இந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு மதிய வெயிலில் மூன்று பானைகளில் கிணற்றிலிருந்து தண்ணீரை சுமந்து, வெறிச்சோடி இருந்த பாதையில் தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது 24 வயதாகும் மந்தா ரினிஜத் மயங்கி விழுந்தார். "இறந்த நபரை போல நான் தெருவில் மயங்கி கிடந்ததை கூட யாரும் பார்க்கவில்லை", என்று அவர் கூறினார். "20 நிமிடங்களுக்கு பிறகு நான் எழுந்தபோது நான் அனைத்து நீரையும் வீணாக்கி இருந்ததை பார்த்தேன். எப்படியோ நான் வீட்டிற்கு திரும்பிச் சென்று எனது கணவரை எழுப்பினேன் அவர் எனக்கு உப்பு சர்க்கரை தண்ணீர் கலந்து கொடுத்தார்", என்று கூறினார்.

இந்த ஆண்டு மம்தாவும், கல்தாரேவின் பெண்களைப் போலவே மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிணற்றுக்கு இந்த கோடைகாலத்தில் கரடுமுரடான பாதையில் நடந்து சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது, இது கடந்த காலங்களில் அவர்கள் தண்ணீர் எடுக்கச் செல்லும் காலத்தை விட முன்னதாகவே இருந்தது. மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வடா தாலுகாவில் இருக்கும் கல்தாரே கிராமத்தில் பிப்ரவரி மாதத்திலேயே இரண்டு கிணறுகள் முற்றிலுமாக வறண்டுவிட்டன. கடந்த ஆண்டுகளில் கிராமத்திலிருக்கும் கிணறுகளில் உள்ள நீர் - அவர்கள் குடிப்பதற்கு மற்றும் சமைப்பதற்கு அதனை பயன்படுத்துகிறார்கள் - மே மாத துவக்கம் வரை அவர்களுக்கு கிடைக்கும் என்று இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். அதன் பிறகு பெண்கள் தொலைதூரத்தில் உள்ள கிணறுகளுக்கு நடந்து சென்று அதில் இருக்கும் தண்ணீரை எடுத்து வர வேண்டும். ஆனால் 2019ஆம் ஆண்டு இந்த தண்ணீர் பற்றாக்குறை பல மாதங்களுக்கு முன்பே துவங்கிவிட்டது.

ஒவ்வொரு கோடையிலும் நாங்கள் தண்ணீர் பிரச்சனையை சந்தித்துள்ளோம் ஆனால் இந்த ஆண்டு எங்கள் நீர் ஆதாரங்கள் அனைத்துமே வறண்டு போய்க் கொண்டிருக்கின்றன என்று 42 வயதாகும் மணாலி பதுவாலே கூறுகிறார், இவரும் மம்தாவை போலவே கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு பெரிய கோவில் வளாகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார் நாளொன்றுக்கு 155 ரூபாய் சம்பளமாக அவருக்கு வழங்கப்படுகிறது, இவரது கணவர் அங்கேயே ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். "எங்களது தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக எங்களுக்குத் தண்ணீர் டேங்கர் ஒருமுறை கூட வந்ததில்லை மேலும் அதை வாங்குவதற்கு எங்களிடம் போதுமான பணமும் இல்லை", என்று அவர் கூறுகிறார்.

கல்தாரே கிராமத்திலிருந்து அரைகிலோ மீட்டர் தொலைவில் ஓடும் வைதர்னா நதி இங்கு வசித்து வரும் 2,474 குடும்பங்களுக்கு (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி) முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது, இம்மக்களில் பெரும்பாலானோர் கோலி மல்ஹார் மற்றும் வார்லி ஆதிவாசி சமூகங்களைச் சேர்ந்தவர்களே. இந்த ஆண்டு மே மாதம் ஆற்றில் பாறை குவியல்கள் மட்டுமே கிடந்தது, தண்ணீர் குறைந்த அளவிலேயே இருக்கிறது. முந்தைய கோடைகாலங்களில் வைதர்னா நதியில் அதிக நீர் ஓடியதாக கல்தாரே மக்கள் கூறுகின்றனர். "ஆற்றில் எஞ்சியிருக்கும் இந்த நீரும் கால்நடைகளை குளிப்பாட்டுவதற்காகவும் மேலும் அதே அழுக்கு நீர் கிராம நீர் குழாய்களுக்கும் செல்கிறது என்று மணாலி கூறுகிறார்.
Mamta Rinjad
PHOTO • Shraddha Agarwal
Mamta Rinjad’s house
PHOTO • Shraddha Agarwal

