உன்னாவ்: வயல்வெளியில்  இரண்டு தலித் பெண்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு, மூன்றாவது பெண் அபாயகரான நிலையில் உள்ளார்.

தி வயர் , பிப்ரவரி 18, 2021

உத்தரபிரதேசத்தில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் தலித் பெண்ணின் உடல் மீட்பு,மூவர் மீது  பாலியல்வன்கொடுமை வழக்குப் பதிவு

அவுட்லுக் இந்தியா , ஜனவரி 18, 2021

உத்தரப்பிரதேசத்தில் 15 வயது தலித் சிறுமியின் உடல் உயிரிழந்த நிலையில் வயல்வெளியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது, கொலையா என சந்தேகம்

தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் , அக்டோபர் 3, 2020

ஹதராஸை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில்  22 வயது தலித் பெண் பாலியல்வன்புணரப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் , அக்டோபர் 1, 2020

உத்தரப்பிரதேசத்தில் கூட்டுப் பாலியல்வன்புணர்வுக்கு  உள்ளாக்கப்பட்ட தலித்  பெண், டெல்லி மருத்துவமனையில்  மரணம்.

தி இந்து , செப்டம்பர் 29, 2020

உத்தரபிரதேசம்: தலித் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு ,மரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில்  சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பர்ஸ்ட்போஸ்ட் , பிப்ரவரி 19, 2015

உத்தரபிரதேசத்தில் மற்றுமொரு சிறுமி மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார், வன்புணரப்பட்டு, கொலைசெய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு.

டிஎன்எ , ஜனவரி 12, 2014

சுதன்வா தேஷ்பாண்டேவின் ஒலிப்பதிவில் இந்தக் கவிதையை கேளுங்கள்

The continuing and appalling atrocities against young Dalit women in Uttar Pradesh inspired this poem
PHOTO • Antara Raman

சூரியகாந்தி தோட்டம்

ஒருவேளை இது  அவர்கள் வளர்வதற்கான  இடமில்லை
ஒருவேளை  இது  அவர்கள் மலர்வதற்கான பொழுதில்லை
ஒருவேளை  இது அவர்கள்  புன்னகைப்பதற்கான பருவமுமில்லை
சுற்றி பெருமழை பொழிந்து கொண்டிருக்கிறது.
ஒருவேளை இங்கே சூரியக்கதிர்களும் திரளப்போவதில்லை
ஒருவேளை, இங்கே மூச்சுவிடுவதற்கும்  இடமில்லை
நமக்கு தெரியும், இங்கே  சந்தேகிப்பதற்கும் காரணங்களில்லை.
நமக்கு தெரியும் அவையெல்லாம் உண்மையென்று  .

அவர்கள் கொத்தப்பட்டும், பிடுங்கப்பட்டும், கசக்கப்பட்டும்,
உண்ணப்பட்டும், படுகொலை செய்யப்படுவார்கள் என்றும் நமக்கு தெரியும்
எப்போது அவர்கள் பொன்னிறமாக மலர்ந்தர்களோ
மென்மையோடும் , இளமையின் மணத்தோடும்
அறுவடைக்கு தயாரானார்களோ
எப்போது  அவைகளின்  புத்துணர்வை அவர்கள்  நுகர்ந்தார்களோ
அப்போதிருந்தே ஒருவர் பின் ஒருவராக
அவர்கள் அனைவரும் கொளுத்தப்படுகிறார்கள்
அல்லது கசாப்புக்கடைக்காரனால் சிதைக்கப்படுகிறார்கள்
ஒவ்வொருவரும் அவர்களின்  முறைக்காக காத்திருக்கிறார்கள்.

ஒருவேளை  நேசிக்க,   இது  மிகக்குரூரமான இரவாகவும்,
அக்கறை கொள்வதற்கு வீசும் கொடும் காற்று உகந்ததாயுமில்லை
ஒருவேளை முதுகெலும்புள்ள உயரமான  இம்மலர்களை
தாங்குவதற்கும்  இம்மண்ணில்  வலுவுமிவில்லை
ஆனாலும் காடடர்ந்த இந்த சூரியகாந்தித் தோட்டத்தில்
இத்தனை வலிய எண்ணிக்கையில்
என்ன தைரியத்தில் இங்கு அவர்கள் வளர்ந்தார்கள்?

தீண்டப்படாத பேரழகின் தோட்டங்களில்
பச்சையும், பொன்னிறமுமான ஒளிரும் தீப்பிழம்புகளும்
தங்களது சின்னஞ்சிறிய பாதங்களை உதைத்து
பறக்கும், நடனம் ஆடும்  பெண்களின்  மடைதிறந்த சிரிப்பொலிகளும்
அவர்களது  சிறிய  இருபாதங்களில்  நிற்பதும்
அவர்களது தலையை  மிகஉயரமாக  உயர்த்தியிருப்பதும்.
அவர்களது சிறிய கைகளில்
ஆரஞ்சுநிற ஒளிர்வை ஏந்தியிருப்பதையும்
கண்ணுக்கெட்டிய தூரம்வரை  நிரம்பியிருக்கிறது.

இதுவெறும் தற்காலிக  மயானங்களிலிருந்து
தூரத்தில் பறந்துக்கொண்டிருக்கும்  தகிக்கும் சாம்பல் அல்ல,
சூரியகாந்தி  தோட்டங்களை  என்கருப்பையில்  சுமந்துகொண்டிருக்கிறேன்
அதுவே என் கண்களை கண்ணீரால் நிரப்பி தகித்து கொண்டிருக்கிறது.

ஒலிப்பதிவு: சுதன்வா தேஷ்பாண்டே, நடிகர் மற்றும் ஜன நாட்டிய  மன்ச்சின் இயக்குனர், லெப்ட்வார்டஸ் புக்ஸ்ன் ஆசிரியர்.

தமிழில்: பிரதீப் இளங்கோவன்

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Other stories by Pratishtha Pandya
Illustration : Antara Raman

அந்தரா ராமன் ஓவியராகவும் வலைதள வடிவமைப்பாளராகவும் இருக்கிறார். சமூக முறைகல் மற்றும் புராண பிம்பங்களில் ஆர்வம் கொண்டவர். பெங்களூருவின் கலை, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்துக்கான சிருஷ்டி நிறுவனத்தின் பட்டதாரி. ஓவியமும் கதைசொல்லல் உலகமும் ஒன்றுக்கொன்று இயைந்தது என நம்புகிறார்.

Other stories by Antara Raman
Translator : Pradeep Elangovan

மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.

Other stories by Pradeep Elangovan