ஆச்சித் மத்ரே தனது வகுப்பறையில் ஒரே மாணவராக இருந்துப் பழகிவிட்டார். ஆனால் முழுப் பள்ளியிலும் எஞ்சியிருக்கும் கடைசி மாணவராக இருப்பது நிச்சயமாக அவருக்குப் புதிது.

சுமார் 18 மாதங்கள் தொற்றுநோயால் மூடியிருந்த பிறகு, 12 வயதான ஆச்சித் கடந்த ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி காலை 11 மணியளவில் வகுப்பறைக்குள் நுழைந்தபோது அதுதான் நிலவரம். பள்ளியின் மூன்று அறைகளும் காலியாக இருந்தன. ஒரு நாற்காலியில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் புகைப்படத்துடன் அவரது ஆசிரியர் மட்டுமே அவருக்காகக் காத்திருந்தார்.

2015-ம் ஆண்டு ஆச்சித் 1-ம் வகுப்பில் சேர்ந்தபோது, ​​அவருக்கு ஆறு வயது. அப்போது ​​அவருக்கு வேறு வகுப்புத் தோழர்கள் இல்லை. "நான் மட்டுமே அங்கு இருந்தேன்," என்று அவர் கூறுகிறார். பள்ளியில் சேர்ந்தக் கடைசி மாணவரும் அவர்தான். அப்போதும் கூட சுமார் 25 மாணவர்கள் பள்ளியில் இருந்தனர். அவர்கள் கராபுரி கிராமத்தின் மூன்று குக்கிராமங்களில் இருந்து வந்தவர்கள். சுமார் 1,100 மக்கள் அக்கிராமங்களில் வசிக்கின்றனர். மஹாராஷ்டிராவின் ராய்கர் மாவட்டத்தில் உள்ள எலிபெண்டா குகைகளுக்கு பெயர் பெற்ற கராபுரித் தீவு ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். தெற்கு மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து, படகில் ஒரு மணிநேரப் பயணம்.

ஆச்சித்தின் ஜில்லா பரிஷத் பள்ளியில், 1 முதல் 7 வரை வகுப்புகள் இருந்தன. பத்தாண்டுகளுக்கு முன்பு 55-60 மாணவர்கள் இருந்தனர். பல ஆண்டுகளாக எண்ணிக்கைக் குறைந்து கொண்டிருந்தது. 2019-ல் 13 மாணவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். மார்ச் 2020-க்குள் இந்த எண்ணிக்கை ஏழாகக் குறைந்தது. மேலும் 2020-21 கல்வியாண்டில், மூன்று பேர் 7-ம் வகுப்பை முடித்துவிட்டு, இரண்டு மாணவர்கள் வெளியேறியபோது, ​​​​இருவர் மட்டுமே மிஞ்சினர். 6-ம் வகுப்பில் ஆச்சித், மற்றும் 7 ஆம் வகுப்பில் கவுரி மத்ரே. "இங்கே கற்பித்தல் சரியாக நடக்கவில்லை," என்று அவர் கூறினார். "அதனால்தான் எல்லோரும் வெளியேற ஆரம்பித்தார்கள்" என்கிறார்.

For the residents of Gharapuri, the only way to go anywhere is by boat.
PHOTO • Aakanksha
For long, the village's  zilla parishad school tried to stay afloat
PHOTO • Aakanksha

இடது: கராபுரியில் வசிப்பவர்களுக்கு, எங்கும் செல்ல படகு மட்டுமே வழி. வலது: நீண்ட காலமாக, கிராமத்தின் ஜில்லா பரிஷத் பள்ளி இயங்க முயற்சித்தது

இந்த இடைநிற்றலுக்கானக் காரணங்கள் பல. தூரம் மற்றும் பள்ளியின் இருப்பிடம், தீவில் உள்ள மோசமான உள்கட்டமைப்பு, குறைந்த வருமானம் மற்றும் வரையறுக்கப்பட்ட வேலை வாய்ப்புகளுடன் போராடும் குடும்பங்கள், ஆங்கில வழியில் பள்ளிப்படிப்புப் பயிலுவதற்கான அவர்களின் தேவை மற்றும் மராத்தி வழிக் கல்வியை விட்டுச் செல்லும் மாணவர்கள் படிப்பைத் தொடர்வதில் உள்ளப் போராட்டங்கள் போன்றவை.