மம்தா ரினிஜத் (இடது) கல்தாரே கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து (வலது) மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிணற்றுக்கு நாள் ஒன்றுக்கு பல முறை சென்று வருகிறார்

மோசமான பருவமழையும் நீர்வளம் குறைந்து வருவதற்கு ஒரு காரணம். இந்திய வானிலை ஆய்வு மையத்தில் தரவின் படி கடந்த மூன்று ஆண்டுகளை விட 2018 ஆம் ஆண்டில் பருவமழை மிகக் குறைந்த அளவிலேயே பதிவாகியுள்ளது 2,390 மி மீ (ஜூன் முதல் செப்டம்பர் வரை) அதுவே அதே மாதங்களில் 2017 இல் 3,015 மி மீ மற்றும் 2016 ஆம் ஆண்டில் 3,052 மி மீ ஆக பதிவாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை குறைந்து கொண்டே வருகிறது கோடை காலம் துவங்கும் நேரமும் முன்னதாக வந்து கொண்டிருக்கிறது. நதி வறண்டு போகிறது மேலும் அதிக வெப்பம் காரணமாக எங்களுக்கு குடிப்பதற்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது என்கிறார் கோயில் வளாகத்தில் ஓட்டுனராக பணிபுரியும் பிரதீப் பதுவாலே பார்வையாளர்களுக்கு சுற்றிக் காண்பித்து நாளொன்றுக்கு 250 ரூபாய் சம்பாதித்து வருகிறார்.

"இப்பகுதியில் அதிகப்படியான மரங்கள் வெட்டப்படுவதன் காரணமாக ஆறுகள் வறண்டு வருகின்றன", என்று மும்பையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான ஸ்டாலின் தயானந்த் கூறுகிறார். "அவை வற்றாத நதியிலிருந்து பருவகால நதியாக மாறி வருகின்றன. காடுகளுக்கும் நதிகளுக்கும் இடையிலான உறவு முறியும் போது தான் இது நிகழும்", என்று அவர் கூறுகிறார்.

வைதர்னா நாதியில் இருந்து வரும் நீர் 12 பொது குழாய்கள் மூலம் கல்தாரேவின் 449 வீடுகளுக்கு வழங்கப்படுகிறது, இதற்காக பஞ்சாயத்து ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மாதம் ஒன்றுக்கு 30 ரூபாய் வசூலித்து வருகிறது. இந்தக் குழாய்களும் இரண்டு வாரங்களுக்கு முன்பே தூர்ந்து போய்விட்டன. கடந்த காலங்களில், இக்கிராமத்தின் குழந்தைகள் சிலநேரங்களில் அசுத்தமான இந்த குடிநீரை குடித்து நோய்வாய்பட்டுள்ளனர். "இது அழுக்கு நீர் என்று குழந்தைகளுக்கு புரிவதில்லை", என்கிறார் பிரதீப்பின் மனைவியான 26 வயதாகும் பிரதிக்ஷா பதுவாலே; அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர் - பத்து வயதாகும் பிரதிக் மற்றும் எட்டு வயதாகும் பிரனித். "இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒருநாள் இரவு 11 மணி அளவில் பிரதிக்குக்கு உடல்நிலை மிகவும் மோசமானது. அவன் அழுது கொண்டே இருந்தான், வாந்தியும் எடுத்தான். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நாங்கள் அடுத்த தெருவில் வசிக்கும் ஆட்டோக்காரர் வீட்டுக்கு சென்று அவரது கதவை தட்டினோம் என்று அவர் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை குறிப்பிட்டுக் கூறினார், அது கல்தாரேவில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹமராபூர் கிராமத்தில் இருக்கிறது.
One of the dugwells of Galtare
PHOTO • Shraddha Agarwal
Vaitarna river
PHOTO • Shraddha Agarwal

