இமாச்சல பிரதேசத்தின் மலைக்குன்றுகளில் உள்ள தங்கள் வீடுகளை விட்டு, மகளிர் குழு ஒன்று 2018ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டது. பேருந்து மூலம் சண்டிகர் வந்த அவர்கள் இரவை அங்கு கழித்துவிட்டு, நவம்பர் 29-30 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற கிசான் முக்தி அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அடுத்த நாள் காலை 5 மணிக்கு புறப்பட்டனர்.

நவம்பர் 29ஆம் தேதி வடக்கு டெல்லியில் உள்ள மஜ்னு கா டிலாவிலிருந்து காலை 11 மணிக்கு நடக்க துவங்கினர். 11 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடந்த அவர்கள் மாலை 4 மணிக்கு ராம்லீலா மைதானத்திற்கு பசி, தாகம், சோர்வுடன் வந்தடைந்தனர்.

இமாச்சல பிரதேசத்திலிருந்து வந்த விவசாயிகளில் குமர்சைன் தாலுக்காவில் உள்ள பாரா காவ்ன் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதாகும் சுனிதா வர்மாவும் ஒருவர். அவரது குடும்பத்திற்குச் சொந்தமாக உள்ள சுமார் மூன்று ஏக்கர் நிலத்தில் ஆண்டு முழுவதும் வெவ்வேறு காலகட்டத்தில் கோதுமை, சோளம், பச்சை பட்டாணி, தக்காளி போன்றவற்றை விளைவித்து வருகின்றனர்.

“பொழுதுபோக்கிற்காக விவசாயம் செய்யலாம், அதிலிருந்து எதுவும் கிடைப்பதில்லை,” என்கிறார் சுனிதா. இதனால் அவர் காப்பீடு, அஞ்சலக நிரந்தர வைப்பு போன்றவற்றில் மக்களை முதலீடு செய்ய வைக்கும் ஏஜென்சியை நடத்துகிறார்.

காண்க வீடியோ: விவசாயம் எங்களுக்கு நிலையான தன்மையை தருவதில்லை.

கிசான் முக்தி அணிவகுப்பு: ‘விவசாயம் எங்களுக்கு வாழ்வாதாரத்தை அளிப்பதில்லை’ #சலோடெலோ

இமாச்சல பிரதேசத்தின் கிராமப்புற விவசாயிகள் மழையைத் தான் சார்ந்துள்ளனர் என்கிறார் சுனிதா. பாசன வசதியின்மை அவர்களின் உற்பத்தியிலும், வருவாயிலும் தாக்கம் செலுத்துகிறது. இதனால் பல பெண்கள் கிராமத்தில் இருந்து விவசாயத்தையும், குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள, ஆண்கள் வருமானம் ஈட்டுவதற்காக நகரங்களுக்குப் புலம் பெயர்கின்றனர்.

சுனிதாவுடன் 60 வயதாகும் சந்தியா வர்மாவும் உள்ளார். அவரது குடும்பம் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் ஆப்பிள், காய்கறிகளை பயிரிட்டு வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன் முதியோர் ஓய்வூதியத்திற்கு சந்தியா விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு மாதம் ரூ.600 தான் கிடைத்தது என்கிறார். “இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது?”

அணிவகுப்பில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான விவசாயிகளைப் போன்று சுனிதாவும், சந்தியாவும் தங்களது பயிருக்கு நல்ல விலையும், குறைந்த வட்டியில் கடனும் கேட்கின்றனர். முதியோர் ஓய்வூதியமாக குறைந்தது மாதம் ரூ.4000 தர வேண்டும் என்கின்றனர். தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றினால் இத்தகைய நெடிய பயணத்திற்கு பலன் கிடைத்துவிடும் என்கிறார் சுனிதா.

தமிழில்: சவிதா

Subuhi Jiwani

சுபுஹி ஜிவானி, ஊரக இந்திய மக்கள் ஆவணவகம் - பேரியின் முதுநிலை ஆசிரியர்.

Other stories by Subuhi Jiwani
Translator : Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.

Other stories by Savitha