ரீட்டா அக்காவைப் பற்றின அனைத்தும் வாழ்க்கை நமக்கு கற்றுக்கொடுக்க முயலும் விஷயங்களின் நேரடி எடுத்துகாட்டாகும் - அதாவது, நம் வாழ்வுக்கு ஓர் அர்த்தம் உள்ளது என்பதை அறிவது! மாற்றுத் திறனாளியான இந்த தூய்மைப் பணியாளர் (அவரால் கேட்கவோ, பேசவோ முடியாது) கணவரை இழந்தவர்; இவரின் 17 வயது மகள் வீட்டை விட்டுச் சென்று, தன் பாட்டியுடன் வாழ்கிறார். 42 வயதாகும் இவரின் வாழ்வில் பெரும்பாலும் தனிமையையே அனுபவித்திருக்கிறார்; ஆனால், தனிமையில் வாடவில்லை.
தினமும் காலை, ரீட்டா அக்கா (அக்கம் பக்கத்தினரால் ‘அக்கா’ என்று அழைக்கப்படுகிறார்; சிலர் அவரை ஊம்மச்சி என்று அழைப்பார்கள் - இது வாய் பேச முடியாதவர்களைக் குறிக்கும் இழிவான சொல்) - எழுந்து, சென்னை மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வேலையை திறம்படச் செய்கிறார். சில சமயங்களில், பணி முடிந்த பின், தனக்கு ஏற்படும் உடல்வழியைப் பற்றி புகார் கூறுவார். இந்த வேலையில் அவரின் ஈடுபாட்டை, குப்பை சேகரிக்கும் ட்ரோலியின் பக்கங்களில் அறியலாம். ரீட்டா தன் பெயரை அந்த ட்ரோலியில் மூன்று முறை, மூன்று வெவ்வேறு நிறங்களில் கிறுக்கியுள்ளார். பணி முடிந்தப்பின்னர், கோட்டூர்புரப் பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் அமைந்திருக்கும் அந்த சிறிய, தனிமையான வீட்டிற்கு திரும்புவார்.
ரீட்டா தினமும் இரண்டு கடைகளுக்கு செல்வார் - ஒன்று நாய்களுக்கு பிஸ்கட் வாங்க செல்லும் சிறிய கடை; மற்றொன்று பூனைகளுக்கு சிக்கனின் மீதிகளை வாங்கச் செல்லும் இறைச்சி கடை
இருந்தும், இதற்கிடையில், அவர் தன் வாழ்விற்கான நோக்கத்தை கண்டறிந்துள்ளார். தன் பணியை முடிந்த பின்னரும், அந்த குறுகிய வீட்டிற்கு செல்வதற்கு முன்னரும், ரீட்டா வீதியில் இருக்கும் நாய்கள், பூனைகளுக்கு உணவு அளிந்தவாறும், கொஞ்சி பேசியவாறும் மிகுதியான நேரத்தை செலவிடுக்கிறார். தினமும் மாலையில், கோட்டூர்புரத்தின் வீதிகளில், நாய்கள் ரீட்டா பணி முடிந்து திரும்பி வர பொறுமையாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இவரின் சொந்த ஊர் திருவண்ணாமலையில் உள்ள ஓர் ஊர் (இந்த மாவட்டம், கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கிராமப்புற மக்கள் தொகையில் 80 சதவீதத்தைக் கொண்டுள்ளது). கிட்டதட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்னால், அவரின் பெற்றோர்களுடன் வேலை தேடிச் சென்னைக்கு மாற்றலானார். சரியாக எப்போது என்று அவருக்கு சரியாக நினைவில்லை. ஆனால், அன்றிலிருந்து கிட்டதட்ட பெரும்பாலான ஆண்டுகளுக்கு, மிகக்குறைந்த சம்பளத்திற்காக அவர் பல வீடுகளில் வீட்டு வேலை செய்திருக்கிறார். ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், சென்னை மாநகராட்சியில் (இப்போது விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி) பணிக்கு சேர்ந்திருக்கிறார். ஆரம்பக்காலத்தில், ஒரு நாளுக்கு 100 ரூபாய் எனத் தொடங்கி, இப்போது இவர் மாதம் 8000 ரூபாய் சம்பாதிக்கிறார்.
