“பல மணி நேரங்களுக்கு அழுகிறாள். இறுதியில் தாயை அழைத்து வரச் சொல்கிறாள்,” என்கிறார் ஷிஷுபால் நிஷாத் தன்னுடைய ஏழு வயது மகள் நவ்யாவை பற்றி. “ஆனால் நான் எங்கிருந்து அவளை அழைத்து வருவது? எனக்கே மனம் பேதலிப்பது போலிருக்கிறது. பல வாரங்களாக நாங்கள் தூங்காமல் இருக்கிறோம்,” என்கிறார் சிங்க்தாலி கிராமத்தை சேர்ந்த 38 வயது தொழிலாளி.
ஷிஷுபாலின் மனைவியும் நவ்யாவின் தாயுமான மஞ்சு ’ஆசிரியரின் நண்பரா’க சிங்க்தாலி ஆரம்ப பள்ளியில் பணிபுரிந்தார். உத்தரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தலுக்கு கட்டாயப் பணி யில் சென்று கோவிட் பாதித்து இறந்த பள்ளி 1621 ஆசிரியர்களில் அவருடைய பெயர் 1282ம் எண்ணில் இடம்பெற்றிருக்கிறது. ஐந்து பேர் கொண்டிருந்த குடும்பத்துக்கு மஞ்சு நிஷாத் வெறும் எண் மட்டுமில்லை.
மூன்று குழந்தைகளுக்கு தாயான அவர்தான் குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே உறுப்பினர். மாத வருமானம் 10,000 ரூபாய். ஒப்பந்த வேலையான ஆசிரியரின் நண்பர் வேலைக்கு அவ்வளவுதான் ஊதியம். அந்த வேலைக்கு உத்தரவாதமும் இல்லை. ஆனாலும் மஞ்சு அந்த வேலையில் 19 வருடங்களுக்கு பணிபுரிந்தார். ஆசிரியரின் நண்பரும் பாடம் நடத்துவார். ஆனால் அவரை ஆசிரியரின் உதவியாளர் என்று மட்டுமே வகைப்படுத்தி இருக்கிறார்கள்.
பந்தெல்காண்ட் அதிவிரைவுச்சாலை கட்டுமானத்தில் 300 ரூபாய் நாட்கூலிக்கு பணிபுரிந்து கொண்டிருந்தார். “நான் பார்த்த அந்த வேலை இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. வேறு எந்த கட்டுமானமும் அருகே நடக்கவுமில்லை. கடந்த மாதங்களை மனைவியின் வருமானத்தை கொண்டுதான் ஓட்டினோம்,” என்கிறார் ஷிஷுபால்.
ஏப்ரல் 15, 19, 26 மற்றும் 29ம் தேதிகளில் நடத்தப்பட்ட உத்தரப்பிரதேசத்தின் பிரம்மாண்டமான நான்கு கட்ட பஞ்சாயத்து தேர்தல்களில் வேலை பார்க்க ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அனுப்பப்பட்டனர். முதலில் அவர்கள் ஒருநாள் பயிற்சி எடுத்துக் கொண்டனர். பிறகு இரண்டு நாட்களுக்கு தேர்தல் வேலை – ஒருநாள் தயாரிப்புக்கும் இரண்டாம் நாள் தேர்தலுக்கும். பிறகு மே 2ம் தேதி மீண்டும் ஆயிரக்கணக்கானோர் வாக்கெண்ணும் பணிக்கு வர வேண்டும். இந்த வேலைகளை செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தேர்தல்களை ஒத்திப் போடச் சொல்லி ஆசிரியர் சங்கங்கள் முன் வைத்த கோரிக்கை பொருட்படுத்தப்படவில்லை.