நல்ல எண்ணிக்கையில்  இருந்தபோதும், அப்பள்ளிக்கு மின்சாரமோ குடிநீர் இணைப்போ இல்லை. 2000-மாம் ஆண்டு முதல், இரவு 7 மணி முதல் 10 மணி வரை ஜெனரேட்டர் மின்சாரம் வந்தது. 2018-ல் மட்டுமே நிலையான மின்சாரம் கிடைத்தது என கிராம மக்கள் நினைவு கூர்ந்தனர் (மேலும் 2019ம் ஆண்டு வாக்கில் நீர்ப் பாதைகளும் மேம்பட்டன.)

இருப்பினும், பள்ளி நீண்ட காலமாக இயங்க முயற்சித்தது. ஒரு கணினி மற்றும் மடிக்கணினி 2014-15-ல் நிறுவப்பட்டது (மின்சாரம் உள்ள மாலை நேரங்களில் மட்டுமே சார்ஜ் செய்ய முடியும்). இவை தற்போது வகுப்பறையில் பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன. "சிறிது நேரம் யூடியூப் மூலம் [எங்கள் தொலைபேசியின் இணையத்தைப் பயன்படுத்தி] குழந்தைப் பாடல்கள், கணிதம் போன்றவற்றைக் கற்பிக்க இவற்றைப் பயன்படுத்தினோம்," என்று ஆசிரியர் ரன்யா குவார் கூறுகிறார். ஆச்சித் தனியாக இருக்கும் வகுப்பறையில் அவர் அமர்ந்திருந்தார்.

1 முதல் 7 ஆம் வகுப்பு வரை பல மாணவர்கள் இருந்தபோதும், மூன்று ஆசிரியர்கள் மட்டுமே இருந்தனர். சில நேரங்களில் ஒரு அறையில் மாணவர்கள் நிரப்பப்படுவர். சிலர் வகுப்பறைக்கு வெளியே அல்லது வெளியிலுள்ள ஒரு சிறிய திறந்தவெளியில் அமர்ந்திருந்தனர்.

The ZP school had as many as 55-60 students (left) more than a decade ago
PHOTO • Aakanksha
By March 2020 only 7 students remained, and slowly this number dropped to one
PHOTO • Aakanksha

பள்ளியில் ஒரு பத்தாண்டுக்கு முன்னர் 55-60 மாணவர்கள் (இடது) இருந்தனர். மார்ச் 2020க்குள் 7 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். மெதுவாக இந்த எண்ணிக்கை குறைந்து ஒருவரை வந்தடைந்திருக்கிறது

பல ஆசிரியர்கள் பல வருடங்களாக தீவிற்குச் சென்று திரும்பத் தயாராக இல்லை. அவர்கள் தினமும் கராபுரிக்கு படகில் செல்ல வேண்டும். ஊரான் தாலுகாவின் மற்ற கிராமங்களில் இருந்து சுமார் 30 நிமிடங்களில் பயணம் செய்ய வேண்டும். அங்கு செல்வதற்கான ஒரே வழி இதுதான். மழைக்காலங்களில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) அதிக மழை மற்றும் அலைகள் காரணமாக வகுப்புகளுக்கு செல்லும் வாய்ப்பு குறைந்துவிடும். கராபுரியில் ரேஷன் கடைகள், வங்கிகள் அல்லது மருத்துவ மையங்கள் போன்ற வசதிகள் இல்லாதது ஆசிரியர்களின் தயக்கத்தை அதிகரிக்கிறது. அடிக்கடி இடமாற்றம் நேர்கிறது.

