”கொஞ்சம் காய்கறிகளை விற்றுக்கொண்டு இருக்கிறேன்; ஆனால் அதில் இலாபமே இல்லை. வீட்டில் எல்லாரும் பெரும்பாலும் சும்மாதான் உட்கார்ந்துகொண்டு இருக்கிறோம். உள்ளூரில் சிமெண்ட் ஆலைகள் இயங்குகின்றன; ஆனால் அங்கு நாங்கள் போவதில்லை” என்கிறார், மோரியிலிருந்து என்னிடம் தொலைபேசியில் பேசிய கரிம் ஜாட். கச் மாவட்டத்தின் லாக்பத் வட்டத்தைச் சேர்ந்தது, அவரின் இந்த ஊர். பக்கிரானி ஜாட் சமூகத்தைச் சேர்ந்த கரிம் ஜாட், ஒரு மால்தாரி. கச்சி மொழியில் மால் என்றால் விலங்குகளைக் குறிக்கும்; தாரி என்றால் காப்பாளர், வைத்திருப்பவர் என்று பொருள். கச் பகுதி முழுவதும் மால்தாரிகள் பசுமாடு, எருமை, ஒட்டகம், குதிரைகள், வெள்ளாடு, செம்மறியாடுகளை மேய்த்துவருகிறார்கள்.
காய்கறிகளை அருகிலுள்ள ஊர்களிலும் சந்தைகளிலும் மொத்தமாக வாங்குவதாக கரிம் சொல்கிறார். ஆனால், விற்பனை செய்யும் போது அவற்றுக்கு உகந்த விலை கிடைப்பதில்லை என அதிருப்தி தெரிவிக்கிறார். சிமெண்ட் ஆலையானது இங்கிருந்து சில கி.மீ. தொலைவிலேதான் நகரியப் பகுதியில் இருக்கிறது. ஆனால் கரிமும் அவருடைய பக்கிரானி ஜாட்டுகளும் வெளியில் செல்லமுடியாதபடி பொதுமுடக்கம் கட்டிப்போட்டுவிட்டது. ஏற்கெனவே அந்த ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் இருக்கின்றனர்; அவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்குவங்கமோ மற்ற மாநிலங்களையோ சேர்ந்தவர்கள். அவர்களில் கணிசமானவர்களும் சொந்த ஊருக்குத் திரும்பமுடியாமல் இங்கேயே இருக்கிறார்கள். குடியேறியவர்களுக்கும் உள்ளூர் ஆள்களுக்கும் இடையே எப்போதும் இணைக்கமான உறவு இருப்பதில்லை.
முடக்கத்தின்போது பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் சவ்லா பிர் திருத்தலத்தைப் பார்க்கமுடியாமல் போய்விட்டது; அங்கு ஒரு பொருள்காட்சியும் நடந்தது என சொல்கிறார், கரிம். ” புனித மாதமான இரமலான் முன்னமே தொடங்கிவிட்டது. ஈகைத் திருநாளுக்கு இன்னும் ஒரு மாதம்கூட இல்லை. இந்த ஈகைத் திருநாள் மாறுபட்டதாக இருக்கப்போகிறது.” என்று கவலையுடன் கூறுகிறார்.
கச்சில் முதல் கோரொனா தொற்று லக்பத் தாலுகாவைச் சேர்ந்த வெளிநாட்டிலிருந்து வந்திருந்த ஒரு பெண்ணுக்கு வந்தது. மார்ச்சில் புஜ்ஜுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு அங்கு தொற்று உறுதியானது. லக்பத் ஒட்டக மேய்ப்பர்கள் பெரும்பாலானவர்களுக்கு சொந்த நகரம்.
