“பிறக்கும் குழாயை நோக்கி சிசு நகர நான் உதவுவேன்.”
குழந்தைகளை இவ்வுலகுக்குக் கொண்டு வந்த மருத்துவச்சிக் காலத்தை நினைவுகூர்கையில் குணமாயி மனோகர் காம்ப்ளேயின் கண்கள் ஒளிர்கின்றன. 86 வருடங்கள் கடந்துவிட்டது. கவனமும் சுதாரிப்பும் நிறைந்த மருத்துவச்சியாக இருந்தவர் அவர். குழந்தை பிறப்புக் குழாயிலிருந்து வரும் முறையை சொல்கையில் வேடிக்கையாக அவர், “கைகளிலிருந்து வளையல்களை கழற்றுவது போல்தான்,” என்கிறார். பாவனை செய்து காட்டும்போது அவரின் கைகளில் இருந்து கண்ணாடி வளையல்கள் சிணுங்கின.
குணமாயி, வக்தாரி கிராமத்தில் வசிக்கும் தலித் ஆவார். மருத்துவச்சியாக அவர் பணி தொடங்கிய 70 ஆண்டுகளில் ஒஸ்மனாபாத் மாவட்டத்தின் நூற்றுக்கணக்கான குழந்தைகளை தாயின் கருப்பையிலிருந்து பாதுகாப்பாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். “கை கொண்டிருக்கும் மாயம் அது,” என்கிறார் அவர். கடைசியாக 82 வயதாக இருக்கும்போது நான்கு வருடங்களுக்கு முன் அவர் பிரசவத்துக்கு உதவினார். அவர் பெருமை கொள்கிறார். “என் கைகள் எப்போதும் தோற்றதில்லை. கடவுள் என்னுடன் இருக்கிறார்.”
குணமாயின் மகளான வந்தனா, சோலாபூர் மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறார். அறுவை சிகிச்சையின் மூலம் பிறக்கவிருந்த மூன்று குழந்தைகளை தான் பிறக்க வைப்பதைப் பார்க்குமாறு குணமாயி மருத்துவர்களிடம் கூறினார். “அவர்கள், ‘ நீங்கள் எங்களை விட திறன் வாய்ந்தவர் (பாட்டி) என்றனர்.” அவர்களின் ஆச்சரியத்தை நினைவுகூர்ந்து புன்னகைக்கிறார் குணமாயி.
பிரசவத்தையும் தாண்டியவை அவரின் திறன்கள். சோலாப்பூர், கொல்ஹாப்பூர், புனே போன்ற மகாராஷ்டிராவின் பல பகுதிகளிலிருந்து அவருக்கு அழைப்பு வரும். “குழந்தையின் கண்கள், காதுகள் அல்லது மூக்கில் சிக்கியவற்றை அகற்றுவதில் என் பாட்டி திறன் வாய்ந்தவர். விதையோ மணியோ எது சிக்கினாலும் குழந்தையை என் பாட்டியிடம் அழைத்து வருவார்கள்,” என்கிறார் அவரின் பெருமைமிகு பேத்தியான ஷ்ரீதேவி, சில மாதங்களுக்கு முன் பாரி குழு சந்தித்தபோது. வயிற்று வலி, மஞ்சள் காமாலை, சளி மற்றும் இருமல், காய்ச்சல் ஆகியவற்றுக்கு மூலிகை தீர்வுகள் வழங்குவதும் இந்த வேலைகளும் சேர்ந்ததுதான் மருத்துவச்சிக்கான வேலை என குணமாயி நம்புகிறார்.
குணமாயி போன்றவர்கள் பாரம்பரிய மருத்துவச்சி ஆவார்கள். நவீனப் பயிற்சியோ சான்றிதழ் படிப்போ அவர்களுக்குக் கிடையாது. ஆனால் பெரும்பாலும் தலித் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், கிராமங்கள் மற்றும் வருமானம் குறைந்த வசிப்பிடங்களில் உள்ள பல தாய்களுக்கு பிரசவிக்க உதவியிருக்கின்றனர்.பிரசவத்தின்போது தாய்களிடம், “நீங்கள் இந்த வலியைக் கடந்து விடுவீர்கள். எல்லாம் சரியாகி விடும்,” என உறுதி அளிப்பார்கள்.
