அதிகாலை 6 மணி. சரண்யா பலராமன் கும்மிடிப்பூண்டி வீட்டிலிருந்து கிளம்பி விட்டார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள இந்த சிறு டவுனின் ரயில் நிலையத்தில் மூன்று குழந்தைகளுடன் அவர் ரயிலேறுகிறார். இரண்டு மணி நேரங்களில் அவர், 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைகிறார். இங்கிருந்து, தாயும் குழந்தைகளும் பள்ளியை அடைய இன்னொரு உள்ளூர் ரயிலில் 10லிருந்து 12 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும்.
மாலை நான்கு மணிக்கு, இப்பயணம் தலைகீழாக நடக்கும். வீடு வந்து அவர்கள் சேர இரவு 7 மணி ஆகிவிடும்.
பள்ளிக்கும் வீட்டுக்கும் சென்று வரும் 100 கிலோமீட்டர் தூரப் பயணத்தை வாரத்தில் ஐந்து முறை மேற்கொள்கின்றனர். அது பெரும் செயல் என்னும் சரண்யா, “தொடக்கத்தில் (திருமணத்துக்கு முன்), பேருந்தோ ரயிலோ எங்கே ஏறுவதென எனக்கு தெரியாது. எங்கே இறங்க வேண்டுமென்று கூட தெரியாது,” என்கிறார்.
பிறக்கும்போதே பார்வையற்று பிறந்த மூன்று குழந்தைகளுக்காகத்தான் எல்லா சோதனைகளையும் சரண்யா எதிர்கொள்கிறார். முதன்முறையாக அவர் கிளம்பியபோது மாமி அவருடன் வந்து வழியை காட்டியதாகக் கூறுகிறார். “அடுத்த நாளும் வரச் சொல்லி கேட்டபோது வேலை இருப்பதாக சொல்லிவிட்டார். நான் அழுதேன். பயணிக்க நான் சிரமப்பட்டேன்,” என்கிறார் அவர், குழந்தைகளுடன் மேற்கொண்ட பயணத்தை நினைவுகூர்ந்து.
மூன்று குழந்தைகளும் முறையான படிப்பை பெற வேண்டுமென்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். ஆனால் பார்வையற்றோருக்கான பள்ளி வீட்டுக்கு பக்கத்தில் எதுவும் இல்லை. “ஒரு பெரிய (தனியார்) பள்ளி வீட்டருகே இருக்கிறது. அங்கு சென்று என் குழந்தைகளை அனுமதிப்பார்களா எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், ஒருவேளை குழந்தைகளை அனுமதித்தாலும் அவர்களின் கண்களை பிற குழந்தைகள் பென்சிலாலோ வேறு கூரான பொருளாலோ குத்தினால் தாங்கள் பொறுப்பாக முடியாது எனக் கூறினர்,” என நினைவுகூருகிறார்.
ஆசிரியர்கள் அறிவுறுத்தியபடி சரண்யா பார்வையற்றோருக்கான பள்ளியை தேடத் தொடங்கினார். சென்னையில் பார்வையற்றோருக்கான அரசுப் பள்ளி ஒன்றுதான் இருக்கிறது. அவர் வீட்டிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பூந்தமல்லியில்தான் அப்பள்ளியும் இருக்கிறது. அதற்கு பதிலாக அவர் குழந்தைகளை நகரத்திலுள்ள தனியார் பள்ளிகளில் சேர்ப்பதே நல்லது என பக்கத்து வீட்டார் யோசனை கூறினார். ஆனால் சரண்யா பூந்தமல்லி அரசுப் பள்ளிக்கு சென்று பார்க்க முடிவெடுத்தார்.
