22 வயதான சுஷ்மா மாலி, அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான ஆதல்கானுக்கு சென்று 8 மாதங்கள் ஆகிவிட்டன, விவசாயியான தனது கணவர் மற்றும் தனது மூன்று வயது மகள் ஆகியோருடன் இருக்க வேண்டுமென்று அவர் அங்கு செல்ல இருக்கிறார். ஆனால் அவர் வருடாந்திர இடைவெளிக்கு மே முதல் ஆகஸ்ட் வரை வீட்டிற்கு திரும்பும் முன், தான் ஒரு நடன கலைஞராக வேலை புரியும் தமாஷா குழுவின் உரிமையாளர்களுடன் தனது கணக்குகளை தீர்க்க வேண்டும்.

பாட் அல்லது (குழுவின்) உரிமையாளரும், குழுவினரால் தாய் என்று அழைக்கப்படுகிறவருமான, மங்களா பன்சோட், சதாரா மாவட்டத்தில் உள்ள கரவாடி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள அறையில் கணக்குகளை தீர்ப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்து இருக்கிறார். சில ஆண்கள், தங்கள் கைகளில் அடர்த்தியான பேரேட்டுடன் தரையில் அமர்ந்து இருக்கின்றனர். கலைஞர்கள், தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், வயர் மேன்கள், மேலாளர்கள் மற்றும் சமையல்காரர்கள் என குழுவில் உள்ள 170 உறுப்பினர்களும் ஒருவர் பின் ஒருவராக நடந்து உள்ளே சென்று தங்களுக்கு பின்னால் இருக்கும் கதவினை மூடுகின்றனர்.

Kiran Bade (centre) cracks a joke during a performance with Nitin Bansode, Mummy’s younger son
PHOTO • Shatakshi Gawade ,  Vinaya Kurtkoti

ஒரு நிகழ்ச்சியின் போது நிதின் பன்சோட் (இடது) மற்றும் கிரண் பேட் (நடுவில் இருப்பவர்) இருவரும் நகைச்சுவை செய்து கொண்டிருக்கின்றனர். நிதின், மங்களா பன்சோடின் இளைய மகன் மற்றும் பாட்டின் இணை உரிமையாளர் ஆவார்.

இப்போது 66 வயதாகும் மங்களாத்தாய், பழம்பெரும் தமாஷா கலைஞரான விதாபாய் நாராயண்கவுன்கரின் மகள் ஆவார்.  அவர் தனக்கு 7 வயதாக இருந்த போது தனது தாயின் பாட்டில் வேலை செய்யத் துவங்கினார். பின்னர் அவரது கணவர் இராம்சந்தர் பன்சோட்டை அவர் அங்கு சந்தித்தார் மேலும் 1983ஆம் ஆண்டில் அவருடன் சேர்ந்து ஒரு பாட்டை துவங்கினார். (அவரது கணவர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் ஒரு நடிகராக இருந்தார், ஆனால் உடல்நலக் குறைவு காரணமாக தற்போது அவர் பணியாற்றுவது இல்லை). அவரது பாட் தற்போது 'மங்களா பன்சோட்  மற்றும் நிதின் குமார் தமாஷா மண்டல்' என்று அழைக்கப்படுகிறது (நிதின் அவரது இளைய மகன் ஆவார்).

தமாஷா குழுவினரில் தற்போது அந்த அறைக்குள் செல்பவர் கிரண் பேட், அவர் திரும்பிச் செல்கையில் ரூபாய் 50,000 த்தை முன் பணமாக (உச்சல்) பெற்றுச் சென்றார். பாட்டின் வருடாந்திர இடைவெளியான இந்த நான்கு மாதங்களில், அகமது நகர் மாவட்டத்தில் உள்ள பத்தார்டி நகரில் வசிக்கும் 7 பேர் கொண்ட அவரது குடும்பத்தை ஆதரிக்க இந்த முன் பணம் உதவும். அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர் மற்றொரு தமாஷா குழுவில் பணியாற்றுகின்றனர்.