“சில மாதங்களுக்கும் மேலாக எந்த ஆசிரியரும் தங்கியிருக்க மாட்டார்,” என்று 14 வயது குவாரி கூறுகிறார். "ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கற்பித்தல் முறையைக் கொண்டிருந்தனர். மேலும் அவர்களின் பாணிகளைப் பழகுவதற்கு எங்களுக்கு நேரம் பிடித்தது."

52 வயதான ரன்யாவைப் போன்ற ஒரு சிலர், ரூ. 500 மாத வாடகை கட்டி, (அவரது மனைவி சுரேகாவுடன்) கிராமத்தில் தங்க விரும்பினர். “இவ்வளவு காலம் இங்கு தங்குவோம் என்று திட்டமிடப்படவில்லை. ஒரு வருடத்திற்கு வேலை என்று என்னிடம் கூறப்பட்டது, ” என்று மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தைச் சேர்ந்த ரன்யா கூறுகிறார். அவர் 2016-ம் ஆண்டின் மத்தியில் கராபுரியில் கற்பிக்கத் தொடங்கினார். 2019-ம் ஆண்டு தீபாவளி சமயத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக புறப்பட்டார். அவர் ஆகஸ்ட் 2020-ல் திரும்பி வந்து பள்ளியில் ஆச்சித் மற்றும் கவுரியை மட்டும் கண்டார். அந்த மாதம், ரன்யா மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், பகுதி நேரமாக வேலை செய்ய மற்றொரு ஆசிரியர் நியமிக்கப்பட்டார்.

செப்டம்பர் 3, 2021 அன்று, ராய்கர் மாவட்டக் கல்வித் துறை, கராபுரி கிராமத்தின் தலைவர் பலிராம் தாக்கூருக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆச்சித் என்ற ஒரே ஒரு மாணவர் மட்டுமே பள்ளியில் எஞ்சி இருந்ததால் பள்ளியை மூட அறிவுறுத்தியது. பிற மாணவர்கள் அருகிலுள்ள பள்ளிகளுக்கு (ஊரானில்) மாற்றப்படுவர் என்றும் கூறியது.

Teacher Ranya Kuwar (and his wife Surekha) were among the few who chose to rent a place in Gharapuri, rather than commute by boat.
PHOTO • Aakanksha
Sarpanch Baliram Thakur says, ‘If there were support for uplifting the quality [of the school] in our village then surely parents won’t leave’
PHOTO • Aakanksha

இடது: கராபுரியில் படகில் செல்வதை விட வாடகைக்கு ஒரு இடத்தை தேர்வு செய்த சிலரில் ஆசிரியர் ரன்யா குவார் (மற்றும் அவரது மனைவி சுரேகா) அடங்குவர். வலது: ஊர் தலைவர் பலிராம் தாக்கூர், 'எங்கள் கிராமத்தில் பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்கு ஆதரவு இருந்திருந்தால் நிச்சயமாக பெற்றோர் கிளம்பிச் சென்றிருக்க மாட்டார்கள்,’ என்கிறார்

பலிராம் பள்ளியைத் தொடர வலியுறுத்தினார். “ஒரு மாணவர் இருந்தாலும் என்னால் அதை மூட முடியாது. எங்கள் கிராமம் இருக்கும் இடத்திலிருந்து வேறு எந்தப் பள்ளிகளும் அருகில் இல்லை," என்று அவர் கூறுகிறார். இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம், 2009 -ஐ அவர் குறிப்பிட்டு, 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திலும், 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்று கிலோமீட்டருக்குள்ளும் பள்ளிக்கூடம் இருக்க வேண்டும் என சட்டம் குறிப்பிடுவதாகக் கூறுகிறார்.

"கல்வியின் தேவை இங்குள்ள குடும்பங்களை வேரோடு பிடுங்கிவிட்டுள்ளது. அவர்களின் குழந்தைகள் மற்றப் பள்ளிகளில்தான் [ஊரானில்] படிக்க முடியும். எங்கள் கிராமத்தில் [பள்ளியின்] தரத்தை உயர்த்துவதற்கு ஆதரவு இருந்தால், நிச்சயமாக பெற்றோர்கள் வெளியேற மாட்டார்கள், ”என்று பலிராம் மேலும் கூறுகிறார்.