“எனக்கு எங்கு செல்வது எனத் தெரியவில்லை,” என்கிறார் அவர் அந்த நாட்களை நினைவுகூர்ந்து. “திருமணத்துக்கு முன் வீட்டிலேயே அதிக நாட்கள்” கழித்த அவர் தற்போது வெளியே வந்து பள்ளிகளை தேட வேண்டிய நிலை. “திருமணத்துக்கு பின் கூட, தனியாக பயணிக்க எனக்கு தெரியாது,” என்கிறார் அவர்.
தென்சென்னையில் இருக்கும் அடையாறில் காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோருக்கான புனித லூயிஸ் கல்வி நிறுவனத்தை சரண்யா கண்டறிந்தார். இரு மகன்களையும் அங்கு சேர்த்தார். பிறகு மகளை அருகே ஜி.என்.செட்டி சாலையில் இருக்கும் லிட்டில் ஃப்ளவர் கான்வெண்ட் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்தார். மூத்த மகன் எம் மெஷாக் 8ம் வகுப்பு படிக்கிறார். இரண்டாவது மகன் எம் மனாசே 6ம் வகுப்பு படிக்கிறார். கடைசி குழந்தையான எம் லெபனா 3ம் வகுப்பு படிக்கிறார்.
ஆனால் அவர்களை பள்ளியில் படிக்க வைக்க வேண்டுமென்பது அலுப்பையும் சோர்வையும் அழுத்தத்தையும் தரக் கூடிய நீண்ட ரயில் பயணங்களை கொண்டது. போகும் வழியில் மூத்தவனுக்கு சென்ட்ரல் ஸ்டேஷனில் அடிக்கடி வலிப்பு வந்துவிடும். “அவனுக்கு என்ன ஆகுமென்று தெரியாது. ஆனால் வலிப்பு வந்துவிடும். யாரும் பார்க்காத வண்ணம் என் மடியில் அவனைப் போட்டுக் கொள்வேன். சற்று நேரம் கழித்து அவனை தூக்கிக் கொள்வேன்,” என்கிறார் அவர்.
விடுதியுடனான பள்ளிப்படிப்பு என்பது அவரது குழந்தைகளுக்கு சரியான வழியாக இருக்காது. மூத்த மகனை அருகே இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும். “ஒருநாளில் மூன்று, நான்கு முறை அவனுக்கு வலிப்பு வந்துவிடும்,” என்னும் அவர், “இரண்டாவது குழந்தை, நானில்லை என்றால் சாப்பிட மாட்டான்” என்றும் கூறுகிறார்.
*****
17 வயது ஆகும் முன்பே சரண்யா அவரது மாமா முத்துவை திருமணம் செய்து கொண்டார். உறவுக்குள் திருமணம் செய்து கொள்வது தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சாதியாக பட்டியலிடப்பட்டிருக்கும் ரெட்டி சமூகத்தில் இயல்பு. “என் தந்தை, குடும்பப் பிணைப்பை உடைக்க வேண்டாமென்பதற்காக என்னை என் (தாய் வழி) மாமாவுக்கு கட்டி வைத்தார்,” என்கிறார் அவர். “கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்த எனக்கு நான்கு தாய்மாமன்கள். அவர்களில் என் கணவர்தான் இளையவர்.”
25 வயதிலெல்லாம் பார்வையற்ற மூன்று குழந்தைகளுக்கு சரண்யா தாயாகி விட்டார். “முதல் குழந்தை பிறக்கும் வரை இந்த மாதிரியும் (பார்வை குறைபாடுடன்) குழந்தைகள் பிறக்குமென்பது எனக்கு தெரியாது,” என்கிறார் அவர். “மூத்தவன் பிறக்கும்போது எனக்கு 17 வயது. பொம்மையின் கண்கள் போல அவனது கண்கள் இருந்தன. முதியவர்களின் கண்களைத்தான் அப்படி நான் பார்த்திருக்கிறேன்.”
