அந்த மரத்தை அவரது தாத்தாதான் நட்டு வளர்த்திருக்கிறார். அந்த மரத்திற்கு என்னை விட வயது அதிகம் என்கிறார் மகாதேவ் காம்ளே. அந்த மரத்தின் நிழலில் அவர் அமர்ந்திருக்கிறார். ஒரு காலத்தில் இரண்டு ஏக்கர் மாந்தோப்பாக இருந்த இடம் அது. வறண்டு கிடக்கிற இந்த இடத்தில் இப்போது ஒரு மரம்தான் மீதம் இருக்கிறது.
அந்த தனிமரம் தான் காம்ப்ளேயும் பரஞ்ச் மோகசா கிராமத்தின் மற்றவர்களும் அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்ஸ்ராஜ் ஆஹிருக்கு எதிராக ஏப்ரல் 11 அன்று ஏன் வாக்களிக்கப்போகிறார்கள் என்பதை நமக்கு கூறுகிறது. கிழக்கு மகாராஷ்டிராவில், சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அவர். நான்கு முறை தொடர்ந்து அந்தத் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார். பாரதிய ஜனதா தலைமை தாங்குகின்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் அவர் பதவியில் இருக்கிறார்.
கடந்த பத்தாண்டில் இந்தப் பகுதிக்கு வந்த திட்டங்களில் நிலக்கரி சுரங்கத்துக்கான திட்டத்துக்காக, காம்ப்ளேவின் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டபோது, மாந்தோப்பில் இருந்த மற்ற எல்லா மரங்களும் வெட்டி அகற்றப்பட்டுவிட்டன
2011 ஆம் வருடத்தில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பராஞ் மோகசா அதில் இருந்தது. அந்தக் கிராமத்தின் அனைத்து நிலங்களையும் அனைத்து சொத்துக்களையும் அனைத்து வாழ்வாதாரங்களையும் நிலக்கரி சுரங்கத்துக்கான திட்டம் தற்போது எடுத்துக் கொண்டு விட்டது. அடுத்து என்ன செய்வது என்று தவிக்கிற நிலைக்கு கிராமத்தின் 1800 குடும்பங்களையும் இந்தத் திட்டம் தள்ளிவிட்டது. நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டாலும் அதில் வசித்த மக்களுக்கு இன்னமும் மறுவாழ்வு பணிகள் எதுவும் செய்யப்படவில்லை.2003 ஆம் வருடத்தில் கர்நாடக மின் வாரியம் பராஞ் பகுதியில் நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கான குத்தகையை அது வெற்றிகரமாக பெற்றது. தோண்டி எடுக்கப்பட்ட நிலக்கரியை கர்நாடகாவில் மின்சார உற்பத்தி செய்வதற்காக மட்டும்தான் பயன்படுத்துவோம் என்பது இந்த குத்தகையில் ஒரு நிபந்தனை. கர்நாடக அரசின் மின்சக்தி நிறுவனம் இந்த வேலைகளைச் செயல்படுத்துவதற்கான குத்தகை ஒப்பந்தத்தை கிழக்கத்திய சுரங்கம் தூண்டுதல் மற்றும் வணிக நிறுவனம் (Eastern Mining and Trading Agency (EMTA)) என்னும் இந்தியாவின் மிகப் பெரிய தனியார் நிலக்கரி சுரங்க நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. தனியார் நிறுவனமும் கர்நாடக அரசும் இணைந்து ஒரு கூட்டு நிறுவனத்தையும் உருவாக்கியிருக்கின்றன. கர்நாடகா - இஎம்டிஏ கம்பெனி லிமிடெட் (KECL) ,( Karnataka-EMTA Company Limited (KECL) என்ற பெயரில் அந்த நிறுவனம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த கேஇசிஎல் நிறுவனம் 2008 ஆம் வருடத்துக்குள் 1457.2 ஹெக்டேர்கள் அளவுள்ள நிலத்தை கையகப்படுத்திக் கொண்டது. பராஞ் மொகசா கிராமம், அதன் பக்கத்தில் உள்ள சேக் பராஞ் கிராமம் உள்ளிட்ட ஏழு கிராமங்கள் அடங்கியது அந்த நிலம். பாராஞ் மட்டுமே சுமார் 550 ஹெக்டேர் நிலங்களை இந்த கையகப்படுத்துதலில் இழந்திருக்கிறது. இதில் 500 ஹெக்டேர்கள் என்பது நிலக்கரி சுரங்கங்களாகவும் மீதமுள்ள நிலமானது சாலைகள் அமைக்கவும் அலுவலகங்கள், நிலக்கரிகளை கொட்டி வைக்கும் இடங்கள் உள்ளிட்ட மற்ற நோக்கங்களுக்கான பகுதிகளை அமைப்பதற்கும் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலக்கரி சுரங்கங்களில் 68 மில்லியன் மெட்ரிக் டன்கள் வரை நிலக்கரி இருப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதிலிருந்து ஒரு வருடத்திற்கு 2.5 மில்லியன் டன்கள் ஆண்டுதோறும் நிலக்கரியை எடுக்க முடியும் என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.