உபியின் ஆசிரியர் கூட்டமைப்பு பட்டியலிட்டிருக்கும் 1621 ஆசிரியர் மரணங்களில் 193 பேர் ஆசிரிய நண்பர்கள். அவர்களில் 72 பேர் பெண்கள். அவர்களில் ஒருவர்தான் மஞ்சு. ஆனால் மே 18ம் தேதி உபியின் ஆரம்பக் கல்வித்துறை வெளியிட்ட அறிவிக்கை , பணியில் இருக்கும்போது இறந்தவர்களுக்கு மட்டும்தான் நஷ்ட ஈடு வழங்கப்படும் என்றது. இதற்கு அர்த்தம் வேலை பார்த்த இடத்திலேயே ஆசிரியர்கள் இறந்திருக்க வேண்டும் அல்லது வீடு திரும்பும்போது இறந்திருக்க வேண்டும். “குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் எந்த காரணத்தாலும் இறக்கும் ஒருவருக்கான நஷ்ட ஈட்டை மாநில தேர்தல் ஆணையம் அளிக்கும்,” என்கிறது அறிவிக்கை.
அந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு தொடரும் அறிவிக்கை, “மாவட்ட நிர்வாகிகள் மாநில தேர்தல் ஆணையத்திடம் மூன்று ஆசிரியர்கள் மரணமடைந்ததாக கூறியிருக்கின்றனர்,” எனக் குறிப்பிடுகிறது. இந்த எண்ணிக்கை, பயிற்சியிலும் வாக்களிக்கும் அன்றும் வாக்கு எண்ணும் இடங்களிலும் தொற்று பாதித்து வீடுகளுக்கு சென்ற பிறகு இறந்த 1618 ஆசிரியர்களை சேர்க்கவில்லை. கொரோனா வைரஸ் என்ப்படி தொற்றும் என்பதையும் எத்தனை நாட்கள் எடுத்து அது கொள்ளும் என்பதையும் பொருட்படுத்தவேயில்லை.
ஆசிரியர் கூட்டமைப்பு ஏளனமான பதிலை அளிக்கிறது. “மூன்று ஆசிரியர்களின் இறப்பை உறுதிப்படுத்திய அரசு, அதிகாரிகள் கவனிக்காமல் விட்ட 1618 பேரை தங்களின் முழுப் பட்டியலை பார்த்து தெரிந்து கொள்ளட்டும்,” என்கிறார் கூட்டமைப்பின் தலைவரான தினேஷ் ஷர்மா.
ஏப்ரல் 25ம் தேதி தேர்தல் பணிக்காக மஞ்சு நிஷாத் கடாரா ஒன்றியத்தில் இருக்கும் தேர்தல் மையத்துக்கு சென்றார். 26ம் தேதி நடக்கவிருந்த தேர்தலுக்கான தயாரிப்புகள் அன்று நடந்தது. அதற்கு சில நாட்கள் முன்பே அவர் பயிற்சிக்கும் சென்றிருந்தார். 25ம் தேதி இரவில்தான் அவரின் உடல்நலம் குன்றியது.
“இவை எல்லாமும் அரசின் அசட்டத்தனத்தால்தான் நடந்தது. என்னுடைய மனைவி வீட்டுக்கு செல்ல விரும்பி உயரதிகாரியிடம் விடுமுறை கேட்க முயன்றிருக்கிறாள். அதற்கு அவர், ‘விடுமுறை வேண்டுமென்றால் வேலை இருக்காது’ என சொல்லி இருக்கிறார். எனவே அவள் தேர்தல் பணிக்கு சென்றாள்,” எனக் கூறுகிறார் ஷிஷுபால்.
ஏப்ரல் 26ம் தேதி இரவில் தேர்தல் பணி முடித்து வாடகை வாகனத்தில் அவர் வீட்டுக்கு சென்று சேர்ந்தார். “அசவுகரியமாகவும் காய்ச்சல் இருப்பதாகவும் கூறினாள்,” என்கிறார் அவர். அடுத்த நாள் கோவிட் பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டதும் மஞ்சுவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார். ஒருவாரத்துக்கு மஞ்சு மருத்துவமனையில் இருக்க வேண்டுமென கூறியிருக்கின்றனர். ஒரு இரவுக்கு 10000 ரூபாய் கட்டணம். எளிமையாக சொல்வதெனில், மஞ்சு ஒவ்வொரு மாதமும் சம்பாதித்த பணத்தை மருத்துவமனையில் தங்கும் ஒவ்வொரு நாளும் கட்டணமாக தர வேண்டும். “அப்போதுதான் அவளை நான் அரசு மருத்துவமனையில் சேர்த்தேன்,” என்கிறார் ஷிஷுபால்.