21 வயதில் இரண்டாம் மகனை அவர் பெற்றெடுத்தார். “இரண்டாவது குழந்தையேனும் இயல்பாக இருக்குமென நினைத்தேன். ஆனால் ஐந்து மாதங்களிலேயே அந்த குழந்தைக்கும் பார்வை போய்விட்டது,” என்கிறார் சரண்யா. இரண்டாம் குழந்தைக்கு இரண்டு வயதாக இருக்கும்போது, சரண்யாவின் கணவர் விபத்துக்குள்ளாகி கோமா நிலைக்கு சென்றார். அவர் மீண்ட பிறகு, அவரின் தந்தை லாரிகளுக்கான ஒரு சிறு மெக்கானிக் கடையை அவருக்கு வைத்துக் கொடுத்து உதவினார்.
விபத்து நடந்து இரண்டு வருடங்கள் கழிந்த பிறகு, சரண்யா மகளை பெற்றெடுத்தார். “அவள் ஆரோக்கியமாக இருப்பாளென நினைத்தோம்…”என்னும் அவர் பெருமூச்செறிந்து, “உறவில் மணம் முடித்ததால்தான் மூன்று குழந்தைகளும் இப்படி பிறந்திருப்பதாக பலர் கூறினர். முன்னாடியே அந்த விஷயம் தெரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்,” என்கிறார்.
மூத்த மகனுக்கு நரம்பியல் பிரச்சினை இருக்கிறது. மாதந்தோறும் மருத்துவ செலவாக அவர்கள் 1,500 ரூபாய் செலவழிக்கின்றனர். மகன்கள் இருவருக்கான வருடாந்திரப் பள்ளிக் கட்டணம் 8,000 ரூபாய். மகளின் பள்ளியில் கட்டணம் இல்லை. “என் கணவர் எங்களை பார்த்துக் கொண்டார்,” என்கிறார் அவர். “நாளொன்றுக்கு அவர் 500லிருந்து 600 ரூபாய் வரை சம்பாதித்தார்.”
2021ம் ஆண்டில் மாரடைப்பு வந்து கணவர் இறந்த பிறகு, அதே பகுதியில் வசித்த பெற்றோரின் வீட்டுக்கு சரண்யா இடம்பெயர்ந்தார். “இப்போது என் பெற்றோர் மட்டும்தான் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள்,” என்கிறார் அவர். “குழந்தைகள் வளர்ப்பதை நான் மட்டும் தனியாக செய்ய வேண்டும்.”
மின் தறி ஆலையில் சரண்யாவின் தந்தை பணிபுரிகிறார். மாதம் முழுக்க வேலை செய்தால் 15,000 ரூபாய் ஊதியம் கிடைக்கும். தாய்க்கு மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை 1,000 ரூபாய் மாதந்தோறும் கிடைக்கும். “தந்தைக்கு வயதாகிக் கொண்டே இருக்கிறது. 30 நாட்களும் அவர் வேலைக்கு சென்று எங்களின் செலவுகளை பார்த்துக் கொள்ள முடியாது,” என்கிறார் அவர். “குழந்தைகளுடன் நான் எல்லா நேரமும் இருக்க வேண்டும். என்னால் வேலை தேடவும் முடியாது,” என்கிறார் சரண்யா. நிலையான அரசு வேலை உதவும். அதற்கான மனுக்களை அவர் கொடுத்துள்ளார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
அன்றாடப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சரண்யா, தற்கொலை எண்ணங்களை எதிர்த்தும் போராட வேண்டியிருக்கிறது. “என் மகள்தான் என்னை உயிருடன் வைத்திருக்கிறாள்,” என்கிறார் அவர். “‘அப்பாதான் போய்விட்டார். நாமாவது கொஞ்ச வருடங்கள் இருந்துவிட்டு போக வேண்டும்’ என அவள் சொல்வாள்.”
இக்கட்டுரை தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு எஸ்.செந்தளிரால் மொழிபெயர்க்கப்பட்டது
தமிழில்: ராஜசங்கீதன்