சந்திரபூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 15 ஆண்டுகளில் 50 கிராமங்கள் வரை இதுபோல பொதுத்துறை மற்றும் தனியார் சுரங்கங்களின் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஏறத்தாழ, 75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரை சுரங்கப் பணிகள் காரணமாக இடம்பெயர்ந்து இருக்கிறார்கள் என்கிறது நாக்பூரை மையமாகக் கொண்டு செயல்படுகிற, மக்களின் கூட்டு செயல்பாடுகளுக்கான மையத்தைச் சேர்ந்த பிரவீன் மோடே.
‘பணத்தைக் கொடுத்திட்டாங்க. எங்க ஆளுங்கள்ள சிலருக்கு அவுங்க நிலங்களையும் வீடுகளையும் வாங்குறதுக்கு லஞ்சமும் குடுத்திருக்காங்க. சொந்தக்காரங்களுக்கு இடையிலும் குடும்பங்களுக்கு உள்ளேயும் ஒரே சண்டை. கிராமமே ஒரே ரத்தக் காடுதான்” என்கிறார் அவர்.
மாநில அரசின் மத்தியஸ்தம் இல்லாத முறையில் தானே நேரடியாக நிலத்தை வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலைபாட்டை எடுத்தது கேஇசிஎல் நிறுவனம். பரஞ் மொகசா கிராமத்தில் ஒரு ஏக்கருக்கு நான்கு முதல் ஐந்து லட்சங்கள் வரை நில உரிமையாளர்களுக்குக் கிடைத்தது. அந்த விலையும் அவர்களின் நிலம் அமைந்திருக்கின்ற முக்கியத்துவமான இடத்தைப் பொருத்தும் அந்த நிலத்தின் தரத்தைப் பொறுத்தும்தான் நிர்ணயிக்கப்பட்டது. வீடுகளுக்கும் மற்ற சொத்துக்களுக்கும் சதுர அடிக்கு 750 ரூபாய் விலை என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், முறையான மறுவாழ்வு பணிகளைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என்கிறார்கள் கிராமத்தினர். நிலங்களுக்கு தற்போது தரப்படுகிற விலையைவிட மேலும் நல்ல விலை அவர்களுக்குத் தேவை. சுரங்கத்துக்கு அப்பால் புதிய கிராமத்தில் அவர்களை மறுகுடியமர்த்த வேண்டும். சுரங்கப் பணிகளுக்காக இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்ற குடும்பங்களில் குறைந்தபட்சம் ஒருவருக்காவது நிரந்தரமான பணி வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள். இஎம்டிஏ என்பது ஒரு தனியார் நிறுவனமாக இருந்தாலும் அது அரசு நிறுவனத்தோடு இணைந்து கூட்டு நிறுவனமாக இருப்பதால் நியாயமான நஷ்ட ஈடு மக்களுக்கு கிடைப்பதற்கு அரசாங்கம் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்தக் கோரிக்கைகளை எல்லாம் தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் அஹிர் நிறைவேற்றித் தரவேண்டும் என்றும் அவர்கள் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. “ஆனால், எங்களுக்கு ஒரு மறுவாழ்வு பகுதியை காட்டினார்கள். அது மிக தூரத்தில் இருக்கிறது. அங்கு எந்த விதமான வசதிகளும் இல்லை. அந்தப் பகுதி வேண்டாம் என்று நாங்கள் மறுத்துவிட்டோம் என்கிறார் சச்சின். அவர் ஒரு இளம் தலித் செயல்பாட்டாளர். கைவிடப்பட்ட தனது வீட்டை நோக்கி போகிறார் அவர். தனியார் நிலக்கரி சுரங்கங்களாலும் பொதுத்துறை நிலக்கரி சுரங்கங்களாலும் பாதிப்புகளை சந்தித்து வரும் அவரது கிராம மக்களுக்கும் மற்ற கிராம மக்களுக்கும் பாதிக்கப்பட்டிருப்போருக்கான மறுவாழ்வு பணிகளைக் கோருவதில் முன்னணியில் இருக்கிறார் அவர்.