தீவில் இருந்து மாணவர்கள் நீண்ட காலமாக ஊரான் தாலுகாவில் உள்ள மற்ற கிராமங்களுக்கு அல்லது நவி மும்பைக்கு கல்விக்காக இடம்பெயர்கின்றனர். அங்கு, சிலர் உறவினர்களுடன் தங்குகின்றனர். அல்லது முழுக் குடும்பமும் இடம்பெயர்ந்து வாடகை அறைகளில் வசிக்கின்றனர். மும்பையும் அருகில் உள்ளது. ஆனால் இங்குள்ள வாய்ப்புகள் கராபுரியின் குடும்பங்களுக்கு மிகவும் விலை உயர்ந்தவை. அவர்களில் பெரும்பாலோர் அக்ரி கோலி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் (இதர பிற்படுத்தப்பட்டோர் என பட்டியலிடப்பட்டுள்ளனர்). மேலும் தீவில் தொப்பிகள், கருப்புக் கண்ணாடிகள், நினைவுப் பொருட்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மற்ற பொருட்களை விற்கும் சிறு கடைகளைச் சார்ந்து இருக்கிறார்கள்.

"இடமாற்றச் செலவுகளில் பள்ளிக் கட்டணம் மட்டுமல்லாது, வைப்புத்தொகை, வாடகை மற்றும் பிற தேவைகளையும் அடக்கம். மேலும் பெற்றோர்கள் வேலை தேட வேண்டும்,” என்கிறார் ஆச்சித்தின் தாயார் 38 வயதான வினாந்தி மத்ரே. “எங்களால் இடம்பெயர முடியாது. எப்படி சம்பாதிப்போம்? முடிந்தால் ஆச்சித்தை விடுதிக்கு அனுப்ப விரும்புகிறேன். இங்குள்ள உயர்நிலைப் பள்ளி மூடப்பட்டது மற்றும் ஊரடங்கால் எங்கள் வருமானம் [பல மாதங்களாக] நின்றுவிட்டது.”

Several families have migrated to villages in Uran or to Navi Mumbai for schooling. But, says Vinanti Mhatre, Auchit’s mother, ‘We can’t shift, how will we earn?’
PHOTO • Aakanksha
Several families have migrated to villages in Uran or to Navi Mumbai for schooling. But, says Vinanti Mhatre, Auchit’s mother, ‘We can’t shift, how will we earn?’
PHOTO • Aakanksha

பல குடும்பங்கள் பள்ளிக் கல்விக்காக ஊரான் அல்லது நவி மும்பைக்குக் குடிபெயர்ந்துள்ளன. ஆனால், ஆச்சித்தின் தாயார் வினந்தி மத்ரே, ‘எங்களால் இடம் மாற முடியாது, எப்படி சம்பாதிப்போம்?’ என்கிறார்

வினாந்தி மற்றும் அவரது கணவர் 42 வயது நீதின், படகுத்துறையில் இருந்து எலிபெண்டா குகைகளுக்கு செல்லும் 120 படிகளில் ஒரு தற்காலிகக் கடையை நடத்தி வருகின்றனர். மார்ச் 2020 -ல் ஊரடங்கு தொடங்கும் முன், அவர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.6,000-7,000 வருமானம் ஈட்டினர். வாடிக்கையாளர்கள் குறைந்ததால், விற்பனை வீழ்ச்சியடைந்தது. இப்போது அவர்கள் சில மாதங்கள் மட்டுமே அந்தத் தொகையை சம்பாதிக்க முடிகிறது. 2019-ம் ஆண்டில், குகைகளைச் சுத்தம் செய்வதற்காக ஒப்பந்ததாரர்களால் (குகைகளை நிர்வகிக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையுடன் தொடர்புடையவர்கள்) நீதின் ரூ. 12,000 மாதச் சம்பளத்துக்கு பணியமர்த்தப்பட்டார். அந்த ஆண்டு அவர்களின் மூத்த மகனான 18 வயது ஆதித்யா, கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பை முடித்தார். நீதினின் சம்பளம் மகன் மேலும் படிக்க ஊரானுக்கு மாற்ற உதவியது. (மார்ச் 2022 -ல், பணம் செலுத்தும் தகராறு காரணமாக நீதின் துப்புரவு வேலையை இழந்தார்.)

