பதர் கான் எனும் பாடலை உருவாக்குவதே படச்சித்திரத்தின் முதல் படி. “ஓவியம் தீட்டுவதற்கு முன், பாடல் பத்தியை நாம் தயார் செய்ய வேண்டும்... அதன் தாளம் ஓவியத்திற்கான வடிவத்தை அளிக்கும்” என்கிறார் மமோனி சித்ரகார். எட்டாவது தலைமுறை ஓவியரான அவர் தனது வீட்டில் அமர்ந்தபடி மேற்கு வங்கத்தின் கிழக்கு கொல்கத்தா சதுப்பு நிலங்களை படச்சித்திரமாக உருவாக்குகிறார்.
துணி என்ற அர்த்தம் கொண்ட ‘படா’ எனும் சமஸ்கிருத சொல் மற்றும் சித்திரம் என்ற அர்த்தம் கொண்ட ‘சித்ரா’ என்ற சொல் ஆகியவற்றிலிருந்து இக்கலைக்கு இப்பெயர் கிடைத்தது. சதுப்பு நிலங்களால் செழுமையுற்ற சிக்கலான சுற்றுச்சூழல் அமைப்பை மமோனி வர்ணிக்கும்போது, படச்சித்ராவின் நடிப்புடன் வரும் படர் கானை பாடுகிறார். அவரே எழுதி இசையமைத்த இந்தப் பாடல், “கேளுங்கள், எல்லோரும் கேளுங்கள், கவனமாக கேளுங்கள்”என்ற அழைப்போடு தொடங்குகிறது.
“பல உயிர்களுக்கு உயிர்நாடியாக” இருக்கும் கிழக்கு கொல்கத்தா சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தை இப்பாடல் விளக்குகிறது. படாவில் மீனவப் படங்கள், விவசாயிப் படங்கள், அகண்ட விளைநிலங்கள் சித்திரமாக தீட்டப்பட்டுள்ளன. அது காகித சுருள்களாக துணிகளில் ஒட்டப்பட்டுள்ளன. நிகழ்ச்சியின்போது இறுதி படா சுருள் விரியும்போது அந்த ஓவியத் தொகுப்பும், பாடல் பத்தியும் இசைந்து போகிறது. இவ்வகையில் மமோனி ஓவியம், இசை மூலம் சதுப்புநிலங்களின் கதையை சொல்கிறார்.
பஷ்சிம் மேதினிபூரில் பிங்கலா தாலுக்காவில் உள்ள நயா, மமோனியின் பூர்வீக கிராமம். இங்கு 400 கைவினை கலைஞர்கள் வரை வசிப்பதாக அவர் மதிப்பீடு செய்கிறார். இத்தாலுக்காவில் வேறு எந்த கிராமத்திலும் இத்தனை கலைஞர்கள் படசித்திரத்தை பயிற்சி செய்யவில்லை. “கிராமத்தில் இருக்கும் கிட்டதட்ட 85 வீடுகளிலும் சுவர்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன,” என்கிறார் அப்பகுதியில் வசிக்கும் 32 வயது ஓவியரான அவர். அப்பகுதியின் வன விலங்குகள், பூக்கள், செடிகள் ஒளிரும் வண்ணங்களில் ஓவியங்களாக சுவர்களில் தீட்டப்பட்டுள்ளதை குறிப்பிடுகிறார் அவர். “எங்கள் கிராமமே அழகாக காட்சியளிக்கிறது,” என்றார்.
மாநிலத்தின் சுற்றுலா தலங்களில் இக்கிராமம் இடம்பெற்றுள்ளது. வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் மக்கள் இங்கு வருகின்றனர். “எங்களிடம் பேச வரும், கலையை கற்க வரும், எங்கள் வாழ்க்கை, திறன்கள் குறித்து பேச வரும் மாணவர்களை எப்போதும் நாங்கள் வரவேற்கிறோம்,” என்கிறார் மமோனி, மேலும், “நாங்கள் அவர்களுக்கு படர் கான், இயற்கை வளங்களில் கிடைக்கும் வண்ணங்களை கொண்டு படச்சித்திர பாணியிலான ஓவியம் வரைதல் குறித்த பயிற்சி வகுப்புகளும் நடத்துகிறோம்.”
