அது குளிர்காலம். நைன் ராம் பஜேலா, முன்சியாரி தாலுகாவின் ஜைதி கிராமத்தில் தனது வீட்டின் மாடியில் அமர்ந்து, காலைப்பனியில் கூடைகளை நெய்கிறார். அவருக்குப் பின்னால் ஒரு துணி உலர்த்தும் கொடி, மேலே மெல்லிய மேகங்கள், தூரத்தில் பஞ்சசூலி மலைகள். இமாலய மூங்கில் இனமான ரிங்கல் அல்லது பஹாடி ரிங்கலை வளைந்த கத்தியால் மெல்லியக் கீற்றுகளாக வெட்டுகிறார். அதை அவர் தனது பஹாடி மொழியில் 'பரான்ஷ்' என்று அழைக்கிறார். நடுங்க வைக்கும் இக்குளிரில் அவர் கையுறைகளோ காலுறைகளோ அணிவதில்லை. மலைக்காற்று அவரது தோலை வருத்துகிறது. ஆனால் நைன் ராம் எந்தவித சலனமுமின்றி உழைக்கிறார்.
“இந்த ரிங்கல் மூங்கிலை நான் நேற்று தான் காட்டிலிருந்து சேகரித்தேன். இரண்டு கூடைகள் செய்ய இந்த குச்சிகள் போதுமானதாக இருக்கும்,” என்று என்னையும் கேமராவையும் பார்க்காமல் கூறுகிறார். நைன் ராம் தனது 12வது வயதில் இருந்து மூங்கில் பொருட்களை தயாரித்து வருகிறார்; அவர் தனது தந்தையிடமிருந்து இதைக் கற்றுக்கொண்டார். இத்தொழிலில் வருமானம் மிகக்குறைவாக இருந்ததால், அவரதுதந்தை இத்தொழிலுக்குள் அவரை அனுமதிக்கத் தயங்கினார். “எனவே, நான் என் சிறுவயதில் மற்றவருக்கு உரிமையான நிலங்களில் இருந்து ரிங்கலைத் திருடி, கூடைகள், பூக்குவளைகள், குப்பைத் தொட்டிகள், பேனா ஸ்டாண்டுகள் மற்றும் சப்பாத்தி வைப்பதற்கான சூடுப்பெட்டிகளை உருவாக்குவேன்" என்கிறார்.
தற்போது 54 வயதாகும் நைன் ராம், வெறுமனே தனது கைகளையும், ஒரு கத்தியையும் பயன்படுத்தி, ரிங்கல் மூலம் எதையும் செய்ய முடியும் என்கிறார். "இது எனக்குக் கிட்டத்தட்ட களிமண் போன்றது. இதிலிருந்து நீங்கள் எந்தப் பொருளையும் செய்ய முடியும்" என்று, மெல்லிய மற்றும் அடர்த்தியான கீற்றுகளை ஒன்றின்மேல் ஒன்று வைத்து நெய்து கொண்டே சொல்கிறார். "இது ஒரு தொழிலாளியின் வேலை அல்ல - இது ஒரு திறமை. இதற்குப் பயிற்சி தேவை, எல்லாக் கலைகளையும் போலவே பொறுமையும் தேவை.”
ரிங்கல் பொதுவாக கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,000-2,000 மீட்டர் உயரத்தில் வளரும். முன்சியாரி நகரம் 2,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து ஜைதி கிராமம் ஆறு கிலோமீட்டர் - எனவே மூங்கில் சேகரிக்க ரிங்கல் கிடைக்கும் இடத்தைப் பொறுத்து மலையின் மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கிச் செல்ல வேண்டும். உத்தரகாண்டின் பித்தோராகர் மாவட்டத்தின் இந்த மலைகளில் வாழ்க்கை கடினமானது. மேலும் மக்களுக்கான வாழ்வாதாரங்களும் குறைவு. மூங்கில் பொருட்களைத் தயாரிப்பது இங்குள்ள பஜேலா சாதி ஆண்களின் பாரம்பரியத் தொழிலாக இருந்து வருகிறது - ஆனால் ஜைதியின் 580 பேரில் எஞ்சியிருக்கும் கடைசி மூங்கில் நெசவாளர் நைன் ராம் ஆவார்.
