அது ஒரு ஜன்மாஷ்டமி நாள். ஆர்யவர்தா மக்கள் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுவதை கிருஷ்ணர் அறிந்தார். குழந்தைகள் மஞ்சள் நிற உடையணிந்து தெருக்களில் வண்ணமயமாக உலா வந்தனர், வாசல்களில் கோலமிட்டனர், கோயில்களில் கிருஷ்ண லீலைகள் நடைபெற்றன. தயிர் பானைகளை உடைப்பது, குதூகல நடனங்கள் என கொண்டாட்டங்கள் நள்ளிரவு வரை தொடர்ந்தன. இந்நாளில் அனைத்திலும் அவர் பங்கெடுக்க விரும்பினார்.
அவர் மாறுவேடத்தில் பூமிக்கு வந்து பழகிய இடங்களில் நடந்தபடி திருவிழா காட்சிகளையும், சத்தங்களையும் கண்டுகளித்தார். கோரக் நகரை அவர் அடைந்தபோது துயரத்தில் யாரோ முனகுவதைக் கேட்டார். சத்தம் கேட்டு அருகில் சென்றபோது மருத்துவமனை வாசல் சுவர் அருகே கையில் குழந்தையின் இறந்த சடலத்துடன் சோர்வாக ஒரு மனிதர் செல்வதை அவர் கண்டார். கிருஷ்ணரின் மனம் உடைந்தது. “ஓ அன்பே! நீ ஏன் இத்தகைய துயரத்தில் உள்ளாய்?” என கேட்டார், “உன் கைகளில் உள்ள இக்குழந்தை யார்?” முறைத்து பார்த்தபடி அம்மனிதர் பதிலளித்தார், “என் இறைவா! நீங்கள் தாமதமாக வந்துவிட்டீர்கள், என் மகன் இறந்துவிட்டான்.”
குற்றவுணர்வு அடைந்த கிருஷ்ணர் துயரத்தில் தவித்த தந்தையுடன் இடுகாடு வரை சென்றார். அவருக்காக அச்சுறுத்தும் காட்சிகள் அங்கே காத்திருந்தன – இடுகாட்டில் வெள்ளைத் துணி போர்த்தப்பட்டு வரிசையாக வைக்கப்பட்ட நூறு, ஆயிரக்கணக்கான குழந்தைகளின் இறந்த உடல்களை அவர் கண்டார். ஆறுதல் கூற முடியாத நிலையில் தாய்மார்களும், துயரத்தை காணாமல் நெஞ்சில் அடித்து கொண்ட தந்தைகளும் நின்று கொண்டிருந்தனர். இதை அவர் எதிர்பார்க்கவே இல்லை.
மஞ்சள் வண்ண அலங்கார உடைகள் எங்கே போயின? இது என்ன துயரத் திருவிழா? இதுபோன்ற இரக்கமற்ற விதியை குழந்தைகளுக்கு எந்த கம்சன் தந்தது? இவை யாருடைய சாபம்? யாருடைய ராஜ்ஜியம்? மக்களை அநாதையாக விட்டது யார்?
இந்நகர குழந்தைகள் என்ன அநாதைகளா?
1. நாள்காட்டியை பாருங்கள்,
ஆகஸ்ட் வரலாம், போகலாம்...
சிலருக்கு அவை கண்களில் கண்ணீரைப் போன்று ஓடுகிறது
சிலருக்கு நடுக்கும் கைகளில் உடைந்து விழுகிறது
மூச்சு திணறல் ஏற்பட்டு,
மூச்சை நிறுத்தி கொள்கிறது.
சிலருக்கு இது ஒரு கெட்ட கனவு,
சிலருக்கு இது ஒரு தூக்கு கயிறு,
கோரக்பூரின் அன்னைகளுக்கு
அது கருப்பையில் அச்சம் தருவது
அவர்களுக்கு ஆகஸ்ட் என்பது ஒரு நீண்ட வருடம்
உடனே முடியப் போவதில்லை.
2. அன்னைகளின் அச்சம் தவறானது, என்கின்றனர் அவர்கள்.
தந்தைகள் பொய்யர்கள், என்கின்றனர் அவர்கள்.
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லை என்கின்றனர்
இது முகலாயர்களின் சூழ்ச்சியாக இருந்திருக்கும்.
