கிதாபுன் நிஷா ஷேக், இடிந்த சிறுகுன்றுக்கும் குப்பைகளுக்கும் நடுவில் நின்றிருந்தார். ரஃபீக் நகரில் அவரது வீட்டுக்குப் பக்கத்தில் ஓடும் நல்லாவில் இருந்து ப்ளாஸ்டிக்குகளை சேகரித்துக் கொண்டிருந்தார். அதற்குப் பக்கத்தில் இருக்கும் டியோனர் குப்பைக்கிடங்கிலிருந்து சில குப்பைகள் சிதறியிருந்தன. திறந்த கால்வாயில் கொஞ்சம் குப்பைகள் கொட்டியிருந்தன. கொக்கியுடைய ஒரு நீண்ட மரக்குச்சியை வைத்து, கருப்பான சாக்கில் இளஞ்சிவப்பு நிற பாட்டிலை அடைக்கிறார். அடுத்தமுறை உதவக்கூடும் என நினைத்து அந்த மரக்குச்சியை பத்திரப்படுத்துகிறார்.
ஒருநாளைக்கு ஏறத்தாழ ஆறு மணி நேரத்துக்கு அவர் இந்த வேலைகளைச் செய்கிறார். அவரது பழுப்பேறிய தலைடி சூரிய ஒளியில் மின்னுகிறது. 75 வயதின் முதுமையால் முகுது வளைந்திருக்கிறது. கண்ணாடி பீர் பாட்டில்களையும் ப்ளாஸ்டிக் பாட்டில்களையும் எடைக்கு விற்பதற்காக சேகரித்துக்கொண்டிருக்கிறார். ஒரு நாள் விட்டு ஒருநாள், 12 முதல் 15 கிலோ ப்ளாஸ்டிக் சேகரிக்கப்படுகிறது. கிதாபுனின் மருமகள் ஜாஹிதா அவையனைத்தையும் சாக்கில் போட்டு பாபா நகரில் அதை எடைக்கு வாங்குபவரிடம் சென்று அளிக்கிறார். அவர்களின் வீட்டிலிருந்து பாபா நகர் 15 நிமிட நடை தொலைவில் இருக்கிறது. ஒரு வாரத்துக்கு 1000 ரூபாய் வரை இதிலிருந்து அவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. “எங்கள் வயிற்றை நிரப்பிக்கொள்வதற்கு எங்களுக்கு இந்த வேலைதான் இருக்கிறது” என்கிறார் கிதாபுன். “இந்த வேலை எங்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் வேறு என்ன செய்வது?” என்கிறார்.
கிதாபுனின் குடிசைக்கு அருகில், 324 ஏக்கர் டியோனர் குப்பைக்கிடங்கு பகுதி உள்ளது. மும்பையில் இருக்கும் இத்தகைய மூன்று பெரிய இடங்களில் இதுவும் ஒன்று (முலுண்ட் மற்றும் கஞ்சூர்மார்க் ஆகியவை மற்ற இரண்டு குப்பைக்கிடங்குகள்) நகரம் உருவாக்குகிற 9500 மெட்ரிக் டன் குப்பைகளில் சுமார் 35 சதவிகிதம் டியோனர் குப்பைக்கிடங்கில்தான் கொட்டப்படுகிறது. 2016-இல் டியோனர் பகுதி நிறைந்துவிட்டாலும், ப்ருஹன்மும்பை நகராட்சிக்கு பாம்பே உயர்நீதிமன்றத்தால் ‘கடைசி நீட்டிப்பாக’ உத்தரவிடப்பட்டு, டிசம்பர் 31, 2019 வரை பயன்படுத்திக்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ரஃபீக் நகரைப்போலவே பல குடிசைப் பகுதிகளும் இந்த இடத்தைச் சுற்றி அமைந்துள்ளன. 807,720 பேர் இருக்கும் மக்கள்தொகை கொண்ட நகரத்தின் எம்-கிழக்கு வார்டில் இவையும் ஒரு பகுதியாகும். ரஃபீக் நகரின் குறுகலான சந்துகள் முழுவதும் குப்பைகள் குவிந்திருக்கும். கழிவு வாய்க்கால்கள் அடைபட்டிருக்கும். குப்பைக்கிடங்கிலிருந்து வெளிவரும் நாற்றம் தாங்க முடியாததாக இருக்கும். எல்லா இடங்களிலும் ஈக்களும் கொசுக்களும் நிறைந்திருக்கும்.
ஒரு தெருவின் ஓரத்தில் அமைந்திருக்கிறது கிதாபுனின் குடிசை. நல்லாவின் ஓரத்தில் அமைந்திருக்கிறது. 16 பேர்களைக் கொண்ட அந்தக் குடிசை 100 சதுர அடியில் இருக்கிறது. கிதாபுனின் மூன்று மகன்கள், ஜாஹிதா மற்றும் 11 பேரக்குழந்தைகளுடன் அவர் அங்கு வசிக்கிறார். “மோசமான மழைநேரங்களில், குப்பைக்கிடங்குகளிலிருந்தும் கால்வாய்களில் இருந்தும் நீர் வீட்டுக்குள் நுழைந்துவிடும்” என்கிறார் கிதாபுன். “முக்கியமான உணவுப் பொருட்களான பருப்பு, அரிசி, துணிமணிகள் அனைத்தையும் வீட்டின் மேலடுக்கில் வைப்போம். பல பொருட்கள் ஈரமாகிவிடும். தண்ணீர் வடியும்வரை அருகில் இருக்கும் வீடுகளில் தங்குவோம்” என்கிறார் கிதாபுன்.