கோட்டூர்புரத்திலுள்ள ஆறு பெரிய வீதிகளை, துடைப்பம், ப்ளிச்சிங் பவுடர், குப்பைத் தொட்டி கொண்டு , கூட்டி பெருகி சுத்தம் செய்கிறார். இதனை அவர் கையுறைகள், காலணிகள் அல்லது எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாம் செய்கிறார். அவர் குப்பைக் கூளங்களை, வீதிகளில் அமைந்திருக்கும் மாநகராட்சி தொட்டியில் சேகரித்து கொட்டுகிறார். அங்கிருந்து, மாநகராட்சியின் வேன்களும், லாரிகளும் மறுசுழற்சி முறைக்காக குப்பைகளை எடுத்து செல்கின்றன. ரீட்டாவின் சுத்தம் செய்யும் பணி காலை 8 மணியளவில் தொடங்கி, மதியம் வரை இருக்கும். ஒருமுறை, இப்படி வீதிகளில் சுத்தம் செய்யும்போது நடந்த விபத்தில், தன் ஒரு கண்பார்வை பாதிக்கப்பட்டுவிட்டதாக அவர் கூறுகிறார். மேலும், வெறும் கால்களுடன் நடப்பதில் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இவைத் தாண்டி, தனக்கு எந்த உடல் உபாதைகளும் இல்லை என்றும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
அவரின் ஊதியத்தில் பெரும்பாலான பகுதி நாய்கள், பூனைகளுக்கு உணவு வாங்குவதில் செலவழிக்கிறார். அக்கம் பக்கத்தினர் அவர் இதற்காக ஒரு நாளுக்கு ரூ.30 செலவழிப்பதாகக் கூறுகிறார். ஆனால், அதைப் பற்றியெல்லாம் அவர் எதுவும் பேசிக்கொள்ள மாட்டாராம்.
ரீட்டா தினமும் இரண்டு கடைகளுக்கு செல்வார் - ஒன்று நாய்களுக்கு பிஸ்கட் வாங்க செல்லும் சிறிய கடை; மற்றொன்று பூனைகளுக்கு சிக்கனின் மீதிகளை வாங்கச் செல்லும் இறைச்சி கடை! கோழி சில்லறை எனச் சொல்லப்படும், கோழி இறைச்சி சுத்தம் செய்து விற்று தீர்ந்த போனபிறகு இருக்கும் மிச்சங்களை, ரீட்டா போன்ற வாடிக்கையாளர்களுக்கு ரூ. 10க்கு கொடுப்பார்கள்.
ரீட்டாவுக்கு நாய்,பூனைகளுக்கு செய்யும் செலவுகளில் இருக்கும் கடினங்களை விட அவர்களுடன் இருக்கும் சமயத்தில் ஏற்படும் மகிழ்ச்சி மிகவும் அதிகமாக உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரின் கணவர் இறந்துவிட்டார். ரீட்டாவுக்கு அது எப்போது என்றோ அல்லது அதைப் பற்றிப் பேசவோ விருப்பமில்லை. அன்றிலிருந்து, இவர் தனியாகத்தான் இருக்கிறார். அக்கம்பக்கத்தினர் கூறும்போது, இவரின் கணவன் ஒரு குடிக்காரர் என்கின்றனர். இவரின் மகள் எப்போதாவது இவரை காண வருவார்.
இருந்தும், ரீட்டா மிகவும் உற்சாகமாக இருக்கிறார்; நாய்களுடன் இருக்கும்போது, இவரின் புன்னகைகள் மிகவும் ப்ளிச்சென்று இருக்கின்றன.
தமிழில் : ஷோபனா ரூபகுமார்