“பதினான்கு, பதினாறு, பதினெட்டு...” என்று எண்ணியபடி கழுதை அத்தியாவின் முதுகில் சுடாத செங்கற்களை ஏற்றுகிறார் காண்டு மானி. பிறகு கழுதையைப் பார்த்து: “ச்சலா... ஃபிர்....ஃபிர்...” என்று சொல்கிறார். அத்தியாவைப் போன்ற மேலும் இரு கழுதைகளும் பாரத்தை சுமந்தபடி தோராயமாக 50 மீட்டர் தூரத்திலுள்ள சூளையை நோக்கி நடக்கின்றன. அங்கு சுடுவதற்காக கற்கள் இறக்கப்படும்.
“இன்னும் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நாங்கள் ஓய்வெடுப்போம்,” என்கிறார் காண்டு. காலை 9 மணி தானே ஆகிறது என நாங்கள் வியப்படைந்தபோது, அவர் விளக்குகிறார்: “நாங்கள் நள்ளிரவு ஒரு மணிக்கு வேலையைத் தொடங்கினோம். காலை 10 மணிக்கு எங்கள் பணி நேரம் முடியும். ராத்பர் ஹி அஸச் சலு ஆஹி [நாங்கள் இரவு முழுவதும் இங்கு இருக்கிறோம்].”
சூளையிலிருந்து காலியான சாக்குகளுடன் காண்டுவின் நான்கு கழுதைகள் திரும்புகின்றன. பிறகு அவர் மீண்டும் தொடர்கிறார்: “பதினான்கு, பதினாறு, பதினெட்டு...”
திடீரென “ருக்கோ...” என்று கழுதைகளில் ஒன்றை இந்தியில் அவர் அழைக்கிறார். “எங்கள் உள்ளூர் கழுதைகளிடம் மராத்தியில் பேச வேண்டும். இது மட்டும் ராஜஸ்தானிலிருந்து வந்தது. இந்தியில்தான் உத்தரவிட வேண்டும்,” என்கிறார் அவர் அன்பொழுகும் சிரிப்புடன். நம்மிடம் அதை அவர் விளக்கியும் காட்டுகிறார்: ருக்கோ என்றதும் கழுதை நிற்கிறது. சலோ என்றதும் நகர்கிறது.
இந்த நான்கு கால் நண்பர்கள் தான் காண்டுவின் பெருமை என்பது தெளிவாகிறது. “லிம்பூவும், பந்தர்யாவும் மேய்ச்சலுக்குச் சென்றுள்ளனர், எனக்கு பிடித்தமான புல்லட். உயரமாகவும், சமர்த்தாக, அதிவேகமாக இருப்பாள்!”
மகாராஷ்டிராவின் சங்க்லி நகரின் புறநகரான சங்க்லிவாடி அருகே உள்ள செங்கல் சூளையில் நாங்கள் அவரைச் சந்தித்தோம். ஜோதிபா மந்திரைச் சுற்றிய பகுதியில் தொடர்ச்சியாக ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன. நாங்கள் 25 வரை எண்ணிவிட்டோம்.
செங்கல் உற்பத்திக்காக சூளையில் இடப்படும் கரும்புச் சக்கைகள் புகையாகி காற்றில் கலந்து காலை நேரக் காற்றை நறுமணத்தால் நிறைக்கின்றன. ஒவ்வொரு சூளையிலும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கழுதைகள் என அனைவரும் அவரவர் வேலையைச் செய்கின்றனர். சிலர் களிமண் கலக்கின்றனர், மற்றவர்கள் கல் அறுக்கின்றனர். சிலர் அவற்றை ஏற்றுகின்றனர். மற்றவர்கள் இறக்கி அடுக்குகின்றனர்.
கழுதைகள் இரண்டு... நான்கு... ஆறு... என ஜோடியாக வந்து செல்கின்றன.
