டெல்லி ஜிடி கர்னால் பைபாசில் நம் கண் முன்னால் நடந்த சம்பவங்கள் சற்று விசித்திரமானது.
ஒரு டிராக்டர் குழுவினர் டெல்லி நோக்கியும் – மற்றொரு குழுவினர் டெல்லியிலிருந்து சிங்குவிற்கும் சென்றனர். இருதரப்பும் நெடுஞ்சாலையில் சந்தித்துக் கொண்டன. இதனால் சிறிது குழப்பமும் நிலவியது. தங்கள் தலைவர்களின் அழைப்பின்பேரில் ஒரு குழு டெல்லியிலிருந்து திரும்பியது. காவல்துறையினரிடம் ஒப்புதல் பெற்ற வழிதடத்திற்கு மாறாக வேறு பாதையில் நகரத்திற்குள் நுழைவதற்கு தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தவறாக கருதி சிலர் தலைநகருக்குச் சென்றனர்.
நாடாளுமன்றத்தில் செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட மூன்று சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்லி எல்லைகளான சிங்கு, டிக்ரி, காசிப்பூர், சில்லா, மேவாட் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து தன்னிச்சையான குடியரசு தின அணிவகுப்பை நடத்தினர். ராஜஸ்தான்-ஹரியானா எல்லையில் உள்ள ஷாஜஹான்பூரிலும் அணிவகுப்பு நடைபெற்றது. இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைக் குறிக்கும் வகையில் 60 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த வாகன அணிவகுப்பு நடைபெற்றது. அனைத்திந்திய கிசான் சபாவின் மாபெரும் அணிவகுப்பு குடியரசு தினத்தில் இதுவரை இல்லாத புகழ்மிக்க குடிமக்கள் அணிவகுப்பாக இருந்தது.
பெருந்திரளான, அமைதியான, ஒழுங்கான, முற்றிலும் தலைமையற்ற செயலாக இருந்தது. எளிய குடிமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் சேர்ந்து குடியரசை மீட்டுருவாக்கும் முயற்சியாக இது இருந்தது. லட்சக்கணக்கான மக்கள், ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் பங்கேற்ற - இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிகழ்ச்சிகளும், அணிவகுப்புகளும் ஒருங்கிணைக்கப்பட்டன.
இந்த இணையற்ற முயற்சியிலிருந்து ஊடகத்தை திசை திருப்பும் வகையில் சிறு குழு ஈடுபட்டது. டெல்லியில் நடக்கும் கண்கவர் நிகழ்வை மாற்றும் செயல் அது. டெல்லியின் எல்லைகளில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராடி வரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சாவைச் (எஸ்கேஎம்) சேர்ந்த 35 விவசாய சங்கங்கள், திட்டமிட்ட பாதையை மீறி டெல்லிக்குள் நுழைந்த இக்குழுவின் வன்முறைகளை வன்மையாக கண்டித்துள்ளன. “விவசாயிகளின் அமைதியான, வலிமையான போராட்டத்தை முறியடிக்கும் நோக்கில் செய்யப்பட்ட சூழ்ச்சி” என்று இச்செயலை எஸ்கேஎம் கண்டித்துள்ளது.“முக்கிய பேரணி காலை 10 மணிக்கு தொடங்க இருந்தது,” என்கிறார் 32 சங்கங்களை உள்ளடக்கிய எஸ்கேஎம்மின் கீர்த்தி கிசான் சங்கத்தைச் சேர்ந்த கரம்ஜித் சிங். “32 சங்கங்களை உள்ளடக்கிய எஸ்கேஎம்மை சேராத குழுவினர் தீப் சந்து, லகா சிதானா தலைமையில் இடையூறு ஏற்படுத்தினர். காலை 8 மணிக்கு டெல்லி ரிங் சாலையை நோக்கிய பாதையில் இருந்த தடுப்புகளை உடைக்கத் தொடங்கினர். தங்களுடன் பிறரையும் இணையுமாறு கோரினர். அவர்கள்தான் செங்கோட்டைக்குள் நுழைந்து அவர்களின் கொடியை அங்கு ஏற்றினர்.”
டெல்லிக்குள் நடந்த சம்பவங்களில் பங்கேற்றதை தீப் சித்து உறுதிப்படுத்தியுள்ளார். பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் தொகுதி பாஜக எம்பி சன்னி தியோலின் நெருங்கிய கூட்டாளி இந்த சித்து.
“நாங்கள் அவர்களை ஆதரிக்கவில்லை. அவர்கள் செய்தது தவறு என எங்களுக்குத் தெரியும். 26ஆம் தேதி நிகழ்ந்த எதுவும் மீண்டும் நடக்காது. நாங்கள் எப்போதும் போல அமைதியான போராட்டத்தைத் தொடர்வோம். செங்கோட்டையில் தடுப்புகள் உடைக்கப்பட்டது, கொடி ஏற்றப்பட்டது ஆகியவற்றை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற தொல்லைகள் ஏற்படாது” என உறுதி அளிக்கிறோம்.