முன்சியாரியில் உள்ள தொலைதூர இடங்களிலிருந்து மக்கள் நைன் ராமைத் தங்கள் வீடுகளுக்கு வரவழைக்கிறார்கள். அவர் அங்கு பல தினங்கள் தங்கி வேலை செய்கிறார். சில நேரங்களில் இரவுகளும் கூட. மலைப்பகுதிகளில் அதிக சுமையைத் தூக்கிச் செல்வது கடினமாக இருப்பதால், மூங்கிலை அவர்களின் வீடுகளுக்கு அருகிலிருந்து சேகரித்து, அங்கேயே நெசவு வேலை செய்கிறார். பதிலுக்கு, அவர் வேலை செய்ய ஒரு இடம் மற்றும் சாப்பிட உணவு ஆகியவை கிடைக்கும். அவருக்கு ஒரு நாள் கூலி ரூ.300. இத்தனை கூடைகள் என்று கணக்கெதுவும் கிடையாது. அவருக்கு ஒரு மாதத்தில் சுமார் 10 நாட்களுக்கு வேலை கிடைக்கிறது. மிகவும் அரிதாக 15 நாட்களுக்குக் கிடைக்கும்
அதிர்ஷ்டவசமாக, முன்சியாரி தொகுதி முழுவதும் அவரது தயாரிப்புகளுக்கு தேவை உள்ளது. குறிப்பாக பெண்கள் எரிபொருள் மற்றும் தீவனத்தை எடுத்துச் செல்ல பயன்படுத்தும் திறமான, கனமில்லாத இலகுரக கூடைகளுக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது. கைப்பிடிகள் மற்றும் மூடிகளுடன் கூடிய கூடைகளை உணவு எடுத்துச் செல்லவும் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக திருமணம் முடிந்து அடுத்த வீட்டுக்கு பெண் செல்லும்போது இவை பயன்படுத்தப்படுகின்றன.
நைன் ராம் காட்டுக்கு ரிங்கல் சேகரிக்கச் செல்லும் நாட்களில், அவருக்கு சம்பளம் கிடைப்பதில்லை. "மக்கள் என்னை அழைத்து, வீட்டுப் பொருட்களைச் செய்யச் சொன்னால் மட்டுமே, நான் பணம் கேட்கிறேன்," என்று அவர் கூறுகிறார். 1980 வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாநில நிர்வாகத்தின் அனுமதியின்றி வன மூங்கில்களை வெட்டுவது தடைசெய்யப்பட்டாலும், உள்ளூர் மக்களும் அரசும் ஒன்று சேர்ந்து கட்டுப்படுத்தும் வனப்பஞ்சாயத்து பகுதிகள் அல்லது சமூகக் காடுகளிலிருந்து ரிங்கல் வெட்டுவதற்கு நைன் ராமுக்கு அனுமதி தேவையில்லை.
ஜைதி கிராமத்தில் கூரையின் மீது வேலையின் மும்முரத்தில் இருக்கும் நைன் ராம், ஒரு சிறிய இடைவேளையில், தனது மப்ளர் மற்றும் காலணிகளைக் கழற்றிக்கொண்டே, கோட் பாக்கெட்டில் இருந்து பீடியை எடுத்துப் பற்றவைக்கிறார். தனக்கு மிகுதியாக ஓய்வு நேரம் பிடிப்பதுமில்லை, தேவையுமில்லை என்கிறார். "எனக்கு வேலை இல்லாதபொழுது, நான் சில ரிங்கல்களை [காட்டில் இருந்து] பெற்று வீட்டிலேயே பொருட்களை தயாரிக்கிறேன்," என்று அவர் கூறுகிறார். "சில சமயங்களில், சுற்றுலாப் பயணிகள் பொருட்கள் வாங்கும் உள்ளூர் சந்தையில் உள்ள ஒரு கடைக்கும் செய்து கொடுக்கிறேன். எனக்கு ஒரு கூடைக்கு சுமார் 150 ரூபாய் கிடைக்கிறது. ஆனால் கடைக்காரர் அதை 200-250 க்கு விற்கிறார். அதை நான் பொருட்படுத்துவதில்லை. எனக்கு வேறு தொழில் எதுவும் தெரியாது. நான் அதிகம் படித்ததில்லை. என் பெயரில் கையொப்பமிட மட்டுமே எனக்குத் தெரியும்".