கல்தாரே கிராமத்தில் உள்ள இரண்டு தோண்டப்பட்ட கிணறுகள் வறண்டு போய்விட்டது (அவற்றில் ஒன்று இடது புறத்தில் உள்ள படத்தில் உள்ளது) மேலும் அருகிலுள்ள வைதர்னா நதியில் தண்ணீர் திட்டுகள் ஆக மட்டுமே ஓடுகிறது

பதுவாலே குடும்பத்திற்கு கிராமத்திற்கு வெளியே மூன்று ஏக்கர் நிலம் உள்ளது அதில் அவர்கள் நெல் மற்றும் சிறுதானியங்களை பயிரிட்டு வருகின்றனர். "எங்கள் கிராமத்தில் உள்ள பல  குடும்பத்தினரிடம் 2 - 3 ஏக்கர் சொந்த நிலம் உள்ளது, ஆனால் தண்ணீர் இல்லாமல் அது பயனற்ற நிலையில் இருக்கிறது. நான் ஒரு விவசாயியாக இருந்தபோதிலும் கோடை காலத்தில் நான் ஓட்டுனராக பணி செய்து வருகிறேன்", என்கிறார் பிரதீப்.

கிராமத்தில் உள்ள இரண்டு பழைய ஆழ்துளை கிணற்றில் இருந்து சொருக்கு தண்ணீர் மட்டுமே வரும் மேலும் அடிபம்பும் அடிக்கடி உடைந்துவிடும். 2018 ஆம் ஆண்டிலும் 2015 ஆம் ஆண்டிலும் நடந்த பஞ்சாயத்து தேர்தல்களின் போதும் பஞ்சாயத்து கிராம நிலங்களை தேர்ந்தெடுத்து மேலும் ஐந்து ஆழ்துளை கிணறுகளை தோண்டினாலும் அடிபம்புகளை நிறுவவில்லை என்று கல்தாரே மக்கள் நினைவு கூர்ந்தனர். "எனது நிலத்தை அடிபம்பு நிறுவ பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நான் முத்திரைத்தாளை கூட தயார் செய்து வைத்திருக்கிறேன். பஞ்சாயத்து தான் இன்னும் கட்டுமான வேலைகளை துவங்கவில்லை", என்கிறார் பிரதிக்ஷா.

எங்களுக்கு ஆண்டொன்றுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. ஒரு ஆழ்துளை கிணறு அமைக்க 80 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. நாங்கள் நிதியை மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டும் என்கிறார் 32 வயதாகும் யோகேஷ் வர்தா எனது கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவரது மனைவி மற்றும் கல்தாரேவின் பஞ்சாயத்து தலைவியான 29 வயதாகும் நேத்ரா அமைதியாக நின்று கொண்டிருந்தார்.

நீராதாரங்கள் வறண்டு போன போது கிராமத்தின் பெண்கள் மற்றும் சிறுமிகள் வழக்கமாக தங்கள் குடும்பங்களுக்கு தண்ணீரை சேகரித்து சேமித்து வைப்பதற்கான சுமை மேலும் அதிகமாகிவிடுகிறது. "நகரத்தில் இருந்து தண்ணீர் லாரிகளை எங்களுக்கு கொண்டு வாருங்கள் நாங்கள் களைத்துப்போய் இருக்கிறோம்", என்று நந்தினி பதுவாலே 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிணற்றின் அடியில் இருந்து தண்ணீரை எடுக்க முயற்சித்துக் கொண்டே உரத்துக் கூறுகிறார். இப்போது இதுதான் அவரது குடும்பத்தின் குடிநீருக்கான ஒரே ஆதாரம். அவர் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் 3 அடி சுற்றுச்சுவரில் மேலேறி நின்று பிளாஸ்டிக் வாளியில் கயிற்றினை கட்டி தண்ணீரை இறைத்துக் கொண்டிருக்கிறார். தவறுதலாக அவர் தடுமாறினாலும் அவர் உள்ளே விழக்கூடும்.
Pratiksha Padwale showing contaminated tap water
PHOTO • Shraddha Agarwal
Contaminated tap water
PHOTO • Shraddha Agarwal
One of the hand pumps that barely trickles water
PHOTO • Shraddha Agarwal