ஆனால் கடந்த 30, 40 வருடங்களாக மருத்துவமனை குழந்தைப் பேறுகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை மருத்துவச்சிகளின் வேலைகளை குறைத்திருக்கிறது. 1992-93ம் ஆண்டில் எடுக்கப்பட்ட முதல் தேசிய குடும்பச் சுகாதார கணக்கெடுப்பின்படி மகாராஷ்டிராவின் குழந்தைப் பிறப்புகளில் பாதிக்கும் குறைவாகத்தான் மருத்துவமனைகளில் நடந்திருந்தன. முப்பது வருடங்கள் கழித்து 2019-21ம் ஆண்டில், 95 சதவிகிதமாக அது உயர்ந்திருக்கிறது.
இரட்டைக் குழந்தைப் பிறப்பு பிரசவச் சிக்கல்கள் இறந்து பிறக்கும் குழந்தை போன்ற சூழல்களைக் கையாளும் திறனும் அனுபவமும் வாய்த்த குணமாயி போன்ற மருத்துவச்சி, கர்ப்பிணிகளை அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தும் நபராகவும் மருத்துவமனைக்கு செல்லும்போது துணைக்கு செல்பவராகவும் சுருங்கி விட்டார். மருத்துவமனைக்கு அவர் அனுப்பும் ஒவ்வொரு நபருக்கும் ரூ.80 பெறுகிறார்.
பிரசவகாலத்தில் அவரின் பங்கு குறைந்துபோனாலும், “கிராம மக்கள் என் மீது அன்பு கொண்டுள்ளனர். தேநீர் குடிக்கவும் உணவு உண்ணவும் அழைப்பதுண்டு. ஆனால் திருமண அழைப்பிதழ்கள் எங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. நிகழ்ச்சி முடிந்த பிறகு எங்களுக்கு உணவு கொடுப்பார்கள்,” என்கிறார் குணமாயி. அவரது பணி அங்கீகரிக்கப்பட்டாலும், அவரைப் போன்ற தலித்துகளுக்கு சாதித் தடைகள் இருந்ததை அவரது சமூக அனுபவங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
*****
மங் என்ற தலித் சமூகத்தில் பிறந்த குணமாயின் தந்தை கல்வி பயின்றவர். குணமாயின் உடன்பிறந்தார் பள்ளிக்கு சென்றனர். ஆனால் அவருக்கு ஏழு வயதிலேயே மணம் முடித்து வைக்கப்பட்டது. மாதவிடாய் காலம் தொடங்கியதும் திருமணமான வீட்டுக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். “10-12 வயதுதான் இருக்கும். பாவாடைதான் அணிந்திருந்தேன். வக்தாரிக்கு நான் வந்த வருடத்தில்தான் நல்துர்க் கோட்டை கைப்பற்றப்பட்டது,” என அவர், ஹைதராபாத் நிஜாமின் அதிகாரத்துக்குள்ளிருந்த கோட்டையை இந்திய ராணுவம் கைப்பற்றிய 1948ம் ஆண்டை நினைவுகூர்ந்து.
ஒஸ்மனாபாத் மாவட்டத்தின் துல்ஜாபூர் தாலுகாவிலுள்ள வக்தாரி 265 வீடுகள் (சென்சஸ் 2011) கொண்ட ஒரு சிறு கிராமம். குணமாயி ஊருக்கு வெளியேயுள்ள தலித் வசிப்பிடத்தில் வாழ்ந்தார். அவரது ஓரறை வீடு, 2019ம் ஆண்டில் தலித்களுக்கான அரசின் வீட்டு திட்டமான ரமாய் ஆவாஸ் யோஜனாவின் கீழ் கூடுதலாக இரண்டு அறைகளைப் பெற்றது.
