கார்கிலின் முதன்மைச் சந்தை சாலையில் நடக்கும்பொழுது, அதிலிருந்து ஒரு சிறிய தெரு பிரிகிறது. அத்தெருவில் இரண்டு பக்கங்களும் கடைகளாக இருக்கின்றன. பல வண்ணங்கள் தலையில் கட்டும் ஸ்கார்ஃப்கள் மற்றும் துப்பட்டாக்கள் இரண்டு புறங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கடைகளுக்குள் சல்வார் கமீஸ் ஆடைகள், ஸ்வெட்டர்கள், அணிகலன்கள், காலணிகள், குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் பிற பொருட்கள் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன.
இந்த இடத்திற்கு கமாண்டர் கடைத்தெரு என்று பெயர். ‘கமாண்டருக்கு’ சொந்தமான நிலத்தில் இந்தக் கடைகள் இருப்பதால், கடைத்தெருவுக்கு இப்படி ஒரு பெயர். இங்கு கடையில் விற்பனையாளராக நிற்பவர்கள் அனைவரும் ஷியா பிரிவு பெண்கள்.
லடாக்கின் எல்லையில் அமைந்திருக்கிறது கார்கில். மேலும் இது இமயமலைக்குப் பக்கவாட்டில் அமைந்திருக்கிறது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் எல்லைகள் வகுக்கப்படும் வரையில், 1947 வரை மைய ஆசிய சில்க் வழி வணிகத்தில் இது ஒரு முக்கியமான தெற்குப் பகுதி. இஸ்லாமியர்கள், புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள், சில சீக்கியக் குடும்பங்கள் என 16,000 பேர் அடங்கியது இந்நகரின் மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பு) தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வரும் அவர்கள் மூன்று போர்களைக் கண்டிருக்கிறார்கள். 1999-ஆம் ஆண்டு கடைசி போரைக் கண்டார்கள்.
இந்தப் பகுதியில் முதன்முதலாக கடைவைத்தது ஒரு பெண்தான். அதற்குப் பிறகுதான் கமாண்டர் கடைத்தெரு பெயர் வைக்கப்பட்ட நிகழ்வு நடந்தது. முப்பதாண்டுகளுக்கு முன்பாக இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இங்கு முதலில் கடை வைத்தவருக்கு கடுமையான எதிர்ப்புகள் இருந்தன, குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதனால்தான் அவரது பெயரைத் தவிர்க்கிறோம். அதன்பிறகு, அவருடைய உறுதியைக் கண்டு, 2 முதல் 3 பெண்கள் இப்பகுதியில் கடை வைப்பதற்கு வாடகை அளித்து கடை அமைத்தனர். இப்போது, சந்தை முழுவதும் எடுத்துக்கொண்டால் 30 கடைகள் இருக்கின்றன. அதில் மூன்று கடைகள் பெண்களால் நடத்தப்படுகின்றன.
பத்தாண்டுக்கு முன்பாக அரிதாகவே பெண்கள் வெளியில் தென்படுவார்கள். கமாண்டர் கடைத்தெரு இப்போது மிக முக்கியமான பகுதி. இங்கு கடையைப் பார்த்துக்கொள்பவர்கள் , பெண் கல்வி அதிகரித்திருக்கும் மாற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள். (2001-இல் 42 சதவிகிதமாக இருந்தது. 2011-இல் 56 சதவிகிதமாக மாறியது) மேலும், முன்பிருந்த கடை உரிமையாளர்கள், அவர்களுடைய நிதிசார்ந்த விஷயங்களின் சார்ந்திருக்கும் நிலை, பெண்கள் அதிகம் இங்கு வரத்தொடங்கிய பின்னர் குறைந்ததாகச் சொல்கிறார்கள். சிலர் வருமானம் ஈட்டுவதற்கான கட்டாயத்தில் வந்தாலும், சிலர் அவர்களின் முன்னோடிகளைத் தொடர்ந்து இத்தொழிலைச் செய்கிறார்கள் என்றார்கள். கார்கில் இப்போது மாற்றங்களை ஏற்றுக்கொள்கிறது என்றார்கள்.
இந்தப் புகைப்படக் கட்டுரைக்காக கமாண்டர் சந்தைக் கடைத்தெருவுக்குச் சென்றபோது, சில பெண்கள் கேமராவைத் தவிர்த்தார்கள். சிலருக்கு அவர்களின் புகைப்படங்கள் வெளியாவதில் தயக்கம் இருந்தது. சிலருக்கு அவர்களின் முழுப்பெயர் பயன்படுத்தப்படுவதில் தயக்கம் இருந்தது. ஆனால், பலரும் மகிழ்ச்சியுடன் அவர்களின் கதைகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.
தமிழில்: குணவதி