மருத்துவ அவசர நிலைகள் மற்றும் திருமணங்கள் போன்ற சூழ்நிலைகளில் மக்கள் முன் பணம் பெறுகின்றனர். "ஆனால், ஒரு நபர் அவர்களது குழுவுடன் பிணைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பதற்காக உரிமையாளர்கள் முன் பணத்தை கொடுக்கின்றனர்", என்று கிரண் கூறுகிறார்.

கிரணின் மாத சம்பளத்தில் ஒரு பகுதியான ரூபாய் 15,000, 2017 - 2018 ஆம் ஆண்டின் தமாஷா பருவத்தில் அவர் பெற்ற இந்த முன் பணத்தை திருப்பிச் செலுத்த செல்கிறது, இதற்காக அவர் செப்டம்பரில் துவங்கிய பயிற்சி மே மாதத்தில் நிகழ்ச்சிகள் முடிவடையும் போது முடிவடையும். "நான் செய்யும் எல்லா வேலைகளுக்கும் இதைவிட அதிகமாக நான் சம்பளம் பெற வேண்டும்!", என்று 24 வயதான கிரண் கூறுகிறார், பாடல் நடனம் மற்றும் நடிப்பு ஆகிய அனைத்திலும் அவர் திறமையானவராக இருக்கிறார்.

ஆனால் அவரது மனைவி அவரை வேறு ஒரு வேலைக்காக இந்த தமாஷாக விட்டு வெளியேறும்படி கூறிய போது, அவர் மறுத்து விட்டார். ஏனெனில் தமாஷா மீது அவருக்கு பேரார்வம் உள்ளது. "அவளிடம் நான் வேறொரு மனைவியை பெற்றாலும் பெறுவனே ஒழிய, இந்தப் பாட்டை விட்டு நான் வெளியேற மாட்டேன். தமாஷா ஒரு சிறையைப் போன்றது, ஆனால் அங்கேயே நான் இருக்க விரும்புகின்றேன்", என்று கூறினார்.

பருவம் துவங்கிய உடன், ரூபாய் 50 ஷீதாவாக (தினசரி கொடுப்பனவாக) பெறுகிறார். கூடுதல் வருமானத்திற்காக எலக்ட்ரீஷியன் மற்றும் ஓட்டுனராகவும் அவர் பணி செய்கிறார்  - அதன் மூலம் தினசரி சுமார் 200 ரூபாய் சம்பாதிக்கிறார். பருவத்தின் முடிவில் அவர் தனது மொத்த வருவாயையும் பெறுவார், மேலும் அதிலிருந்து தினசரி கொடுப்பனவுத் தொகை கழிக்கப்படும்.

PHOTO • Shatakshi Gawade ,  Vinaya Kurtkoti

66 வயதான மங்களாத்தாய் மற்றும் அவரது மூத்த மகன் அனில் ஆகியோர் காரத் மாவட்டத்தில் சவ்லாஜ் கிராமத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். மகாராஷ்டிராவின் மிகப்பெரிய தமாஷா குழுக்களில் இவர்களுடையதும் ஒன்று

பெரும்பாலான தமாஷா கலைஞர்களின் நிதி இந்த சுழற்சியையே பின்பற்றுகிறது: முன் பணம் எடுத்துக்கொள்ளுதல், அதைத் திருப்பிச் செலுத்த வேலை செய்தல், மீண்டும் அடுத்த ஆண்டிற்கான முன் பணத்தை பெறுதல். 210 நாட்களைக் கொண்ட பருவத்திற்கு ஒரு பாட்டில் அவர்கள் வேலை செய்ய அறிவிக்கப்பட்ட ஒப்பந்தமாக இது கருதப்படுகிறது. சம்பளத்தை தவிர, குழுவின் உறுப்பினர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு மற்றும் உடை ஆகியவை வழங்கப்படுகின்றது, ஆனால் அவர்கள் தங்களது ஒப்பனை பொருட்களை அவர்களே வாங்கிக் கொள்ள வேண்டும்.

