“எங்கள் முன்னோர்கள், நீண்ட காலமாக இந்த பான்ஸ் கீத் கருவியை வைத்து பாடல் பாடி வந்தனர்“ என்று பஞ்ச்ராம் யாதவ் கூறுகிறார். நான் மத்திய சட்டீஸ்கரில் உள்ள பிலாய் என்ற நகரில் நாட்டுப்புற இசைக்கலைஞர்களுக்கு நடந்த கண்காட்சியில் அவரை சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் மே மாதத்தில் கண்காட்சி திடலில் சுற்றிக்கொண்டிருந்தபோது, அங்கு எதிரொலித்த அந்த கீத்தின் இசை என்னை ஈர்த்தது. 3 ஆண்கள் பான்ஸ் பஜாவை வாசித்துக்கொண்டிருந்தார்கள். நீண்ட, நன்றாக அலங்கரிக்கப்பட்ட, உருளைவடிவ மரத்தாலான காற்று இசைக்கருவி. ராவத் இன ஆண்களால் வாசிக்கப்படும் கருவி. யாதவ ஜாதியினரின் துணைக்குழு. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். முக்கியமாக துர்க் (பிலாய் நகரம் அங்குதான் உள்ளது) பாலுத், தம்தரி, கரியபாண்ட், கான்கேர் மற்றும் மஹாசமுண்ட் மாவட்டத்தில் வசிப்பவர்கள்.
50 மற்றும் 60 வயதுகளின் இறுதியில் உள்ள மூன்று இசைக்கலைஞர்கள் அந்தக்கருவியை வாசித்தனர். உடன் சேர்ந்து பாடும் சிலர் கிருஷ்ணன் மற்றும் புகழ்பெற்ற மேய்ப்பவர்களைப் பற்றி கதை கூறி, ஒத்திசைந்து பாடல் பாடினர்.
4 முதல் 5 அடி உள்ள பான்ஸ் பஜா ஆடு, மாடுகள் மேய்ப்பவர்களின் பாரம்பரிய கருவி. கலைஞர்கள் (சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே இக்கருவிகளை வாசிப்பார்கள்) பஜாவை தாங்களாகவோ அல்லது உள்ளூர் தச்சர்களின் உதவியுடனோ உருவாக்கிக்கொள்வார்கள். சரியாக மூங்கிலை தேர்ந்தெடுத்து, 4 துளைகள் இட்டு, கம்பளி நூலினால் செய்த மலர்கள் மற்றும் வண்ணத்துணிகள் கொண்டு அலங்கரிப்பார்கள்.
பாரம்பரிய நிகழ்ச்சியில், 2 பான்ஸ் பஜா வாசிப்பவர்களுடன் ஒரு கதை கூறுபவரும், மற்றொருவரும் சேர்ந்துகொள்வார்கள். கதை சொல்லி பாடிக்கொண்டே விவரித்துக்கொண்டிருக்கும்போது, மற்றொரு நபர் அவர்களுக்கு ஆதரவாக ஊக்கமளிக்கும் சொற்களை கூறி பார்பவர்களையும், நிகழ்ச்சி நடத்துபவர்களையும் உற்சாகப்படுத்துவார். இந்த நிகழ்ச்சி சரஸ்வதி, பைரவா, மஹாமயா மற்றும் விநாயகர் ஆகிய தெய்வங்களை தொழுவதன் மூலம் துவங்கும். கதை சொல்ல துவங்கும் முன் இது நடைபெறும். கதையைப் பொறுத்து ஒரு கதை அரைமணி நேரம் முதல் 3 மணி நேரம் வரையோ அல்லது ஒரு முழு இரவுமோ தொடர்ந்து நடப்பது பாரம்பரியம்.
பஞ்ச்ராம் யாதவ், பாலோட் மாவட்டம் குண்டேர்டெகி வட்டம் சிர்ரி கிராமத்தைச் சார்ந்தவர். இவர் பான்ஸ் பஜா கருவி வாசிக்கும் நபர்களுடன், அவர்கள் நிகழ்ச்சி நடத்தும்போது நீண்ட காலமாக சேர்ந்து கொள்கிறார். “நாம் நமது பாரம்பரியத்தை பாதுகாப்பதுடன், நமது இளைய தலைமுறையினருக்கும் அதை அறிமுகப்படுத்த வேண்டும்“ என்று அவர் கூறுகிறார். ஆனால், எங்கள் சமுதாயத்தில் உள்ள இளைஞர்கள், குறிப்பாக கல்லூரி சென்று படித்தவர்கள் இந்த பாரம்பரியங்களில் ஆர்வம் காட்டுவதில்லை. வயதானவர்கள் மட்டுமே பான்ஸ் கீத்தை வாழவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இப்போதெல்லாம் இளைஞர்கள் இதை விரும்புவதில்லை. இந்த பாரம்பரிய பாடல்களைவிட, அவர்களுக்கு சினிமா படப்பாடல்கள் தான் மிகவும் பிடிக்கிறது. இந்த பான்ஸ் கீத்தில் நாங்கள் பாரம்பரிய தடாரியா, கர்மா மற்றும் மற்ற பாடல்களை வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பாடுவோம். மக்கள் எங்களை நிகழ்ச்சி நடத்த அழைக்கும்போது பல்வேறு இடங்களுக்கு செல்வோம். ஆனால் இளைய தலைமுறையினர் இதற்கெல்லாம் வேறுபட்டு உள்ளனர். எங்களுக்கு தற்போது அரிதாகவே அழைப்பு வருகிறது. எனவேதான் நாங்கள் எங்கள் இசை தொலைக்காட்சி மூலம் இசைக்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்“ என சகாதேவ் யாதவ் கூறுகிறார். இவர் அருகில் உள்ள கானாகோட் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இக்குழுவினருக்கு அரசிடம் இருந்து எப்போதாவது கலாச்சார நிகழ்வுகள் அல்லது யாதவ் சமாஜ நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நிகழ்ச்சிகள் நடத்திக்காட்டுவதற்கு அழைப்பு வருகிறது. அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு கட்டணம் வழங்கப்படுகிறது. பஜா மற்றும் கீத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தை மட்டுமே சார்ந்து அவர்கள் வாழவில்லை. சில இசைக்கலைஞர்களுக்கு சிறிய நிலம் உள்ளது. பெரும்பாலானோர் ஆடு, மாடுகள் வளர்த்து, அவற்றை மேய்த்து தங்கள் வாழ்க்கைக்கான வருமானத்தை ஈட்டிக்கொள்கின்றனர். “எங்களை நிகழ்ச்சி நடத்துவதற்கு யாராவது அழைத்தால், நாங்கள் அங்கு செல்வோம். ஏனெனில் இந்த பான்ஸ் கீத் எங்கள் பாரம்பரியம். எனவே ஒருபோதும் நாங்கள் பாடுவதை நிறுத்தமாட்டோம்“ என்று பஞ்ச்ராம் யாதவ் கூறுகிறார்.
தமிழில்: பிரியதர்சினி. R.