“நாங்கள் பல தலைமுறைகளாக கழுதைகளை வளர்க்கிறோம்,” என்கிறார் காண்டு. “என் பெற்றோர், தாத்தா பாட்டியைத் தொடர்ந்து இப்போது நானும் இதைச் செய்கிறேன்.” சங்க்லி நகரிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோலாப்பூர் மாவட்டம் பந்தர்பூர் வட்டாரத்தைச் சேர்ந்த காண்டுவும், அவரது குடும்பமும் ஆண்டுதோறும் (நவம்பர்-டிசம்பர் முதல் ஏப்ரல்-மே வரை) தங்களில் வேலப்பூர் கிராமத்திலிருந்து சங்க்லிக்கு கழுதைகளுடன் புலம்பெயர்கின்றனர்.
காண்டுவின் மனைவி மாதுரி, கழுதைகள் கொண்டு வந்த சுடாத கற்களை இறக்கி சூளையில் அடுக்குவதில் பரபரப்பாக இருப்பதை நாங்கள் பார்க்கிறோம். தம்பதியின் மகள்களான 9 முதல் 13 வயது வரையிலான கல்யாணி, ஷ்ரத்தா, ஷ்ரவாணி ஆகியோர் கழுதைகளைச் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். அவர்களின் 4-5 வயது சகோதரன் தேநீர் மற்றும் பிஸ்கட்டுடன் தனது தந்தையின் அருகே அமர்ந்திருக்கிறான்.
“ஷ்ரவாணியும், ஷ்ரத்தாவும் சங்க்லியில் உள்ள உறைவிடப் பள்ளியில் படிக்கின்றனர். எங்கள் உதவிக்காக அவர்களை அழைத்து வந்துள்ளோம்,” என்கிறார் ஒரே நேரத்தில் இரண்டு கற்களை வீசியபடி மாதுரி. “நாங்கள் ஒரு தம்பதியை [கணவன், மனைவியை] எங்கள் உதவிக்காக வைத்திருந்தோம். அவர்கள் எங்களிடம் 80,000 ரூபாய் முன்பணம் பெற்றுவிட்டு ஓடிவிட்டனர். அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நாங்கள் அனைத்து வேலைகளையும் இப்போது முடிக்க வேண்டும்,” எனும் அவர் மீண்டும் வேலைக்கு விரைகிறார்.
மாதுரி இறக்கிவைக்கும் ஒவ்வொரு கல்லும் தலா இரண்டு கிலோ உள்ளது. கற்களை கோபுரம் போல அடுக்கிக் கொண்டிருக்கும் மற்றொரு தொழிலாளியை நோக்கி அவர் கற்களை வீசுகிறார்.
“பத்து, பன்னிரெண்டு, பதினான்கு...” என்று கணக்கிட்டபடி அவர் வேகமாக வளைந்து பிடித்து தீ வைப்பதற்காக காத்திருக்கும் சூளையில் அடுக்குகிறார்.
*****
தினமும் நள்ளிரவு முதல் காலை 10 மணி வரை காண்டு, மாதுரி அவர்களின் பிள்ளைகள் ஒன்றாக சேர்ந்து சுமார் 15,000 கற்களை ஏற்றி இறக்குகின்றனர். அவர்களின் 13 கழுதைகளைக் கொண்டு அவற்றை இடம் மாற்றுகின்றனர். ஒரு நாளில் கிட்டதட்ட 2,300 கிலோ எடையை ஒவ்வொன்றும் சுமக்கிறது. பிராணிகள் அவற்றின் மேய்ப்பர்களுடன் மொத்தமாக சுமார் 12 கிலோமீட்டர் நடக்கின்றன.
சூளைக்கு எடுத்துச் செல்லும் ஒவ்வொரு 1000 கற்களுக்கும் காண்டுவின் குடும்பம் ரூ.200 சம்பாதிக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்தொகையாக செங்கல் சூளை உரிமையாளரிடம் பெற்ற பணத்தில் அவற்றை கழிக்கின்றனர். கடந்த பருவத்தில் முன்தொகையாக காண்டுவும், மாதுரியும் ரூ.2.6 லட்சம் – ஒவ்வொரு கழுதைக்கும் ரூ.20,000 – பெற்றனர்.