ஆதித்யா படித்த 8 முதல் 10-ம் வகுப்புகளுக்கான கராபுரியின் மராத்தி மொழி வழிப் பள்ளி, லாப நோக்கற்ற கொங்கன் கல்விச் சங்கத்தால் 1995 -ல் தொடங்கப்பட்டது. கிராமத்தில் உள்ள அங்கன்வாடி ஊழியரான 40 வயது சுவர்ணா கோலி, உயர்நிலைப் பள்ளி திறக்கப்பட்டபோது அடைந்த தனது உற்சாகத்தை நினைவு கூர்ந்தார்:

"எனது 7ம் வகுப்புக்குப் [1992-ல்] பிறகு செல்ல பள்ளி இல்லை," என்று அவர் கூறுகிறார். "எங்கள் பெற்றோருக்கு இருந்த சாத்தியங்கள் இரண்டுதான். திருமணம் அல்லது கடையில் வேலை செய்வது." சுவர்ணாவின் தாயார் ஒரு கிராமத்தில் உள்ள உணவுக் கடையில் சமையல்காரராகப் பணிபுரிந்தார்.  தந்தை விவசாயம் செய்து ஊர் தலைவருக்கு உதவி செய்தார். சுவர்ணா ஒரு செவிலியராக விரும்பினார். அந்த இலக்கை அடைய முடியவில்லை என்றாலும், "குறைந்தபட்சம் நான் 10 ஆம் வகுப்பையாவது [1998-ல்] முடிக்க வேண்டும்," என அவர் புன்னகையுடன் கூறுகிறார். அதுவும் உயர் மதிப்பெண்களுடன்.

Anganwadi worker Survana Koli (standing, extreme right), was excited when a high school (right, foreground) opened here in the '90s. But that too shut down in 2020
PHOTO • Courtesy: Suvarna Koli
PHOTO • Aakanksha

அங்கன்வாடிப் பணியாளர் சுவர்ணா கோலி (வலது ஓரம் நிற்பவர்), 90-களில் இங்கு உயர்நிலைப் பள்ளி (வலது, முன்புறம்) திறக்கப்பட்டபோது உற்சாகமாக இருந்தார். ஆனால் அதுவும் 2020-ல் மூடப்பட்டது

அதன் உச்சமாக, நான்கு ஆசிரியர்கள் கட்டணம் இல்லாத கேஇஎஸ் மேல்நிலை பள்ளியில் சுமார் 30 மாணவர்களுக்குக் கற்பித்துள்ளனர். அவர்களில் நவ்நீத் காம்ப்ளேவும் ஒருவர். கராபுரியில் அவர் கற்பித்த 12 ஆண்டுகளில் ஆறு ஆண்டுகள் கிராமத்திலேயே தங்கியிருந்தார். திருமணம் ஆன பிறகு ஊரானிலிருந்து படகில் செல்வார். "எட்டாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் [அவர்களின் நிலையற்ற ஜில்லா பரிஷத் பள்ளிக் கல்விக்குப் பிறகு] படிப்பதில் சிரமப்படுவார்கள். மேலும் பலர் ஆர்வமின்றி இருந்தனர்," என்று அவர் கூறுகிறார்.

படிப்படியாக, உயர்நிலைப் பள்ளியிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கைக் குறையத் தொடங்கியது. நிதிக்காக போராடி, ஆண்டுக்கு ஒரு வகுப்பை மூடத் தொடங்கியது பள்ளி. 2018-ல் 8 ஆம் வகுப்பு தொடங்கி, 2019-ல் 9 ஆம் வகுப்பு, இறுதியாக 2020-ல் 10 ஆம் வகுப்பு ஆகியவை மூடப்பட்டன.

