறு மாற்றுப் பயிர் என்ன இருக்கிறது?" என்று இந்த பருவத்தில் பருத்தி விதைப்பதால் இருக்கும் அபாயங்களை ஒப்புக்கொண்டபடி விஜய் ஜவாண்டியா கேட்கிறார். "அவர்களுக்கான பணத்தேவை மிகப்பெரியது, அதனால் உணவு நெருக்கடிக்கான சாத்தியத்தை பற்றி அவர்கள் சிந்திக்கவே இல்லை - அவர்கள் பொதுவினியோக திட்டத்தில் வழங்கப்படும் அரிசி மற்றும் கோதுமை கிடைப்பதை மிகவும் எளிதாக எடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் வளர்க்கக் கூடிய ஒரே உணவு பயிரான சோளத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லை மேலும் அது பொது வினியோக திட்டத்தாலும் வழங்கப்படவில்லை. அரசாங்கம் உடனடியாக சோளத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும் மேலும் அதன் விளைச்சலை ஊக்குவிக்க நூறு நாள் வேலைத்திட்டத்தோடு அதனை இணைக்க வேண்டும். விவசாயிகள் சோயாபீனை மிகவும் ஆபத்தானதாக கருதுகின்றனர் காரணம் சில நேரங்களில் காலம் தாழ்த்தி பெய்யும் ஒரு மணி நேர மழை கூட மொத்த பயிரையும் நாசம் செய்துவிடும். தவிர அதனை அறுவடை செய்வதற்கு ஒரே நேரத்தில் உழைப்பாளர்கள் கிடைப்பதும் மிகவும் அவசியமாகிறது. பருத்திக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை இருப்பதால் ஆபத்தானதாக இருந்தாலும் உத்திரவாதத்துடன் இருப்பதாக கருதுகின்றனர். அதனுடைய விலையே அவர்களது சிந்தனையை ஆட்சி செய்கிறது".
கட்டன்ஜி தாலுகாவில் உள்ள அஞ்சி கிராமத்தில் வசிக்கும் கிசான் பவாரின் உறவினர் சியாம் நந்து ரத்தோட் சிசிஐயில் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். “நான் வழக்கமாக பெரும் விலையை பெற மாட்டேன், ஆனால் வேறு வழியில்லாமல் நஷ்டத்திற்கு விற்பதை விட குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விற்பது சிறந்தது", என்று அவர் கூறுகிறார். அதாவது ஒரு வேளை சிசிஐ எனது பருத்தியை வாங்கினால்.
"நீண்ட வரிசை காத்திருக்கிறது, எந்தவித உத்தரவாதமும் இல்லை", என்று அவர் தொலைபேசியில் தெரிவித்தார்.
தமிழில்: சோனியா போஸ்