பெண்கள் தங்கள் தலையில் மல்லிகைப்பூவையும், கனகாம்பரத்தையும் சூடியிருந்தனர், மேலும் தங்களுடய சிவப்பு, நீலம், பச்சை மற்றும் அடர்சிவப்பு நிறச்சேலைகளில் சிவப்பு நிற பதக்கத்தை அணிந்திருந்தனர். இவ்வாரத்தின் அமைதியானதொரு செவ்வாய் கிழமையின் மதியானத்தில் தகானுவின் இரயில் நிலையத்தின் மூன்றாவது நடைமேடையில் இவர்களது நிறங்கள் ஒளிவீசச் செய்துகொண்டிருந்தது. மும்பைக்குத் தெற்கே 100 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து படிக்கும் மாணவர்களுக்கும், வடக்கே சில கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து உம்பர்காவுன் போன்ற நகரத்திற்கு பணிக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கும், இன்ன பிற பயணிகளுக்கும் மத்தியில் இப்பெண்களும் இரயிலுக்காக காத்திருந்தனர்.
இப்பெண்கள் அனைவரும் வார்லி ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள், இவர்கள் இன்னும் சிறிது நேரத்தில் மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தின் தகானு வட்டத்தின் பிற இனப் பெண்கள் மற்றும் ஆண்களுடன் இணைந்து விடுவர்.
இவர்கள் அனைவரும் டில்லிக்குச் சென்று நவம்பர் 29,30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்திய பாராளுமன்றத்தை நோக்கிய அணிவகுப்பில் கலந்து கொள்ளப் போகின்றனர். இக்குழுவானது, அகில இந்திய கிசான் சபா (ஏ.ஐ.கே.எஸ்) உட்பட நாட்டிலுள்ள 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களுக்கு ஒரு குடை அமைப்பாக செயல்படுகிறது. தகானு இரயில் நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கும் இவர்களும் ஏ.ஐ.கே.எஸ் ன் உறுப்பினர்களாவர். அவர்களுடைய கோரிக்கைகளில் ஒன்று விவசாய நெருக்கடியை மையப்படுத்திய மூன்று வார பாராளுமன்ற சிறப்பு அமர்வு, அதில் பெண் விவசாயிகளின் கோரிக்கைகளின் மீதான மூன்று நாள் கலந்துரையாடல்களும் அடங்கும்.ஆதிவாசி பெண் விவசாயிகளின் விவசாய நெருக்கடிக்கான சில காரணிகள் என்ன?
"எங்களுடைய நெற்பயிர் முழுவதும் அழிந்துவிட்டது" என்கிறார் மீனா பார்ஸ் கோம். மழையில்லாவிட்டால் தண்ணீருக்கான ஆதாரம் எதுவுமில்லை எங்களிடத்தில். மழையும் பொய்த்துவிட்டால் நெற்பயிர் சாகாமல் என்ன செய்யும்? என்று வினவுகிறார் தகானு வட்டத்தின் தமன்காவுன் கிரமத்திலிருந்து வரும் மீனா. பால்கர் மாவட்டம் கடுமையான வறட்சியில் சிக்கித் தவிக்கிறது, ஆனால் மீனாவும் மற்ற பெண்களும் இந்த வருடத்திற்கான நெல் சாகுபடியை வறட்சியில் இழந்த நெல் விவசாயிகள், இவ்வறட்சிக்காக அரசாங்கம் இதுவரையில் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்கின்றனர் இப்பெண்கள்.
"எனக்கு அரிதாகவே 5 மூட்டை நெல் கிடைக்கும்", ஒவ்வொரு மூட்டையும் 100 கிலோ எடை கொள்ளும், ஆனால் ஆண்டு முழுவதுக்கும் எங்களுக்கு அது போதுமானதாய் இராது என்கிறார் 32 வயதேயான ஹீரு வசந்த் பாபர். அவருடைய கணவரும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வேலைக்குச் செல்ல இயலவில்லை. அவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர் மூவருமே பள்ளிக்குச் செல்லவில்லை.
மீனாவின் இரண்டு மகள்களும் பள்ளியிலிருந்து இடையில் வெளியேரிவிட்டனர். "அவர்களுக்குத் தேவையான துணிமணி வாங்குவதற்குக் கூட போதிய பணவசதியில்லை". அவர்களால் இனி பள்ளிப்படிப்பை தொடர இயலாது. அவருடைய மகனும் கணவரும் கப்பலில் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். அதனால் சில மாதங்களுக்கு அவர்கள் வீட்டைவிட்டு வெளியிலேயே இருக்கின்றனர், சிலசமயங்களில் அது ஒன்பது மாதங்கள் வரை கூட நீடிக்கும். அவர்கள் கொண்டுவரும் சொற்ப சம்பளத்திலும், மீனாவின் கணவர் குடும்பத்தினர் உழுது கொண்டிருக்கும் ஐந்து ஏக்கர் நிலத்தையும் நம்பியே அவர் குடும்பத்தை ஓட்ட வேண்டியுள்ளது.