பாட் இடைவெளியில் இருக்கும் அந்த நான்கு மாதங்களில் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்களது பண்ணைகளிலோ அல்லது ஓட்டுநராகவோ மற்றும் வீட்டுப் பணியாளர்களாகவோ வேலை செய்கின்றனர். அவர்களின் தமாஷா சேமிப்பு இந்த காலத்தில் அவர்கள் தாக்குப் பிடிக்க உதவுகிறது.

Woman dancing in tamasha
PHOTO • Shatakshi Gawade ,  Vinaya Kurtkoti

அவரது தாயின் வழியைப் பின்பற்றி, தனது 12 வயதில் இந்த நடன தொழிலை துவங்கினார் சுஷ்மா மாலி

எந்த தமாஷா குழுவிலும் அதிக சம்பளம் பெறுவது, பெண் நடன கலைஞர்களை - இந்த குழுவில் சுமார் 16 பேர் உள்ளனர், என்று மங்களாத்தாயின் மகனும் பாட்டின் மேலாளருமான, 45 வயதான, அனில் பன்சோட் கூறுகிறார். "2016 - 2017 ஆம் ஆண்டு தமாஷா பருவத்தில், அதிகபட்ச சம்பளமாக ரூபாய் 30,000, பெண் நடன கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது", என்று அவர் கூறினார். இவர்களே மிகப் பெரிய கூட்டத்தை ஈர்கிறார்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து உரத்த பாராட்டுக்களையும் பெறுகின்றனர். ஆனால் 8 மாதங்களுக்கு பயணம் செய்ய விரும்பும் நடன கலைஞர்களை கண்டுபிடிப்பது எளிதல்ல என்று அனில் கூறுகிறார். "அதிக சம்பளமே அவர்களைத் தக்க வைத்துக் கொள்ள ஒரே வழி", என்றும் கூறுகிறார்.

இந்தப் பருவத்தில், பல பாடல்களுக்கு முன்னணி நடன கலைஞராக சுஷ்மா மாலியே இருந்தார். அவர் தனது தமாஷா வாழ்க்கையை 12 - 13 வயதில் துவங்கினார், தனது தாய் பாட்டில் ஆடுவதை  பார்த்துக் கொண்டே அவர் வளர்ந்தார். சுஷ்மாவின் இந்த தமாஷாவில் கலைஞராகும்  முடிவில் அவரது தாய் முதலில் அதிருப்தியில் இருந்தார், ஏனெனில் அவர் சந்தித்த அதே கஷ்டங்களை அவரது மகளும் எதிர்கொள்வதை அவர் விரும்பவில்லை. ஆனால் சுஷ்மா தனது முடிவில் நீடித்து இருந்து விட்டார், ஏனெனில் அவருக்கு தமாஷா வழங்கும் நிதி சுதந்திரம் பிடித்திருந்தது. "எனது கணவர் (ஒரு விவசாயி) அவருக்கும் நான் பாட்டில் வேலை செய்வதில் உடன்பாடு இல்லை, ஆனால் எனக்கு 8 வயதில் ஒரு தம்பியும் மற்றும் 3 வயதில் ஒரு மகளும் கவனித்துக் கொள்வதற்கு இருக்கிறார்கள்", என்று அவர் கூறுகிறார். சுஷ்மாவும் தனது மகள் இந்தத் துறையில் நுழைவதை விரும்பவில்லை மேலும் அவர் ஒரு தமாஷா நடனக் கலைஞர் என்பதை அவரது மகளிடம் இன்னும் தெரியப்படுத்தவில்லை.