ஆற்றிலிருந்து (இடது மற்றும் நடு) வரும் அழுக்கு தண்ணீருடன் பிரதிக்ஷா பதுவாலே. கிராமத்திலிருக்கும் இரண்டு பழைய ஆழ்துளை கிணறு அடி பம்புகள் அடிக்கடி உடைந்து வருகிறது (வலது)

கிணற்றுக்குச் சென்று வீட்டிற்கு திரும்புவதற்கு நந்தினிக்கு 50 - 60 நிமிடங்கள் ஆகும். அவர் நாள் ஒன்றுக்கு குறைந்தது நான்கு முறை சென்று வருகிறார் - காலை 6 மணிக்கு துவங்கி இரண்டு முறையும் பின்னர் மதியம் ஒருமுறையும் மாலை இருட்டுவதற்கு முன்பு 6 மணிக்கு ஒரு முறையும் சென்று வருகிறார். "நான் ஓய்வெடுப்பதற்காக கூட வழியில் நிற்க முடியாது", என்று அவர் கூறுகிறார். "ஏற்கனவே பானைகளை சமநிலைப்படுத்தி கொண்டுவருவது கடினம். நான் அவற்றை என் தலையில் இருந்து கீழே இறக்கிவிட்டால் பின்னர் மீண்டும் ஏற்றுவதற்கு நாள் முழுவதும் ஆகும்", என்று கூறுகிறார்.

இப்படி சுத்தமான குடிநீரை சேகரிப்பதற்கு தினசரி உழைத்து நான்கு முறை போய்வர 24 கிலோமீட்டர் நடப்பதால் அவருக்கு கடுமையான முழங்கால் வலி ஏற்பட்டுள்ளது. "இது என் முழங்கால்களை பாழாக்கிவிட்டது", என்று 34 வயதாகும் நந்தினி கூறுகிறார். எனவே 9 லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று உலோக பானையில் தண்ணீர் எடுப்பதற்கு பதிலாக இப்போது 8 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் எடுத்து வருகிறார். அவரது கணவர் நிதினுக்கு இரண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது, அதில் அக்குடும்பத்தினர் நெல் மற்றும் கொண்டக்கடலையை பயிரிட்டு வருகின்றனர் மேலும் அவர் அவ்வப்போது ஓட்டுநராகவும் பணியாற்றுவார்.

மார்ச் மாதத்தில் மயங்கி விழுந்த மம்தா ரினிஜத் கிணற்றுக்கு நாளொன்றுக்கு 4 முதல் 5 பயணங்கள் மேற்கொள்கிறார், அவர் தலையில் இரண்டு குடங்களையும் மேலும் இடுப்பில் ஒரு குடத்தையும் சுமந்து  செல்கிறார் ஒவ்வொரு குடமும் நான்கு லிட்டர் கொள்ளளவு கொண்டது. இப்படி 25 - 30 கிலோ மீட்டர் தண்ணீருக்காக தினமும் நடந்து செல்வது அவரது உடல் குறைபாட்டால் இன்னமும் கடினமாகி இருக்கிறது. "என் கால்களில் ஒன்று பிறப்பிலிருந்தே மற்றொன்றை விட உயரம் குறைவானது", என்று அவர் விளக்குகிறார். ஒவ்வொரு நாளும் நான் தலையில் தண்ணீரை எடுத்துச் செல்லும் போது எனது கால்கள் மறத்துப் போய்விடுகின்றன", என்று அவர் கூறுகிறார்.
Nandini Padwale standing on the well
PHOTO • Shraddha Agarwal
Deepali Khalpade (who shifted to Man pada) carrying pots of water on her head
PHOTO • Shraddha Agarwal
Women carrying water
PHOTO • Shraddha Agarwal

இடது: கிணற்றின் விளிம்பில் நந்தினி பதுவாலே, அவர் தவறுதலாக தடுமாறினாலும் உள்ளே விழக்கூடும். நடுவில்: தீபாலி கல்பாதே மற்றும் அவரது குடும்பத்தினர் அருகிலுள்ள குக்கிராமத்திற்கு குடிபெயர்ந்துவிட்டனர். வலது: கிராமத்தின் நீர் ஆதாரங்கள் வறண்டு போகும் போது கிராமத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது குடும்ப தேவைக்காக தண்ணீரை சேகரித்து சேமிக்கும் சுமை இன்னும் அதிகமாகிவிடுகிறது

