கெஹல்யா வாசவி தூக்கமின்றி, ஓய்வின்றி, வலியால் துடித்தபடி கொசுவலையை போர்த்திக் கொண்டு தார்பாயில் படுத்திருந்தார். அவரது துன்பத்தைக் கண்ட 18 வயது மகள் லீலா கால்களை மசாஜ் செய்துவிட்டு சிறிது நிவாரணம் தர முயல்கிறாள்.
பல மாதங்களாக அவர் அதே கட்டிலில் நாள்முழுவதும் படுத்துக்கிடக்கிறார். இடது கன்னத்தில் காயமும், வலது நாசியில் உணவுக்கான குழாயும் பொறுத்தப்பட்டுள்ளது. “அவரால் அசைய முடியவில்லை, பேசவும் முடியவில்லை. காயம் வலிக்கிறது,” என்கிறார் அவரது 42 வயதாகும் மனைவி பெஸ்ரி.
வடமேற்கு மகாராஷ்டிராவின் நந்தூர்பார் மாவட்டம் சிஞ்ச்பாடா கிறிஸ்தவ மருத்துவமனையில் இந்தாண்டு ஜனவரி 21ஆம் தேதி 45 வயதாகும் கெஹல்யாவுக்கு உள் கன்னத்தில் புற்றுநோய் (வாய் புற்று) இருப்பது கண்டறியப்பட்டது.
மார்ச் 1ஆம் தேதி தொடங்கிய கோவிட்-19 இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கு 45 முதல் 59 வயது பிரிவினருக்கான மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல வழிகாட்டுதல்களின்படி, தடுப்பூசி தகுதிக்கான 20 நோய்கள் பட்டியலில் அவரது புற்றுநோயும் இடம்பெற்றுள்ளது. இந்த வழிகாட்டுதல்களின்படி தடுப்பூசி என்பது “60 வயதை கடந்தவர்கள், 45 முதல் 60 வயது வரையிலான நோயாளிகள் என குறிப்பிட்ட வயது பிரிவு குடிமக்கள்” கிடைக்கப்பெறுவார்கள் என்று சொல்லப்பட்டது. (ஏப்ரல் 1 முதல் 45 வயதைக் கடந்த நோயாளிகள் அல்லது நோயற்றவர்களுக்கும் தடுப்பூசிக்கான அனுமதி அளிக்கப்பட்டது).
வயது வரம்புகள், நோய் பட்டியல் அல்லது விரிவுப்படுத்தப்பட்ட தகுதி என எதுவும் கெஷல்யா, பெஸ்ரி குடும்பத்திற்கு ஓரளவே பயன்தரும். பழங்குடியின பில் சமூகத்தைச் சேர்ந்த வாசவி குடும்பத்திற்கு தடுப்பூசி கிடைக்க வாய்ப்பில்லை. தடுப்பூசி மையமானது, அக்ரானி தாலுக்காவில் உள்ள அவர்களின் கும்பாரி கிராமத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தட்கான் கிராமப்புற மருத்துவமனையில் உள்ளது. “நாங்கள் நடந்துதான் செல்ல வேண்டும், வேறு வழியில்லை,” என்கிறார் பெஸ்ரி.
மலையின் மீது ஏறி, இறங்கி என நான்கு மணி நேர நடைபயணம். “அவரை படுக்கை விரிப்பில் தொட்டில்கட்டி மூங்கிலில் சுமந்துகொண்டு மையத்திற்கு அழைத்துச் செல்வது சாத்தியமற்றது,” என்கிறார் நந்தூர்பார் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மலைப்பகுதியில் அமைந்துள்ள தனது மண்வீட்டில் அமர்ந்தபடி பெஸ்ரி.
“அரசு இங்கு வந்து ஊசி கொடுக்கக் கூடாதா [உள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில்]? அங்குதான் எங்களால் செல்ல முடியும்,” என்கிறார் பெஸ்ரி. அவர்களது வீட்டிலிருந்து தோராயமாக ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரோஷமால் கேஎச். கிராமத்தில் அருகமை ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது.
