“அரசியல்வாதிகள் எங்கள் பகுதிக்கு வரும்போது நிற்கக்கூட மாட்டார்கள். கையை அசைத்துக்கொண்டே அவர்களது கார்களில் பறந்துவிடுவார்கள். அவர்கள் பக்கத்தில் கூட நாங்கள் போகமுடியாது.” என்கிறார் புட்டண்ணா.
கர்நாடகா மாநிலத்தின் தும்கூர் மாவட்டத்தில் மதுகிரி நகரில் புட்டண்ணா கையால் மனிதக் கழிவு அகற்றுவோராக 11 வருடங்களாக பணிசெய்கிறார். இந்தக் காலகட்டத்தில் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள் வந்துபோய்விட்டன. இன்னொன்று வந்துகொண்டிருக்கிறது. ஏப்ரல் 18இல் தும்கூரில் தேர்தல் வந்தது. நாடாளுமன்றத் தேர்தலின் முதல் கட்டத் தேர்தல்கள் கர்நாடகத்தில் தொடங்கின.
இந்த தொகுதியில் மிகப்பெரும் தலைவர்கள் போட்டியிடுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிடுகிற வேட்பாளர் நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த 77 வயதான ஜி.எஸ்.பசவராஜ். காங்கிரஸ்- ஜனதா தளம் (மதச்சார்பின்மை) கட்சிகளின் கூட்டணி வேட்பாளர் முன்னாள் பிரதமர் 86 வயதான ஹெச்.டி. தேவகவுடா.
மதுகிரி சுகாதார ஊழியர்களை அவர்களின் தொகுதியில் நிற்கிற வேட்பாளர்களில் யார் சிறந்தவர் என்று கேட்டுப்பாருங்கள். அவ்வளவு ஆர்வமாக யாரையும் சொல்லமாட்டார்கள். அவர்களில் ஒருவரான 45 வயதான புட்டண்ணா, சுரண்டப்படுகிற மாதிகா சாதியைச் சேர்ந்தவர் . மாதிகாக்கள் பெரும்பாலும் கையால் மனிதக் கழிவு அகற்றுவோராக உள்ளனர். (இந்தக் கட்டுரைக்காக நான் நேர்காணல் செய்த அனைத்து தொழிலாளர்களும் தங்களின் சாதிப்பெயர்கள் தெரியாமல் பயன்படுத்த வேண்டும் என்றனர்) தும்கூரில்தான் கர்நாடக மாநிலத்திலேயே அதிமான எண்ணிக்கையில் கையால் மனிதக் கழிவு அகற்றுவோர் உள்ளனர் என்கிறது கர்நாடக துப்புரவுப் பணியாளர்களுக்கான ஆணையம் 2017 ஆகஸ்ட் மாதத்தில் செய்த ஒரு ஆய்வு. மனிதத் தன்மையற்ற வேலைச் சூழல்கள், குறைவான சம்பளம், குடியிருப்பதற்கு வீடுகள் கிடைக்காமலிருப்பது உள்ளிட்ட பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் பல வருடங்களாக நீடிக்கின்றன. இவைதான் அவர்களுக்கு தங்களின் அரசியல்தலைவர்கள் மீது போதுமான அளவுக்கு அக்கறை இல்லை என்பதற்கான சாதாரணமான காரணங்கள்.“நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்களுக்கு இங்கே கையால் மனிதக் கழிவு அகற்றுதல் எனும் இழிவு இருக்கிறது என்பது அவ்வளவு முக்கியமான பிரச்சனையாகத் தெரியவில்லை.” என்கிறார் கே.பி. ஓப்பிலேஷ். அவர் ‘தாமேட்’ எனும் பெயரில் ஒரு அமைப்பை நடத்துகிறார். அது கிராமப்புற முன்னேற்றத்துக்கான மையம். தும்கூரை மையமாகக்கொண்டு தலித் சமூகங்களின் உரிமைகளுக்காக பணியாற்றுகிறது. “ தும்கூரில் 3373 பேர் துப்புரவு பணியாளர்கள் இருக்கிறார்கள் என்கிறது 2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சமூக பொருளாதார மற்றும் சாதிக் கணக்கெடுப்பு. இந்த எண்ணிக்கை என்பது அவர்களின் வாக்குகளைப் பாதிக்கிற அளவு இல்லை. இந்த தொகுதியின் மக்கள் தொகையான 26.78 லட்சம் பேரோடு ஒப்பிடும்போது கையால் மனிதக் கழிவு அகற்றுவோர் ஒரு சதவீதத்துக்கும் மிகவும் குறைவு. அதனால் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அவர்களது தேவைகள் குறித்து கவலைப் படுவதில்லை. அதனால் இவர்கள் மன வெறுப்புக்கு ஆளாகியிருக்கின்றனர்.
