“பெண் குழந்தை பிறந்திருக்கிறது”, என்று மருத்துவர் கூறினார்.
இது ஆஷாவின் நான்காவது குழந்தை. ஆனால் நிச்சயமாக இது அவரது கடைசி குழந்தையாக இருக்க முடியாது. மகப்பேறு மருத்துவர் அவரின் தாய் கண்டாபென்னிடம் ஆறுதல் சொன்னதை அவர் கேட்டார்: “அம்மா, நீங்கள் அழாதீர்கள். அவளுக்கு தேவைப்பட்டால் நான் இன்னும் எட்டு முறை கூட சிசேரியன் பிரசவம் மேற்கொள்கிறேன். அவள் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கும் வரை நான் இங்கு இருப்பேன். அவள் என்னுடைய பொறுப்பு.”
இதற்கு முன் ஆஷா பெற்றெடுத்த மூன்று குழந்தைகளும் சிசேரியன் முறையில் பிறந்த பெண் குழந்தைகளே. தற்போது அவர் அகமதாபாத் நகரில் மணிநகர் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தனக்கு எடுக்கப்பட்ட ’கருவின் பாலினத்தை கண்டறியும்’ பரிசோதனை முடிவை தன் மருத்துவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். (இத்தகைய பரிசோதனைகள் இந்தியாவில் சட்டவிரோதமானது. ஆனால் நடைமுறையில் பரவலாக இருக்கிறது.) கடந்த பல வருடங்களில் தற்போது நான்காவது முறையாக அவர் கர்ப்பமாக இருக்கிறார். நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள கான்பர் கிராமத்திலிருந்து இங்கு தன் தாய் கண்டாபெனுடன் வந்திருக்கிறார். தாய் மற்றும் மகள் இருவரும் ஆறுதல்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். ஆஷாவின் மாமனார் கருத்தடைக்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என்பது அவர்களுக்கு தெரியும். “அது எங்கள் நம்பிக்கைக்கு எதிரானது”, என்கிறார் கண்டாபென்.
வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் இது ஆஷாவின் கடைசி கருத்தரிப்பாக இருக்காது.
ஆஷா மற்றும் கண்டாபென் இருவரும் பார்வாத் மேய்ச்சல் சமூகத்தை சேர்ந்தவர்கள். அச்சமூகம் பொதுவாக வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை மேய்க்கும் வேலையைச் செய்கிறது. அச்சமூகத்தின் பெரும்பான்மை அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள தொல்கா தாலுகாவில் உள்ளனர். அங்குதான் அவர்களின் கான்பர் கிராமம் உள்ளது. அதில் வெறும் 271 வீடுகள் இருக்கின்றன. 1500 க்கும் குறைவான மக்களே உள்ளனர் (2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி). மாடுகளையும் எருமைகளையும் சிறு அளவில் அவர்கள் வளர்க்கின்றனர். சமூக கலாச்சார ஏற்றத்தாழ்வுகளில் மேய்ச்சல் சாதிகளில் மிகவும் தாழ்வான சமூகமாக அச்சமூகம் பார்க்கப்படுகிறது. குஜராத்தின் பட்டியல் பழங்குடியாக பட்டியலிடப்பட்டிருக்கிறது.
*****
கான்பர் கிராமத்தில் நாங்கள் காத்திருந்த ஒரு சிறிய அறைக்கு வந்த கட்னாபென் தன் சேலை முந்தானையை எடுத்து தலையில் போர்த்தியபடி உள்ளே நுழைந்தார். கான்பர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து இன்னும் சில பெண்கள் பிரசவகால சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து பேச வந்திருந்தனர். இத்தகைய பிரச்சினைகள் குறித்து பேசுவது எப்போதும் சுலபமானதாக இருப்பதில்லை.
