குலாபும், ஷாசதும் தங்களின்  சிறப்பான மந்திர காட்சிகளை தொடங்கும் முன் உரக்க கத்துகின்றனர், “ஹூருக் போம் போம் கேலா!” இது  “அப்ராகாடப்ரா” என்பது போல வங்காள சொற்றொடர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 80-90 பார்வையாளர்களை திரட்டவும் இது உதவுகிறது. இரு சகோதரர்களில் மூத்தவரான குலாப் பார்வையாளர்களில் ஒருவரான மிண்டு ஹல்தரை உதவிக்கு அழைக்கிறார். மிண்டு துணிச்சலுடன் முன்வருகிறார். மாயாஜால தந்திரங்கள் தொடங்குகின்றன.

இளைய சகோதரர் ஷசாத்தை மறைய வைப்பதாக குலாப் வாக்களிக்கிறார். மந்திரத்தால் மறையப் போகும் சகோதரர் பெரிய வலைக்குள் அமர்கிறார்.  மிண்டு அந்த வலையைக் கொண்டு ஷசாதின் தலை வரைக்கும் கட்டுகிறார். இருபுறமும் திறக்கும் பெட்டியை ஷசாத் மீது குலாப் வைத்து போர்வை கொண்டு போர்த்துகிறார். என்ன நடக்குமோ என்ற ஆவலுடன் பார்வையாளர்கள் காத்திருக்கின்றனர்.

இப்போது விலங்கின் எலும்பை ஆட்டி மந்திரம் சொல்லி மந்திர சக்திகளிடம் வேண்டி சகோதரனை மறையச் செய்கிறார்: “அர்கத் கோப்டி மர்கத் மசன், பச்சா கே லேஜா தேலியா மசனான்.” பிறகு அவர் பெட்டியின் ஒவ்வொரு முனையிலும் ஷசாத் இருக்கிறாரா என மிண்டுவிடம் கேட்கிறார். மிண்டுவும் அப்படி தேடும்போது பெட்டி காலியாக இருக்கிறது. ஷசாதை எங்கும் காணவில்லை.

“உங்களிடம் நான் கேட்க விரும்புகிறேன்:  இச்சிறுவனுக்கு இது கஷ்டமான நேரமா? என்னிடம் எல்லோரும் சொல்லுங்கள்: அவன் இருக்கிறானா, இல்லையா?” குலாப் கேட்கிறார். இப்போது மறைந்திருக்கும் ஷசாத் கஷ்டத்தில் தான் இருக்க வேண்டும் என கூட்டத்தில் உள்ளவர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

'உங்களிடம் நான் கேட்க விரும்புகிறேன்:  இச்சிறுவனுக்கு இது கஷ்டமான நேரமா?' என குலாம் கேட்கிறார்

காணொளி: ‘இவன் இப்போது இங்கு இருக்கிறானா இல்லையா?‘

பார்வையாளர்களை தேடி கிராமம் கிராமமாகச் சென்று திறந்தவெளி அல்லது தெருக்களில் வித்தை காட்டும் 34 வயதாகும் குலாப் ஷேக், 16 வயதாகும் ஷசாத் ஆகிய நாடோடி மந்திரவாதிகளின் வித்தையில் ஒரு பகுதி இது. கடந்த அக்டோபர் மாதம் நான் பார்த்தபோது அவர்கள் மேற்குவங்கத்தின் ஹூக்லி மாவட்டத்திலிருந்து நாடியா மாவட்டம் டெஹட்டா வந்திருந்தனர். “எங்கள் முன்னோர்கள் செய்த வேலையை இப்போது நாங்களும் செய்கிறோம்,” என்று சொல்லும் குலாப் சுமார் 20 ஆண்டுகளாக மந்திர வித்தைகளைச் செய்து வருகிறார். ஷசாத் நான்கு ஆண்டுகளுக்கு முன் இதில் இணைந்தார்.

தூரத்திலிருந்து முதலில் நான் கூட்டத்தை பார்த்தபோது, மடாரி ஒருவர் உடுக்கையை ஆட்டி பயிற்சிப் பெற்ற குரங்கைக் கொண்டு வித்தை காட்டுகிறார் என்றே நினைத்தேன். மாறாக ஒரு சிறுவன் திறந்தவெளியில் வலைக்குள் கட்டப்படுவதை கண்டு வியப்படைந்தேன். அவர்களின் இரகசியங்களை வெளியில் சொல்ல மாட்டேன் என நான் உறுதி அளித்தேன். நிம்மதி அடைந்த அவர்கள் டெஹட்டாவின் துத்தா பாரா பகுதியில் அடுத்து நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கு உடன் வருமாறு என்னை அழைத்தனர்.

வித்தைகளை காட்டும்போது கிண்டல் செய்வது, நகைப்பாக பேசுவது, சமயம் சார்ந்த விஷயங்கள், பிற தலைப்புகள் என குலாப் பேசிக் கொண்டே இருக்கிறார். மறைய வைக்கும் செயலின்போது அவர் அதை தொடர்கிறார்: “இச்சிறுவன் கஷ்டப்படவில்லை என்று கடவுளால் படைக்கப்பட்டவன் சொல்ல மாட்டான். இவன் கடும் வெயிலில் வறுபட்டவன். பூமிக்குள் அரை மணி நேரம் மறைந்தவன். இத்தகைய பராக்கிரம சிறுவன்தான் சிறிய வலையில் [கட்டப்பட்டு] 7-8 நிமிடங்கள் இருக்கிறான். இதுபோன்று வேறு யாரையாவது கட்டிப் போட்டால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் அல்லது கழுத்து சுளுக்கு ஏற்பட்டுவிடும். ஆனால் பசியின் காரணமாக இச்சிறுவன் இவ்வளவு நேரம் கட்டப்பட்டு இருக்கிறான்.”