குழுவில் இருக்கும் பெற்றோர் அல்லது மூத்த உடன்பிறப்புகள் வேலை செய்வதன் காரணமாக பலர் தமாஷாவில் இணைகின்றனர். இது விவசாய உழைப்பை விட நிலையான வாழ்வாதாரமாக பார்க்கப்படுகிறது. பாட்டில் இருப்பது கலைஞர் என்ற அங்கீகாரத்தையும், உயர்ந்த சமூக அந்தஸ்தையும் அவர்களுக்கு பெற்றுத் தருகிறது என்று அவர்கள் நம்புகிறார்கள்.

சங்லி மாவட்டத்தில் உள்ள தூபல் துல்கவுன் கிராமத்தைச் சேர்ந்த சார்தா காடே வைப் போன்றோருக்கு குடும்பத்தை போன்றது தமாஷா. சார்தா நடன கலைஞர் மற்றும் வாக் நாட்டியாவின் (நாட்டுப்புற நாடகம்) கலைஞராகவும் இருக்கிறார். அவரது மகன்களில் ஒருவர் தாள வாத்தியாராகவும், மற்றொருவர் வயர் மேனாகவும் மற்றும் அவரது கணவர் ஒரு நடிகராகவும் இருக்கின்றனர். தமாஷா தொழிலே அவர்களுக்கு ஒரு சிறந்த வழி. விவசாயத் தொழிலாளர்களாக  உள்ள அவர்களது சொந்தக்காரர்கள் ஒரு நாளைக்கு ரூபாய் 200 தான் சம்பாதிக்கின்றனர் மேலும் அவர்களின் தினசரி வேலையும் நிச்சயம் அற்றதாக இருக்கிறது.

ஆனால் தமாஷாவிலிருந்து வரும் நிலையான வருமானமும் ஒரு சில செலவுடன் தான் வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தில் ஒரு கூடாரத்தை அமைத்து இருப்பது என்பது சுகமான வழிமுறை இல்லை, என்று சார்தா கூறுகிறார். பின்னர், ஒழுங்கற்ற கால அட்டவணைகள், இரவு நேர வேலை, ஒழுங்கற்ற உணவு மற்றும் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகியவையும் இதில் இருக்கின்றது.

Sharda gets ready for the last performance of the season. Her husband Nagesh Khade (centre) is an actor in the vag natya and her son Sagar Khade is a percussionist
PHOTO • Shatakshi Gawade ,  Vinaya Kurtkoti

சார்தா காடே இந்தப் பருவத்திற்கான கடைசி நிகழ்ச்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். அவரது கணவர் நாகேஷ் (நடுவில் இருப்பவர்) அவரும் ஒரு நடிகர் மற்றும் அவர்களது மகன் சாகர் (இடது), ஒரு தாள வாத்தியார்

ஆனால் தமாஷாவிலிருந்து வரும் நிலையான வருமானமும் ஒரு சில செலவுடன் தான் வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தில் ஒரு கூடாரத்தை அமைத்து இருப்பது என்பது சுகமான வழிமுறை இல்லை, ஒழுங்கற்ற கால அட்டவணைகள், ஒழுங்கற்ற உணவு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பெரும்பாலும், மோசமான கருத்துக்கள் ஆகியன

மேலும் பல முறை ஆண் பார்வையாளர்கள் மோசமான சைகைகளோ அல்லது மோசமான கருத்துக்களையோ தெரிவிக்கின்றனர். சார்தா சில சமயங்களில்  அவர்களிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள், உங்களுக்கு வீட்டில் தாயோ அல்லது தங்கையோ இல்லையா? என்று கேட்கிறார். அதற்கு அவர்கள்: "ஆனால், எங்கள் பெண்கள் உங்கள் தமாஷா பெண்களைப் போல் நடந்து கொள்வது இல்லையே!" என்று பதில் கூறுகின்றனர் மேலும் நீங்கள் ஏன் ஆண்கள் முன் நடனமாட தேவையில்லாத ஒரு வேலையை தேர்வு செய்யக்கூடாது என்று அவரிடம் கேட்கின்றனர். "ஆனால் இதுவும் ஒரு வேலை தானே!" என்று அவர் பதில் கூறுகிறார்.