அனேக கூட்டங்கள் நடந்தன. பல எதிர்ப்புப் போராட்டங்களும் நடந்தன. ஆனால், போதுமான அளவுக்கு மக்கள் ஒன்றுபட்டு நிற்கவில்லை. பிளவுபட்டுப் போனார்கள். முதலில் இரண்டு பெரிய நிலப்பிரபுக்களின் குடும்பங்கள் நிலங்களை விற்பனை செய்தன. காலம் சென்ற ராம்கிருஷ்ண பர்கார் மற்றும் காலம் சென்ற நாராயணன் காலே ஆகியோரின் குடும்பங்கள்தான் அவை. நிலங்களை இஎம் டிஏ - இடம் அவை விற்பனை செய்தன. கிராமத்தை விட்டும் அந்தக் குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக போய்விட்டன என்று கோபத்தோடு பேசுகிறார் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பாபா மகா குல்கர்.
“அவர்கள் பணத்தை விநியோகம் செய்து விட்டார்கள்” என்கிறார் சல்குரே. “அவர்கள் எங்களில் சிலருக்கு லஞ்சம் கொடுத்தார்கள். அவர்களின் நிலங்களையும் வீடுகளையும் வாங்கி விட்டார்கள். அதற்குப் பிறகு சொந்தக்காரர்களும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டார்கள். குடும்பங்கள் சண்டைகளால் உடைந்துவிட்டன. கிராமம் ரத்தம் சிந்தியது. இது மட்டுமில்லை. கொஞ்சம் பேர் ஆரம்பத்தில் தங்களின் நிலங்களை தாமாக முன் வந்து கொடுத்தார்கள்.
நிலக்கரி சுரங்கத்தில் அவர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புதான் அதற்கு காரணம். ஒரு சிறிய பகுதியில் முதலில் சுரங்கப் பணிகள் ஆரம்பித்தன. சுரங்கத்தைத் தோண்டத்தோண்ட அது தன்னை விரிவுபடுத்திக்கொண்டே போனது. அதற்கு முன்னால் நிலங்களை தரமாட்டோம் என்று மறுத்தவர்களுக்குக்கூட அதற்குப் பிறகு வேறு வழி இல்லை. ‘'தற்போது இங்கே உள்ள ஒவ்வொரு கைப்பிடி மண்ணும் கம்பெனிக்குத்தான் சொந்தம்” என்கிறார் கிராம வளர்ச்சி அதிகாரி வினோத் மெஸ்ராம். அவர் அமர்ந்திருக்கின்ற பராஞ் மொகாசா கிராம பஞ்சாயத்து அலுவலகம் நவீனமாக இருக்கிறது. “இந்த அலுவலகமும் அவர்களுக்கு சொந்தமானதுதான்” என்கிறார் அவர்.
இந்த நிகழ்வுகளின் போக்கில் அந்தக் கிராமம் தன்னுடைய முக்கியமான தொழிலான விவசாயத்தை இழந்துவிட்டது. நிலம் இல்லாத விவசாயத் தொழிலாளர்கள் என்ன செய்வார்கள்? விவசாய வேலையை மட்டுமே நம்பி இருப்பவர்கள் அவர்கள். அவர்கள் அவர்களுக்கு வேலை தந்து கொண்டிருந்த முக்கியமான ஆதாரத்தை இழந்து விட்டார்கள். நிலக்கரி சுரங்கம் கொஞ்சம் பேருக்கு வேலை கொடுக்கலாம். ஆனால், அது எப்போது தனது பணிகளை நிறுத்துகிறதோ அப்போது வேலைகளும் இல்லாமல் போய்விடும் என்கிறார் சல்குரே.