சுமார் 2,00,000 மக்கள்தொகை கொண்ட 165 கிராமங்கள், குக்கிராமங்களைக் கொண்ட அக்ராகி தாலுக்காவை உள்ளடக்கிய தட்கான் மலைப்பகுதிக்குள் மாநில அரசின் பேருந்து போக்குவரத்து கிடையாது. தட்கான் கிராமப்புற மருத்துவமனை அருகில் உள்ள பணிமனையிலிருந்து நந்தூர்பாரின் பிற பகுதிகளுக்கு பேருந்துகள் செல்கின்றன. “இங்கு உள்கட்டமைப்பே கிடையாது,” என்கிறார் நந்தூர்பாரின் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் கணேஷ் பரட்கே.
மக்கள் பொதுவாக ஜீப்புகளை பயணங்களுக்கு பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் இப்பகுதிக்குள் ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்திற்கு, சந்தைக்கு, பேருந்து நிலையத்திற்கு என சென்று வருவதற்கு ஒருவருக்கு ரூ.100 வரை செலவாகிறது. அதுவும் அடிக்கடி வருவதில்லை.
இந்தச் செலவை பெஸ்ரி குடும்பத்தினரால் செய்ய முடியாது. அவரது குடும்பத்திற்கு என சொந்தமாக இருந்த ஒரு எருது, எட்டு ஆடுகள், ஏழு கோழிகளை கெஹல்யாவின் நோயை கண்டறிவதற்கும், ஆரம்பகால சிகிச்சை செலவிற்கும் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரிடம் அவர் விற்றுவிட்டார். தங்களது மண் வீட்டில் விலங்குகளை கட்டுவதற்கு அமைக்கப்பட்ட மரக்கழிகளாலான பட்டி இப்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
2020 ஏப்ரல் தொடக்கத்தில் கெஹல்யாவின் இடது கன்னத்தில் கட்டி வந்தது. கோவிட்டிற்கு பயந்து அவரது குடும்பம் மருத்துவ உதவியை நாடவில்லை. “கரோனாவினால் நாங்கள் மருத்துவமனைக்குச் செல்ல அஞ்சினோம். இந்தாண்டு தனியார் மருத்துவமனைக்குச் சென்றோம் [2021 ஜனவரி மாதம் நவாபூர் தாலுக்காவில் உள்ள சின்ச்படா கிறிஸ்தவ மருத்துவமனைக்கு] கட்டி பெரிதாகி, வலியும் அதிகரித்துவிட்டது,” என்கிறார் பெஸ்ரி.
“நான் அனைத்து கால்நடைகளையும் 60,000க்கு [ரூபாய்] விற்றுவிட்டேன். அரசு மருத்துவமனைக்குப் பதிலாக பெரிய மருத்துவமனைக்குச் சென்றால் நல்ல சிகிச்சை கொடுப்பார்கள் என நாங்கள் நினைத்தோம். நல்ல சிகிச்சைக்கு அதிக பணம் செலவிட வேண்டும் என நாங்கள் கருதினோம். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர் சொல்கிறார், இப்போது எங்களிடம் அதற்கு பணமில்லை,“ என்கிறார் அவர்.
மகள் லீலா, மூத்த மகனான 28 வயது சுபாஸ், அவரது மனைவி சுனி, அவர்களின் இரண்டு கைக் குழந்தைகள், பெஸ்ரியின் இளைய மகனான 14 வயது அனில் என எட்டு பேர் கொண்ட குடும்பம் அது. மழைக்காலங்களில் செங்குத்தான ஒரு ஏக்கர் நிலத்தில் சொந்த உணவிற்காக இக்குடும்பம் 2 அல்லது மூன்று குவிண்டால் சோளம் பயிரிடுகின்றனர். “இது எப்படி போதும். நாங்கள் வெளியே [வேலைக்குச்] செல்ல வேண்டும்,” என்கிறார் பெஸ்ரி.
ஆண்டுதோறும் அக்டோபர் அறுவடைக்குப் பிறகு அவரும், கெஹல்யாவும் பருத்தி வயல்களில் வேலை செய்வதற்கு குஜராத் செல்வார்கள். நவம்பர் முதல் மே மாதம் வரை ஆண்டுதோறும் சுமார் 200 நாட்களுக்கு தினக்கூலியாக ரூ.200 முதல் 300 வரை பெறுவார்கள். ஆனால் இப்பருவகாலத்தில் பெருந்தொற்றினால் தங்கள் கிராமத்திலேயே முடங்கிவிட்டனர். “அவரும் படுக்கையில் விழுந்துவிட்டார், வெளியே வைரஸ் உள்ளது,” என்கிறார் பெஸ்ரி.