தமாஷாவில் உள்ள ஆண்களும் இத்தகைய கேவலமான கருத்துக்களை எதிர்கொள்கின்றனர். அனில், தான் சிறுவனாக இருந்த போது நடந்தவற்றை பற்றி பேசுகிறார், அவரது கிராமத்தில் உள்ள மக்கள் அவரையும் அவரது சகோதரர்களையும் "ஒரு ஆட்டக்காரியின் குழந்தைகள்", என்று அழைத்தனர், என்று கூறுகிறார்.

* * *

Mohit in the rahuti [tent] in Narayangaon
PHOTO • Shatakshi Gawade ,  Vinaya Kurtkoti

குழு உரிமையாளரான மோகித் நாராயண்கவுன்கார் தனது பாட் நினைவில் வைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்

கிட்டத்தட்ட மொத்த தமாஷா தொழில்துறையும் பண பரிவர்த்தனைகளின் மூலமே இயங்குகிறது. குழு உரிமையாளர்களே தனியார் வட்டி கடைக்காரர்களிடம் இருந்து மாதத்திற்கு 4 - 5 சதவீத வட்டிக்கு கடன் பெறுகின்றனர். "வங்கிகள் எங்களுக்கு கடன் கொடுப்பதில்லை. நாங்கள் தனியார் வட்டிக் கடைக்காரர்களிடமிருந்து கடன்களை எடுத்து பாட்டின் பருவமான, அடுத்த 8 மாதங்களில் திருப்பி செலுத்துகிறோம்", என்கிறார் மற்றுமொரு தமாஷாவின் உரிமையாளரும் மங்களாத்தாயின் சகோதரர் கைலாஷின் மகனுமான மோகித் நாராயண்கவுன்கார்.

எப்படி இருந்தாலும் மங்களாத்தாயின் குழு வங்கிகளிடமிருந்து கடன்களை பெற்றுள்ளது, ஏனெனில் அவர் கடன் பெற தகுதியுள்ளவர் என்று கருதப்படுகிறார். அவருடைய குழு திரட்டப்பட்ட கடனால் அல்லாமல் மேலும் அதன் சொந்த உபகரணங்களுடன் இயங்கும் ஒரு சில குழுக்களுல் ஒன்றாக விளங்குகிறது. குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வருவாயை பொருத்தவரை இது கிராமப்புற மகாராஷ்டிராவில் வணிகத்தில் உள்ள மிகப் பெரிய குழுவில் ஒன்றாகும்.  ஒவ்வொரு ஆண்டும் மங்களாவின் பாட்டின் மொத்த பரிவர்த்தனைகள் சுமார் ஒரு கோடி ரூபாய் ஆகும். மேற்கு மகாராஷ்டிராவில் இது போன்ற 70 - 150 உறுப்பினர்களைக் கொண்ட 30 - 40 குழுக்கள் உள்ளன என்று புனேவை சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளரும், தமாஷா சமூகத்தைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதியிருப்பவருமான சந்தேஷ் பண்டாரே கூறுகிறார், மேலும் 20 - 22 நபர்களை கொண்ட சுமார் 200 குழுக்கள் உள்ளன, ஆனால் இவை அனைத்தும் பருவம் முழுவதுக்கும் நிகழ்ச்சிகளை நடத்துவது இல்லை

செப்டம்பர் - மே பருவத்தில் ஒரு பாட் இரண்டு வழிகளில் பணம் சம்பாதிக்கிறது. 'கட்டணம் பெற்று நடக்கும் நிகழ்ச்சி' களின் பருவம் தசராவிற்கு பின் ஆரம்பமாகிறது. ஒரு டிக்கெட்டின் விலை 60 ரூபாயாக இருக்கிறது. வழக்கமாக மார்ச் / ஏப்ரல் மாதங்களில் வரும் குடி படுவா வரை இந்த கட்டணம் பெறும் நிகழ்ச்சிகள் தொடர்கின்றன.