பிரிவினை குழுக்கள் பேரணியை முன்பே தொடங்கி தடுப்புகளை உடைத்தெறிந்து தலைமை புதிய திட்டம் வகுத்துள்ளதாக பலரிடமும் குழப்பச் சிந்தனையை ஏற்படுத்தினர். சிங்குவிலிருந்து டெல்லி செல்லும் பாதையில் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி அளித்திருந்தனர். ஆனால் இக்குழுவினர் டெல்லிக்குள் செல்ல வேறு பாதையை தேர்வு செய்து செங்கோட்டையை நோக்கி புறப்பட்டனர். அவர்கள் கோட்டைக்குள் நுழைந்தவுடன் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். சிலர் கோட்டைக்குள் நுழைந்து இந்திய கொடியுடன் சமயக் கொடியையும் ஏற்றினர்.
காலை சுமார் 7:50 மணி சிங்கு எல்லையில்: காவல்துறையினர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே விவசாயிகள் குழு தடுப்புகளை உடைக்கத் தொடங்கின. சிங்குவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் பாதையில் டிராக்டர் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி அளித்திருந்தனர். ஆனால் இக்குழுவினர் வேறு பாதையில் சென்றனர்.
மாறாக, முதன்மையான பிரம்மாண்ட பேரணியில் டிராக்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக, குழுக்களாக சென்றதுடன் தேசிய கொடியையும் பெருமையுடன் பறக்கவிட்டன.
“நாங்கள் விவசாயிகள். நாங்கள் பயிர்களை அறுவடை செய்தால்தான் உங்களுக்கு உணவு. மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். செங்கோட்டைக்குள் நுழைந்து கொடியேற்ற வேண்டும் என்பது எங்கள் நோக்கம் கிடையாது. நேற்று நடந்த எதுவும் தவறானது,” என்கிறார் பஞ்சாபின் மோகாவில் ஷெரா ஷெரா கிராமத்தைச் சேர்ந்த 45 வயது விவசாயி பல்ஜிந்தர் சிங்.
பிரிந்த குழுவினரின் மீதும் டெல்லியில் அவர்கள் அரங்கேற்றிய நாடகத்தின் மீதும் ஊடகத்தின் கவனம் சென்றுவிட்டது. முற்றிலும் அமைதியான பேரணியை அவர்கள் புறக்கணித்துவிட்டனர் என்பதே இதன் பொருள். 32 சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் அனுமதிக்கப்பட்ட பாதையில் தங்கள் டிராக்டர்களை ஓட்டிச் சென்றனர். டிராக்டர்கள் அருகே பலரும் நடந்து சென்றனர், சிலர் இருசக்கர வாகனங்கள், மிதிவண்டிகளில் சென்றனர்.
இப்பேரணி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தபோது எவ்வித மோதலோ, அசம்பாவிதங்களோ இல்லை. டெல்லியில் அவர்கள் சென்ற பாதையில் பலரும் திரண்டு பூக்கள், பழங்கள், தண்ணீர் கொடுத்து வாழ்த்தினர். அவர்களில் ரோஹினியைச் சேர்ந்த 50 வயது பாப்லி கவுர் கில் டிராக்டர்களில் சென்றவர்களுக்கு தண்ணீர் புட்டிகளை விநியோகித்தார். அவர் பேசுகையில்,“அவர்களுக்காகத்தான் இங்கு வந்தேன். நமக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் அளிக்கிறார்கள். நான் அதிகாலை எழுந்து தேநீர் கேட்கிறேன். காலை உணவிற்கு ரொட்டிகள் பெறுகிறேன். இவையாவும் விவசாயிகளால் அனைவருக்கும் அளிக்கப்படுகின்றன. போராட்டக்காரர்கள், விவசாயிகளின் துன்பங்களைப் பாருங்கள். சிங்குவில் ஒரு பெண் தனது 12 மாத குழந்தையுடன் அமர்ந்திருக்கிறார். அவர் ஏன் அப்படி செய்கிறார்? நிலமில்லாதபோது எப்படி அவரால் அக்குழந்தையை வளர்த்தெடுக்க முடியும்? விரைவாக அரசு இச்சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.”
“பொது விடுமுறையிலும் இன்று நான் குடும்பத்துடன் நேரம் செலவிடாமல் விவசாயிகளை ஆதரிக்க இங்கு வந்துள்ளேன்,” என்கிறார் டெல்லி சதார் பசாரைச் சேர்ந்த 38 வயது அஷ்ஃபக் குரேஷி. ‘டெல்லிக்கு வரவேற்கிறோம்‘ என்ற பதாகையை ஏந்தியபடி பேரணியை குரேஷி வாழ்த்தினார்.
வண்ணக் காகிதங்கள், ரிப்பன்கள், பூக்களால் அலங்கரிக்கப்பட்டு டிராக்டர்கள் அணிவகுத்தது பார்ப்பதற்கு அழகாக இருந்தது. உச்சியில் இந்திய கொடிகள் பறந்தன. மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்குப் பணிய மாட்டோம் எனக் கூறும் வகையில் பெருமையுடன் ஒற்றுமையை விளக்கும் பாடலை அவர்கள் பாடினர். “எங்கள் கோரிக்கையை அரசு கேட்க வேண்டும். எங்களுக்கு வேண்டாத சட்டங்களை அவர்கள் கொண்டு வருகின்றனர். அது ஏற்கனவே அம்பானி, அதானிகளிடம் விலைபோய்விட்டது,” என்கிறார் டிராக்டர் பேரணியில் நடந்து சென்றபடி பட்டியாலாவைச் சேர்ந்த 48 வயது மணிந்தர் சிங். “இப்போராட்டத்தில் நாங்கள் தோற்க மாட்டோம். இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம்.”தமிழில்: சவிதா