வடக்கு சத்தீஸ்கரின் கோர்பா, சுர்குஜா மாவட்டங்களில் உள்ள ஹஸ்தியோ ஆரந்த் (Hasdeo Arand) காடுகளைப்போல் தொடர்ச்சியாகவும் வளமாகவும் உள்ள காடுகளை மத்திய இந்தியாவில் வேறெங்கும் நம்மால் காண முடியாது. பல்வேறு வற்றாத நதிகளுக்கு இங்குதான் ஊற்று. அரிய செடிகளையும் யானைகள், சிறுத்தைப்புலிகள் போன்ற விலங்குகளையும் கொண்ட செழிப்பான காடு இது.
ஆனால் தற்பொழுது அதன் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து வந்துள்ளது. அதற்குக் காரணம், அதே காட்டிற்குள் அளவிற்கதிகமாக இருக்கும் நிலக்கரி. மொத்தம் 1878 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் ஒரு பில்லியன் மெட்ரிக் டன்னிற்கும் அதிகமாக நிலக்கரி இருப்பதாக நிலக்கரி அமைச்சகம் உறுதி செய்துள்ளது. வரைபடத்தில் அதை ஹஸ்தியோ ஆரந்த நிலக்கரி சுரங்கம் என்று வரைந்தும் விட்டது. ஆனால் இந்த 1878 சதுர கிலோமீட்டர்களில் 1501 சதுர கிலோமீட்டர்கள் காடுகள் என்பதுதான் சிக்கல்.
கடந்த சில வாரங்களாக மத்திய அரசு விரைந்து செயல்பட்டு சுரங்க வேலைகளை முடுக்கி விட ஆரம்பித்திருக்கிறது. பெரு நிறுவனங்களும் கிராம நிலங்களைத் தனிமனிதர்களிடமிருந்தும் குழுக்களிடமிருந்தும் பெற முயற்சி செய்ய ஆரம்பித்துவிட்டன. இவற்றின் மூலம் காடுகளின் சுற்றுச்சூழலுக்கு வந்துள்ள ஆபத்து முக்கியத்துவம் பெறுகிறது.
ஏற்கனவேயே மத்திய அரசின் நிலக்கரி சுரங்க அவசரச் சட்டம் அமலில் இருக்கிறது. ஆனால் சர்ச்சைக்குரிய நிலக்கரி சுரங்க சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறவில்லை. எனவே கடந்த 2014 டிசம்பர் 24-ம் நாள் மத்திய அரசு இந்த அவசரச் சட்டத்தை
மீண்டும் அமல்படுத்தியது
. அதன்மூலம் 90 நிலக்கரித் தொகுதிகள்(சுரங்கங்கள்) அடங்கிய நிலங்களையும் காடுகளையும் ஏலத்தில் விடவும் அதன்மூலம் நிலக்கரியை வணிக ரீதியாகத் தோண்டி எடுக்கவும் வழிவகை செய்தது.
ஐந்து நாட்கள் கழித்து டிசம்பர் 29 அன்று மத்திய அரசு வேறொரு அவசரச் சட்டத்தை அமல்படுத்தியது. இச்சட்டம் 2013-ல் நிறைவேற்றப்பட்ட ‘நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மற்றும் மறுகுடியேற்றச் சட்ட’த்தில் உள்ள சில முக்கிய விதிகளை
நீர்த்துப்போகச் செய்கிறது
. அதன்மூலம் தற்பொழுது நிலம் கையகப்படுத்தப்பட இருக்கும் மின் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்குப் பொது கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தத் தேவையில்லை, மக்களின் ஒப்புதல் பெறத் தேவையில்லை, சமூக பாதிப்பு மதீப்பீட்டையும் நடத்தத் தேவையில்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது.
இதற்கும் மேலாக இந்த வளமான பகுதிகளைப் பெருநிறுவனங்களின் கைகளுக்கு மாற்ற நினைக்கும் அரசு, அதற்காக சுற்றுச்சூழல், பழங்குடியினர் உரிமைகள் தொடர்பான சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் வழிமுறைகளை ஆராயத் துவங்கிவிட்டது என செய்தி அறிக்கைகளும் அதிகாரப்பூர்வ ஆவணங்களும் குறிப்பிடுகின்றன.
ஹஸ்தியோ ஆரந்த் பகுதியில் உள்ள மக்களிடையே, குறிப்பாக கோண்ட் பழங்குடியின மக்களிடையே இது ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதால் அரசாங்கத்தின் இந்தக் காய் நகர்த்தல் குறித்து அவர்கள் தங்களுக்குள் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.
டிசம்பர் நடுவில் 16 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கிராம சபைகளைக் கூட்டி அரசாங்கம் அவர்களின் நிலங்களையும் இக்காடுகளையும் பெரு நிறுவனங்களுக்கு ஏலத்தில் விடக்கூடாது என்று
தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்
.
அதே நேரத்தில் பஞ்சாயத்து சட்டத்தையும், வன உரிமை சட்டத்தையும் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். இந்த இரண்டு சட்டங்கள்தான் உள்ளூர் பழங்குடியினர் மற்றும் வனவாழ் மக்களின் உரிமைகளை அங்கீகரித்து, வன வளம் தொடர்பான முடிவெடுத்தலில் அவர்களைப் பங்கு கொள்ள வைக்கின்றன. காடுகளை அழிக்கும் திட்டங்களுக்கு இவர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் இந்த இரண்டு சட்டங்கள்தான் சொல்கின்றன.