“படச்சித்திர கலை குஹ சித்திர கலையிலிருந்து அல்லது பழங்கால குகை ஓவியங்களில் இருந்து தோன்றியது எனலாம்,” என்கிறார் மமோனி. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இவ்வகை ஓவிய கலைப் பணிக்கு முன்னும், பின்னும் பல மணி நேர கடின உழைப்பு தேவைப்படுகிறது.
பதர் கானை நன்றாக இசைத்து தயாரித்த பிறகு, ஓவியத்திற்கான பணி தொடங்குகிறது, என விளக்குகிறார் மமோனி. “இயற்கை வண்ணங்களை கொண்டு வரைவதே எங்கள் மரபு.” பச்சை மஞ்சள், களிமண் சாம்பல், சாமந்திப்பூ போன்றவற்றிலிருந்து வண்ணங்கள் எடுக்கப்படுகின்றன. “செழுமையான கரு நிறத்திற்கு நான் அரிசியை வறுக்கிறேன், நீல நிறத்திற்கு சங்குப் பூவை ஊறவைத்து பிழிகிறேன், இன்னும் பல”
தேங்காய் கொட்டாங்குச்சியில் வண்ணங்களை சேகரித்து வெயிலில் காய வைக்கின்றனர். உட்பொருட்கள் அனைத்தும் எல்லா பருவத்திலும் கிடைப்பதில்லை என்பதால் ஆண்டு முழுவதும் கூட இந்த செயல்முறை தொடர்கிறது. மமோனி சொல்கிறார், இச்செயல்முறை மிகவும் நுட்பமானது,“ஒவ்வொரு படியும் முக்கியமானது, கவனமாக கையாளப்பட வேண்டும்,” என.
ஓவியம் வரைவதற்கு முன் விளாம் பழத்திலிருந்து கிடைக்கும் இயற்கை கோந்தில் இந்த வண்ணங்கள் சேர்க்கப்படுகின்றன. புதிதாக வரையப்பட்ட ஓவிய சுருள்கள் நீண்ட காலத்திற்கு வருவதற்காக துணிகளில் ஒட்டப்படுவதற்கு முன்பாக காய வைக்கப்படுகின்றன. இறுதியான வடிவமே படச்சித்திரம்.
கிராமத்தில் இருக்கும் பிறரைப் போன்று மமோனியும் இளவயதிலேயே இக்கலையை கற்க தொடங்கினார். “ஏழு வயதிலிருந்து நான் ஓவியம் தீட்டியும், பாடியும் வருகிறேன். படச்சித்திரம் என் முன்னோர்களின் மரபு. என் அம்மா ஸ்வர்ணா சித்ரகாரிடம் நான் இதை கற்றேன்.” மமோனியின் தந்தையான 58 வயது சம்பு சித்ரகாரும் படுவா வேலை செய்கிறார். கணவர் சமிர், சகோதரி சோனாலி, மமோனியின் குழந்தைகளான 8ஆம் வகுப்பு படிக்கும் மகன், 6ஆம் வகுப்பு படிக்கும் மகள் என குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள் இக்கலையை அவரிடம் கற்று வருகின்றனர்.
நாட்டுப்புற கதைகள், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச காட்சிகளை விளக்கும் ஓவியங்களே படச்சித்திரத்தின் மரபாக இருந்து வந்தது. பழைய படுவாக்கள் எனப்படும் படச்சித்திர பாணி ஓவியர்களில் மமோனியின் தாத்தா, பாட்டி மற்றும் முன்னோர்களும் இடம்பெறுகின்றனர். அவர்கள் கிராமங்கள்தோறும் சென்று படச்சித்திரங்கள் வழியாக கதை கூறியுள்ளனர். இதற்கு பதிலாக அவர்கள் பணம் அல்லது உணவு பெற்று வாழ்ந்தனர்.