“இந்த கிராமத்தில், சிறிய, பெரிய பார்வத குடும்பங்கள் 80 முதல் 90 இருக்கின்றன”, என்கிறார் கண்டாபென். “இங்கு அரிஜன் (தலித்), வக்ரிஸ், தக்கோர் ஆகிய சமூகங்களை சேர்ந்தவர்களும், மற்றும் சில கும்பர் (குயவர்) குடும்பங்கள் இருக்கின்றனர். ஆனால், இங்குள்ள பெரும்பான்மையான குடும்பங்கள் பார்வத சமூகத்தை சேர்ந்தவர்கள்.” கோலி தக்கோர் சாதி குஜராத்தின் பெரிய சாதிக் குழுவாகும். அதை பிற மாநிலங்களில் உள்ள தாக்கூர் சாதியுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
“எங்கள் பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணம் நடைபெறுகிறது. அவர்களுக்கு 16 அல்லது 18 வயது ஆகும் வரை அப்பாவின் வீட்டில் இருப்பார்கள். பிறகு கணவர் வீட்டுக்கு செல்ல தயாராகிறார்கள்.”, என அங்குள்ள சூழலை விளக்குகிறார் ஐம்பது வயதுகளில் இருக்கும் கண்டாபென். அவரது மகளான ஆஷாவுக்கும் மிகவும் சிறு வயதில் திருமணம் செய்யப்பட்டு தற்போது 24 வயதில் மூன்று குழந்தைகளை பெற்றுள்ளார். தற்போது தனது நான்காவது குழந்தையை பெற்றெடுக்க உள்ளார். குழந்தை திருமணம் என்பது இங்கு இயல்பாகவே உள்ளது. இச்சமூகத்தில் உள்ள பெண்களுக்கு தங்களது வயது, திருமண வருடம் மற்றும் முதல் குழந்தையை பெற்றெடுத்த போது தங்களுடைய வயது உள்ளிட்டவை குறித்த தெளிவான யோசனை இல்லை.
“எனக்கு எப்பொழுது திருமணம் நடைபெற்றதென்று நினைவில் இல்லை, ஆனால் ஒவ்வொரு வருடமும் நான் கருவுற்றேன் என்பது ஞாபகத்தில் உள்ளது.”, என்கிறார் கண்டாபென். அவருடைய ஆதார் அட்டையில் உள்ள தேதி என்பது அவரின் ஞாபகத்திலிருந்து கொடுக்கப்பட்ட தேதிதான்.
“எனக்கு ஒன்பது பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இது பத்தாவது குழந்தை. ஆண் குழந்தை”, என்கிறார் அங்கு கூடியிருந்த பெண்களில் ஒருவரான ஹீராபென் பார்வாத். “என் மகன் எட்டாம் வகுப்பு படிக்கிறான். எனது மகள்களில் ஆறு பேருக்கு திருமணம் முடிந்து விட்டது, இருவரைத் தவிர. அவர்களுக்கு ஜோடியாக திருமணம் செய்து வைத்தோம்.” ஒரே பிரசவத்தில் பல குழந்தைகளை பெறுவதும், தொடர்ச்சியாக கருவுற்று குழந்தைகளை பெற்றெடுப்பதும் கான்பர் சமூகத்திலும் மற்றும் இந்த தாலுகாவை சுற்றியுள்ள பிற கிராமங்களிலும் சாதாரணமாக நடைபெறும் விஷயங்களாக இருக்கிறது. “எங்கள் கிராமத்தில் ஒரு பெண்ணுக்கு பதிமூன்று முறை கருச்சிதைவு நடைபெற்ற பின் ஒரு ஆண் குழந்தை பிறந்தது”, என்கிறார் ஹீராபென். “இது முட்டாள்தனமானது. இங்குள்ள மக்கள் ஒரு ஆண் குழந்தை பிறக்கும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் கருவுற அனுமதிக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் தெரிவதில்லை. அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை மட்டும் போதும். என் மாமியாருக்கு எட்டு குழந்தைகள். என் அத்தைக்கு 16 குழந்தைகள். இதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?”
“என் கணவரின் குடும்பத்தினருக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும்.”, என்கிறார் நாற்பதுகளில் இருக்கும் ரமிலா பார்வாத். “நீங்கள் அதற்கு சம்மதிக்கவில்லை என்றால் உங்கள் மாமியார் முதல் நாத்தனார், அக்கம்பக்கத்தினர் வரை உங்களை இகழ்ந்து பேசுவார்கள். இன்றைய சூழலில் குழந்தைகளை வளர்ப்பது எளிதல்ல. என் மூத்த மகன் பத்தாவது வகுப்பில் இரண்டு முறை தோல்வியடைந்தான். தற்போது மூன்றாவது முறையாக தேர்வெழுத போகிறான். பெண்களாகிய எங்களுக்குதான் தெரியும் குழந்தைகளை வளர்ப்பதென்றால் என்னவென்று. ஆனால், நாங்கள் என்ன செய்வது?”