The audience stayed on till the end of the show in Gogolwadi village, Pune district
PHOTO • Shatakshi Gawade ,  Vinaya Kurtkoti

தமாஷா நிகழ்ச்சி, வழக்கமாக திறந்த வெளிகளில் இரண்டு மணி நேரத்தில் அமைக்கப்படும் தற்காலிக மேடைகளில் நடத்தப்படுகிறது

கட்டணம் பெற்று நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு அனைத்து செலவுகளையும் ஈடு செய்ய குறைந்தபட்சம் 1,000 பார்வையாளர்கள் தேவை. பார்வையாளர்களில் - 90 சதவீதம் பேர் ஆண்களே - அவர்களும் பொதுவாக கிராமத்தில் வசிப்பவராகவோ அல்லது சுற்றியுள்ள கிராமத்தில் வசிப்பவராகவோ இருப்பார்கள். பொதுவாக ஒரு நிகழ்ச்சி 5 - 6 மணி நேரம் நடக்கும், ஆனால் அதுவே  இரவு 11 மணிக்கு அல்லது நள்ளிரவுக்கு பின்னால் துவங்கினால் அதிகாலை 2 அல்லது 3 மணிக்கே நிகழ்ச்சி முடிவடைந்துவிடும்.

தமாஷா நிகழ்ச்சி திறந்த வெளியில் நடத்தப்படுகிறது; அதற்கான மேடையை தொழிலாளர்கள் 2 மணி நேரத்தில் அமைக்கின்றனர். ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு நாளில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ச்சியை நடத்துகின்றன. சில கிராமங்கள், இக்குழு 2 - 3 மணி நேரம் நீடிக்கும், 'சாக்கலாச்சி ஹஜேரி' என்று அழைக்கப்படும் சிறிய அதிகாலை நேர நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன.

பணம் சம்பாதிப்பதற்கான இரண்டாவது வழி என்னவென்றால், ஜதாராவின் (கிராமத் திருவிழா) போது நிகழ்ச்சியை நடத்துவதற்காக இக்குழுக்கள், ஜதாரா குழுக்களால் (ஒவ்வொரு கிராமத்திற்கும் அதன் சொந்த குழு இருக்கும்) பணியமர்த்தப் படுகின்றன. பெரிய குழுக்களுக்கு சுபாரி (முன்பதிவுத் தொகை) குறைந்தது ஒரு நிகழ்ச்சிக்கு ரூபாய் ஒரு லட்சம் ஆகும்.

வாடகைக்கு எடுக்கப்பட்ட சுபாரி நிகழ்ச்சிகளின் போது டிக்கெட் சாளரம் அமைக்கப்படுவது இல்லை; யார் வேண்டுமானாலும் நிகழ்ச்சிக்கு வரலாம் மற்றும் நிகழ்ச்சியை பார்க்கலாம். "மே 2017 இல், முடிவடைந்த இந்தப் பருவத்தில் நாங்கள் ரூபாய் 60 லட்சம் வரை லாபம் பெற்றோம், ஆனால் இந்தப் பணத்தை நாங்கள் முன் பணம் கொடுப்பதற்கு   செலவிட வேண்டியிருக்கிறது. எங்களது கலைஞர்களை மற்றொரு தமாஷா குழுவிடம் இழக்க நேரிடும் என்ற பயத்தால்,  இந்தச் செலவை எங்களால் தவிர்க்க இயலாது", என்று கூறுகிறார் மோகித்.

எவ்வாறாயினும், வறட்சியான ஆண்டில், டிக்கெட் மற்றும் திறந்தவெளி நிகழ்ச்சிகள் இரண்டும் பாதிக்கப்படுகின்றன. கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு எங்களிடம் கொடுப்பதற்கு பணம் இருக்காது. "ஆனால், கலைஞர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும், மேலும் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஊதிய உயர்வைக் கோருகின்றனர்", என்று கூறுகிறார் மோகித். "உரிமையாளர்களே இந்த இழப்பை சந்திக்கின்றனர்", என்கிறார்.