மஞ்சுவின் பதட்டமெல்லாம் அவரின்றி வீட்டில் குழந்தைகள் என்ன செய்யும், என்ன சாப்பிடும் என்பதை பற்றிதான் இருந்ததாக சொல்கிறார் அவர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஐந்தாம் நாள், வாக்கு எண்ணிக்கை நடந்த மே 2ம் தேதி, அவர் உயிரிழந்தார்.
“என்னுடைய தாய் மூன்று நாட்களுக்கு பிறகு மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் தொடர்ந்து ‘என்னுடைய மருமகள் இல்லாமல் நான் உயிர் வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன்’ என சொல்கிறார்,” என்கிறார் ஷிஷுபால்.
குழந்தைகளுக்கு உணவு எப்படி கொடுப்பது என யோசிக்கிறார் அவர். நவ்யாவுடன் பிறந்தவர்கள் இருவர். 13 வயது சகோதரி மஸ்கான். 9 வயது சகோதரன் பிரேம். அவர்கள் வாழுமிடத்தின் மாத வாடகை 1500 ரூபாய். அவர்கள் எப்படி தாக்குபிடிப்பார்கள் என அவருக்கு தெரியவில்லை. “எனக்கு இப்போது எதுவுமே புரியவில்லை. சிந்திக்கும் திறனையே இழந்துவிட்டேன். இன்னும் சில மாதங்களில் என் வாழ்க்கையும் போய்விடும்,” என்கிறார் அவர் கையறுநிலையில்.
*****
மனித துயரத்தை தாண்டி, இச்சூழல் ‘ஆசிரியரின் நண்பர்கள்’ அமைப்பு கொண்டிருக்கும் கொடூரத்தையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. பல மாநிலங்களில் இருக்கும் இந்த அமைப்பு உத்தரப்பிரதேசத்தில் 2000-01 ஆண்டில் அறிமுகமானது. அரசு பள்ளிகளுக்கு செல்லும் பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி நிதி, ஆசிரியர் உதவியாளர்களை ஒப்பந்தமுறையில் தேர்ந்தெடுப்பதன் மூலம் குறைக்கப்படுகிறது. மோசமாக இருக்கும் வேலைவாய்ப்பு சந்தையில் உயர்கல்வி படித்தவர்கள், ஆசிரியர்களுக்கு கிடைக்கும் ஊதியத்தை காட்டிலும் குறைவாக, 10000 ரூபாய் ஊதியம் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
ஆசிரிய நண்பர் தகுதிக்கு ஒருவர் பள்ளிக்கல்வி முடித்திருக்க வேண்டும். குறைவான ஊதியத்தை தகுதி கடுமையாக குறைக்கப்பட்டிருக்கும் இந்த காரணத்தை சொல்லித்தான் நியாயப்படுத்துகிறார்கள். ஆனால் மஞ்சு நிஷாத் முதுகலை படிப்பு முடித்திருக்கிறார். அவரை போல பல ஆசிரிய நண்பர்கள் அதிக கல்வி தகுதி பெற்றவர்கள். குறைவான வாய்ப்புகள் கொண்டவர்கள். “சந்தேகமின்றி அவர்கள் கடுமையாக சுரண்டப்படுகிறார்கள். மிக மோசமாகவே. இல்லையெனில் ஏன் பி எட் படித்தவர்களும் முதுகலை படித்தவர்களும் ஆய்வுபடிப்பு முடித்தவர்களும் வெறும் 10,000 ரூபாய் ஊதியத்துக்கு வேலை பார்க்கப் போகிறார்கள்?” எனக் கேட்கிறார் தினேஷ் ஷர்மா.
38 வயது ஜோதி யாதவ், இறந்து போனோரின் பட்டியலில் 750ம் எண்ணில் பெயராக இடம்பெற்றிருக்கிறார். சோராவோன் ஒன்றியத்தில் இருக்கும் தார்வாய் கிராமத்தின் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியர் நண்பராக பணிபுரிந்தார். அவர் பி எட் படிப்பு முடித்திருந்தார். மத்திய அரசின் ஆசிரியர் தகுதி தேர்விலும் இவ்வருட ஜனவரி மாதம் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால் மஞ்சு நிஷாத்தை போல் அவரும் 10000 ரூபாய் மட்டுமே சம்பாதித்தார். 15 வருடங்களாக அந்த வேலையில் இருக்கிறார்.