ஆண் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்கிற குடும்பங்களின் முடிவு, இங்குள்ள பெண்களின் இனப்பெருக்க தேர்வுகளை சுருக்கிவிடுகிறது. “கடவுள் எங்களை ஆண் குழந்தைக்காக காத்திருக்க வைத்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று கேட்கிறார் ரமிலா. “எனக்கு ஆண் குழந்தை பிறக்கும் முன் மூன்று பெண் குழந்தைகளை பெற்றேன். முன்னர் நாங்கள் ஆண் குழந்தைகளை பெற்றெடுக்க காத்திருந்தோம், ஆனால் தற்போது நிலைமை கொஞ்சம் மாறியுள்ளது.”
“என்ன வித்தியாசம்? எனக்கு நான்கு குழந்தைகள் இல்லையா?” என்று ஏளனமாக கேட்கிறார் ரேகாபென், 1522 மக்களை கொண்ட லானா என்ற பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர் அவர். நாங்கள் பேசிக்கொண்டிருந்த பெண்கள் அகமதாபாத் நகரின் ஐம்பது கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் கான்பர், லானா, அம்பலியாரா உள்ளிட்ட இந்த தாலுகாவின் குக்கிராமங்களில் இருந்து வந்தவர்கள். தற்போது அவர்கள் இந்த நிருபரிடம் மட்டும் பேசவில்லை, தங்களுக்குள்ளாகவும் பேசிக்கொண்டார்கள். ரேகாபென் ரமிலாவின் ‘நிலைமை தற்போது மாறிவருகிறது’ என்ற பார்வையை கேள்வி கேட்கிறார்: “நானும் ஒரு ஆண் குழந்தைக்காகதான் காத்திருந்தேன். இல்லையா?” என்று கேட்டார். “நாம் பார்வாத்கள், நம்மிடம் ஒரு ஆண் குழந்தை இருப்பது கட்டாயம். நம்மிடம் பெண் குழந்தைகள் மட்டுமே இருந்தால், நம்மை மலட்டுத்தன்மை உடையவர்கள் என்று அழைப்பார்கள்.”
தங்கள் சமூகம் உருவாக்கும் நிர்ப்பந்தம் குறித்து ரமிலாபென்னுடைய தைரியமான விமர்சனத்தையும் பொருட்படுத்தாமல், அங்குள்ள பெண்கள் ‘ஆண் குழந்தை வேண்டும்’ என்ற முடிவையே முன்மொழிந்தார்கள் – சமூக மற்றும் கலாச்சார கட்டுப்பாடுகளின் காரணமாக. அகமதாபாத் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் உள்ள 84 சதவிகிதத்திற்கும் அதிகமான பெண்கள் தங்களுக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்றதாக, 2015-ல் இண்டர்நேஷனல் ஜேர்னல் ஆப் ஹெல்த் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் என்ற பத்திரிகை வெளியிட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. பெண்களின் இந்த விருப்பத்துக்கு காரணமாக ஆண்களே இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது: “ஆண்களே விவசாயப் பொருளாதாரத்தில் அதிக வருமானம் ஈட்டும் திறன் கொண்டவர்கள்; குடும்ப பாரம்பரியத்தை தொடர்பவர்கள்; அவர்களே பரம்பரையின் வாரிசுகளும் ஆவர்.”
பெண்கள் பொருளாதார சுமையாக பார்க்கப்படுகிறார்கள் என்றும் ஆய்வு குறிப்பிடுகிறது. காரணமாக வரதட்சணையை முன்வைக்கிறது: “திருமணத்திற்கு பிறகு அவர்கள் கணவனது குடும்பத்தின் உறுப்பினர்களாகி விடுகிறார்கள்; அதனால் பெற்றவர்களை அவர்களின் முதிய வயதிலும் உடல்நலமில்லா நேரத்திலும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பில் இருந்து நிறுத்தப்படுகிறார்கள்.”