“நாங்கள் பொதுவாக ஒவ்வொரு கழுதைக்கும் 20,000 ரூபாய் என கணக்கிடுவோம்,” என்று உறுதி செய்கிறார் 20களின் நடுவயதுகளில் உள்ள விகாஸ் கும்பார். அவருக்கு சங்க்லியிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோலாப்பூர் மாவட்டம் பாமாபாவடியில் இரண்டு செங்கல் சூளைகள் சொந்தமாக உள்ளன. “அனைத்து தொகையும் [மேய்ப்பர்களுக்கு] முன்பணமாக தரப்படுகிறது,” என்கிறார் அவர். கழுதைகள் அதிகமாக இருந்தால், முன்பணமும் அதிகமாக தரப்படும்.
ஆறு மாத காலத்தில் கையாளப்பட்ட மொத்த செங்கற்களில் முன்தொகையும், பிற பிடித்தங்களும் போக மிஞ்சிய பணம் இறுதியாக தரப்படும். “எங்களின் வேலைக்கு ஏற்ப கணக்கிடப்படும், மளிகை மற்றும் பிற செலவுகளுக்கான வாராந்திர தொகை [ரூ.200-250 ஒவ்வொரு குடும்பத்திற்கும்] வழங்கப்படும்,” என்கிறார் விகாஸ். ஒருவேளை ஒரு மேய்ப்பர் அப்பருவத்தில் முன்தொகைக்கு குறைவாகவே வேலை செய்திருந்தால், கடனாக கணக்கிடப்பட்டு அத்தொகை அடுத்த பருவத்தில் சேர்க்கப்படும் என அவர் விளக்குகிறார். காண்டு, மாதுரி போன்றோர் தங்களின் முன்தொகையில் ஒரு பகுதியை கொண்டு உதவிக்கு ஆட்களை வைத்துக் கொள்கின்றனர்.
*****
“கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள சங்க்லி மாவட்டத்தில் பாலஸ் முதல் மெஹைசல் வரை சுமார் 450 செங்கல் சூளைகள் உள்ளன,” என்கிறார் அப்பகுதியின் விலங்குகள் நல அமைப்பான அனிமல் ராஹத்தின் களப்பணியாளர். இந்த ஆற்றங்கரையை ஒட்டி 80-85 கிலோமீட்டர் நடுவில் சங்க்லிவாடி அமைந்துள்ளது. “இங்குள்ள சூளைகளில் 4000க்கும் அதிகமான கழுதைகள் வேலை செய்கின்றன,” என்கிறார் மற்றொரு பணியாளர். கழுதைகளின் நலனை பரிசோதிக்க இந்த இருவர் குழு அன்றாடம் வருகிறது. மோசமான உடல்நிலையில் உள்ள விலங்குகளுக்கு உதவ அவசர ஊர்தி சேவையையும் அவர்களின் நிறுவனம் நடத்தி வருகிறது.
பகல்நேர வேலை முடிந்தவுடன், ஜோதிபா மந்திர் அருகே உள்ள ஆற்றை நோக்கி பல கழுதைகள் ஓடுவதை நாம் காண்கிறோம். மேய்ப்பர்களில் இளைஞர்கள் இருசக்கர வாகனங்கள் அல்லது மிதிவண்டிகளில் அவற்றை மேய்க்க அழைத்துச் செல்கின்றனர். அப்பகுதியின் குப்பைக் கிடங்கில் பெரும்பாலான பிராணிகள் உணவை தேடுகின்றன. மாலையில் அவற்றை மேய்ப்பர்கள் திருப்பி அழைத்து வருகின்றனர். கழுதைகளுக்கு உணவு கிடைக்காதபோது காண்டு, மாதுரி போன்றோர் தங்களின் உணவுகளை அளிக்கின்றனர்.
“நாங்கள் இரண்டு குந்தா [0.05 ஏக்கர்] விவசாய நிலத்தை ஆண்டுதோறும் கால்நடைகளின் புல் மற்றும் கட்பா [காய்ந்த சோளக் கதிர்கள்] மேய்ச்சலுக்காக குத்தகைக்கு எடுக்கிறோம்,” என்கிறார் 45 வயது ஜனாபாய் மானி. குத்தகைக்கு ரூ.2000 செலுத்துகிறோம் [ஆறு மாதத்திற்கு]. “எங்கள் வாழ்க்கை அவற்றைச் சார்ந்துள்ளது. அவை உண்ணாவிட்டால் எங்களுக்கு எப்படி வருமானம் கிடைக்கும்?”
