கடந்த 3 ஆண்டுகளாக கலப்பை செய்ய வேண்டி யாரும் வரவில்லை. கோடாரி, மண்வெட்டி, அதற்கான கைப்பிடிகளை செய்வதற்கு கூட யாரும் வரவில்லை. இதன் பொருள் விவசாயிகளுக்கான கருவிகள் செய்து வந்த பங்காரு ராமாச்சாரி சிக்கலில் இருக்கிறார் என்பதே. இவர் தான் பல ஆண்டுகளாக முகுந்தாபுரத்தில் இருந்த ஒரே தச்சர். அவருக்கென்று நிலமும் இல்லை, கால்நடைகளும் இல்லை, அவர் விவசாயியும் இல்லை. ஆனால் அவரது வாழ்வு ஆந்திராவின் நலகொண்டா மாவட்டத்தில் இந்த கிராமத்தில் விவசாயம் எவ்வாறு செயல்பட்டது என்பதை பொருத்து தான் இருந்தது.
இங்குள்ள அரசியல் ஆர்வலர் எஸ் சீனிவாஸ் கூறுகையில் "இங்கு விவசாயம் மோசமானால் எல்லோரும் மோசமாகி விடுவார்கள், விவசாயிகள் மட்டுமல்ல", என்று கூறினார். ராமாச்சாரி அதில் மிகவும் மோசமான நிலைக்கு சென்றார். அவர் பசி காரணமாக மரணமடைந்தார் . நாகர்ஜுனா சாகர் அணை திட்டத்தின் இடது கால்வாயின் பகுதியில் வரும் இந்த கிராமத்தில் முன்னரெல்லாம் விவசாயம் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்தது.
விவசாய நெருக்கடி விவசாயிகள் சமூகத்தைத் தாண்டியும் அதன் தாக்கத்தை செலுத்துகிறது. குயவர்கள், தோல் தொழிலாளர்கள் மற்றும் விவசாயம் சாரா குழுக்கள் கூட விவசாய நெருக்கடியால் பாதிக்கப்படுகின்றனர். இது மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலையை தூண்டிவிடுகிறது. பழங்காலத்திலிருந்து விவசாயத்தைச் சார்ந்து இருந்த பல தொழில்கள் இதனால் கடுமையான நெருக்கடியில் இருக்கின்றன.
"நான் விஜயவாடாவில் ஒரு செருப்பு தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன்", என்று இராமாசாரியின் மனைவியான அருணா கூறுகிறார். ஒதரங்கி சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சாதாரணமாக வேலை தேடி புலம் பெயர்வதில்லை. "ஆனால் எனக்கு வேறு வழி இல்லை", என்று அவர் கூறுகிறார். இதற்கு முன்னர் நான் ஒரு புலம்பெயரும் தொழிலாளியாக இருந்ததில்லை. ஆனால் இங்கு வேலை தேடிக் கொள்வது மிகவும் சிரமமாக இருந்தது.” ஒரு மாதத்திற்கு வேலை தேடி தனது மூன்று குழந்தைகளையும் கணவருடன் விட்டுவிட்டு அவர் புலம் பெயர்ந்தார்.
"ராமாச்சாரிக்கு சுமார் 40 வாடிக்கையாளர்கள் இருந்தனர்", என்கிறார் சீனிவாஸ். "அவருடைய பணிக்கு அவர்கள் நெல்லை சன்மானமாக கொடுத்தனர்". ஒவ்வொருவரும் அவருக்கு ஆண்டுக்கு 70 கிலோ கிராம் நெல்லை கொடுத்தனர். தனக்கு கிடைத்த 2800 கிலோ நெல்லில் அவர் தனது குடும்ப தேவைக்கு எடுத்துக்கொண்டு மீதமுள்ளவற்றை சந்தையில் விற்று வந்தார். "அவர் 70 கிலோவிற்கு சுமாராக 250 ரூபாயை பெற முடியும். இது நெல், அரிசி அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்". தனது குடும்பத்திற்கு தேவையான நெல்லை எடுத்துக் கொண்ட பிறகும் அவர் வருடத்திற்கு 4,000 ரூபாய் நெல்லின் மூலம் சம்பாதிக்க முடிந்தது அதனை வைத்து அவர் தனது குடும்பத்தை கவனித்து வந்தார்.
இதற்கு முன்னர் அவருக்கு இன்னும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருந்தனர் அதனால் வேலை அதிகமாக இருக்கும் சமயத்தில் பிரச்சினை எழுந்தது. இந்த கிராமத்தில் 12 டிராக்டர்கள் வந்த பிறகு அவருடைய வேலை வெகுவாக குறைந்தது. "இது கையால் வேலை செய்பவர்களை பாதிக்கிறது", என்கிறார் கே லிங்கையா. இவரைப் போலவே நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர். ராமாச்சாரிக்கு இது ஒரு பெருத்த அடி. ஆனால் அவரது வேலையை செய்து அவர் பணம் ஈட்ட முயன்றார். "அவருக்கு வேறு எந்த திறமையும் கிடையாது", என்று அருணா கூறுகிறார். அவர் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். அருணா நான்காவது வரை படித்திருக்கிறார்.