ஹஸ்தியோ பகுதியின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கத்தை அதானி சுரங்கப்பணி நிறுவனம் 2011-லிருந்து இயக்கி வருகிறது. பார்சா கிழக்கு காண்டே பசன் சுரங்கம் என்னும் பெயருடைய அந்த சுரங்கத்திற்காக காடுகளும் கிராமவாசிகளுக்குச் சொந்தமான விவசாய நிலங்களும் ஒழிக்கப்பட்டு அவை கட்டாந்தரை ஆக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பகுதியில் மட்டும் இதுவரை 30 சுரங்கங்கள் தோண்ட திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.
மறுவாழ்வை எதிர்பார்த்து விளிம்பு நிலையில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் பழங்குடியின விவசாயி கோவிந்த் ராம். அவருடைய நிலம் காண்டே பசன் நிலக்கரி சுரங்கத்தின் அங்கமாகிவிட்டது.
2010-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியில் ஹஸ்தியோ காடுகளில் சுரங்கம் அமைக்கக்கூடாது என்று ஒரு மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்தது. ஆனால் அந்தப் பரிந்துரை காற்றில் பறக்கவிடப்பட்டு இன்று வரை அது பரிசீலனை செய்யப்படாமல் இருக்கிறது. அப்பகுதியை யானை சரணாலயமாக மாற்றவிருந்த திட்டம் இன்று வரை அறிவிக்கப்படாமல் இருக்கிறது. அதற்குக் காரணம் ஹஸ்தியோ பகுதியில் உள்ள சுரங்க வாய்ப்புகளைக் கைவிட விரும்பாத பெரு நிறுவனங்கள் 2008-ல் ஆட்சியாளர்களிடம் செய்த பரப்புரையே.
ஹஸ்தியோ ஆரந்த் பச்சாவோ சங்கர்ஷ் சமிதி என்றொரு இயக்கம் இங்கு கிராம அளவில் இயங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் கிராமவாசிகள் சந்தித்து நிலம் மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பாக விவாதிக்கின்றனர். இதோ, கிராமவாசிகள் சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட நிலச் சுரங்க அவசரச் சட்டம் பற்றியும் அதனால் அவர்களின் வாழ்விற்கும் காடுகளுக்கும் ஏற்படப்போகும் பாதிப்புகள் பற்றியும் விவாதிக்கும் காட்சி.
நெல் அறுவடையாகி வீட்டிற்கு வருகிறது. உள்ளூர் வாழ்வாதாரம் நிலம், காடு போன்ற இயற்கை வளங்களோடு நெருக்கமாகப் பின்னிப் பிணைந்திருக்கிறது.
சால்ஹி கிராமத்தின் ராம்லால் சிங் தன்னுடைய கோண்ட் சமூகத்தின் பாரம்பரிய தாள வாத்தியத்தை இசைக்கிறார். ஆட்டுத்தோலை இழுத்து அதை பிஜா மற்றும் கமார் மரங்களின் கட்டைகளில் பொருத்தி அவ்வாத்தியத்தை உருவாக்குகிறார்கள்.
காடுகளுக்கு இடையிடையே ஆங்காங்கே நெல் வயல்கள். உள்ளூர் மக்களுக்கு அரிசிதான் முதன்மையான உணவும் வருவாயும். கால்நடைகளை வைத்திருப்போரும் அவற்றின் உணவிற்கு அரிசியையே சார்ந்திருக்கின்றனர்.
கால்நடைகள் வீடு திரும்புகின்றன.
வருடம் முழுவதும் உணவிற்கும் வருவாய்க்கும் வனப்பொருட்கள்தான் ஆதாரம். மாஹா சிங் ஒரு கோணிப்பையில் இலுப்பை விதைகளை கிராம வாரச் சந்தையில்(அவர்கள் மொழியில் ‘ஹாட்’) விற்க எடுத்து வந்திருக்கிறார்.
ஜனைவ் மஜ்வார் அம்ஜெம் எண்ணெய் விதைகளைக் காயவைக்கிறார்.
கிராமவாசி புல்பாய், இரவு உணவிற்காக ‘குங்க்டி’யை, அதாவது காளானை சேகரித்து வைத்திருக்கிறார்.
உள்ளூர் சமூகத்தின் அன்றாடத் தேவைகளான விறகு, புல் போன்றவற்றை ஹஸ்தியோ காடுதான் வழங்குகிறது.
இக்காடுகளில் 30 வகையான புற்கள் வளர்கின்றன. அவற்றை வைத்து கிராமவாசிகள் துடைப்பம், கயிறு, பாய் போன்ற விதவிதமான பொருட்களை செய்கிறார்கள்.
மூங்கில்களால் செய்யப்பட்ட நெல்கதிர்த் தாங்கியைப் பிடித்தபடி போஸ் கொடுக்கும் விவசாயி.
கிராமங்களில் அருகருகே அடர்த்தியாக வளர்ந்திருக்கும் மரங்கள் புனித இடங்களைக் குறிக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு புனித இடத்தின் பூசாரியான கிராமவாசி ஒருவர் அவ்விடத்தை வழிபடும் காட்சி.
மேலும் பார்க்க : Not Just A Coal Block - Gram Sabha Resolutions