அவர் நிலத்தில் அறுவடை செய்யும் அரிசியும், சோளமும் அவர்கள் குடும்பத்தின் உணவுத் தேவையையே பூர்த்தி செய்யவில்லை. அதனால் அவர்கள் அரசின் நியாய விலைக்கடையில் கிடைக்கும் மானிய 10 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பருப்பு, 10 கிலோ கோதுமையையே நம்பியுள்ளனர். அந்த மானிய விலை உணவுப் பண்டங்களையும் முவகர்கள் வெளிச்சந்தையில் விற்று விடுவதால் அவை எங்களை வந்தடைவதேயில்லை. இந்த நிலையில் ஏழு பேர் கொண்ட குடும்பத்தினை எப்படி வாழ வைக்க முடியும்? என்கிறார் மீனாஇந்த வருடம் நெற்பயிர் சாகுபடி பொய்த்துப் போன நிலையில், போதுமான மானியவிலை உணவுப் பொருட்களுமின்றி மீனாவும், ஹீருவும், மற்ற பெண்களும் தங்களின் குடும்பங்களுக்கு உணவளிக்க முடியாத சிரமத்தில் உள்ளனர்.
ஹீருவும், அந்த நிலையத்தில் இருந்த மற்ற பெண்களைப் போலவே, ஒரு குறு நிலத்தை வைத்திருந்தார். பொதுவாகவே, எல்லாக் குடும்பத்திலும் உள்ள நிலங்கள், அவர்கள் கணவர்களின் பெயரிலோ அல்லது தந்தையின் பெயரிலோ இருந்தது. "பால்கரில் உள்ள ஆதிவாசி விவசாயிகள், ஒன்று முதல் ஐந்து ஏக்கர் அளவுள்ள குறுநிலத்தையே கொண்டிருந்தனர். அவர்கள் எப்பொழுதும் அவர்களின் நிலத்தை விட்டு அகற்றப்படுதல் அல்லது நிலத்தையே அபகரித்துக் கொள்ளுதல் போன்ற அச்சுறுத்தல்களுக்கு இடையே வாழ்ந்துவந்தனர். அந்த நிலமும் அவர்கள் நில உச்சவரம்புச் சட்டத்தின்பால் பெற்ற உழுவதற்கான நிலமாகவும், அல்லது வன உரிமைச் சட்டத்தின் மூலம் அவர்களின் முன்னோர் வழி அவர்களுக்குப் பாத்தியப்பட்ட வன நிலமாகவுமே இருக்கிறது" என கிசான் சபாவின் பால்கர் மாவட்டச் செயளாளரான சந்திரகாந்த் கோகர்ணா கூறுகிறார், இவரே தகானு மக்களை ஒருங்கிணைத்து டில்லிக்கு அழைத்துச் செல்கிறார்.
" நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாத வரையில் அவர்கள் நமது நிலங்களை அபகரித்துக் கொண்டேயிருப்பர். கடந்த காலங்களில், முன்னால் நிலச்சுவான்தார்கள், சட்டபூர்வமாக அவர்களுக்குச் சொந்தமான நிலத்தை வார்லிகளிடம் இருந்து அபகரிக்க அனைத்து முறைகளயும் கையாண்டுள்ளனர். இதில் தவறான பொய்யுரைகளைக் கொண்டு கையெப்பமிடுதல், வெளிப்படையாக அச்சுறுத்தல் உள்ளிட்டவையும் அடங்கும். இவையெல்லாம் இன்றைய சூழலில் வேலை செய்யாததால் பிற வழிகளில் எங்களை அச்சுறுத்தி நிலத்தை விட்டு வெளியேற்ற நினைக்கின்றனர். இது ஒரு தொடர் போராட்டமாகும்.
இதனாலேயே நீலம் பிரகாஷ் ராவட் போன்ற விவசாயிகள் கிசான் சபாவின் அழைப்பினை ஏற்று, தங்களுடைய நிலத்தையும் இல்லத்தையும் விட்டு நீண்ட நெடிய நெடும்பயணமாயினும் தங்களுடைய உரிமைக்காக செல்கின்றனர். தகானுவின் சாரலி என்னும் குக்கிராமத்திலிருந்து வருகிறார் நீலம், அவரது கணவர் பிரகாஷ் சூரத்தில் வேலை செய்கிறார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். "நான் நாசிக்கிலிருந்து மும்பைக்கு (மார்ச் ,2018ல்) பேரணிக்குச் சென்ற பொழுது வீட்டைவிட்டு கிட்டத்தட்ட ஒருவார காலம் வெளியே இருக்க வேண்டியாகிவிட்டது. அச்சமயம் எனது இளைய மகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவனுடன் நான் தொலைபேசியில் பேசிக்கொண்டே இருந்தேன், மேலும் அவன் என்னை வீட்டுக்குத் திரும்பி வரும்படி அழைப்புவிடுத்துக் கொண்டே இருந்தான். நான் வீடு திரும்பியதும் அவனது உடல்நிலை தேறிவிட்டது. அதனால் இம்முறை அவன் எனது பையை விடுவதாய் இல்லை. நான் செல்லக்கூடாது என்பதற்காக என்னுடைய பொருட்களை ஒளித்துவைக்க ஆரம்பித்துவிட்டான்".
இருந்தும் எதற்காக ஒவ்வொரு முறையும் பேரணிக்குச் செல்கிறோம்? "நாங்கள் சென்றே ஆகவேண்டும். நாங்கள் போராடவில்லையெனில் எங்களது நிலத்தை இழந்துவிடுவோம். என்னுடைய குழந்தைகளுக்கானதே என்னுடைய இந்தப் பேரணி. எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் அணிவகுப்பு நடத்திக்கொண்டே இருப்போம்" என்கிறார் தீர்க்கமாக.
தமிழில்: சோனியா போஸ்