”என்னுடைய மனைவியின் தேர்தல் பணி பயிற்சி ப்ரக்யராஜ் நகரத்தில் இருக்கும் மோதிலால் நேரு பொறியியல் கல்லூரியில் ஏப்ரல் 12ம் தேதி நடத்தப்பட்டது,” என்கிறார் அவரின் கணவரான 42 வயது சஞ்சீவ் குமார் யாதவ். ‘ அவளை நான் அங்கு (வாக்கு பயிற்சிக்கு) அழைத்து சென்ற போது பெரிய அறையில் நிறைய பேர் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு நெரிசலில் நின்றதை பார்த்தேன். சானிடைசர் இல்லை, முகக்கவசம் இல்லை, எந்த பாதுகாப்பு முறைகளும் இல்லை’
“திரும்ப வந்தபிறகு அடுத்த நாளே உடல்நிலை கடுமையாக குன்றியது. 14ம் தேதி தேர்தல் பணிக்கு (ப்ரக்யராஜ்ஜில் ஏப்ரல் 15ம் தேதி தேர்தல்) செல்ல வேண்டியிருந்ததால், பள்ளி முதல்வரை தொடர்புகொண்டு நிலவரத்தை கூறினேன். அதற்கு அவர், ‘எதுவும் செய்ய முடியாது, வேலை செய்தாக வேண்டும்’, எனக் கூறினார். எனவே நான் அவளை பைக்கில் அங்கு அழைத்து சென்றேன். 14ம் தேதி இரவு அங்கேயே அவளுடன் நான் தங்கியிருந்து அடுத்த நாள் வேலை முடிந்தபிறகு திரும்ப அழைத்து வந்தேன். அவள் வேலைக்கு சென்ற மையம் எங்கள் வீட்டிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது,” என்கிறார்.
அடுத்த சில நாட்களில் அவரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. “அவளை பல மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றேன். அனைவரும் அவளை சேர்க்க மறுத்துவிட்டனர். மே 2ம் தேதி அவளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மே 3ம் தேதி மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். ஆனால் வழியிலேயே இறந்துவிட்டாள்.”
அவருடைய மரணம் குடும்பத்தை உடைத்துப் போட்டது. சஞ்சீவ் குமார் வணிகவியல் படிப்பு முடித்தவர். யோகாவில் முதுகலை முடித்திருக்கிறார். வேலை இல்லை. 2017ம் ஆண்டு வரை ஒரு தொலைதொடர்பு நிறுவனத்தில் வேலை பார்த்தார். அந்த நிறுவனம் மூடப்பட்டது. அதற்குப் பிறகு ஒரு நிலையான வேலை எங்கும் கிடைக்கவில்லை. எனவே குடும்ப வருமானத்தில் குறைவாகவே அவரால் பங்களிக்க முடிந்தது. ஜோதிதான் அவர்களின் செலவுகளை பார்த்துக் கொண்டதாக சொல்கிறார்.
ஒன்பது வயது மகன் யதார்த்தையும் முதிய பெற்றோரையும் எப்படி காப்பாற்றுவது என சஞ்சீவ் தற்போது கவலைப்படுகிறார். “அரசிடமிருந்து உதவி கிடைக்க வேண்டும்,” என சொல்லி அழுகிறார்.
“மாநிலத்தில் 1.5 லட்சம் ஆசிரிய நண்பர்கள் இருக்கின்றனர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அவர்களின் ஊதியம் கடுமையான மாற்றத்துக்குள்ளாகி வருவதை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்,” என்கிறார் தினேஷ் ஷர்மா. “அவர்களின் பயணம் துரதிர்ஷ்டவசமானது. மாயாவதி அரசு இருந்தபோது முதலில் பயிற்றுவிக்கப்பட்டார்கள். ஆரம்ப ஊதியம் 2250 ரூபாய் என்கிற அளவில் இருந்தது. பிறகு அகிலேஷ் குமார் யாதவ் அரசின்போது, அவர்களின் வேலைகள் உறுதிபடுத்தப்பட்டு ஊதியம் 35000 ஆக மாற்றப்பட்டது. ஆனால் தகுதியை பற்றி அச்சமயத்தில் எழுப்பப்பட்ட சர்ச்சையால், பி எட் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரச்சினை உச்சநீதிமன்றத்துக்கு சென்றது.