இதற்கிடையில், 450 பேர் வரை நிலக்கரி சுரங்கத்தில் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பராஞ் மொகசா கிராமத்தைச் சேர்ந்த 122 பேரும் இருக்கிறார்கள். கிளார்க்குகளாகவும் பாதுகாவலர்களாகவும் தொழிலாளிகளாகவும் அவர்கள் வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் என்கிறார். சுரங்கத்தின் முன்னாள் கிளார்க்காக பணியாற்றிய ராமா மாட்டே. நிலக்கரி சுரங்கத்தில் பார்த்து வந்த கிளார்க் வேலையை இழந்தபிறகு மாட்டே மூன்று வருட காலம் கட்டிடப் பணிகளை செய்கிற கொத்தனாராக பணி செய்து வந்தார். கிராமத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர்கள் தள்ளி, நாக்பூர் சந்திரபூர் சாலையில் அமைந்துள்ள பத்ராவதி டவுனில் கடந்த வருடத்தில் அரசாங்கத்தால் விவசாயம் தொடர்பான விஷயங்களுக்காக சேட்டு சர்வீஸ் மையம் அமைக்கப்பட்டது. அதில் அவரைப் போலவே வேலைகளை இழந்த பலர் தற்போது தினக் கூலி தொழிலாளிகளாக வேலை செய்கிறார்கள். “எங்களது விவசாய நிலங்கள் நல்ல பாசன வசதி கொண்டவை. மூன்று போகம் விளையக்கூடிய நிலங்கள் அவை என்று பழைய காலத்தை மீண்டும் நினைத்துப் பார்க்கிறார் ராமா மோட்டே.
நிலக்கரி சுரங்கம் நான்கைந்து வருடங்களுக்கு தொடர்ந்து இயங்கி வந்தது. 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் இந்தியா முழுவதும் தனியார் மூலமாக நடந்து வந்த நிலக்கரி சுரங்கங்களின் அனுமதியை ரத்து செய்தது. அதுவரையிலும் அவர்கள் தோண்டி எடுத்த நிலக்கரிக்கு ஒரு அபராதத்தையும் விதித்தது. கர்நாடக அரசின் மின்சார நிறுவனம் ஒப்பந்தத்தை மீண்டும் வெற்றிகரமாக பெற்றது. உச்ச நீதிமன்றம் அறிவித்த அபராதத்தை யார் கட்ட வேண்டும் என்பதில் சர்ச்சை ஏற்பட்டது. நீதிமன்றத்தில் அது தொடர்பாகவும் ஒரு வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. கர்நாடக அரசின் மின் உற்பத்தி நிறுவனத்தால் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வேறு ஒரு புதிய நிறுவனத்தைக் கண்டுபிடிக்க இன்னமும் முடியாததால், பரம காசாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கம் செயல்படாமல் தற்போது உள்ளது. நிலக்கரி சுரங்கம் செயல்படாததால், அந்த கம்பெனிக்குச் சொந்தமாக மாறிவிட்ட எங்களுடைய நிலங்களும் செயல்படாமல் போய்விட்டன என்கிறார் முன்னாள் பஞ்சாயத்து தலைவரான மகா குல்கர்.நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் தீர்க்கப்படும் போது, ஒப்பந்தத்தை பெற்ற நிறுவனம் மறுபடியும் தனது வேலைகளை தொடங்கும்போது, நாங்கள் மீண்டும் இந்த இடங்களை விட்டு நகர வேண்டி வரும் என்கிறார் அவர்.
தற்போது நிறைய கிராமத்தினர், கிராமத்துக்கேத் திரும்பி வந்து விட்டார்கள். நிலக்கரி சுரங்கத்தின் வெடிப்பு சத்தங்கள், மாசு, ஆலையின் எந்நேரமும் இயங்குகின்ற சத்தம், இவையெல்லாம் சுரங்கம் செயல்படும்போது இருந்தாலும் கூட அவர்கள் அவற்றையும் மீறி கிராமத்திற்கு திரும்பி விட்டார்கள். கிராமமே தரிசு நிலமாக மாறி விட்டது. வேலை எல்லாம் போய்விட்டது. விவசாய நிலங்கள் அமைதியாக கிடக்கின்றன. நிலம் கையகப்படுத்தப்பட்ட காரணத்தினால் மக்கள் அரசின் திட்டங்கள் எதையும் அணுகி பெற முடியவில்லை. வீடுகளை மேம்படுத்த முடியாது. சாலைகளை மறுபடியும் போட மாட்டார்கள்.
