சுக்மதி தேவியின் கால்கள் சமீப காலமாக நடுங்க துவங்கியுள்ளது. செங்குத்தான மலைகளில் பல ஆண்டுகளாக ஏறி இறங்கியதால் அவருக்கு இந்த நிலை உருவாகியிருக்கிறது. 65 வயது விவசாயியான சுக்மதி சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் மிகவும் சிரமத்துடன் 3600 அடி உயரத்தில் அமைந்திருக்கும் தனது மலை பிரதேச கிராமமான ‘கூட்டி’க்கு பல ஆண்டுகளாக நடந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இக்கிராமத்தில் வாழ்கிறார். பனி விழும் மீத மாதங்களில் 70 கிலோ மீட்டர் தூரம் கீழிறங்கி 900 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் தார்சுலா நகரில் வாழ்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சில நேரங்களில் செங்குத்தாக இருக்கும் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்தை குதிரையை பயன்படுத்தி கடக்கிறார். ஆனால் தற்போது மழையின் காரணமாக கற்களும் சேறும் நிரம்பியதால் அந்த வழியும் பயன்படுத்த முடியவில்லை. இங்கு வசிக்கும் கிராமவாசிகள் எல்லைபுற சாலைகள் அமைப்பு சாலை அமைக்க மலைகளை வெடி பொருட்களால் தகர்ப்பதால்தான் தாங்கள் பயன்படுத்தும் சாலைகள் பாழடைந்து விடுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இடிபாடுகள் நிறைந்த இச்சாலை காரணமாக சுக்மதியின் கூட்டி கிராமத்திற்கான பயணம் மேலும் சிரமம் நிறைந்தாகி விட்டது. இச்சாலையில் கொடுமையான குறுகிய பாதைகளும், காளி மற்றும் கூட்டி- யாங்டி நதிகளை கடந்து செல்வதுமாகும். “ஒரு நாள் எனது கிராமத்திற்கு காரில் செல்ல முடியும் என நம்புகிறேன்” என 2017ம் ஆண்டு மே மாதம் அவரோடு பயணம் செய்த போது என்னிடம் தெரிவித்திருந்தார். இமாலய வியாஸ் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் அவரது 363 பேர் வசிக்கும் கூட்டி கிராமத்திற்கு செல்ல எங்களுக்கு ஐந்து நாட்கள் தேவைப்பட்டது.
போட்டியா என்னும் பிரிவை சேர்ந்த சுக்மதி தேவி இந்திய-சீன எல்லையில் அமைந்திருக்கும் ஏழு கிராமங்களில் வசிக்கும் 2,059 பேரில் ஒருவர். இவர்களை பொறுத்த வரையில் அனைத்து சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற பொது தேர்தல்களில் சாலை வசதிதான் முக்கிய பிரச்சனை. இந்த கிராமங்கள் ஏப்ரல் 11ந் தேதி வாக்களிக்கும்.