உலோகக் கூரை வேயப்பட்ட தனது வீட்டில் நம்மிடம் பேசியபடி மதிய உணவை அவர் முடிக்கிறார். சுவர்கள் தளர்வாக அடுக்கப்பட்ட செங்கற்களுடனும், மண் தரையில் பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்டும் உள்ளது. எங்களை பிளாஸ்டிக் விரிப்பில் அமருமாறு அவர் வற்புறுத்தினார். “நாங்கள் ஃப்ல்தானைச் சேர்ந்தவர்கள் [சத்தாரா மாவட்டத்தில் உள்ளது]. எங்கள் கழுதைகளுக்கு அங்கு எந்த வேலையும் கிடையாது. எனவே நாங்கள் 10-12 ஆண்டுகளாக சங்க்லியில் இந்த வேலையைச் செய்துவருகிறோம். ஜித்தே தியான்னா காம், தித்தே ஆம்ஹி [வேலை இருக்கும் இடத்திற்கெல்லாம் செல்வோம்],” என்கிறார் காண்டு குடும்பத்தினரைப் போன்று பருவத்திற்கு மட்டும் புலம்பெயராமல், சங்க்லியில் ஆண்டுமுழுவதும் வசிக்கும் ஏழு பேர் கொண்ட குடும்பத்தின் ஜானாபாய்.
ஜானாபாயும், அவரது குடும்பத்தினரும் அண்மையில் 2.5 குந்தா (0.6 ஏக்கர்) நிலத்தை சங்க்லியின் புறநகரில் வாங்கியுள்ளனர். “அடிக்கடி வரும் வெள்ளம் என் கால்நடைகளுக்கு ஆபத்தானது. எனவே நாங்கள் மலைச்சரிவில் நிலம் வாங்கினோம். அங்கு வீடு கட்டுவோம். தரை தளத்தில் கழுதைகளும், முதல் தளத்தில் நாங்களும் வசிப்போம்,” என்கிறார் அவர், தனது பேரனை மடியில் அமர்த்தியபடி. அவர் ஆடுகளும் வளர்க்கிறார். தீவனத்திற்காக காத்திருக்கும் போது அவை கத்தும் சத்தம் கேட்கிறது. “பெண் ஆடு ஒன்றை என் சகோதரி பரிசளித்தாள். இப்போது என்னிடம் 10 ஆடுகள் உள்ளன,” என்கிறார் மகிழ்ச்சியான குரலில் ஜானாபாய்.
“இப்போதெல்லாம் கழுதைகள் வளர்ப்பது மிகவும் கடினமாக உள்ளது,” என்கிறார் அவர். “எங்களிடம் 40 கழுதைகள் இருந்தன. குஜராத்திலிருந்து வந்த ஒன்று மாரடைப்பால் இறந்துவிட்டது. எங்களால் காப்பாற்ற முடியவில்லை.” இப்போது அவர்களிடம் 28 கழுதைகள் உள்ளன. இப்பிராணிகளைக் காண ஆறு மாதத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை சங்க்லியிலிருந்து கால்நடை மருத்துவர் வருகிறார். கடந்த மூன்று மாதங்களில் மட்டும், இக்குடும்பம் நான்கு கழுதைகளை இழந்துள்ளது. மேய்ச்சலின் போது நஞ்சை உண்டதில் மூன்று கழுதைகளும், விபத்தில் ஒரு கழுதையும் இறந்துள்ளன. “என் பெற்றோர் தலைமுறைக்கு மூலிகை மருந்துகள் பற்றித் தெரியும். எங்களுக்குத் தெரியாது,” என்கிறார் ஜானாபாய். “இப்போது நாங்கள் கடைக்குச் சென்று மருந்துகளை பாட்டில்களில் வாங்கி வருகிறோம்.”