அவர்களின் கும்பாரி கிராமத்தில் மக்கள்தொகை 660 (மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011). ஆஷா பணியாளரான 36 வயது சுனிதா பட்லி பேசுகையில், அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள கும்பாரி உள்ளிட்ட 10 குக்கிராமங்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் கெஹல்யா மட்டுமே என்கிறார். மொத்த மக்கள்தொகை சுமார் 5,000 இருக்கும் என்கிறார். “45 வயதை கடந்த 50 ஆண், பெண்கள் அரிவாள் செல் நோயால் [வழிகாட்டு நெறிமுறைகளில் பட்டியலிடப்பட்ட 20 நோய்களில் இரத்தச் சிவப்பணு குறைபாடும் ஒன்று] பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 250 பேர் 60 வயதை கடந்தவர்கள்.”
போக்குவரத்து வசதியின்மை, மோசமான சாலை வசதி போன்ற காரணங்களால் தடுப்பூசிப் பெறுவதற்கு யாராலும் தட்கான் கிராமப்புற மருத்துவமனைக்குச் செல்ல முடியவில்லை. “தடுப்பூசி கிடைக்கிறது என நாங்கள் ஒவ்வொரு வீடாக விழிப்புணர்வு செய்து வருகிறோம்,” என்கிறார் சுனிதா. “ஆனால் மையத்திற்குச் செல்வது மிகவும் கடினம்.”
மாவட்ட சுகாதாரத் துறை தயாரித்த நந்தூர்பார் தடுப்பூசி அறிக்கையில், மார்ச் 20ஆம் தேதி வரை தட்கான் கிராமப்புற மருத்துவமனையில் தடுப்பூசியின் முதல் தவணை செலுத்திக் கொண்ட 60 வயதைக் கடந்தவர்கள் 99 பேர். 45 முதல் 60 வயது வரையிலான நோயாளிகள் பிரிவில் ஒருவர் மட்டும் செலுத்திக் கொண்டுள்ளார்.
மாவட்ட நகர்ப்புற அல்லது சிறுநகரங்களில் அமைக்கப்பட்ட தடுப்பூசி மையங்களில் மார்ச் 2020 வரை 20,000 பேருக்கு தடுப்பூசிப் போடப்பட்டுள்ளது ஓரளவு ஆறுதல் அளிக்கிறது: தட்கான் மருத்துவமனையிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலோடா துணைப்பிரிவு மருத்துவமனையில் 60 வயதை கடந்த 1,279 பேர் தடுப்பூசியின் முதல் தவணை (மார்ச் 20 வரை) போட்டுக் கொண்டுள்ளனர், அவர்களில் 332 பேர் இணை நோயாளிகள்.
“அணுகமுடியாத பழங்குடியின பகுதிகளில் தடுப்பூசிப் பற்றி யாரும் அறியவில்லை,” என்கிறார் நந்துர்பார் மாவட்ட மருத்துவ அலுவலரான டாக்டர் நிதின் போர்கி. “தட்கானில் சாலை வசதி இல்லாதது பெரிய பிரச்னை. தடுப்பூசி மையத்திலிருந்து வெகு தொலைவில் இங்கு கிராமங்களும், குக்கிராமங்களும் இருக்கின்றன.”
பெஸ்ரியின் வீட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் நர்மதை ஆற்றங்கரையில் உள்ள குக்கிராமங்களில் சித்கேடியும் ஒன்று. சித்கேடியிலிருந்து 25 கிலோமீட்டருக்கு அதிகமான தூரத்தில் உள்ளது தட்கான் கிராமப்புற மருத்துவமனை தடுப்பூசி மையம்.