*****
ஜீலுபென் பார்வாத் என்ற 30 வயது பெண், 3567 மக்கள் தொகை கொண்ட அம்பலியாரா என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவர் சில வருடங்களுக்கு முன் Tubal Ligation என்ற முறையில் கருத்தடை செய்துள்ளார். தொல்கா தாலுகாவில் உள்ள கோத் (கோத்தா) என்ற கிராமத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் செய்ததாக கூறுகிறார். ஆனால், அதையும் அவர் நான்கு குழந்தைகளை பெற்ற பிறகே செய்து கொண்டார். “நான் இரண்டு ஆண் குழந்தைகளை பெறும் வரை காத்திருக்க வேண்டி இருந்தது” என்கிறார். “எனக்கு திருமணமான போது வயது 7 அல்லது 8 இருக்கும். நான் முதிர்ச்சியடைந்த பின் என்னை என் மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது எனக்கு 19 வயது இருக்கும். நான் எனது திருமண உடையை மாற்றுவதற்குள், கருவுற்றேன். அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் கருவுற்றேன்.”
அவர், கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்வதா அல்லது கருப்பையக சாதனத்தை (காப்பர்-டி) பொருத்திக்கொள்வதா என நிச்சயமற்று இருந்தார். “அப்போது எனக்கு மிகவும் குறைவாகவே தெரியும். எனக்கு நன்றாக தெரிந்திருந்தால் நான் இத்தனை குழந்தைகளை பெற்றிருக்க மாட்டேன்.” என்று யோசித்தபடி கூறுகிறார். “ஆனால், பார்வாத் சமூகத்தை பொறுத்தவரை அம்மா (மெலடியம்மா என்ற குலதெய்வம்) என்ன கொடுக்கிறாரோ அதை நாங்கள் ஏற்க வேண்டும். நான் மேலும் ஒரு குழந்தையை பெறாமல் இருந்திருந்தால் மக்கள் ஏதாவது பேசியிருப்பார்கள். நான் வேறொரு ஆணை தேடுவதில் ஆர்வமாக இருப்பதாக எண்ணியிருப்பார்கள். இவற்றை எல்லாம் எப்படி எதிர்கொள்வது?”
ஜீலுபென்னின் முதல் குழந்தை ஒரு ஆண். ஆனால் அவரது குடும்பம் மேலும் ஒரு ஆண் குழந்தையை பெற்றுக்கொள்ள கட்டளையிட்டது. அவரும் இரண்டாவது ஆண் குழந்தைக்காக காத்திருந்தார். ஆனால், அடுத்த இரண்டும் பெண் குழந்தைகளாக பிறந்தன. அதில் ஒரு பெண் குழந்தைக்கு காது கேட்காது இன்னொன்றுக்கு வாய் பேச முடியாது. “எங்கள் பார்வாத் சமூகத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் தேவை. இன்று சில பெண்கள் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை இருந்தால் போதும் என நினைக்கிறார்கள். அம்மாவின் ஆசிர்வாதம் தேவை”, என்கிறார்.
இரண்டாவது ஆண் குழந்தை பிறந்த பிறகு – கருத்தடை குறித்து நன்கறிந்த மற்றொரு பெண்ணின் அறிவுறுத்தலின் பேரில் ஜீலுபென் தனது நாத்தனாருடன் கோத் மருத்துவமனைக்கு சென்று tubectomy (கருத்தடை முறை) செய்ய முடிவு செய்தார். “என் கணவரும் கூட என்னிடம் அதை செய்து கொள்ளும்படி கூறினார்”, என்கிறார் அவர். “அவருக்கும் தன்னால் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பது தெரியும். எங்களிடம் வேலைவாய்ப்புகள் இல்லை. எங்களிடம் இருப்பதெல்லாம் இங்குள்ள விலங்குகளை பேணும் வேலைகள்தான்.”
