“ஊரடங்கால் வேலையிழந்துள்ள எங்களைப் போன்றோருக்கு ஜானகீயா ஹோட்டல் பெரிதும் உதவி வருகிறது“ என்கிறார் திருவனந்தபுரம் எம். ஜி. சாலை அருகே உள்ள கடையில் மதிய உணவு பொட்டலம் வாங்குவதற்கு வரிசையில் காத்திருக்கும் ஆர். ராஜூ.
ரூ. 20க்கு அளிக்கப்படும் சாதம், மூன்று வகையான குழம்புகள், காய்கறி வறுவல் அடங்கிய மதிய உணவை வாங்குவதற்கு 55 வயதாகும் தச்சுப் பணியாளர் ராஜூ ஒரு மாதத்திற்கும் மேலாக தினமும் மூன்று கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டி ஜானகீயா ஹோட்டலுக்கு வந்து செல்கிறார். “இந்த உணவுகள் சிறப்பாக உள்ளது” என்கிறார் அவர்.
“ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் நான் மிகவும் கவலைப்பட்டேன்” என்று சொல்லும் ராஜூ, அப்போது முதல் வேலையிழந்துள்ளார். ”என்னிடம் உள்ள சிறிதளவு சேமிப்பில் இரண்டு மாதங்களுக்கு உணவு வாங்கிக் கொள்ள முடியும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. இப்போது இந்த உணவுக்காக எனக்கு மாதம் ரூ.500 மட்டுமே செலவாகிறது.”
ஜானகீயா ஹோட்டலின் மலிவு விலை மதிய உணவையே கால் சென்டரில் பணியாற்றும் டி.கே. ரவிச்சந்திரன் சார்ந்துள்ளார். எம்.ஜி சாலையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவனந்தபுரத்தின் பெட்டா பகுதியில் ரவீந்திரன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மதிய உணவுகளுக்கு தனது அலுவலக கேன்டீனையே அவர் நம்பியிருந்தார். தேசிய அளவிலான ஊரடங்கு மார்ச் 25ஆம் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே கேரளாவில் மார்ச் 23ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் அவரது கேன்டீனும் மூடப்பட்டது. “பிற உணவகங்கள் மிகவும் விலை உயர்ந்தது. கொண்டு வந்து கொடுப்பதற்கான கட்டணமும் அதிகம்” என்கிறார் ரவீந்திரன். அவர் சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொல்லத்திலிருந்து இரண்டாண்டுகளுக்கு முன்பு இங்கு குடியேறியவர்.
ஜானகீயா ஹோட்டலில் ராஜூவும், அவரும் வந்திருந்தபோது 10 பெண்கள் கொண்ட குழு உணவுப் பொட்டலங்களை தயார் செய்து கொண்டிருந்தனர். அன்றாடம் அவர்கள் 500 உணவுப் பொட்டலங்களை தயார் செய்கின்றனர். பிளாஸ்டிக் காகிதத்தில் சாதத்தை வைத்து செய்தித்தாள் கொண்டு மடிக்கின்றனர். குழம்புகள் சிந்தாமல் இருக்க சில்வர் ஃபாயில் கொண்டு மூடுகின்றனர். திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 முதல் 5 மணி வரை மக்களின் ஹோட்டல் (ஜானகீயா) பார்சல் மட்டுமான சேவையை அளிக்கிறது.
“அதிகாலை 7 மணிக்கு இங்கு வந்தவுடன் வேலையை தொடங்கிவிடுவோம். காலை 10 மணிக்கு சமையலை முடித்துவிடுவோம். உடனடியாக பொட்டலம் கட்டத் தொடங்கிவிடுவோம். சமையல் முடிந்தவுடன் முந்தைய நாளே காய்கறிகளை வெட்டி வைத்துக் கொள்வோம்“ என்கிறார் ஹோட்டலின் அன்றாட பணிகளை கண்காணிக்கும் சரோஜம். “நான் சமையலுக்கு அதிகம் உதவி செய்வேன். இங்கு ஒவ்வொருவருக்கும் வேலை இருக்கும்.”
சரோஜமும் பிற பெண்களும் குடும்பஸ்ரீயின் உறுப்பினர்கள். ‘குடும்பஸ்ரீ’ என்கிற பெயர், மாநில அளவிலான மகளிர் குழுவாகிய கேரள மாநில வறுமை ஒழிப்பு இயக்கத்தைக் குறிக்கிறது. இந்த குழு உறுப்பினர்கள் கேரளா முழுவதும் 417 உணவகங்களை (மே 26 வரை) நிர்வகித்து வருகின்றனர். இவை ‘குடும்பஸ்ரீ ஹோட்டல்கள்‘ என்று பரவலாக அறியப்படுகிறது.