உயர்நிலைப் பள்ளி மற்றும் எஞ்சியிருக்கும் ஜில்லா பரிஷத் பள்ளியை மூடுவது என்பது ஆண்டுக் கல்வி நிலை அறிக்கை (கிராமப்புறம்) (அக்டோபர் 2020) பரிந்துரைத்ததற்கு நேர்மாறான திசையில் செயல்படுத்தப்பட்ட மாற்றங்கள்: பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ஊரடங்குக்குப் பின் அதிக உதவி தேவை என அந்த அறிக்கை பரிந்துரைத்தது.

அங்கன்வாடித் தொழிலாளி சுவர்ணா கோலி மற்றும் ஒரு சக ஊழியர் கராபுரியில் 0-6 வயதுக்குட்பட்ட 40க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடி வகுப்புகளை தொடர்ந்து நடத்துகிறார்கள். 6-14 வயதுக்குட்பட்ட 21 குழந்தைகளில் யாரும் இப்போது தீவின் ஜில்லா பரிஷத் பள்ளியில் சேர்க்கப்படவில்லை. (இந்த மாணவர் எண்கள் கோலி மற்றும் ரன்யா குவார் மற்றும் அவரது மனைவி சுரேகா ஆகியோரால் தனித்தனி கணக்கெடுப்புகளில் தொகுக்கப்பட்டன). ஜில்லா பரிஷத் பள்ளியின் வீழ்ச்சியைக் கண்டு, அது மூடப்படும் என்று எதிர்பார்த்து, கராபுரியில் உள்ள பெற்றோர்கள் ஊரானில் உள்ள மற்றப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்து வருகின்றனர்.

When the high school closed, for students still studying in the ZP school it meant moving from Gharapuri right after Class 7, as did Kalpesh Mhatre (left), who eventually found work as a ‘kursiwallah’ (right) at Elephanta caves
PHOTO • Aakanksha
When the high school closed, for students still studying in the ZP school it meant moving from Gharapuri right after Class 7, as did Kalpesh Mhatre (left), who eventually found work as a ‘kursiwallah’ (right) at Elephanta caves
PHOTO • Aakanksha

உயர்நிலைப் பள்ளி மூடப்பட்டபோது, ஜில்லா பரிஷத் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு 7-ம் வகுப்புக்குப் பிறகு கராபுரியிலிருந்து நகர வேண்டி இருந்தது. கல்பேஷ் மத்ரேவும் (இடது) அதே போல் இடம்பெயர்ந்து எலிஃபெண்டா குகைகளில் நாற்காலி தூக்கும் (வலது) வேலை கிடைத்தது

உயர்நிலைப் பள்ளி மூடப்பட்டபோது, ​​ஜில்லா பரிஷத் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு 7-ம் வகுப்புக்குப் பிறகு கராபுரியில் இருந்து நகர வேண்டிய நிலை. அதே போல்தான் 16 வயதான கல்பேஷ் மத்ரே, நவா கிராமத்தில் உள்ள பள்ளிக்கு மாறினார். பாதியிலேயே வெளியேறினார். "என்னால் கையாள முடியவில்லை," என்று அவர் கூறுகிறார். தீவில் கல்பேஷ் நாற்காலி தூக்குபவராக வேலை செய்யத் தொடங்கினார். அவரும் மேலும் மூவரும் சுற்றுலாப் பயணிகளை மர நாற்காலியில் குகைகள் வரை ஏற்றிச் செல்லும் வேலை செய்தனர். நான்கு பேர் கொண்ட குழு ஒரு நாளைக்கு 3-4 சுற்றுகளைச் செய்து  ஒரு சுற்றுக்கு ரூ.300-500 வருமானம் ஈட்டினார்.