தொல்கா தாலுகாவில் உள்ள சமூகத்தினர் சவுராஷ்டிரா அல்லது கச் பகுதிகளில் உள்ள பார்வாத் மேய்ச்சல் சமூக த்தினரிடமிருந்து சற்று வேறுபட்டவர்கள். பிற பகுதிகளில் உள்ள அச்சமூகத்தினர் அதிக அளவிலான செம்மறி மற்றும் வெள்ளாடு மந்தைகளை வைத்திருப்பர். ஆனால், தொல்காவில் உள்ள பார்வாத் சமூகத்தினர் ஒரு சில மாடுகள் மற்றும் எருமைகளை மட்டும் வளர்க்கின்றனர். “இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்திடமும் வெறும் 2 முதல் 4 விலங்குகள் வரை இருக்கும்”, என்கிறார் அம்பலியாராவை சேர்ந்த ஜெயாபென் பார்வாத். “அவை எங்கள் வீட்டின் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும். வேறு வருமானம் கிடையாது. அவற்றின் தீவனத்திற்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். பருவகாலத்தில் சிலர் எங்களுக்கு நெல் வழங்குவார்கள். மற்ற நேரத்தில் நாங்கள்தான் வாங்க வேண்டும்.”
“இங்குள்ள ஆண்கள் போக்குவரத்து, கட்டுமானம் மற்றும் விவசாயத் துறைகளில் தொழிலாளர்களாக பணியாற்றுகின்றனர்” என்கிறார் பாவனா ரபாரி. அகமதாபாத்தில் உள்ள மல்தாரி சங்கதான் என்ற அமைப்பின் தலைவர். இவ்வமைப்பு குஜராத்தில் உள்ள பார்வாத்களின் உரிமைகளுக்காக இயங்குகிறது. “கிடைக்கும் வேலையை பொறுத்து சுமார் 250 முதல் 300 ரூபாய் வரை நாட்கூலி வருமானம் ஈட்டுகின்றனர்.”
ஆண்கள் செய்யும் வேலை குறித்து ஜெயாபென், “அவர்கள் வெளியே சென்று நாட்கூலிக்கு வேலை செய்கிறார்கள். என் கணவர் வெளியே சென்று சிமெண்ட் பைகளை சுமந்து சுமார் 200 முதல் 250 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்,” என்கிறார். அதிர்ஷ்டவசமாக அருகிலேயே ஒரு சிமெண்ட் தொழிற்சாலை இருப்பதால் அவருக்கு பல நாட்கள் வேலை கிடைக்கிறது. இங்குள்ள பல குடும்பங்களை போலவே அவரது குடும்பத்திற்கும் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்பவருக்கான (BPL) ரேஷன் அட்டை கூட கிடையாது.
ஜெயாபென், இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த பிறகும், கருத்தடை மாத்திரை அல்லது காப்பர்-டி போன்ற முறைகளை பயன்படுத்த அஞ்சுகிறார். மேலும் அவர் நிரந்தர கருத்தடை சிகிச்சை பெற்றுக்கொள்ளவும் விரும்பவில்லை. “என்னுடைய எல்லா குழந்தைகளையும் வீட்டில்தான் பெற்றெடுத்தேன். எனக்கு அவர்கள் பயன்படுத்தும் கருவிகளை மீது பயம் இருக்கிறது. எனக்கு தெரிந்த ஒரு தாக்கூரின் மனைவி இத்தகைய சிகிச்சை பெற்றபின் அவதிப்பட்டதை பார்த்திருக்கிறேன்.
“அதனால் நான் மெலடி அம்மாவை கேட்க முடிவு செய்தேன். அவளின் அனுமதி இல்லாமல் என்னால் இத்தகைய ஒரு சிகிச்சைக்கு போக முடியாது. அம்மா ஏன் ஒரு வளரும் செடியை வெட்ட என்னை அனுமதிக்கப் போகிறார்? அதனால் நான் அம்மாவிடம் எனக்கு போதுமான குழந்தைகள் இருக்கின்றனர் என்றும் ஆனால் எனக்கு சிகிச்சை செய்துகொள்ள பயமாக இருக்கிறது என்றும் கூறிவிட்டேன். நான் அவளிடம் ஒரு வேண்டுதல் வைத்திருக்கிறேன். அம்மா என்னை பத்தாண்டுகளாக கவனித்துக் கொண்டாள். நான் ஒரு மருந்து கூட எடுக்க வேண்டியதில்லை.”