இளம் வயதில் குணமாயி கிராமத்துக்கு மணமகளாக வந்தபோது, கணவர் வீட்டாருடன் ஒரு மண் சுவர் வீட்டில் வாழ்ந்தார். குடும்பத்துக்கென நிலம் சொந்தமாக ஏதுமில்லை. கணவரான மனோகர் காம்ப்ளே கிராமத்துக்கும் கிராமத் தலைவருக்கும் வேலை பார்த்தார். அவரது வேலைக்கென குடும்பம் பாலுதெதாரி முறைப்படி ஊதியம் பெறும். பாலுதெதாரி என்பது மகாராஷ்டிராவின் வழங்கப்படும் ஒரு பண்டமாற்று முறை. அம்முறையின்படி தானிய விளைச்சலின் ஒரு பகுதி ஊதியமாக வழங்கப்படும்.
குடும்பத்துக்கு அந்த ஊதியம் போதவில்லை. எனவே குணமாயி ஆடுகளையும் சில எருமைகளையும் வளர்த்தார். பாலிலிருந்து நெய் எடுத்தும் விற்பனை செய்தார். பஞ்ச காலத்துக்குப் பிறகு 1972ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் கீழ் தினக்கூலி வேலைகள் பார்க்கத் தொடங்கினார். வீட்டுப் பிரசவங்களும் பார்த்தார்.
“குழந்தை பிறக்க வைத்தல் ஆபத்தான வேலை. ஒருவரின் காலில் குத்திய முள்ளை எடுப்பதே கஷ்டம். இங்கு ஒரு முழு உடலையே பெண்ணுக்குள்ளிருந்து எடுக்க வேண்டும்,” என அவர் சுட்டிக் காட்டுகிறார். கடினமான அதே நேரம் முக்கியத்துவம் வாய்ந்த வேலையை அவர் செய்தாலும் “குறைவாகதான் அவருக்கு பணம் கொடுக்கப்பட்டது,” என்கிறார் அவர். “சிலர் ஒரு கையளவு தானியம் தந்தார்கள். சிலர் பத்து ரூபாய் கொடுத்தார்கள். தூரத்தில் இருக்கும் கிராமத்திலிருப்பவர் நூறு ரூபாய் கூட கொடுத்திருப்பார்.”
தாயுடன் அவர் முழு இரவும் தங்கி, தாயையும் சேயையும் குளிப்பாட்டி பிறகுதான் கிளம்புவார். “யார் வீட்டிலும் நான் உண்ணவோ தேநீர் அருந்தவோ கூட மாட்டேன். அவர்கள் கொடுக்கும் கையளவு தானியத்தை மட்டும் என் புடவையில் முடிந்து கொண்டு வீட்டுக்கு செல்வேன்,” என்கிறார்.
எட்டு வருடங்களுக்கு முன், ஒரு வழக்கறிஞர் குடும்பம் 10 ரூபாய் கொடுத்ததாக நினைவுகூருகிறார் குணமாயி. இரவு முழுவதும் இருந்து அவர்களின் மருமகள் பிரசவிக்க சந்தித்த சிக்கலை களைய உதவினார். “காலையில் அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். நான் கிளம்பியதும் அவளின் மாமியார் 10 ரூபாய் கொடுத்தார்,” என்கிறார் குணமாயி. “10 ரூபாயை நான் திரும்பக் கொடுத்துவிட்டுச் சொன்னேன், ‘நான் அணிந்திருக்கும் இந்த வளையல்களின் விலை 200 ரூபாய். உங்களின் 10 ரூபாயை எடுத்துக் கொண்டு பிச்சைக்காரனுக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கிக் கொடுங்கள்,’ என்றேன்.”
அங்கீகாரமின்மையும் குறைவான ஊதியமும் குணமாயியின் மூத்த மகளான வந்தனாவுக்கு மருத்துவச்சி ஆகும் விருப்பத்தைக் கொடுக்கவில்லை. “யாரும் பணம் கொடுப்பதில்லை. மக்கள் மட்டுமல்ல அரசாங்கமும் பணம் கொடுப்பதில்லை,” என்கிறார் புனேவில் வாழும் வந்தனா. குணமாயி அவருக்கு பயிற்சியளித்திருக்கிறார். ஆனால் பிரசவத்துக்கு பிறகு தாயையும் சேயையும் குளிப்பாட்டும் வேலையை மட்டுமே அவர் பார்க்கிறார்.
