தினமும் காலையில் மாண்டவா குறுக்கு சந்துகளில் காய்கறிகளையும் பழங்களையும் விற்பதற்காக ஆரிஃபும் (இடது), ஷெருவும் (அவரது கழுதையும்) கிளம்பிவிடுகின்றனர். முட்டைகோஸ், காலிஃபிளவர், வெண்டைக்காய், கத்தரிக்காய், வாழைப்பழம் என பலவற்றையும் வண்டியில் சுமந்தபடி ஷெரு இழுத்துச் செல்கிறது. முன்னாள் கட்டிட பணியாளரான 40 வயதாகும் ஆரிஃப் முகமதும், அவரது உதவியாளரும் (பெயர் சொல்ல மறுத்துவிட்டார்), ராஜஸ்தானின் ஜூன்ஜூனுன் மாவட்ட நகரில் தினமும் வரும் வாடிக்கையாளர்கள், புதியவர்களுடன் பேரம் பேசி விற்பனை செய்கின்றனர். சுமார் எட்டு மணி நேர விற்பனைக்கு பிறகு மாலை 5 மணியளவில் அந்த மனிதரும், அவரது வளர்ப்புப் பிராணியும் வீடு திரும்புகின்றனர். விற்பனையில் தினமும் ரூ.300-400 வரை கிடைப்பதாக ஆரிஃப் சொல்கிறார். வியாபார நேரம் என்பதால் அவர் அதிகம் பேசவில்லை. ஷெருவும் பொறுமையின்றி காணப்பட்டது.

ராஜஸ்தானின் பார்மர், பிகானீர், சுரு, ஜெய்சால்மர் மாவட்டங்களில் ஒருகாலத்தில் ஏராளமான கழுதைகள் இருந்தன. இந்தியாவின் மொத்த கழுதை எண்ணிக்கையில் ராஜஸ்தான் மாநிலம் இன்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 20ஆவது கால்நடை கணக்கெடுப்பு (2019 )ன்படி கழுதைகளின் எண்ணிக்கை வேகமாகச் சரிந்து வருவதாக சொல்கின்றன. 2012ஆம் ஆண்டு கால்நடை கணக்கெடுப்பின்போது 3,30,000 என இருந்த கழுதைகளின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பில் 62 சதவீதம் வரை சரிந்து 1,20,000 என உள்ளது. ராஜஸ்தானில் மட்டும் கிட்டதட்ட இந்த எண்ணிக்கை 81,000லிருந்து 23,000 என 72 சதவீதம் சரிந்துள்ளது.

PHOTO • Sharmila Joshi

ராஜஸ்தானின் மிக ஏழ்மையான நாடோடி ஆயர்கள் போன்ற குழுவினருக்கு இச்செய்தி துயரமானது. முதன்மை வாழ்வாதாரமாக கழுதைகள் இல்லாவிட்டாலும் பொதி சுமப்பதில் இவ்விலங்குகள் முக்கிய பங்காற்றுகின்றன. பிற விலங்குகள் போல் அல்லாமல், தீவன தட்டுப்பாடு, கடுமையான வெப்ப நிலைகளிலும் இக்கழுதைகள் தாக்குபிடிக்கின்றன. சில சமயம் அதிக பொதி சுமக்க வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதும் உண்டு.

கழுதைகள் எண்ணிக்கை வேகமான சரிவிற்கு முக்கியமான காரணம், குறைந்த தூர பயணத்திற்கு பொதிகளை சுமப்பதற்கும் வண்டிகளை இழுப்பதற்கும் கூட சிரமப்பட வேண்டியிருக்கிறது. கழுதைகளை வளர்க்கும் சமூகங்களும் தங்களது தொழிலை மாற்றிக் கொள்வதால், அவர்களால் அவற்றை பாதுகாக்க முடிவதில்லை.

அடுத்த கால்நடை கணக்கெடுப்பில் கழுதைகளின் எண்ணிக்கை இன்னும் குறைந்திருக்கக் கூடும். தனக்கும், தனது பழங்குடிகளுக்கும் நேரம் குறைவதையே ஷெருவின் பொறுமையின்மை காட்டுகிறதோ. ஏற்கனவே ஊரடங்கு காலத்தில் பெருமளவு மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.

தமிழில்: சவிதா

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.

Other stories by Sharmila Joshi
Translator : Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.

Other stories by Savitha