Babaso Nyanu Mane (centre) is going to apply for a pension this year. He tried setting up his own phad, but had to return to his life as just an actor when his phad failed
PHOTO • Shatakshi Gawade ,  Vinaya Kurtkoti

பாபாசோ ஞானு மானே (நடுவில் இருப்பவர்)மங்களாத்தாயின் குழுவில் செயல்படுகிறார்; இந்தாண்டு அரசாங்க ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க திட்டமிட்டு இருக்கிறார்

ஆனால் லாபங்கள் ஒரு முக்கிய நிரல் அல்ல என்று மங்களா மற்றும் மோகித் ஆகிய இருவரும் ஒப்புக் கொள்கின்றனர். "எங்களது முக்கிய நோக்கம் பொதுமக்களின் நினைவுகளில் எங்கள் பாட் இருக்க வேண்டும் என்பதே", என்கிறார் மோகித். "தமாஷா என்ற கலை உயிர்ப்புடன் இருக்க வேண்டும்". மங்களாத்தாயும் இத்தொழிலைத் தொடர தனக்கு இருக்கும் ஒரு உந்துதல் தனது குடும்பத்தின் பெயரை நிலை நிறுத்துவதே, என்று வலியுறுத்துகிறார். மேலும் அவர், "நாங்கள் சம்பாதிக்கும் மொத்தப் பணத்தையும் எங்கள் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்கிறோம். இதிலிருந்து எங்களுக்கு கிடைப்பது எதுவும் இல்லை", என்று கூறுகிறார்.

ஓய்வுக்குப் பிறகு என்ன நடக்கும்? என்று 48 வயதான சார்தா கூறுகிறார், "நாங்கள் ஒரு மாதத்திற்கு ரூபாய் 3000 ஓய்வூதியமாக பெற வேண்டும் (அரசாங்கத்திடமிருந்து இதைப் பெறுவது நிச்சயமற்றது என்ற போதிலும்). ஆனால், இந்த பணம் எப்படி போதுமானதாக இருக்கும்? எனது உடல் ஒத்துழைக்கும் வரை நான் இந்த வேலையையே செய்ய விரும்புகிறேன். அதன் பிறகு எனக்கு உணவளிக்க எனது குழந்தைகளையே நான் நம்பியிருக்க வேண்டும்", என்று கூறுகிறார்.

பின் குறிப்பு: இக்குழுவின் 2017 ஆம் ஆண்டின் பருவம், பீட் மாவட்டத்தின் வால்வாட் கிராமத்தில், செப்டம்பர் 17 அன்று நடந்த நிகழ்ச்சியுடன் துவங்கியது. மங்களா பன்சோட், அக்டோபர் 9 ஆம் தேதி, சமூக நீதி மற்றும் முன்னேற்ற அமைச்சகத்தின், சமூக நீதி மற்றும் முன்னேற்றத் துறையின் சார்பில் வழங்கப்படும் வயோஷ்ரேஷ்த சன்மான் (தேசிய விருதினை), படைப்புக் கலை என்னும் பிரிவின் கீழ் பெற்றார்

தமிழில்: சோனியா போஸ்

Shatakshi Gawade

சதாக்ஷி கவாடே புனேவைச் சேர்ந்த ஒரு சுதந்திர பத்திரிக்கையாளர். அவர் சுற்றுச்சூழல், உரிமைகள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைப் பற்றி எழுதுகிறார்.

Other stories by Shatakshi Gawade
Vinaya Kurtkoti

வினயா குர்த்கோட்டி நகல் ஆசிரியர் மற்றும் புனேவைச் சேர்ந்த சுதந்திர பத்திரிகையாளர் ஆவார். இவர் கலை மற்றும் கலாச்சாரம் பற்றி எழுதுகிறார்.

Other stories by Vinaya Kurtkoti
Translator : Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.

Other stories by Soniya Bose