“அவர்கள் [ படச்சித்திரகாரர்கள் ] விற்பனைக்காக எதுவும் செய்தது கிடையாது,” என விளக்குகிறார் மமோனி. படச்சித்திரம் ஒருபோதும் ஓவியக்கலை பாணியாக மட்டும் இருந்தது கிடையாது. அது ஒலி, ஒளி ஊடகங்கள் வழியாக கதைகளை சொல்வது.
காலப்போக்கில் மமோனி போன்ற படுவாக்கள் தற்கால கருத்துகளுக்கு ஏற்ப படச்சித்திர பாணியை மாற்றி அமைக்க தொடங்கினர். “நான் புதிய தலைப்புகளில், கருத்துகளில் வேலை செய்ய விரும்புகிறேன்,” என்கிறார் அவர். “சுனாமி போன்ற இயற்கை பேரிடர் சார்ந்த ஓவியங்களும் என்னிடம் உள்ளன. பாலியல் வன்முறை, கடத்தல் போன்ற சமூக அவலங்களை வெளிப்படுத்தும் ஓவியங்களும் இருக்கின்றன.”
கோவிட்-19ன் தாக்கம், அவற்றின் அறிகுறிகள், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன அவரது அண்மைப் பணிகள். சில கலைஞர்களுடன் சேர்ந்து மமோனி இப்படச்சித்திரத்தை மருத்துவமனைகள், வாரச் சந்தைகள், நயாவை சுற்றிய கிராமங்களில் நிக்ழ்ச்சியாக நடத்தி வருகிறார்.
நயாவில் ஆண்டுதோறும் நவம்பரில் படா-மயா திருவிழா ஒருங்கிணைக்கப்படுகிறது. “இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஓவியங்களை வாங்க வரும் சுற்றுலாப் பயணிகள், கலை ஆர்வலர்களுக்கு இது ஒரு முக்கியமான நிகழ்வு,” என்கிறார் மமோனி. படச்சித்திர பாணியில் டி ஷர்ட்கள், மரப் பொருட்கள், பாத்திரங்கள், புடவைகள், பிற ஆடை வகைகள், வீட்டு உபயோகப் பொருட்களிலும் தீட்டி நயாவின் சுற்று வட்டாரத்தில் விற்றனர். இதனால் இக்கைவினை மீதான ஆர்வம் அதிகரித்து விற்பனையும் அதிகரித்து வந்தது. கோவிட்-19 பெருந்தொற்றின் போது அது பாதிக்கப்பட்டது. மமோனி தனது கலைப்படைப்புகளை பெரும்பாலும் முகநூல் போன்ற சமூக ஊடகத்தில் பகிர்வதால், ஆண்டு முழுவதும் விற்பனைக்கு உதவுகிறது.
இக்கைவினையை கொண்டு மமோனி இத்தாலி, பஹ்ரைன், ஃபிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளார். “எங்கள் கலை, பாடல் வழியாக பல மக்களை அடைகிறோம்,” என்று இக்கைவினை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் கூறுகிறார் மமோனி.
டிசப்பியரிங் டைலாக்ஸ் கலெக்டிவ் (டிடி) அமைப்பு இச்சமூகத்திற்குள் பணியாற்றி கலை மற்றும் கலாச்சாரத்தை ஒரு ஊடகமாகப் பயன்படுத்தி இடைவெளிகளைக் நிரப்பி, உரையாடல்களைத் தொடங்கவும், புதிய கதைகளை உருவாக்கவும் செய்கிறது. பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மதிப்பளிக்கவும் இச்சிந்தனை தற்போது உதவுகிறது.
ஜோல்-ஏ-புமிர் கோல்போ ஓ கதாவின் தொகுப்பே இக்கட்டுரை. சதுப்பு நிலங்களின் கதை எனும் இக்கட்டுரைகள், இந்திய கலை அறக்கட்டளையின் காப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் திட்டத்தின் கீழ், பாரியுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட திட்டமாகும். புதுடெல்லி மாக்ஸ் முல்லர் பவன்/கோத்தே நிறுவனம் ஆதரவளித்து இதை சாத்தியப்படுத்த பங்காற்றியது.
தமிழில்: சவிதா