உண்மையில் ஆக்சிஜன் அதிகளவில் உள்ளது
ஒவ்வொரு தெரு முனையிலும், ஒவ்வொரு சந்திலும்
கோமாதா சுவாசித்து ஆக்சிஜனை வெளியேற்றுகிறார்.
உண்மையில் அது அதிகமாகித்தான் கொன்றுள்ளது.
அதிகம் என்பதே மூச்சு முட்டுகிறது.
3. இவை யாருடைய குழந்தைகள், யார் கைவிட்டது?
திறந்தவெளி சாக்கடைகளில்
கொசுக்களால் கடிக்கப்பட்ட குழந்தைகள் இவர்கள்?
யாருடைய குழந்தைகள் இவர்கள்
கைகளில் புல்லாங்குழல் இல்லையே?
யாருடைய குழந்தைகள் இவர்கள்?
எந்த உலகிலிருந்து இவர்கள் வந்துள்ளனர்?
மற்ற உலகத்தினரால்
இவர்களின் துயரங்கள் ஏன் பேசப்படவில்லை?
யாருடைய வீட்டிலும் கிருஷ்ணர் அவதரிக்க மாட்டார்
இந்த நள்ளிரவில்
ஆனால் அவர் உலகத்தில் தடுமாறி விழுகிறார்.
அவர்கள் ஆக்சிஜன் கேட்கின்றனர்
மருத்துவமனையில் படுக்கையும் தான்?
என்ன விநோதம்!
4. கோரக் நிலமே சிதறப் போகிறது.
கபீர் துயரத்தில் இருக்கிறார்.
ரப்தியின் கரைகள் தீயால் சூழ்ந்துள்ளன.
பொய்கள் நிறைந்த நகரம்
அமைதியில் ஆழ்கிறது
மாநிலத்தின் மஹந்த் நம்புகிறார்
சிலைகளை பிரதிஷ்டை செய்ய கேட்கிறார்
இதற்கு குழந்தைகளின் இரத்தத்தை
தியாகம் செய்யச் சொல்கிறார்
சொற்களஞ்சியம்
ஆர்யவர்தன்: ஒட்டுமொத்த துணை கண்டத்திலும் வரலாறுகளில் வெவ்வேறு புள்ளிகளில் இந்தியாவில் வெவ்வேறு வகைகளில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. இது வேத கலாச்சாரத்தின் நிலத்தையும், இராமாயணம், மகாபாரதம், புத்தர், மகாவீரரையும் குறிக்கிறது.
கோலங்கள்: நன்கு அறைத்து குழைத்த அரிசி மாவில் நேராக அல்லது வளைந்த கோடுகளை கொண்டு வடிவங்கள் செய்வதற்கான தமிழ்ச்சொல்
தயிர் பானைகள்: கிருஷ்ணருக்கு பிடித்த தயிர் நிறைந்த மண் பானைகள். கிருஷ்ணரின் அவதார நாளில் இப்பானைகள் உயரத்தில் தொங்கவிடப்பட்டு இளம் சிறுவர்களும், சிறுமிகளும் மனித பிரமிட் அமைத்து அதை உடைத்து கொண்டாடும் ஒரு முறை.
கம்சன்: பகவான் கிருஷ்ணனின் மாமன். மதுராவின் ஆட்சியாளராக இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள சகோதரியின் குழந்தைகள் உள்ளிட்ட பல சிசுக்களை கொன்றவர்
கோரக்: 13ஆம் நூற்றாண்டின் தலைவர், 'நாதாஸ்' என்று அழைக்கப்படும் ஒரு துறவி பிரிவின் நிறுவனர். அவருக்காக பாடப்பட்ட கவிதைகள் ‘கோரக் பாணி’ என்று அறியப்படுகிறது
ரப்தி: கோரக்பூர் அமைந்துள்ள உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதி ஆற்றங்கரை
கபீர்:
15ஆம் நூற்றாண்டின்
ஆன்மிக துறவி – கவிஞர்
இக்குழுவின் முயற்சிக்கு பெருமளவு பங்களிப்பு ஆற்றிய ஸ்மிதா கதோருக்கு எங்களது நன்றி.
தமிழில்: சவிதா