ஒரு நாள் பிற்பகல் மஜௌலி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே ஒரு கட்டிலில் அமர்ந்திருக்கும் சுகலோ கோண்டு, "எங்கள் சமூகங்களை வெளியேற்றுவதற்கான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கொண்டாடுவதற்காக மார்ச் 5 ஆம் தேதி ராபர்ட்ஸ்கஞ்சில் உள்ள மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலகத்திற்கு நாங்கள் சென்றோம்", என்று நகைச்சுவையாக கூறுகிறார்.
வன உரிமைகள் சட்டத்தின் (FRA) செல்லுபடியை எதிர்த்து வன விலங்கு பாதுகாப்பு குழுக்கள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், இந்தியாவில் 16 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான ஆதிவாசிகளை வெளியேற்றுமாறு 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார். 2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட FRA வன சமூகங்களுக்கு அவர்களின் பாரம்பரிய நிலங்களுக்கான உரிமைகளை வழங்குவதையும், அவர்கள் எதிர்கொண்ட வரலாற்று ரீதியான சமூக அநீதிகளை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
"மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்வது முக்கியமானது", என்று தனது பேரக்குழந்தைகளால் சூழப்பட்டுள்ள சுகலோ கூறுகிறார். "நாம் ஒருவருக்கு ஒருவர் மற்றும் காட்டில் வாழும் பிற அனைத்து சமூகத்தினருடனும் சேர்ந்து நிற்க வேண்டும். (மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தொடர்ந்து) உச்ச நீதிமன்றத்தில் இருந்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், எங்கள் உரிமைகளை கேட்பதற்கு நாங்கள் அஞ்சவில்லை என்பதை ஆட்சியாளர்களுக்கு நாங்கள் தொடர்ந்து காட்டிக் கொண்டே இருக்க வேண்டும்", என்று கூறி அவர் புன்னகைக்கிறார். நாங்கள் சுமார் 30 பேர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்குள் நுழைந்தோம், ஆனால் அவர் கோபம் அடையவில்லை அல்லது எங்களை வெளியேறச் சொல்லவுமில்லை. திரும்பி வந்து அவருடன் பேசச் சொன்னார். அவர் புதியவர் என்பதால் இப்படி செய்திருக்கலாம்", என்று கூறினார்.
நான் முதன் முதலில் சுகலோ கோண்டு அவர்களை 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்திரப் பிரதேசத்தின் ராபர்ட்ஸ்கஞ்சில் உள்ள அகில இந்திய வனத் தொழிலாளர்கள் சங்கத்தின் அலுவலகத்தில் சந்தித்தேன் (காண்க: 'நான் அன்று சிறைக்குச் செல்வேன் என்று எனக்குத் தெரியும்'). AIUFWP (வன மக்கள் மற்றும் வன தொழிலாளர்களின் தேசிய மன்றம் என்ற பெயரில் 1996 இல் முதலில் துவங்கப்பட்டது) 2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும். இது 15 மாநிலங்களில் சுமார் 1,50,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. உத்திரப் பிரதேசத்தில் சுமார் 10,000 உறுப்பினர்களுடன் 18 மாவட்டங்களில் இத்தொழிற்சங்கம் செயல்பட்டு வருகிறது.