*****
மகாராஷ்டிராவில் கைகாடி, பெல்டார், கும்பார், வடார் போன்ற பல்வேறு குழுக்களால் கழுதைகள் வளர்க்கப்பட்டு, மேய்க்கப்படுகின்றன. ஆங்கிலேயர்களால் ‘குற்றப்பரம்பரை‘ என அறிவிக்கப்பட்ட நாடோடி பழங்குடியினரில் காண்டு, மாதுரி, ஜானாபாயின் கைகாடி சமூகமும் ஒன்று. 1952 காலனிய குற்றப்பரம்பரை சட்டம் திரும்பப் பெறப்பட்டபோது, அவையும் ‘நீக்கப்பட்டது’. ஆனால் இன்றும் அவமதிப்புகளை அவர்கள் சந்திக்கின்றனர். சமூகத்தில் சந்தேகத்துடன் பார்க்கப்படுகின்றனர். கைகாடிக்கள் பாரம்பரியமாக கூடைகள், துடைப்பங்கள் செய்பவர்கள். மகாராஷ்டிராவின் பெரும்பாலான பகுதிகளில் விமுக்தா ஜாட்டி (பழங்குடியினரிலிருந்து நீக்கப்பட்டனர்) என பட்டியலிடப்பட்டுள்ளனர். ஆனால் விதர்பாவின் எட்டு மாவட்டங்களில் அவர்களை பட்டியலினத்தவராக பிரித்துள்ளனர்.
கழுதைகளை கால்நடைகளாக வளர்க்கும் கைகாடிக்கள் புனே மாவட்டம், ஜெஜூரி அல்லது அகமத்நகர் மாவட்டம், மாதியில் அவற்றை வாங்குகின்றனர். சிலர் குஜராத், ராஜஸ்தானில் நடைபெறும் கழுதைச் சந்தைகளுக்கும் செல்கின்றனர். “ஒரு ஜோடியின் விலை 60,000 முதல் 1,20,000 வரை இருக்கும்,” என்கிறார் ஜானாபாய். “பற்கள் இல்லாத கழுதைக்கு விலை அதிகம்,” எனும் அவர் பற்களைக் கொண்டுதான் விலங்கின் வயதை கணக்கிடுவர் என்றார். பிறந்த முதல் சில வாரங்களில் கழுதைக்கு முதல் தொகுப்பு பற்கள் வளர்ந்துவிடும். ஐந்து வயதாகும் போது அந்த பற்கள் விழுந்து நிரந்தர முதிய பற்கள் வளர்ந்துவிடும்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் கழுதைகளின் எண்ணிக்கை வேகமாக சரிந்து வருவது கவனிக்கத்தக்கது. 2012 முதல் 2019ஆம் ஆண்டுகளுக்குள் 61.2 சதவீதம் சரிந்துள்ளது. 2012 கால்நடை கணக்கெடுப்பில் 3.2 லட்சம் கழுதைகள் என பதிவாகியிருந்த எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டில் 1.2 லட்சமாக சரிந்துவிட்டது. அதிக கழுதைகள் எண்ணிக்கையில் இரண்டாம் இடம் வகிக்கும் மகாராஷ்டிராவில் 2019 கால்நடை கணக்கெடுப்பின்படி 17, 572 உள்ளன. இதே காலகட்டத்தில் இவற்றின் எண்ணிக்கை 40 சதவீதம் சரிந்துள்ளது.
இந்த திடீர் வீழ்ச்சி, ப்ரூக் இந்தியா எனும் இலாப நோக்கற்ற விலங்கு நல அமைப்பின் புலனாய்விற்கு வழிவகுத்தது. அது பத்திரிகையாளர் ஷரத் கே வர்மாவின் தலைமையில் புலனாய்வு மேற்கொள்ளத் தூண்டியது. அவரது அறிக்கை இந்த வீழ்ச்சிக்கான பின்வரும் பல காரணங்களை அடையாளம் காட்டுகிறது – விலங்குகளின் பயன்பாடு குறைக்கப்பட்டது; அவற்றை வளர்ப்பதில் இருந்து சமூகங்கள் விலகியது; ஆட்டோமேஷன்; மேய்ச்சல் நிலம் குறைந்தது; சட்டவிரோத படுகொலை; மற்றும் திருட்டு.