”இந்திய அரசு நினைத்திருந்தால் விதிகளில் திருத்தம் கொண்டு வந்திருக்க முடியும். பல பத்தாண்டுகளாக பணிபுரியும் ஆசிரிய நண்பர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமில்லை என்றும் ஆக்கியிருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. எனவே அவர்களின் ஊதியம் திடுமென 3500 ரூபாய்க்கு சரிந்தது. விளைவாக பலர் தங்களின் உயிர்களை கூட மாய்த்துக் கொண்டனர். பிறகு தற்போதைய அரசு அதை 10000 ரூபாய் என்றாக்கியது.”
இவற்றுக்கிடையில் இதுவரை வெறும் மூன்று ஆசிரியர் மரணங்கள் மட்டுமே நஷ்ட ஈடு கொடுக்கப்படுவதற்கான தகுதியை பெறுவதாக குறிப்பிட்ட ஆரம்பப் பள்ளியின் அறிவிக்கை எழுப்பிய சர்ச்சை, அரசு தலையிட வேண்டிய சூழலை உருவாக்கியது.
மே 18ம் தேதி பாரி வெளியிட்ட செய்தி யின்படி, பஞ்சாயத்து தேர்தல் பணிகளினால் கோவிட் தொற்று ஏற்பட்டு இறந்த தேர்தல் அதிகாரிகளின் (ஆசிரியர்கள் மற்றும் பிற அரசு ஊழியர்கள்) குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாய் நஷ்ட ஈட்டை மாநில அரசு வழங்க வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தேர்தல் ஆணையத்துடன் இணைந்து இச்சூழலை எதிர்கொள்ளுமாறு மே 20ம் தேதி முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறார் . “தற்போதைய விதிமுறைகள் கோவிட் பாதிப்புகளை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. பரிவான அணுகுமுறையை எடுக்க விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டும்” என அவர் சொன்னதாக குறிப்பிடப்படுகிறது. “மாநில அரசு அதன் ஊழியர்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்யத் தயாராக இருக்கிறது. குறிப்பாக அவர்கள் தேர்தல் பணி முதலிய பணிகளை செய்திருக்கும் சூழலில் நிச்சயமாக துணை நிற்கும்,” எனக் கூறியிருக்கிறார்.
எனினும் ஆசிரியர் கூட்டமைப்பின் தினேஷ் ஷர்மா, “அரசுக்கும் மாநில தேர்தல் ஆணையத்துக்கும் நாங்கள் எழுதிய கடிதங்களுக்கு இன்னும் நேரடி பதில் எங்களுக்கு கிடைக்கவில்லை. எத்தனை ஆசிரியர்களின் பெயர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதோ விதிமுறைகளுக்கு எந்த வகை மாறுதல்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதோ எங்களுக்கு தெரியவில்லை,” என்கிறார்.
போலவே ஏப்ரல் மாதத்தில் பஞ்சாயத்து தேர்தல்கள் நேர்ந்த தவறுகள் தங்களுக்கு தெரியாது என அரசு சொல்லும் வாதத்தை ஆசிரியர்கள் ஏற்கவில்லை. “உயர்நீதிமன்றம் போட்ட ஆணையின்படிதான் அந்த காலகட்டத்தில் தேர்தல்களை நடத்தியதாக தற்போது முதல்வர் கூறுகிறார். ஆனால் உயர்நீதிமன்றம் மாநிலத்தில் ஊரடங்கு கொண்டு வர உத்தரவிட்டபோது அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதே போல உயர்நீதிமன்றமும் ஏப்ரல் மாதத்தில் தேர்தல்கள் முடிய வேண்டும் என சொல்லியிருந்தாலும் அரசு மறுஆய்வுக்கு அணுகியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
“சொல்லப் போனால், உச்சநீதிமன்றம் வாக்கு எண்ணிக்கையை மே 2ம் தேதி நடத்தாமல் 15 நாட்களுக்கு தள்ளிப் போடலாமா என்று கூட அரசை கேட்டது. அரசும் மாநில தேர்தல் ஆணையமும் ஒப்புக் கொள்ளவில்லை. உச்சநீதிமன்ற யோசனையை பொருட்படுத்தாத அவர்கள்தான் உயர்நீதிமன்ற உத்தரவை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.”