கராபுரியில் ஒரு சில மாணவர்கள் மேற்கொண்டு படிக்க முடிந்தது. கவுரியின் மூத்த சகோதரியான பாவிகா மத்ரே, 2016-ம் ஆண்டு கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பை முடித்தார். பின்னர் பன்வெல்லில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஆனால் 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் அவரது பெற்றோர் இறந்த பிறகு, கராபுரிக்குத் திரும்பினார். அங்கு அவர் தின்பண்டங்கள் மற்றும் ஆபரணங்களை விற்கும் கடைகளை நடத்துகிறார். குவாரி இப்போது பன்வெலில் உறவினர்களுடன் தங்கியுள்ளார். அங்கு அவர் 8-ம் வகுப்பு படிக்கிறார்.

“அம்மாவும் அப்பாவும் எங்களை மேலும் படிக்கக் கட்டாயப்படுத்தினார்கள். அம்மா 8-வது வரை படித்திருந்தார். அவர் மேற்கொண்டு படிக்க விரும்பினார். ஆனால் முடியவில்லை. அப்பா கடற்படையில் சேர விரும்பினார். ஆனால் அவரது தந்தை இறந்துவிட்டார். அதனால் அவர் குடும்பத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார், ”என்கிறார் 20 வயதான பவிகா. “அவர் எங்களுடன் அமர்ந்து இந்தி, கணிதம், எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளச் சொல்வார். அவர் சுயமாக ஓவியம் வரைவார். கிராமத்துத் திருமணங்களில் பாடல்களை ஒலிபரப்புவார். அவர் என்னை தையல், தட்டச்சு போன்ற மற்ற வகுப்புகளில் சேர்த்திருந்தார். நாங்கள் போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு ஐஏஎஸ்ஸுக்கு விண்ணப்பிக்க வேண்டும் அல்லது வழக்கறிஞர்களாக ஆக வேண்டும் என்று அவர் விரும்பினார்.”

PHOTO • Aakanksha
PHOTO • Aakanksha

இளங்கலைப் பட்டம் பெற்ற பவிகா மத்ரே (இடது) போன்ற சிலர் மட்டுமே மேற்கொண்டு படிக்க முடிந்தது. அவரது சகோதரி கவுரி (வலது) ஜில்லா பரிஷத் பள்ளியில் இருந்த கடைசி மாணவருக்கு முன் கிளம்பியவர்

ஆனால் கராபுரியில் கல்விக்கான பாதையில் உள்ள பல தடைகள், பவிகா போன்ற சிலரால் மட்டுமே மேலும் படிக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது. கல்வி மீதான குடும்ப நுகர்வு (NSS 75வது சுற்று, 2017-18) கணக்கெடுப்பு, கிராமப்புற இந்தியாவில் 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மாணவர்களில் 5.7 சதவீதம் மட்டுமே பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. கிராமப்புற மகாராஷ்டிராவில், இந்த எண்ணிக்கை சற்று சிறப்பாக இருந்தது. ஆனால் இன்னும் 12.5 சதவீதம்தான் இளங்கலை அல்லது அதற்கு அப்பால் படிக்கின்றனர். கல்வியில் ஆர்வமின்மை, படிப்பு அல்லது பயிற்றுவிக்கும் ஊடகத்தை சமாளிக்க இயலாமை, பள்ளிக்கான தூரம், நிதிக் கட்டுப்பாடுகள், குடும்பம் அல்லது பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்றக் காரணங்களால் மாணவர்கள் படிப்பைக் கைவிடுவதாக கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது.