மார்ச் 24 அன்று பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டவுடனேயே கச் பகுதியில் அனைத்து செயல்பாடுகளும் அப்படியே நின்றுபோய்விட்டன. அதிலிருந்து ஒட்டகம் மேய்ப்பவர்கள் சிரமத்தை அனுபவித்துவருகிறார்கள். காரணம், ஒட்டகங்களின் மேய்ச்சலுக்காக சொந்த ஊர்களிலிருந்து அவர்கள் வெகுதொலைவுக்கு வந்திருக்கிறார்கள். அத்துடன், அவர்கள் இப்போது இருக்கும் பகுதிகள், பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகில் அல்லது எல்லையில் உள்ளன. அதிஉயர் பாதுகாப்பு நடைமுறைகளைக் கொண்டிருக்கும் அதிதீவிர பதற்றப் பகுதிகளாகும். திடீர்ப் பொதுமுடக்கத்தால் இந்த மால்தாரிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச்செல்லவும் முடியவில்லை; குடும்பத்துடன் இப்போது இருக்கும் இடங்களில் உணவுக்கு போதுமான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளவும் அவர்களால் இயலாமல்போனது.
இப்போதைக்கு அவர்களின் கால்நடைகளுக்கு ஒரு குறையும் இல்லை. அவற்றுக்கு மேய்வதற்கு புல்வெளி இருக்கிறது. இந்த முடக்கமானது மேலும் நீட்டிக்கப்பட்டால் மொத்த மந்தைக்கும் தீவனம்தருவது சிக்கலாகக் கூடும். அத்தோடு, இந்த ஆண்டு கோடைகாலம் முன்னமே வந்துவிட்டதைப் போல வெயில் வாட்டுகிறது.
நக்கத்ரானா வட்டாரத்தில், புல்வெளிகளில் அமைந்திருந்த சில மந்தைகளுக்கு வந்த போலீசு, அங்கிருந்து மேற்கொண்டு நகரக்கூடாது என அறிவுறுத்திவிட்டுப் போயிருக்கிறது. ஆக, இந்த நாடோடி இடையர்கள், உணவுக்காகவோ வேறு வேலைக்கோ எங்காவது போகவேண்டும் என்றால், அவரவர் ஊர்களுக்குத்தான் போயாகவேண்டும். ஆனால் அதுவும் ரொம்ப கஷ்டம்.
இலாக்பட் வட்டத்தைச் சேர்ந்த இன்னொரு மால்தாரியான குல்மாமட்டைப் போன்ற பலருக்கும், பொதுவிநியோகக் கடைகளில் உணவு தானியமோ மற்ற அத்தியாவசியப் பொருளோ கிடைப்பது பெரும் இடராக இருக்கிறது.” அடையாளச் சான்றுக்காக ரேசன் அட்டையை எப்போதும் கூடவே வைத்திருக்கிறோம். ஆனால், அதனால் எங்களுக்கான ரேசன் பொருள்களை வாங்க முடிவதில்லை. இங்குள்ள பெரும்பாலான குடும்பங்களின் நிலை இதுதான்.” என்கிறார் அவர்.
அது நடக்கும் என்கிறார், பூஜ்ஜில் உள்ள கால்நடைப் பராமரிப்பியல் மையத்தின் கலப்பினத் திட்டத்தின் பொறுப்பாளர் இரமேசு பட்டி. பெரும்பாலான ஒட்டக மேய்ப்பர்கள் ஊரிலிருந்து 10 - 20 கி.மீ. தொலைவில் காட்டுப்பகுதியிலோ சாதாரண நிலங்களிலோ அவற்றை மேயவிட்டுக்கொண்டு இருப்பார்கள். ” அவர்கள் ஊர்களில் உள்ளவர்களுடனோ அரசாங்கத்துடனோ தொடர்பில் இருப்பதில்லை. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஊரைவிட்டு வெளியில் போகையில் தங்கள் ரேசன் அட்டைகளை வீட்டிலேயே வைத்துவிட்டுச் செல்வது வாடிக்கை. இப்போது ஒட்டகப் பாலையோ அல்லது இந்த மேய்ப்பர்கள் தயாரிக்கும் வேறு பொருள்களையோ வாங்க ஆள்கள் இல்லை; வருமானம் நின்றுபோனதால் இவர்களால் அத்தியாவசியப் பொருள்களைக்கூட வாங்கமுடியவில்லை. இன்னொரு புதிய பிரச்னை, திரும்பிப் போனால் சில ஊர்களில் ஊருக்குள் விடமாட்டார்கள் என்கிற பயமும் இவர்களிடம் இருக்கிறது.” என்கிறார் இரமேசு பட்டி.