“தென் மாநிலங்களில் கழுதை இறைச்சிக்கு வரவேற்பு அதிகம் உள்ளது. குறிப்பாக ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் பகுதியில்,” என்கிறார் ப்ரூக் இந்தியாவின் சங்க்லி சார்ந்த திட்ட ஒருங்கிணைப்பாளரான டாக்டர் சுஜித் பவார். ஆந்திராவின் பல மாவட்டங்களில் சட்டவிரோதமாக கழுதைகளை இறைச்சிக்காக கொல்வது பரவலாக உள்ளது என்கிறது வர்மாவின் ஆய்வுக் குறிப்பு. இறைச்சி விலை மலிவானது என்பதுடன், ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கும், மருத்துவ குணம் நிறைந்தது என்றும் நம்பப்படுகிறது.
கழுதையின் தோல் அவ்வப்போது சீனாவிற்கு கடத்தப்படுகிறது, என்கிறார் பவார். ‘எஜியோ’ எனும் பாரம்பரிய சீன மருந்திற்கு இது மிகவும் அவசியமான உட்பொருள் என்பதால் அதிக வரவேற்பு உள்ளது. கழுதைகள் திருடப்படுவதற்கும், கொல்லப்படுவதற்கும் இடையேயான இணைப்பு உள்ளதை ப்ரூக் இந்தியாவின் அறிக்கை விளக்குகிறது. சீனாவில் அதிகரிக்கும் தேவையால் கழுதை வர்த்தகம் அதிகரிப்பதும் இந்தியாவில் அவற்றின் எண்ணிக்கை சரிவதற்கு காரணம் என அது முடிக்கிறது.
*****
45 வயது பாபாசாஹேப் பாபன் மானே ஆறு ஆண்டுகளுக்கு முன் தனது 10 கழுதைகளையும் திருட்டில் இழந்துவிட்டார். “அதிலிருந்து நான் கற்களை அடுக்குகிறேன், [முன்பை விட] குறைவாக சம்பாதிக்கிறேன்.” கழுதை மேய்ப்பர்களுக்கு 1000 செங்கற்களுக்கு ரூ.200 கொடுக்கப்படும் நிலையில் கற்கள் அடுக்குபவருக்கு ரூ.180 மட்டுமே தரப்படுகிறது. (கழுதைகளுக்கு உணவளிப்பதற்காக கூடுதலாக 20 ரூபாய் கொடுக்கப்படுவதாக மாதுரி எங்களிடம் கூறியிருந்தார்). மிராஜ் நகரின் லக்ஷ்மி மந்திர் அருகே உள்ள சங்க்லிவாடியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூளையில் பாபாசாஹேபை நாங்கள் சந்தித்தோம். “ஒரு வியாபாரி ஹைசல் ஃபடாவில் ஒருமுறை 20 கழுதைகளை இழந்துவிட்டார்,” எனும் அவர், இச்சூளையிலிருந்து 10 கிலோமீட்டருக்குள் மற்றொரு திருட்டு நடந்ததை நினைவுகூர்கிறார். “அவர்கள் விலங்குகள் மயக்க மருந்து கொடுத்து தங்கள் வாகனங்களில் கடத்தியிருப்பார்கள் என நினைக்கிறேன்.” இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேய்ச்சலுக்குச் சென்றிருந்த ஜானாபாயின் ஏழு கழுதைகள் திருடுபோயின.
மகாராஷ்டிராவின் சங்க்லி, சோலாப்பூர், பீட் போன்ற மாவட்டங்களில் கழுதைகள் திருட்டு என்பது அதிகரித்து வருவதால் கால்நடைகளின் எண்ணிக்கையைச் சார்ந்திருக்கும் பாபாசாஹேப், ஜானாபாய் போன்ற மேய்ப்பர்களுக்கு பொருளாதார நெருக்கடியை விளைவிக்கிறது. “எனது மந்தையில் ஐந்து கழுதைகள் திருடப்பட்டன,” என்கிறார் மிராஜில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்யும் ஜாகு மானே. இதனால் அவருக்கு ரூ.2 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. “இந்த இழப்பை நான் எப்படி ஈடு செய்வேன்?”
உரிமையாளர்களும் கழுதையை நாள் முழுவதும் கவனிக்காமல் திறந்த வெளியில் விட்டுவிடுகின்றனர் என்கிறார் பவார். “அவற்றிற்கு பாதுகாப்பு கிடையாது. வேலை வரும்போதுதான் அவர்கள் அவற்றை திரும்பி கொண்டு வருவார்கள். சில சமயம் ஏதும் தவறாக நிகழ்ந்துவிட்டால் [அந்த விலங்கை] யாரும் வந்து பார்ப்பதில்லை.”