தொடர்ந்து வாக்களித்து வந்தாலும் புட்டண்ணா போன்றவர்களுக்கு வாழ்வில் எந்தவொரு மாற்றமும் வரவில்லை. சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பாக இந்த மாவட்டத்தில் ஏதோ கொஞ்சம் மாற்றம் தெரிந்தது.ஆனால் அது ரொம்ப நாளைக்கு நீடிக்கவில்லை.“ 2012ஆம் வருடத்தில் எங்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் கிடைத்தன. அதுவும் அரசிடமிருந்து அல்ல. எங்களின் உரிமைகளுக்காக போராடுகிற தாம்டே நிறுவனத்திடமிருந்து”என்கிறார் மனிதக் கழிவு அகற்றுகிற இழிவில் மாட்டிக்கொண்டிருக்கிற மஞ்சுநாத்.
தாம்டே நிறுவனம் மனிதக் கழிவு அகற்றுவோருக்கான முக கவசங்கள், கை உறைகள், கால்களின் பாதுகாப்புக்கான மூடணிகள் ஆகியவற்றை தொடர்ச்சியாக அரசாங்கத்தை கொடுக்கவைக்க முயன்றது. ஆனால் அது நீடிக்கவில்லை. “ தாம்டே மாதிரியான அரசு சாரா நிறுவனங்கள் இத்தகைய பாதுகாப்புச் சாதனங்ளை ஆயிரக்கணக்கானோருக்கு எப்படி தொடர்ந்து வழங்க முடியும்? என்கிறார் புட்டண்ணா.
கையால் மனிதக் கழிவு அகற்றுதலை ஒழிப்பதற்காக தேசிய அளவில் பணியாற்றுகிறது சபை கர்மாச்சாரி அந்தோலன் எனும் அமைப்பு. அது கடந்த ஏப்ரல் 4 அன்று தங்களது கோரிக்கைகள் தொடர்பான தனியான தேர்தல் அறிக்கையை முதன்முதலாக வெளியிட்டது. இந்திய அரசியல் சாசனத்தின் சாசனக்கூறு 21இன் கீழ் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகள் உறுதியளிக்கப்பட்டிருக்கின்றன. அதற்கேற்ற முறையில் பயன்களும் திட்டங்களும் கையால் மனிதக் கழிவு அகற்றுவோருக்கு கிடைக்கவேண்டும் என்று அது கோரியது. கல்வி, ஆரோக்கியம், கண்ணியமான வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் இலவசமாகவும் நேரடியாகவும் கிடைப்பதற்கான ‘வாழ்வுரிமை அட்டை” ஒன்றை மனிதக் கழிவு அகற்றுவோருக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் அந்த தேர்தல் அறிக்கையில் பட்டியல் போடப்பட்டிருக்கின்றன. மத்திய அரசின் பட்ஜெட்டில் ஒரு சதவீதத்தை மனிதக் கழிவு அகற்றுவோரின் நல்வாழ்வுக்காக மட்டும் ஒதுக்கவேண்டும். அவர்களின் விடுதலைக்கும் மறுவாழ்வுக்கும் தனியான மத்திய அமைச்சகம் பிரதமரின் தலைமையில் அமைக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது அந்த தேர்தல் அறிக்கை.