*****
அவருடைய கணவரால் Vasectomy என்னும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியுமென்ற கருத்து ஜெயாபென் மற்றும் அங்கு கூடியிருந்த பெண்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அவர்கள் ஆற்றிய எதிர்வினை, தேசிய அளவில் ஆண்களின் கருத்தடை குறித்து இருக்கும் தயக்கத்தையே பிரதிபலித்தது. 2017-2018-ல், இந்தியா முழுவதும் “மொத்தம் 14,73,418 கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன, அதில் 6.8% மட்டுமே ஆண் கருத்தடை அறுவை சிகிச்சைகள் என்றும் 93.1% பேரும் பெண்களே என்றும் தேசிய சுகாதார ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
ஐம்பது வருடங்களுக்கு முன்பு வரை, ஆணுக்கான கருத்தடை அறுவை சிகிச்சையின் பரவலும் அதை ஏற்றுகொள்ளும் தன்மையும் விகிதாச்சார அடிப்படையில் இன்றை விட அதிகமாகவே இருந்தது. 1970-களின் இறுதியில் அந்த விகிதம் சரிந்தது, குறிப்பாக 1975-1977 வரையான நெருக்கடி காலத்தில் ஏற்பட்ட வலுக்கட்டாய கருத்தடைக்கு பிறகே. 1970-ல் 74.2 சதவிகிதமாக இருந்த அளவு 1992-ல் வெறும் 4.2% ஆக சரிந்தது என்கிறது, உலக சுகாதார மையத்தின் அறிக்கை ஒன்று.
குடும்பக் கட்டுப்பாடு என்பது தொடர்ந்து பெண்களின் பொறுப்பாகவே பரவலாக பார்க்கப்படுகிறது.
அங்கிருந்தவர்களில் ஜீலுபென் ஒருவர் மட்டுமே டியூபெக்டோமி (கருத்தடை முறை) செயல்முறையை மேற்கொண்டுள்ளார், அவர் அந்த செயல்முறைக்கு முன்பாக, “என் கணவரிடம் எந்த கருத்தடை சாதனத்தையும் பயன்படுத்துவது குறித்து பேச முடியாது. அவராலும் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியும் என்பது கூட எனக்கு தெரியாது. எது எப்படியோ, நாங்கள் அப்படியான விஷயங்கள் குறித்து பேசியது கூட கிடையாது.” என்கிறார். சில நேரங்களில் அவரது கணவரே தொல்காவில் இருந்து அவசர கருத்தடை மாத்திரைகளை, “500 ரூபாய்க்கு மூன்று மாத்திரைகளை” என வாங்கி வந்து கொடுத்துள்ளார். அது அவர் டியூபெக்டோமி செய்து கொள்வதற்கு சில வருடங்களுக்கு முன்பு நேர்ந்த சம்பவம்.
2015-2016 ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் தரவுகள்படி குஜராத் புறநகர் பகுதிகளில் நடைபெற்ற குடும்பக் கட்டுப்பாடு செய்முறைகளில் ஆண் கருத்தடை எண்ணிக்கை வெறும் 0.2% மட்டுமே. பெண்களே கருத்தடை, கருப்பை சாதனங்கள் மற்றும் கருத்தடை மாத்திரைகளை உள்ளிட்ட கடுமையான சுமைகளை ஏற்கின்றனர்.
தொல்காவில் உள்ள பார்வாத் பெண்களை பொறுத்தவரை, டியூபெக்டோமி என்பது தங்கள் ஆணாதிக்க குடும்பம் மற்றும் சமூக விதிமுறைகளுக்கு எதிராக செயல்படுவதாகும். அவர்களின் அச்சத்தை முறியடிப்பதற்கான விஷயமாகும்.
“ஆஷா (அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார செயற்பாட்டாளர்) ஊழியர்கள் எங்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்”, என்கிறார் கனக்பென் பார்வாத், கன்டாபென்னுடைய மருமகள். 20 வயதுகளின் மத்தியில் இருப்பவர். “ஆனால் நாங்கள் அனைவரும் பயத்தில் உள்ளோம்”. அவர் கேள்விப்பட்டதாக, “ஒரு பெண் இத்தகைய அறுவை சிகிச்சையின் போது அங்கேயே இறந்துள்ளார். மருத்துவர் தவறுதலாக தவறான குழாயை வெட்டியுள்ளார், இதனால் அந்த பெண் அறுவை சிகிச்சை மேசை மேலேயே இறந்துவிட்டார். அந்த சம்பவம் நடைபெற்று ஒரு வருடம் கூட ஆகவில்லை,” எனச் சொல்கிறார்.