இக்கிராமத்தில் பார்கின்சன் நோயால் (நடுக்கம், மரத்துபோதல், நடக்க இயலாமை, உடல் ஒத்துழையாமை போன்ற பிரச்னைகளை தரும் மூளை குறைபாடு) பாதிக்கப்பட்டுள்ள 85 வயது முதியவரான சோனியா பட்லி தார்பாயில் படுத்தபடி தனது தலைவிதியை நினைத்து நொந்துகொள்கிறார். “நான் என்ன பாவம் செய்தேன், கடவுள் எனக்கு ஏன் இந்த நோயைக் கொடுத்தார்,” என கூக்குரலிடுகிறார் அவர். அவரது கட்டில் அருகே பசுஞ்சாணத்தில் மெழுகிய தரையில் அமர்ந்தபடி மனைவி புபாலி சாம்பல் நிற கட்டம்போட்ட துணி கொண்டு கண்களை துடைக்கிறார். அவரது கணவர் 11 ஆண்டுகளாக சித்கேடின் மலை உச்சியில் இதே மூங்கில் குடிசையில் இந்நோயுடன் போராடி வருகிறார்.
பில் பழங்குடியினத்தைச் சேர்ந்த சோனியா, புபாலி குடும்பம் தடுப்பூசிக்கு தகுதியான வயது வரம்பில் வருகிறது. 82 வயதாகும் புபாலி சொல்கிறார், “நாங்கள் இருவரும் வயதானவர்கள், அவர் படுக்கையில் விழுந்துவிட்டார். எதற்குமே நடந்து செல்ல முடியாத நாங்கள் ஏன் தடுப்பூசி பற்றி மகிழ்ச்சி அடைய வேண்டும்?”
அவர்கள் இருவரும் 50 வயது மகன் ஹனு, மருமகள் கர்ஜியின் வருவாயை சார்ந்தே உள்ளனர். அவர்கள் சிறிய மூங்கில் குடிசையில் ஆறு குழந்தைகளுடன் வசிக்கின்றனர். “ஹனு அவரை [தனது தந்தையை], குளிக்க வைக்கிறார், கழிப்பறைக்கு அழைத்துச் செல்கிறார், கவனித்துக் கொள்கிறார்,” என்கிறார் புபாலி. அவர்களின் திருமணமான நான்கு மகன்களும், திருமணமான மூன்று மகள்களும் பிற குக்கிராமங்களில் வசிக்கின்றனர்.
நர்மதை ஆற்றில் வாரத்தில் மூன்று நாட்களுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஹனுவும், கர்ஜியும் மீன் பிடிக்கின்றனர். “வாரத்திற்கு மூன்று முறை வியாபாரி வருகிறார். அவர் கிலோவிற்கு [மீனுக்கு] ரூபாய் 100 கொடுப்பார்,” என்கிறார் கர்ஜி. அவர்கள் வாரத்திற்கு மூன்று முறை 2-3 கிலோ வரை மீன்பிடித்து சுமார் ரூ.3600வரை ஈட்டுகின்றனர். மற்ற நாட்களில் ஹனு தட்கான் உணவகத்தில் பாத்திரங்கள் கழுவும் வேலை செய்து தினமும் ரூ.300 சம்பாதிக்கிறார். கர்ஜி வேளாண் கூலி வேலைகள் செய்து ரூ.100 ஈட்டுகிறார். “மாதத்தில் 10-12 நாட்கள் இருவருக்கும் வேலை கிடைக்கும். சிலசமயம் அதுவுமில்லை,” என்கிறார் அவர்.
தடுப்பூசி மையத்திற்கு செல்வதற்கு ரூ.2000 செலவில் தனியார் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதுகூட டோல்யா, புபாலிக்கு பெரிய செலவுதான்.
“அந்த ஊசி எங்களுக்கு நல்லது செய்யலாம். ஆனால் இந்த வயதில் என்னால் அவ்வளவு தூரம் நடக்க முடியாது,” என்கிறார் புபாலி. அவர் கோவிட்-19 அச்சம் காரணமாக மருத்துவமனைக்குச் செல்லவும் அஞ்சுகிறார், “எங்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது? நாங்கள் போக மாட்டோம், அரசு எங்கள் வீட்டிற்கு வரட்டும்.”