கையால் மனிதக் கழிவு அகற்றுதலைச் செய்யவைப்பது என்பது சட்டவிரோதம் என்றும் அதனை செய்யவைப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வரைக்கும் விதிக்க முடியும் என்கிறது கையால் மனிதக் கழிவு அகற்றுவோரை பணியமர்த்தல் தடை மற்றும் அவர்களின் மறுவாழ்வுக்கான சட்டம்- 2013. செப்டிக் டாங்குகள் எனப்படும் மலக்குழிகளிலும் பாதாள சாக்கடைகளிலும் வெறும் கைகளால் இறங்குவதும் சுத்தம் செய்வதும் தடைசெய்யப்பட்டிருக்கிறது என்கிறது அந்தச் சட்டம்.
ஆனாலும் இத்தகைய மனிதக் கழிவு அகற்றுவோர் நாடு முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் 1.82 லட்சம் பேர் இருக்கிறார்கள். தென்னிந்தியாவில் கர்நாடகத்தில் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர் என்கிறது சமூக பொருளாதார மற்றும் சாதிக் கணக்கெடுப்பு.- 2011.
“ தேர்தல் நேரங்களில் வாக்குகளை விலைகொடுத்து வாங்க எல்லோரும் லஞ்சம் தருகின்றனர். எங்களது கால்களைத் தொட்டு வணங்கவும் அரசியல் வாதிகள் தயாராக இருப்பார்கள். அதன்பிறகு காணாமல் போய்விடுவார்கள் என்கிறார் 39 வயதான சரோஜாம்மா. “ கட்சிக்காரர்களும் உள்ளூர் தலைவர்களும் எங்களை வந்து பார்த்து குடும்பத்துக்கு 100 வரைக்கும் தருவார்கள். பெண்களுக்கு ஆளுக்கொரு சேலை. ஆண்களுக்கு குவார்ட்டர் மதுபாட்டில்கள்” என்கிறார் புட்டண்ணா.
மது பாட்டில் எப்போதும் கையிலேதான் இருந்தாக வேண்டும். குறிப்பாக, புட்டண்ணா வேலைக்குப் போகும்போது. “ சாக்கடைக்குள் நான் இறங்கனும்னா நான் காலையிலேயே கட்டாயம் குடித்துதான் ஆக வேண்டும்” என்கிறார் புட்டண்ணா. மதுகிரியில் உள்ள சுமார் 400 வீடுகளின் குப்பையை புட்டண்ணா அகற்றவேண்டும். நகராட்சியின் ஆவணங்களில் அவரது பணி குப்பைகளைச் சேகரிப்பதுதான். ஆனால் சட்டப்படியான வேலைமுறைகளைத்தாண்டி செல்கிறது அவரது பணி.
சாக்கடை அடைப்பு நீக்கும் ஜெட்டிங் மெஷினையும் அவர் செயல்படுத்த வேண்டியிருக்கிறது. அது சாக்கடைகளிலும் செப்டிக் டாங்குகளிலும் அடைப்புகளை எடுக்க உதவுகிறது. ஆனாலும் பல நேரங்களில் அந்த மிஷினின் பைப் அடைப்புகளை எடுக்காது. அந்த மாதிரி நேரங்களில் புட்டண்ணா நேரடியாக அதற்குள் இறங்கியாக வேண்டும். அவரது உடலையை ஒரு அடைப்பு எடுக்கும் கருவியாகப் பயன்படுத்தியாக வேண்டும். அதன்பிறகுதான் அடைப்பு எடுபடும். அதற்குப் பிறகுதான் அந்த கழிவு நீரை வெளியேற்ற மிஷினால் இயலும். புட்டண்ணாவும் மஞ்சுநாத்தும் வேலைசெய்ய மதுதான் உதவுகிறது. “நான் இன்னைக்கி காலைல ஆறுமணிக்கு குடிக்க ஆரம்பித்தேன்” என்கிறார் புட்டண்ணா. “ நான் புல் போதைல இருந்தாத்தான் என்னால எதையும் தாங்க முடியும்.”