*****
“ஏப்ரல் 14ம் தேதி இரவுக்கு என் அம்மாவை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டு அடுத்த நாளின் தேர்தல் பணிக்கு திரும்பக் கொண்டு வந்து அவரை விடலாமா என தேர்தல் மையத்திலிருந்த தலைமை அதிகாரியிடம் நான் கேட்டேன்,” என்கிறார் ப்ரக்யாராஜிலிருந்து தொலைபேசியில் பேசிய முகமது சுகெய்ல்.
அவரின் தாயான 44 வயது அல்வெதா பனோ ப்ரக்யராஜ் மாவட்டத்திலுள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியையாக இருந்தார். அவரிருந்த ஒன்றியத்துக்குள்ளேயே தேர்தல் பணி கொடுக்கப்பட்டது. பஞ்சாயத்து தேர்தல் பணியில் கோவிட் தொற்று ஏற்பட்டு இறந்து போன ஆசிரியர்களின் பட்டியலில் அவரின் பெயர் 731ம் எண்ணில் இடம்பெற்றிருக்கிறது.
“தலைமை அதிகாரி என் கோரிக்கையை நிராகரித்தார். இரவும் என் தாய் அங்கேயே கட்டாயமாக தங்க வேண்டும் எனக் கூறினார். எனவே என் தாய் ஏப்ரல் 15ம் தேதி இரவுதான் வீடு திரும்பினார். தந்தை அவரை மையத்திலிருந்து அழைத்து வந்தார். திரும்பிய மூன்று நாட்களில் அவரின் உடல்நிலை மோசமடைந்தது,” என்கிறார் சுகெய்ல். அடுத்த மூன்று நாட்களில் அவர் மருத்துவமனையில் இறந்து போனார்.
முகமது சுகெய்லின் அக்கா திருமணமாகி கணவருடன் வாழ்கிறார். 13 வயது தம்பி, முகமது டுஃபெய்ல் 9ம் வகுப்பு படிக்கிறார். சுகெய்ல் 12ம் வகுப்பு முடித்து கல்லூரியில் இடம் கிடைக்க காத்திருக்கிறார்.
அவரின் தந்தை 52 வயது சர்ஃபுதின் ஊரடங்குக்கு முன்னால்தான் கடந்த வருடத்தில் ஒரு சிறிய மருந்துக் கடை தொடங்கினார். குறைந்த வாடிக்கையாளர்களே தற்போது வருகின்றனர். “100 ரூபாய் லாபம் கூட ஒரு நாளில் கிடைக்காது. அல்வெதாவின் 10000 ரூபாய் சம்பளத்தைதான் நாங்கள் முழுவதுமாக சார்ந்திருந்தோம்.”
“ஆசிரிய நண்பர்கள் ஆசிரியர்களாக 35000 சம்பளத்துக்கு பதவி உயர்வு பெற்றபோது அப்பதவிக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அதே ஆசிரிய நண்பர்களில் பலர் அதிகமான தகுதியுடன் அதே பள்ளிகளில் வெறும் 10000 ரூபாய் மாத ஊதியத்துக்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்போது மட்டும் தகுதியை பற்றி எந்த பேச்சும் உரையாடலும் எழவில்லையா?” எனக் கேட்கிறார் தினேஷ் ஷர்மா.
ஜிக்யாசா மிஷ்ரா பொதுச் சுகாதாரம் மற்றும் சமூக விடுதலை பற்றிய செய்திகளை தாகூர் குடும்ப அறக்கட்டளையின் சுயாதீன இதழியல் மானியத்தின் மூலம் சேகரித்து அளித்து வருகிறார். இந்த கட்டுரையின் மீது எத்தகைய கட்டுப்பாட்டையும் தாகூர் குடும்ப அறக்கட்டளை செலுத்தவில்லை.
தமிழில் : ராஜசங்கீதன்