விரக்தியில் கடந்த சில வருடங்களாக கல்தாரேவிலிருந்து சுமார் 20 குடும்பங்களைச் சேர்ந்த சிலர் கிராமத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் உள்ள ஒரு குக்கிராமத்திற்கு நிரந்தரமாக  குடிபெயர்ந்து விட்டனர். அங்கு அவர்கள் வன நிலத்தில் பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். "எங்கள் குக்கிராமத்தில் சுத்தமான தண்ணீருடன் ஒரு கிணறு உள்ளது", என்று வார்லி சமூகத்தைச் சேர்ந்த தீபாலி கல்பாதே கூறுகிறார், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் இந்த குக்கிராமத்தில் குடிபெயர்ந்தார். "நான் தோட்ட வேலை செய்யும் கோவிலுக்கு நடந்து செல்ல எனக்கு ஒரு மணிநேரம் பிடித்தாலும் கிராமத்தில் தண்ணீர் இல்லாமல் வாழ்வதைவிட இது சிறந்ததாகவே தோன்றுகிறது", என்று கூறுகிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒவ்வொரு கோடை காலத்திலும் கல்தாரேவைச் சேர்ந்த பெண்கள், அங்கிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடா நகரில் இருக்கும் விஷ்ணு சவராவின் வீட்டிற்கு பேரணியாக செல்கின்றனர். சவரா பாரதிய ஜனதா தள கட்சியில் தலைவர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு அமைச்சரும் ஆவார். ஒவ்வொரு முறையும் அவர்கள் பொய்யான வாக்குறுதிகளுடன் திருப்பி விடப்படுகின்றனர். "விஷ்ணு ஐயா எங்கள் கிராமத்தை சேர்ந்தவர் தான் என்றாலும் அவர் எங்களுக்கு உதவி எதுவும் செய்யவில்லை", என்று யோகேஷ் கூறுகிறார்.

நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, அது ஒரு ஞாயிற்றுக்கிழமை நண்பகல் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு வெளியே காலடி எடுத்து வைக்கின்றனர் பல வெற்று குடங்களை சுமந்து கொண்டு செல்கின்றனர் "சுத்தமான குடிநீர் என்பது எங்களால் அனுபவிக்க இயலாத ஒரு ஆடம்பரம், என் தலையில் இரண்டு 2 அண்டாக்களை வைத்து சுமக்க கற்றுக்கொண்டேன். இது எங்களது நேரத்தை மிச்சப்படுத்துகிறது", என்று தண்ணீர் பிடிப்பதற்கு தங்கள் முறைக்கு அடி பம்பின் அருகில் காத்திருக்கும் பெண்கள் வரிசையில் சென்று சேர்வதற்காக விரைந்த படி 15 வயதாகும் அஸ்மிதா தன்வா கூறுகிறார். "அடி பம்பை பயன்படுத்துவதால் எனது நெஞ்சும் முதுகும் வலிக்கிறது". அழுத்தம் குறைவாகவே இருப்பதால் ஒரு ஆறு லிட்டர் அண்டாவில் நீரை நிரப்ப 20 நிமிடங்கள் பாம்பை அடிக்க வேண்டும் என்று 27 வயதாகும் சுனந்தா பதுவாலே கூறுகிறார். அவரது பத்து வயது மகள் தீபாலி தனது தாயிடம் இருந்து அப்பணியை ஏற்றுக்கொள்கிறார். அவள் அடித்து அடித்து முயற்சி செய்த பின்னர் தண்ணீர் தீர்ந்துவிட்டது என்பதை தான் அவளால் உணர முடிந்தது.

தமிழில்: சோனியா போஸ்
Shraddha Agarwal

ஷ்ரத்தா அகர்வால் பீப்பில்’ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவில் செய்தியாளராகவும், உள்ளடக்க ஆசிரியராகவும் உள்ளார்.

Other stories by Shraddha Agarwal
Translator : Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.

Other stories by Soniya Bose