நிகழ்ச்சி முழுவதும் குலாப் தங்களின் போராட்ட வாழ்க்கை குறித்து பேசுவதோடு, புல்லாங்குழலை இசைத்தும் இடைவேளையை நிரப்புகிறார். மற்றொரு தருணத்தில் அவர் பார்வையாளர்களிடம் கேட்கிறார், “இதை நான் ஏன் செய்ய வேண்டும்?” அவரது ஒரே பதில்: “வயிற்று பசிக்காக.”

நிகழ்ச்சி முழுவதும் ஷசாத் பெட்டிக்குள் (மறைமுகமாக) தான் இருக்கிறார்.

Gulab Shaikh performing street magic
PHOTO • Soumyabrata Roy

மறைய வைக்கும் வித்தையின்போது, குலாம் ஷேக் டெஹட்டா கிராமத்தில் திரண்டுள்ள பார்வையாளர்களிடம் தொடர்ந்து பேசுகிறார். இறுதியாக சகோதர்கள் சைக்கிள் டயரை சிறிய ‘பாம்பாக’ நம்ப தகுந்த வகையில் ‘மாற்றி’ ஜாலங்களை செய்கின்றனர்

இறுதியாக சகோதர்கள் சைக்கிள் டயரை சிறிய நஞ்சற்ற பாம்பாக நம்ப தகுந்த வகையில் மாற்றுகின்றனர். புகழ்பெற்ற வங்காள பாடலை புல்லாங்குழலில் இசைத்து நிகழ்ச்சியை முடிக்கிறார் குலாப்.

இப்போது பார்வையாளர்களிடமிருந்து பணம் திரட்டும் நேரம். இதை செய்துகொண்டே குலாப் சொல்கிறார், “வயிற்றுப் பசியை பற்றி சொல்லிவிட்டேன், யாரும் உடனே கலைந்துவிடாதீர்கள். 500 ரூபாய் மதிப்புள்ள நிகழ்ச்சிக்கு நீங்கள் பணம் தராவிட்டால் இது ஐந்து பைசாவிற்கு கூட தேறாது என்பது போன்று ஆகிவிடும். நானும் எனது சகோதரனும் ஒரு மணி நேரம் இதற்காக கஷ்டப்படுகிறோம். பலரையும் மாயாஜால நிகழ்ச்சிக்கு திரட்டி புல்லாங்குழலும் வாசிக்கிறோம். நான் எல்லோரையும் மகிழ்வித்தேனா, துன்பப்படுத்தினேனா? உங்களிடம் இருந்து பதில் கேட்க விரும்புகிறேன்.”

இந்த மந்திரவாதிகளுக்கு பார்வையாளர்கள் எல்லோரும் பணம் தருவதில்லை. அவர்கள் கலைந்து சென்றதும், தினமும் 3 முதல் 4 நிகழ்ச்சிகளை நடத்துவதாகவும், இதிலிருந்து சில நாட்களில் ரூ.500 கிடைக்கும் என்றும் குலாபும், ஷசாதும் தெரிவித்தனர். ஒவ்வொரு பார்வையாளரும் ரூ.20 தருவார்கள் என்றும், அதைவிட கூடுதலாக கொடுத்தால் அதை திருப்பி தந்துவிடுவார்கள். இதுவே அவர்களின் சடங்கு - அவர்களுக்கு குறைந்த தொகையே போதுமானது. “ஒரு தட்டு சோறு 20 ரூபாய்,” என்கிறார் ஷசாத்.

கோவிட்-19 நோய்தொற்று, அதன் காரணமாக விதிக்கப்பட்ட கூட்ட கட்டுப்பாடுகள் உங்கள் வாழ்வாதாரத்தை பாதித்ததா? குலாப் சொல்கிறார், “ஊரடங்கால் முதல் நான்கு மாதங்களுக்கு எங்களால் வீட்டிலிருந்து கூட வெளியில் செல்ல முடியவில்லை. அப்போது ஏற்பட்ட கடனை இப்போதும் சுமக்கிறேன்.”

குலாபும், ஷாசதும் நிகழ்ச்சிகளை நடத்தினால் தான் வருவாய் ஈட்டி குடும்பத்தை காப்பாற்ற முடியும். அன்று அங்கிருந்து புறப்படும் முன் பார்வையாளர்களிடம் அவர்கள் முன்வைத்த கோரிக்கை: “எல்லோரும் ஒன்றாக உதவுங்கள், இறைவன் நமக்கு அளித்த இரு கைகளை கொண்டு தட்டுங்கள், பணம் கேட்கவில்லை!” பார்வையாளர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்ப சகோதரர்கள் அவற்றை தலைகுனிந்து ஏற்கின்றனர்.

தமிழில்: சவிதா

Soumyabrata Roy

சவுமியபிரதா ராய் மேற்குவங்க மாநிலம் டெஹட்டாவைச் சேர்ந்த சுதந்திர புகைப்பட பத்திரிகையாளர். இவர் பேலூர் மடத்தில் (கல்கத்தா பல்கலைக்கழகம்) உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாமந்திராவில் புகைப்படத்துறையில் (2019) பட்டயம் பெற்றுள்ளார்.

Other stories by Soumyabrata Roy
Translator : Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.

Other stories by Savitha