நாங்கள் முன்னதாக செய்த தவறுகளுக்கான தண்டனையை அனுபவித்துக் கொண்டு கொண்டு இருக்கிறோம் என்கிறார் என்கிறார் இந்த கிராமத்தின் தற்போதைய பஞ்சாயத்து தலைவரான மாயாதாய் மகா குல்கர். “எங்களுக்கு எதுவும் கிடைக்காமல் போய்விட்டது. வயதானவர்களுக்கு வாழ்க்கை இங்கே மிகவும் கடினமாக இருக்கிறது. நிலமற்ற விவசாய தொழிலாளர்களின் வாழ்க்கை மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் விவசாயம் சார்ந்த தங்களுடைய வேலைகளை இழந்துவிட்டார்கள். அதற்கான நஷ்ட ஈடு, மாற்று வேலைகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார். சில விவசாயிகள் நஷ்ட ஈடாக தங்களுக்கு தரப்பட்ட பணத்திலிருந்து தூரத்து கிராமங்களில் கொஞ்சம் நிலங்களை வாங்கி போட்டார்கள். “நான் 10 ஏக்கர்களை 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிற ஒரு கிராமத்தில் வாங்கிப் போட்டேன். தினமும் அங்கே போய் வருகிறேன். இதற்குப் பெயர் வளர்ச்சி அல்ல என்கிறார் அவர்.
"கிராமத்தைச் சுற்றி, சுரங்கம் தோண்டுவதற்கான நான்கு பெரிய துளைகள் போடப்பட்டுள்ளன. வறண்டு கிடக்கிற வயல்களுக்கு மத்தியில் அசிங்கமாக அவை காட்சி தருகின்றன. ரொம்ப பழைய ஒரு துளையில் மழைநீர் முழுவதும் தேங்கி கிடக்கிறது. மலை மேடுகளில் மிஷின்கள் துருப்பிடித்து கிடக்கின்றன. அந்த இயந்திரங்கள் சுரங்கம் தோண்டும் கம்பெனியால் கைவிடப்பட்டவை. கிராமத்தின் ஆன்மா செத்துவிட்டது. உயிரில்லாத உடல் ஆகி விட்டது கிராமம் என்கிறார் எண்பது வயதைக் கடந்த மகாதேவ் காம்ப்ளே. ஒரு காலத்தில் மாந்தோப்பாக வளம் கொழித்துக்கொண்டிருந்த ஒரு இடத்தில் மிஞ்சி இருக்கிற ஒற்றை மரத்தின் கீழே உட்கார்ந்து இருக்கிறார் அவர். “தற்போதைய கிராமம் அழுகிக் கொண்டிருக்கிற ஒரு உடம்பு” என்கிறார் அவர்.
வேலை இல்லாத இளைஞர்கள் வேலைகளைத் தேடி தொலைதூரம் போய்விட்டார்கள். பல வீடுகள் பூட்டிக் கிடக்கின்றன. பலர் பக்கத்தில் இருக்கிற பத்ராவதி நகரத்துக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள். வினோத் மெஸ்ராமின் மூன்று மகன்களும் இடம் பெயர்ந்து போய்விட்டார்கள். 2005 ஆம் ஆண்டில் அவர்களது 11 ஏக்கர் விவசாய நிலம் கைவிடப்பட்டது. பராஞ் மொகசாவின் கிராம வளர்ச்சி அதிகாரி என்ற அடிப்படையில் மட்டும் அல்ல, பக்கத்தில் இருக்கின்ற கிராமங்களுக்குமான அதிகாரியாக அவர் தொடர்கிறார். அரசாங்கத்திலிருந்து அவருக்கு வர வேண்டிய சம்பளத்தைப் பெறுவதற்காக அவர் தொடர்கிறார்.
பத்ராவதி நகரத்திற்கு சிலர் தினமும் வேலை செய்வதற்காக மட்டுமே போய் வருகிறார்கள். அப்படியும் வேலை கிடைப்பது கடினமாயிருக்கிறது. இந்த தாலுகாவில் உள்ள பல கிராமங்களில் சுரங்கங்களால் இடம் பெயர்ந்து விட்ட பல கிராமத்தினரும் வேலை செய்வதற்கு இந்த நகரத்துக்கு தான் வருகிறார்கள் என்கிறார் சச்சின் செல்குரே. வேலை செய்வதற்கான ஆட்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். வேலைகள்தான் மிகவும் குறைவாக இருக்கின்றன என்கிறார் சச்சின். சச்சின் கூட பத்ராவதி நகரத்தில் தான் வாழ்கிறார். உள்ளூரில் இருக்கின்ற அரசு சாரா தொண்டு நிறுவனங்களோடு பணி செய்கிறார்.
“இந்தத் திட்டத்தால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை” என்கிறார் அவரது பாட்டி அகிலா பாட்டில். பாட்டில் அவர் வாழ்நாள் முழுவதுமே இந்த கிராமத்தில்தான் வாழ்ந்திருக்கிறார். பெரும்பாலான இளைஞர்கள் வேலை தேடி கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். நாங்க தான் இங்க கிடக்கிறோம் என்கிறார் அவர்.