அவர்களில் கராபுரியில் உள்ள 23 வயது சோனல் மஹாத்ரேவும் ஒருவர். அவர் 2016-ல் ஊரானில் 12-ம் வகுப்பை முடித்தார். அங்கு உறவினர்களுடன் தங்கினார். பின்னர் அவரது குடும்பத்தின் குறைந்த வருமானம் கராபுரிக்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்தியது. அவரது தாயார் சிப்ஸ் விற்கும் கடை வைத்துள்ளார். தந்தை ஊரானில் படகில் வேலை செய்து மாதத்துக்கு ரூ.5000 வருமானம் ஈட்டுகிறார்

வினய் கோலியும் 2019-ல் 12-ம் வகுப்புக்குப் பிறகு ஊரானில் படிப்பை நிறுத்திவிட்டார். அவர் மராத்தி வழிக் கல்விப் படித்தார். கணக்கு பாடம் மட்டும் ஆங்கிலத்தில் இருந்தது. "எழுதப்பட்டதைப் புரிந்துகொள்வதில் நிறைய நேரம் செலவானது," என்று அவர் கூறுகிறார். ஜனவரி 2020-ல், அவர் எலிஃபெண்டா குகைகளில் ஒப்பந்தப் பணியில் சேர்ந்தார். டிக்கெட் சேகரிப்பாளராக மாதச் சம்பளம் ரூ. 9,000 வருமானம் ஈட்டுகிறார்.

PHOTO • Aakanksha
PHOTO • Aakanksha

தீவின் பல குடும்பங்கள் படகுத்துறைக்கு அருகிலுள்ள சிறியக் கடைகளையும் குகைகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும் நம்பியுள்ளன. வலது: தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களை மேம்படுத்தும் மகாராஷ்டிர அரசாங்கத்தின் திட்டங்களில் 'நல்ல சாலை இணைப்பு' வசதியும் அடங்கும். கராபுரிக்கு அந்தத் தகுதி இல்லை என்பது நிச்சயம்

கராபுரியைச் சேர்ந்த சில மாணவர்கள் 12-ம் வகுப்பிற்குப் பிறகு ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களுக்கு தொழிற்கல்விப் படிப்புகளைத் தேர்வு செய்கிறார்கள். எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள், வெல்டர்கள், டர்னர்கள் மற்றும் பிற தொழில்களுக்கான பயிற்சிப் படிப்பைத் தேர்ந்தெடுக்கிறார்கள். "இதுபோன்ற படிப்புகள் உடலுழைப்பு வேலைகளுக்கு வழிவகுக்கும்," என்று அகமது நகரைச் சேர்ந்த கல்வி ஆர்வலரும் ஆசிரியருமான பௌசாஹேப் சாஸ்கர் குறிப்பிடுகிறார். "உயர்கல்விக்கானப் பாதையை அணுக முடியாதவர்கள் பொதுவாக விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்."

கராபுரித் தீவில், ஆரம்பக் கல்விக்கான பாதை இப்போது மூடப்பட்டு விட்டது.

செப்டம்பர் 2021-ல் மகாராஷ்டிர அரசாங்கம், மாநிலத்தில் உள்ள சுமார் 500 மாவட்டப் பள்ளிகள் மேம்படுத்தப்பட்ட, உள்கட்டமைப்பு, கற்பித்தல் மற்றும் பிற நடவடிக்கைகளுடன் 'மாதிரிப் பள்ளிகளாக' மாற்றப்படும் என்று அறிவித்தது . தகுதித் தேவைகள் பின்வருமாறு: "பள்ளி இருக்கும் இடம் மையமாக இருக்க வேண்டும் மற்றும் நல்ல சாலை இணைப்புடன் இருக்க வேண்டும்."

கராபுரிக்கு அந்தத் தகுதி இல்லை என்பது நிச்சயம்.

ஆச்சித் இந்த ஆண்டு 7-ம் வகுப்பை முடித்திருக்கிறார். வேறு எந்த மாணவர்களும் பள்ளியில் சேரவில்லை. தீவில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளி ஏப்ரல் மாதம் முதல் மூடப்படும்.

தமிழில் : ராஜசங்கீதன்

Aakanksha

ஆகாங்ஷா பாரியில் செய்தியாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் இருக்கிறார். கல்விக் குழுவின் உள்ளடக்க ஆசிரியரான அவர், கிராமப்புற மாணவர்கள் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை ஆவணப்படுத்த பயிற்சி அளிக்கிறார்.

Other stories by Aakanksha
Translator : Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Other stories by Rajasangeethan