ஆனால், கருத்தரித்தல் கூட தொல்காவில் அபாயமான விஷயமாக உள்ளது. அரசு நடத்தும் சமுஹிக் ஆரோக்ய கேந்திரா (சமூக சுகாதார மையம்) மையத்தில் உள்ள ஒரு ஆலோசனை வழங்கும் மருத்துவர், கல்வியறிவின்மை மற்றும் ஏழ்மை காரணமாக பல கருத்தரிப்புகளுக்கு இடையே போதிய இடைவெளி இல்லாமல் இருந்து வருவதாக கூறுகிறார். மற்றும், “எவரும் ஒழுங்காக சோதனை செய்துகொள்ள வருவதில்லை”, என்கிறார் அந்த ஆண் மருத்துவர். சுகாதார மையத்திற்கு வரும் பெரும்பாலான பெண்கள் ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் ரத்தசோகையால் அவதிபடுகின்றனர். “இங்கு வரும் 90% பேரின் ஹீமோக்ளோபின் 8 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது,” என கணிக்கிறார்.
சமூக சுகாதார மையங்களில் உள்ள மோசமான உள்கட்டமைப்பு மற்றும் திறமையான ஊழியர்களின் பற்றாக்குறை சிக்கலை அதிகப்படுத்துகிறது. அங்கு சோனோகிராபி கருவிகள் கிடையாது, நீண்ட காலத்திற்கு முழுநேர மகப்பேறு மருத்துவரோ, மயக்க மருந்து நிபுணரோ இல்லை. ஒரே ஒரு மயக்க மருந்து நிபுணர்தான் தொல்காவிலுள்ள ஆறு ஆரம்ப சுகாதார மையங்கள், ஒரு சமூக சுகாதார மையம், பல தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களுக்கும் இருக்கிறார். நோயாளிகள் அவருக்கு தனியாக பணம் செலுத்த வேண்டும்.
கான்பர் கிராமத்தின் அந்த அறையில் நடைபெற்ற உரையாடலின்போது, ஒரு கோபமான குரல் எழுந்தது. பெண்கள் தங்கள் உடலின் மீது கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதை உடைத்துப் பேசியது. தன் தோளில் ஒரு வயது குழந்தையை சுமந்து கொண்டிருந்த ஒரு இளம் தாய் கடுகடுப்புடன், “யார் முடிவு செய்வது என்று எதை குறிப்பிடுகிறீர்கள்? நான் முடிவு செய்வேன். இது என்னுடைய உடல். ஏன் வேறொருவர் முடிவு செய்ய வேண்டும்? எனக்கு இன்னொரு குழந்தை வேண்டாம் என்று தெரியும். எனக்கு மாத்திரைகளை எடுக்கவும் விருப்பமில்லை. நான் கர்ப்பமானால் என்ன? அரசாங்கத்திடம் எங்களுக்கான மருந்துகள் உள்ளன, இல்லையா? அந்த மருந்தை (கருத்தடை ஊசிகள்) நான் எடுத்துக் கொள்வேன். நான்தான் முடிவெடுப்பேன்,” என்றார்.
அது ஒரு அரிதான குரல். இருப்பினும் உரையாடலின் துவக்கத்தில் ரமிலா பார்வாத், “தற்போது நிலைமை கொஞ்சம் மாறியுள்ளது,” என சொன்னதுபோல. கொஞ்சம் மாறியிருக்கலாம் ஒருவேளை.
இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள எல்லா பெண்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது .
இதற்கு ஆதரவு தந்த சாம்வேதனா அமைப்பின் ஜானகி வசந்த் அவர்களுக்கு நன்றி .
PARI மற்றும் CounterMedia அறக்கட்டளையின் கிராமப்புற இந்தியாவின் பதின்வயது மற்றும் இளம்பெண்களை பற்றிய தேசிய அளவிலான செய்தியளிக்கும் திட்டம், முக்கியமான விளிம்புவாழ் குழுக்களின் இத்தகைய சூழல்களை அவர்களின் குரல்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவற்றை கொண்டு ஆராய முனையும் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளை முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.
இந்தக் கட்டுரையை மறுபதிப்பு செய்ய வேண்டுமா?
[email protected]
என்ற முகவரிக்கும் CCயுடன்
[email protected]
என்ற முகவரிக்கும் எழுதுங்கள்.
தமிழில் : ராஜசங்கீதன்