பாபாசாஹேபிடம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, பாபு வித்தல் ஜாதவ் தனது நான்கு கழுதைகளை கற்களை இறக்குவதற்காக கொண்டு வருவதை பார்த்தோம். கைகாடி சமூகத்தைச் சேர்ந்த 60 வயதாகும் பாபு கடந்த 25 ஆண்டுகளாக செங்கல் சூளையில் வேலைசெய்து வருகிறார். சோலாப்பூர் மாவட்டம், மொஹூல் வட்டாரம் பட்குலைச் சேர்ந்த அவர் ஆண்டிற்கு ஆறு மாதங்கள் மிராஜிற்கு புலம்பெயர்கிறார். அவர் சோர்வுடன் அமர்ந்தார். அது காலை 9 மணி. பாபாசாஹேப் மற்றும் இரண்டு பெண் தொழிலாளர்களிடம் கேலி பேசிய பாபு, தனது மனைவியிடம் அன்றைய நாளின் வேலையை ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுக்கிறார். அவர்களிடம் ஆறு கழுதைகளும் மெலிந்து காணப்பட்டதோடு, அதிக வேலை செய்தன. இரண்டின் கால்களில் காயங்கள் இருந்தன. இன்னும் இரண்டு மணி நேரத்தில் அவர்களின் பணி நேரம் முடிந்துவிடும்.
மாதத்திற்கு ஒருமுறை அமாவாசையன்று பகல் ஓய்வு அளிக்கப்படும். ஒவ்வொருவரும் வறண்டு, சோர்வடைந்து காணப்படுகின்றனர். “நாங்கள் இடைவேளை எடுத்தால் கற்களை யார் சுடுவது?” என கேட்கும் மாதுரி ஜோதிபா, மந்திருக்குத் திரும்பினார். “உலர்த்திய கற்களை நாங்கள் சுமக்காவிட்டால், புதிய கற்களை அறுக்க இடம் இருக்காது. எனவே எங்களால் ஓய்வெடுக்க முடியாது. ஆறு மாதங்களாக அமாவாசைதான் எங்களின் ஒரே பகல்நேர ஓய்வு தினம்,” என்றார். அமாவாசை விசேஷமற்ற நாளாக கருதப்படுவதால் சூளைகள் அன்று மூடப்பட்டு இருக்கும். இவை தவிர சிவராத்திரி, ஷிம்கா (ஹோலி என்று எங்கும் கொண்டாடப்படுகிறது) மற்றும் குதி பதவா (பாரம்பரிய புத்தாண்டு) ஆகிய மூன்று இந்து பண்டிகைகளின் போது தொழிலாளர்களுக்கும், கழுதைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
மதிய நேரத்தில் சூளைக்கு அருகே உள்ள தற்காலிக குடிசைகளுக்கு பெரும்பாலான தொழிலாளர்கள் திரும்புகின்றனர். அருகில் உள்ள குழாயில் துணிகளை துவைக்க ஷ்ரவாணியும், ஷ்ரத்தாவும் சென்றுள்ளனர். காண்டு மானே மேய்ச்சலுக்கு கழுதைகளை அழைத்துச் செல்கிறார். குடும்பத்திற்காக மாதுரி சமைக்கிறார். கொளுத்தும் வெயிலில் சிறிது உறங்குவதற்கு முயலுகிறார். சூளை இன்று நாள் முழுவதும் மூடப்படும். “பணம் [வருமானம்] நன்றாக உள்ளது. போதிய அளவு உண்கிறோம்,” என்கிறார் மாதுரி. “ஆனால் தூக்கமில்லை, உங்களுக்கு தெரியுமா.”
ரித்தயான் முகர்ஜி நாடோடி மையத்திடம் சுதந்திர பயண உதவித்தொகை மூலம் ஆயர் மற்றும் நாடோடி சமூகங்கள் குறித்த செய்திகளை சேகரித்து வருகிறார். இக்கட்டுரையின் தகவல்களில் நாடோடி மையத்தின் சார்பில் எவ்வித கட்டுப்பாடும் செலுத்தவில்லை.
தமிழில்: சவிதா