மத்திய அரசின் ‘தூய்மை பாரதம்’ இயக்கம் கடந்த ஐந்தாண்டுகளில் அவரை மாதிரியானவங்களுக்கு ஏதேனும் உதவியாக இருந்திருக்கா? என்ற கேள்விக்கு பதிலளிக்கிறார் மஞ்சுநாத். “அதனால் பொதுவான சுத்தம் நகரத்துல அதிகமாயிருக்கு.” என்கிறார் அவர். மற்றவர்களும் “ஆமாம்” என்கிறார்கள். ஐந்து வருடங்களுக்கு முன்னால இருந்ததைவிட தற்போது மக்களின் விழிப்புணர்ச்சி அதிகமாயிருக்கு. அவங்களே குப்பைகளை ரகம் பிரிக்கிறார்கள். அது எங்க வேலையை கொஞ்சம் லேசாக்குது.இந்த திட்டத்தின் வெற்றி என்பது ஒரு மனிதனுக்குப் போகிறது. “ மோடிதான் சிறப்பானவர். அவர்தான் இந்தியாவின் நம்பர் ஒன் பிரதமர். அவர்தான் எப்போதும் பதவியில் இருக்கவேண்டும். ” என்கிறார் மஞ்சுநாத். “ எங்களுக்காக சோர்வில்லாமல் உழைக்கிறார் அவர். பல இந்தியர்களுக்கு அது தெரியமாட்டேன்கிறது” என்கிறார் அவர்.
கடந்த ஐந்தாண்டுகளில் பெரிய மாற்றம் எதுவும் தும்கூர் சுகாதார பணியாளர்களின் வாழ்க்கையில் வரவில்லை என்றாலும் அவர்களுக்கு பிரதமர் மீது நம்பிக்கை இருக்கிறது. “மோடி துப்புரவு பணியாளர்கள் மீது இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினா அவர்தான் சூப்பர். ஆனாலும் எங்களுக்கு அவர்ன்னா இஷ்டம்தான் ” என்கிறார் சரோஜாம்மா.
இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் பிரதமரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியானது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் அவர் கையால் மனிதக் கழிவு அகற்றுவோரின் கால்களை கழுவிக்கொண்டிருப்பதை அது காட்டியது. “எனது ஒட்டுமொத்த வாழ்விலும் மிக முக்கியமான தருணங்கள்” என்று அதில் எழுதியிருந்தது. “தூய்மை பாரதத்துக்காக தனது பங்களிப்பைச் செலுத்துகிற ஒவ்வொருவருக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன்” என்றார் அவர்.
ஆனால், தரவுகளுக்கும் இந்த வார்த்தைகளுக்கும் முரண்பாடுகள் உள்ளன. மார்ச் மாதம் 2018இல் சமூகநீதி மற்றும் ஆற்றல்படுத்தல் மத்திய அமைச்சகம் தரவுகளை வெளியிட்டது. கையால் மனிதக் கழிவு அகற்றுவோருக்கான மறுவாழ்வு பணிகளுக்கு ஒதுக்கப்படுகிற நிதி ஒதுக்கீடுகள் குறைந்து வந்துள்ளன. 2014-2015 நிதியாண்டில் 448 கோடிகள் ஒதுக்கப்பட்டன. 2015-16 நிதியாண்டில் 470 கோடிகள். 2016-17 நிதியாண்டில் வெறும் பத்துகோடிகள். 2017-18இல் வெறும் ஐந்துகோடிகள்.
தேசிய துப்புரவு பணியாளர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்திடம் ஏற்கெனவே பணம் இருக்கிறது என்று காரணம் சொல்லியிருக்கிறது மத்திய அமைச்சகம். இதே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு லாப நோக்கு இல்லாத கம்பெனிதான் இது.
தும்கூரில் பிஜேபியின் ஜி.எஸ். பசவராஜூக்கும் காங்கிரஸ்- ஜனதா
தள கூட்டணியின் தேவகவுடாவுக்கும் நடக்கிற தேர்தல் களத்தில் யாரும் துப்புரவு
பணியாளர்கள் பற்றி பேசவேயில்லை. காவேரி ஆற்றில் இணையும் கிளையாறான
ஹேமாவதி ஆறு பற்றிய பிரச்சாரமே இங்கே மையமானதாக இருக்கிறது. ஆனாலும் துப்புரவு பணியாளர்கள்
ஏதேனும் சிறப்பாக நடக்கும் என்ற
நம்பிக்கையிலும் உள்ளனர்.
கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான விழிப்புணர்ச்சி நிகழ்வுகள் ‘தூய்மை பாரதம்’ இயக்கத்துக்காக நடைபெற்றுள்ளன என்கிறார் ராமையா பொதுக்கொள்கை மையத்தின் உதவி இயக்குநர் சேத்தன் சிங்கை.
“ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவிக்காலத்தில் செய்யப்பட்டதைவிட அதிகமாக செய்யப்பட்டுள்ளன. ஆனால், மறுவாழ்வுக்கு என்று உண்மையா ஒதுக்கப்பட்ட நிதிகளின் அளவுக்கு அவை செய்யப்படவில்லை. நிதி ஒதுக்கீடு அல்லது கையால் மனிதக் கழிவு அகற்றுவோருக்காக செலவிடப்பட்டதைக் கணக்கெடுத்தால் அது தற்போதைய தேசிய ஜனநாயக்கூட்டணி ஆட்சியில் குறைவுதான்” என்கிறார் அவர்.
தேர்தல் களத்தில் ஹேமாவதி ஆறு தொடர்பான தாவாதான் பேசப்படுகிறது. தும்கூருக்கு பக்கத்தில் உள்ள ஹசன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேவகவுடா இருந்தபோது தும்கூர் தொகுதிக்கு அவர்தான் தண்ணீர் மறுத்தார் என்று துப்புரவு பணியாளர்கள் கருதுகின்றனர். ஹசனும் ஹேமாவதி ஆற்றின் தண்ணீரை நம்பிதான் இருக்கிறது. கூடுதலாக, இரண்டு சமூகங்களின் அரசியல் பிரதித்துவம் தொடர்பானதாகவும இந்த தேர்தல் களம் இருக்கிறது. பசவராஜ் லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர். ஒக்காலிகா சமூகத்தைச் சேர்ந்தவர் தேவகவுடா.
பெரிய தலைவர்களான இருவரின் தேர்தல் பிரச்சாரங்களிலும் துப்புரவு பணியாளர்கள் பிரச்சனை இல்லை என்றாலும் தங்களுக்கு கண்ணியமான நிரந்தரமான வேலைகள், சம்பள உயர்வுகள், சொந்தவீடுகள், குழந்தைகளுக்கு படிப்பதற்கான வசதிகள் ஆகியவை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறார்கள் அவர்கள். என்றாவது ஒரு நாள் தங்களின் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றும் என்று நம்புகிறார்கள். அவர்கள் எப்படி ஏப்ரல் 18இல் வாக்களிப்பார்கள் என்பதை மோடியின் மீதான நம்பிக்கை தீர்மானிக்கும் என்று தெரிகிறது.
“ எதுவும் மாற்றம் இல்லை என்றுதான் தோன்றுகிறது . ஆனால் , மாற்றம் வரவே செய்யும் . அதனால் நாங்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் ” என்கிறார் புட்டண்ணா . “ எனது வாக்கு என்பது எனது உரிமை . நான் ஏன் அதனை வீணாக்கவேண்டும் ?” என்கிறார் அவர் .
இந்த கட்டுரையாசிரியர் பிரித்தி டேவிட்டுக்கும் நவீன் தேஜஸ்விக்கும் மொழியாக்க உதவிக்காக நன்றி கூறுகிறார் .
விஷாகா ஜார்ஜ், பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர். ராய்ட்டர் செய்தி நிறுவனத்தில் வணிகம் தொடர்பான செய்திகளுக்கான சிறப்புச் செய்தியாளராக பணியாற்றியிருக்கிறார். சென்னையில் செயல்படும் ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசத்தில் பட்டம் பெற்றவர்.கிராமப்புற இந்தியா பற்றியும் குறிப்பாக பெண்கள் பற்றியும் குழந்தைகள் பற்றியும் சிறப்புக் கவனம் செலுத்துபவர்.