அதே குக்கிராமத்தில் மற்றொரு சிறுகுன்றில் அமைந்துள்ள தனது வீட்டு முற்ற மரப்பலகையில் அமர்ந்திருக்கும் 89 வயது டோல்யா வாசவியும் இதே அச்சத்தை வெளிப்படுத்துகிறார். “[தடுப்பூசி போட்டுக்கொள்ள] நான் செல்வதென்றால், [நான்கு சக்கர] வண்டியில்தான் செல்ல வேண்டும், இல்லாவிட்டால் போக முடியாது,” என்கிறார் உறுதியாக.
அவரது பார்வை மங்குகிறது. அவரால் சுற்றியுள்ளவற்றை அடையாளம் காண முடியவில்லை. “ஒரு காலத்தில் மலைகளில் எளிதாக ஏறி, இறங்குவேன்,” என்று அவர் நினைவுகூர்கிறார். “இப்போது அவ்வளவு தெம்பில்லை, என்னால் தெளிவாக பார்க்கவும் முடியவில்லை.”
டோல்யாவின் மனைவி ரூலா பிரசவத்தின்போது 35 வயதிலேயே இறந்துவிட்டார். அவர் மூன்று மகன்களையும் தனியாக வளர்த்தார். அனைவரும் அருகில் உள்ள குக்கிராமத்தில் சொந்த குடிசைகளில் வசிக்கின்றனர். 22 வயது பேரன் கல்பேஷ் மட்டும் அவருடன் தங்கி கவனித்து வருகிறார். அவர் மீன் பிடித்தலையே வருமானத்திற்கு நம்பியுள்ளார்.
சித்கேடியில் டோல்யா, சோனியா, புபாலி உள்ளிட்ட 15 பேர் 60 வயதைக் கடந்தவர்கள் என்கிறார் கிராமத்தின் ஆஷா பணியாளரான 34 வயது போஜி வாசவி. மார்ச் மத்தியில் நான் வந்தபோது ஒருவர் கூட தடுப்பூசி மையத்திற்கு வரவில்லை. “முதியோர், தீவிர நோயாளிகள் இவ்வளவு தூரத்தை நடந்தே கடப்பது சாத்தியமற்றது. கரோனாவால் பலரும் மருத்துவமனைக்குச் செல்வதற்கு அஞ்சுகின்றனர்,” என்கிறார் சித்கேடியில் 94 குடியிருப்புகளில் 527 பேர் வசிக்கும் பகுதியில் பணியாற்றும் போஜி.
இப்பிரச்னைகளை சமாளிக்கவும், தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மகாராஷ்டிரா சுகாதாரத் துறை ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசிகளை அனுமதிக்க திட்டமிட்டு வருகிறது. ஆனால் இணையதள வசதி உள்ள பகுதிகளில் மட்டுமே இது சாத்தியப்படும் என்கிறார் டாக்டர் நிதின் போர்கி: “தடுப்பூசி மையங்களுக்கு இணையதள வசதி, கணினிகள், தடுப்பூசி போடுவோரின் தகவல்களை பதிவு செய்துதர அச்சு இயந்திரம், க்யூஆர் கோட் அடிப்படையிலான தடுப்பூசி சான்றிதழ் அளிக்கும் வசதி போன்றவை தேவைப்படுகிறது.”
தட்கானின் உள்புறத்தில் உள்ள சித்கேடி, கும்பாரி போன்ற குக்கிராமங்களில் கைப்பேசி சேவை அரிதாகவே கிடைக்கிறது. இதனால் இக்குக்கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் நெட்வொர்க் கிடையாது. “கைப்பேசியில் அழைக்கவும், இணையதள வசதி பெறுவதும் இங்கு சாத்தியமற்றது,” என்கிறார் ரோஷமால் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் ஷிவாஜி பவார்.
பெஸ்ரி இத்தடைகளால் சோர்வடைந்துள்ளார். “இங்கு யாரும் வர விரும்புவதில்லை. எவ்வகையிலும் அது [கோவிட் தடுப்பூசி] அவரது [கெஹல்யாவின்] புற்றுநோயை குணப்படுத்தப்போவதில்லை,” “இதுபோன்ற தொலைதூர மலைப் பகுதிகளுக்கு மருத்துவர்கள் ஏன் வரப்போகிறார்கள், சேவையாற்றப் போகிறார்கள், மருந்துகள் அளிக்கப் போகிறார்கள்?”
தமிழில்: சவிதா