நைன் ராம், உள்ளூர் இலாப நோக்கற்ற நிறுவனத்தில் பெண்கள் உட்பட மற்றவர்களுக்கு ரிங்கல் பொருட்களைத் தயாரிப்பதில் பயிற்சி அளித்திருந்தாலும், ரிங்கல் மூங்கில் தயாரிப்புகளை ஊக்குவிக்க அரசாங்கம் அதிகம் செய்யவில்லை. லாபத்தை உறுதி செய்வதற்கான குறைந்தபட்ச விற்பனை விலையையும் நிர்ணயிக்கவில்லை. மேலும் தயாரிப்புகளுக்கான சந்தையை உருவாக்கவும் உதவவில்லை. இது நைன் ராமின் குழந்தைகளை இந்தக் கலையிலிருந்து விலக்கியிருக்கச் செய்துவிட்டது. நைன் ராம் தான் இப்போது அவரது குடும்பத்தில் கடைசி ரிங்கல் நெசவாளர். அவரது மகன்களான மனோஜ் மற்றும் பூரன் ராம், முன்சியாரி தாலுகாவில் உள்ள கட்டுமானத் தளங்களில் தொழிலாளர்களாக வேலை செய்வார்கள்.
ஜைதிக்கு அருகில் ஒரு உணவகத்தையும் நடத்தும் மனோஜ், “இந்த தயாரிப்புகளின் முக்கியத்துவம் என்ன? முன்சியாரியைத் தாண்டி யாரும் அவற்றை வாங்குவதில்லை. எப்போதாவது, சுற்றுலாப் பயணிகள் அவற்றை எடுத்துச் செல்வார்கள். ஆனால் நீங்கள் வாழ்வாதாரத்திற்காக அதைச் சார்ந்திருக்க முடியாது. அவை நமக்கு நிலையான வருமானத்தை தருவதில்லை. மேலும், இந்த திறமையை கற்க எனக்கு வயது தாண்டிவிட்டது" என்று சொல்கிறார். அவருக்கு வயது 24. குடும்பத்தின் சிறிய நிலத்தில் உருளைக்கிழங்கு பயிரிடும் நைன் ராமின் 45 வயது மனைவி தேவ்கி தேவி, தனது கணவர் தயாரிக்கும் பெரும்பாலான பொருட்கள் விற்கப்படுவதாக கூறுகிறார். அவள் பெருமையுடன் சில கூடைகளையும் குவளைகளையும் காட்டுகிறார்.
நண்பகல் வேளை! கார்மேகங்கள் வானத்தை ஆக்கிரமித்துள்ளன. ஜைதி கிராமத்திலுள்ள அவரது வீட்டு மாடியில் நைன் ராம் நெய்து கொண்டிருந்தார். "மழை பெய்யக்கூடும்," என சொன்னபடி, தனது காலணிகள் மற்றும் கம்பளித் தொப்பியை அணிந்துகொண்டு, அன்றைய தினத்தின் தனது முதல் ரிங்கல் கூடையை முடிக்க வீட்டிற்குள் செல்கிறார். நாள் முடிவில், மற்றொரு கூடையோ அல்லது இன்னொன்றும் சேர்ந்து இரண்டு கூடைகளோ இந்தக் கலைஞரின் திறமையான கைகளால் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
தமிழில்: சந்தியா கணேசன்