பஞ்ச்புலபாய் வேலெகரின் இரண்டு மகன்கள் கிராமத்தைவிட்டு போய்விட்டார்கள். அந்த பெண்மணியின் இரண்டு ஏக்கர் நிலம் சுரங்க நிறுவனத்துக்குப் போய்விட்டது. “ நாங்கள் இங்கே வசிக்கிறோம். எனது மகன்களும் அவர்களின் குடும்பங்களும் பத்ராவதி நகரில் வசிக்கின்றனர்” என்கிறார் அவர்.
பராஞ் மொகசா கிராமத்தினரின் நியாயமான மறுவாழ்வுக்கான கோரிக்கை தீர்க்கப்படவில்லை. அரசாங்கம் பல வாக்குறுதிகளை தந்ததுதான். ஆனால் அவை எதுவும் தீர்க்கப்படவில்லை. அதனால் அவர்கள் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்ஸ்ராஜ் அஹிருக்கு வாக்களிக்கப் போவதில்லை என்கிறார்கள்.
அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் அஹிர் முதலில் 1996இல் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றிபெற்றார். 1998,1999 தேர்தல்களில் அவர் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். அதன்பிறகு 2004 முதலாக அவர் காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடித்து வெற்றிபெற்றுவந்திருக்கிறார்.
சந்திரப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் 19 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.அவற்றில் நான்கு சந்திரப்பூர் மாவட்டத்தில் உள்ளன.யாவத்மால் மாவட்டத்தில் மேலும் இரண்டு உள்ளன.
காங்கிரஸ் இங்கே சுரேஷ் (பாலு) தனோர்கர் என்பவரை நிறுத்தியிருக்கிறது. அவர் குன்பி சாதிக்காரர். வரோரா (பத்ராவதி நகர்) தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அவர். தனோர்கர் மார்ச் 2019இல்தான் சிவசேனா கட்சியை விட்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருக்கிறார். பராஞ் மொகசா கிராமத்தில் உள்ள பெரும்பான்மை சமூகம் என்பது குன்பி சாதிதான். அது இதர பிற்படுத்தப்பட்ட சாதியாக வரையறுக்கப்பட்டது. அஹிர் ஒரு யாதவ். அதுவும் ஒரு பிற்படுத்தப்பட்ட சாதிதான். ஆனாலும் அவருக்கு சாதிகளுக்கு அப்பால் மக்கள் செல்வாக்கு உண்டு.
மூன்றாவது வேட்பாளர் யாரும் இல்லை. கடந்த மூன்று தேர்தல்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சேத்கரி காம்கர் பக்ஷா வேமன்ராவ் சாடப் என்பவர் மூன்றாவது போட்டியாளராக இருந்து வாக்குகளைப் பிரிப்பார். அது அஹிருக்கு சாதகமாக அமையும்.
“சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் அஹிருக்கு மீண்டும் வாக்களிக்க மாட்டார்கள்” என்கிறார் சல்குரே. அவரும் அவரது கூட்டாளிகளும் கடந்த தேர்தல்களில் அஹிருக்கு வாக்களித்து வந்திருக்கின்றனர். அவர் அதிகமான நட்டஈட்டையும் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளையும் அரசிடமிருந்து பெற்றுத்தருவார் என்று அவர்கள் நம்பினார்கள். “நாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாக உணர்கிறோம்” என்கிறார் அவர். “இந்தக் கிராமங்களில் மக்கள் கோபத்தோடு இருக்கின்றனர். அவர்கள் அதை வாக்குகளில் வெளிப்படுத்துவார்கள்” என்கிறார் அவர்.
மாந்தோப்பில் மிஞ்சியிருக்கிற அந்த ஒற்றை மரத்தின் கீழ் உட்கார்ந்துகொண்டு காம்ப்ளே மறுபடியும் கூறுகிறார். “நாங்கள் மறுபடியும் அஹிருக்கு வாக்களிக்க மாட்டோம். எது வந்தாலும் சரி. அவர் எங்களை ஏமாற்றியிருக்கிறார்.” “நம்மை ஏமாற்றிய தலைவருக்கு ஏமாற்றத்தை தருவோம்”. வருத்தத்தில் உள்ள இந்த கிராமம் இந்த உறுதியோடு இருக்கிறது.
தமிழில்: த நீதிராஜன்