ஒட்டகம் மேய்க்கப் போகையில் ஆண்களுக்கு பாலும் ரொட்டியும் சாப்பிட வாய்ப்பு உள்ள நிலையில், வீட்டில் உள்ள பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் உணவு வேண்டியுள்ளது. “ கடவுள் கருணையால் சில நாள்களாக சிறிதளவு போக்குவரத்து மீண்டும் தொடங்கியிருக்கிறது. ஆனால், அவர்கள் ஏற்கெனவே கடும் இழப்பால் அவதிப்பட்டு வருகின்றனர்.” என்கிறார், இரமேசு.
இப்படியான ஒரு சூழலில், பசி என்பது மிகவும் யதார்த்தமான பிரச்னை. அரசாங்கம் தருவது என்பது சுத்தமாகப் போதாது. “ எட்டு பேர் உள்ள குடும்பத்துக்கு 10 கிகி கோதுமை கொடுத்தால், அது எத்தனை நாள்களுக்கு தாங்கும்?” எனக் கேட்கிறார் அவர்.
கால்நடைப் பராமரிப்பியல் மையத்தை நடத்திவரும் புஜ்ஜைத் தளமாகக் கொண்ட சஜீவன் அமைப்பு, அங்கு 70 பேருக்கான உணவுப்பொருள் தொகுப்புகளை ஏற்பாடு செய்தது. பாதிக்கப்பட்டோரில் குறிப்பிட்ட அளவினருக்கு கடந்த இரண்டு வாரங்களில் இவ்வளவுதான் அவர்களால் செய்யமுடிந்தது. அந்தத் தொகுப்பில் கோடுமை, பருத்தி எண்ணெய், கடலைப்பருப்பு, சர்க்கரை, வெங்காயம், உருளைக்கிழங்கு, அரிசி, உப்பு, மசாலா பொருள்கள், மல்லித் தூள், மஞ்சள், கடுகு ஆகியவை, சில வாரங்களுக்கு தாக்குப்பிடிக்கும் அளவுக்கு இருந்தன. ” அவர்களின் உதவியால் எங்களுக்கு வீட்டுக்கே உணவுப்பொருள்கள் வந்துசேர்ந்தன. அதனால்தான் இப்போது வாழ்க்கையை ஓட்டிவருகிறோம். ஆனால் இந்த முடக்கம் மேலும் நீட்டிக்கப்பட்டால் இன்னும் அதிக சிரமங்களை நாங்கள் எதிர்கொள்ளவேண்டி இருக்கும்.” என்கிறார் கரிம் ஜாட்.
சில வேளாண் பணிகளை மீண்டும் தொடங்கும்வகையில் முடக்கத்தில் தளர்வுகள் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது பற்றிப் பேசுகையில், “அப்படித்தான் நடக்குமென நம்புகிறேன். அப்படி இல்லாவிட்டால் இந்த உலகம் எதைச் சாப்பிடமுடியும்? ஒவ்வொருவரும் அதற்காக ஆவலுடன் இருக்கிறோம்” என்கிறார் அவர்.
உணவுப்பொருள்கள் கிடைத்ததும், சிலருக்கு மட்டும் வேறு தட்டுப்பாடுகள் குறித்து அக்கறைப்பட்டனர். அவர்களில் நானும் என் நண்பர்களும் செல்லமாக அயூப் காக்கா(மாமா) என அழைக்கும் ஜாட் அயூப் அமீனும் ஒருவர். பக்கிரானி ஜாட் சமூகத்தில் உள்ள பிதாமகன்களில் ஒருவர். ” ஆமாம், ரேசன் பொருள்களைக் கொண்டுதான் இப்போதைக்கு வாழ்க்கையை ஓட்டுகிறேன். நல்லவர்களாகிய உங்கள் நண்பர்களுக்கு ரொம்ப நன்றி. இந்த முடக்கத்தால் மிகவும் வருத்தப்படக்கூடிய சங்கதி உங்களுக்குத் தெரியுமா?” என்று கூறியவர், எனக்கு சுத்தமாக பீடியே கிடைக்கவில்லை” என்றாரே பார்க்கலாம்.
தமிழில்: இர. இரா. தமிழ்க்கனல்