வந்தனாவுக்கும் அவரது மூன்று சகோதரிகளுக்கும் மொத்தம் 14 குழந்தைகள். ஒரு குழந்தையைத் தவிர மற்ற எல்லா குழந்தைகளுக்கான பிரசவத்தையும் குணமாயிதான் பார்த்தார். குணமாயியின் மூன்றாம் மகள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவரின் கணவர் மருத்துவப் பிரசவத்தை விரும்பினார். “என் மருமகன் பள்ளி ஆசிரியராக இருந்தார் (இப்போது ஓய்வு பெற்றுவிட்டார்). அவருக்கு வீட்டுப் பிரசவத்தில் நம்பிக்கை இல்லை,” என விளக்குகிறார் அவர்.
கடந்த 20-30 வருடங்களாக, சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ய விரும்பும் அல்லது அறிவுறுத்தப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை குணமாயி கவலையுடன் கவனித்து வருகிறார். மகாராஷ்டிராவில், இத்தகைய அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. தேசியக் குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி ( NFHS-5 ) 2019-2ம் ஆண்டுகளில் 25 சதவிகிதத்துக்கும் அதிகமான கர்ப்பிணி பெண்கள் அரசு மருத்துவமனையில் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். தனியார் மருத்துவமனைகளின் கணக்கு இன்னுமே அதிகம். பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்களில் 39 சதவிகிதம் பேர் அறுவை சிகிச்சை செய்திருக்கின்றனர்.
“கர்ப்பமும் குழந்தை பிறப்பும் இயற்கையான முறைகள்,” என்கிறார் குணமாயி. வெட்டுதல், தைத்தல் என அவர் குறிப்பிடுகிற தேவையற்ற முறைகளை பற்றி வலுவான கருத்துகளை கொண்டிருக்கிறார். “அவர்கள் வெட்டி பிறகு தைக்கிறார்கள். ஒரு பெண் அதற்குப் பிறகு எழுந்து அமர முடியுமென நினைக்கிறீர்களா? குழந்தை பிறப்பிக்கும் பெண்ணின் உடல் மிகவும் மென்மையாக வலுவின்றி இருக்கும்.” மருத்துவச்சிகளிடம் இயல்பாக இருக்கும் கருத்தைதான் அவரும் வெளிப்படுத்துகிறார்: “ நஞ்சுக்கொடி வெளிவரும் வரையில் தொப்புள் கொடியை அறுக்கக் கூடாது. இல்லையெனில் நஞ்சுக்கொடி உள்ளே சென்று கல்லீரலில் ஒட்டிக் கொள்ளும்.”
குழந்தைப் பிறப்பு பற்றிய பல விஷயங்களை இளம் தாயாக இருந்த தன் சொந்த அனுபவத்திலிருந்து பெற்றவை என அவர் பாரியிடம் கூறுகிறார். “என் குழந்தைகள் பிறப்பிலிருந்து நான் கற்றுக் கொண்டேன். சுருக்கம் ஏற்படுகையில் உந்தித் தள்ளவும் தாயின் வயிற்றை அழுத்தி குழந்தையை வெளியே தள்ளவும் கற்றுக் கொண்டேன்,” என்கிறார் அவர் தனது பதின்வயது வருடங்களை நினைவுகூர்ந்து. “வேறு எவரையும் அருகே நான் வரவிடவில்லை. என் தாயைக் கூட வெளியேதான் நிறுத்தியிருந்தேன். பிரசவம் முடிந்த பிறகுதான் உள்ளே வர அழைப்பேன்.”
குழந்தை இறந்து பிறக்கும் பிரசவங்களிலும் குணமாயியின் திறன் நாடப்படுகிறது. ஓர் இளம்பெண்ணுக்கு பிரசவம் நேர்ந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து, “குழந்தை கருப்பையிலேயே இறந்துவிட்டதை நான் உணர்ந்தேன்,” என்கிறார். அருகே இருந்த மருத்துமனையின் மருத்துவர், இறந்த குழந்தையை அகற்ற சோலாப்பூருக்கு தாய் சென்று சிசேரியன் செய்து கொள்ள வேண்டுமெனக் கூறினார். “அவர்கள் அதை செய்ய முடியும் நிலையில் இல்லையென எனக்குத் தெரியும். கொஞ்ச நேரம் கொடுக்கும்படி அவர்களிடம் கேட்டுக் கொண்டு, வயிற்றை தடவி அழுத்தி குழந்தையின் உடலை வெளியே கொண்டு வந்தேன்,” என்கிறார் அவர். “சுருக்கம் ஏற்படாது என்பதால் இது மிகவும் கடினமான வேலை,” என்கிறார் வந்தனா.
“கருப்பை சரிந்த பெண்களுக்கும் நான் உதவியிருக்கிறேன். அதுவும் பிரசவத்துக்கு பின்னால் மட்டும்தான். அதற்குப் பிறகு அவர் மருத்துவரை பார்க்க வேண்டும்,” என்கிறார் விலகி நின்று மருத்துவரிடம் பொறுப்புகளை கொடுக்க தெரிந்த குணமாயி.
1977ம் ஆண்டில் மருத்துவச்சிகளை பயிற்றுவிக்கவென தேசிய அளவிலான திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் பல தன்னார்வ நிறுவனங்களும் திட்டத்தின் ஒரு பகுதியாக மருத்துவச்சிகளை பயிற்றுவிக்கத் தொடங்கின.
“பயிற்சிக்காக சோலாப்பூருக்கு நான் சென்றேன். எப்போது என நினைவில்லை,” என்னும் குணமாயி மெல்ல நடந்து வீட்டுக்கு வெளியே வந்து புளியமரத்தடியில் அமர்கிறார். “சுத்ததைப் பற்றி கற்றுக் கொடுத்தனர். கைகளை சுத்தப்படுத்த சொன்னார்கள். கத்தியை சுத்தப்படுத்த சொன்னார்கள். தொப்புள் கொடியை அறுக்கும் நூலை சுத்தப்படுத்த சொன்னார்கள். ஒவ்வொரு பிரசவத்துக்கும் புது உபகரணங்களை பயன்படுத்துவேன். அவர்கள் சொல்லிக் கொடுத்த அனைத்தையும் நாங்கள் பின்பற்றுவதில்லை,” என அவர் வெளிப்படையாக சொல்கிறார். அவரின் அறிவு, திறன் மற்றும் அனுபவம் எல்லாவற்றையும் மிஞ்சத்தக்கது.
2018ம் ஆண்டில் ஒரு சந்தர்ப்பத்தில் மயக்கம் போட்டு விழுந்ததால், மகள்களுடன் குணமாயி வசிக்க ஆரம்பித்தார். துல்ஜாப்பூர் ஒன்றியத்தின் கசாய் அல்லது புனே நகரத்தில் இருப்பார். ஆனால் வக்தாரியில் இருந்ததுதான் அவருக்கு பிடித்திருக்கிறது. அங்குதான், “நான் இந்திரா காந்தி இந்த நாட்டை எப்படி ஆளத் தொடங்கினாரோ அதே போல நான் குழந்தைப் பிறப்புகளை கையாண்டு கொண்டிருந்தேன்,” என்கிறார் அவர்.
பின்குறிப்பு: கடந்த சில மாதங்களாக குணமாயின் ஆரோக்கியம் மோசமாக இருந்தது. இக்கட்டுரை பிரசுரிக்கப்பட தயாராகிக் கொண்டிருந்த நவம்பர் 11, 2022 அன்று அவர் மரணமடைந்தார்.
இக்கட்டுரையின் முந்தையப் பிரசுரம் Tathapi-WHO India-வின் பதிப்பான As We See It-ல் 2010 பிரசுரிக்கப்பட்டது.
தமிழில் : ராஜசங்கீதன்