சிறு நிதி, வேளாண்மை, மகளிர் அதிகாரமளித்தல், பழங்குடியினருக்கான வளர்ச்சித் திட்டங்கள் போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கிய இத்தொகுப்பு 1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உணவுப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் என மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் அமைப்பாகவும் குடும்பஸ்ரீ திகழ்கிறது.
கேரளாவின் உள்ளூர் அரசு அமைப்புகள், குடும்பஸ்ரீ இயக்கம் ஆகியவை மானிய உணவுத் திட்டத்தின் கீழ் கூட்டாக தொடங்கப்பட்டது. மூன்று அறை கொண்ட எம்.ஜி. சாலை உணவகத்தில் சமையலறை, உணவுகளை பொட்டலமாக்க ஒரு ஹால், பொட்டலங்களை கொடுப்பதற்கு ஒரு கவுன்டர் ஆகியவை உள்ளன. முனிசிபல் கார்ப்பரேஷன் கட்டடத்தில் இது இயங்கி வருகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள 22 ஜானகீயா உணவகங்களில் இதுவும் ஒன்று.
மதியம் 2 மணியளவில் கடையில் கோவிட்-19 காரணமாக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், கட்டட பாதுகாவலர்கள், அத்தியாவசியப் பொருட்களுக்கான வாகன ஓட்டுநர்கள் மற்றும் பல வாடிக்கையாளர்கள் திரண்டுள்ளனர். “எங்கள் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் ஊரடங்கால் ஊதியம் இழந்து, உணவு வாங்க போதிய பணமின்றி அல்லது சொந்தமாக சமைத்து உண்ண முடியாத சூழலில் உள்ளவர்கள் தான்“ என்கிறார் குடும்பஸ்ரீ இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கே. ஆர். ஷாஜூ.
கவுன்டரின் நுழைவாயிலில் உணவுப் பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. முகக் கவசம், கையுறை அணிந்த குடும்பஸ்ரீ பணியாளர் பணத்தை பெற்றுக் கொண்டு பொட்டலங்களை கொடுக்கிறார். “வரிசையில் நின்றாலும், நாங்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறோம்“ என்கிறார் குடும்பஸ்ரீ குழுமத்தின் கடையை நிர்வகிக்கும் உறுப்பினர் எஸ். லெக்ஷ்மி.
லெக்ஷ்மியும், சரோஜமும் குடும்பஸ்ரீயின் 40 லட்சத்து 50 ஆயிரம் உறுப்பினர்களில் ஒருவர். அருகமை குழுக்களால் (NHGs) ஒருங்கிணைக்கப்பட்டவர்கள். கேரளாவின் கிட்டதட்ட 60 சதவீதமான 77 லட்சம் குடும்பங்களில் குறைந்தது ஒருவராவது இக்குழுவின் உறுப்பினராக உள்ளனர்.
ஒவ்வொரு ஜானகீயாவும் அருகில் உள்ள NHGயால் நடத்தப்படுகிறது. எம்.ஜி. சாலையில் உள்ள கடை ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள குரியாத்தி NHGக்கு சொந்தமானது. அவர்கள் தினமும் தோராயமாக 500 உணவுப் பொட்டலங்களை தயார் செய்கின்றனர். அவை கவுன்டர் முடிவதற்குள் எப்போதும் விற்று தீர்ந்துவிடுகின்றன. சில தருணங்களில் உணவு பொட்டலங்கள் பற்றாக்குறை ஏற்படுவதும் உண்டு என்கிறார் சரோஜம். ”சில சமயங்களில் ஐந்து அல்லது ஆறு பொட்டலங்கள் மீந்துவிட்டால் நாங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்வோம்.”
ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்கப்பட்ட எம்.ஜி சாலை உணவகம் காலை 8 முதல் மாலை 5 மணி வரை வேலை செய்து வரும் ஏ. ராஜிவிற்கு ஒரு வரப்பிரசாதம். மார்ச் 23ஆம் தேதி ஊரடங்கு தொடங்கியது முதலே மருத்துவமனைகள், மருந்து கடைகளுக்கு வேனை ஓட்டிச் சென்று மருந்துகளை அளிப்பது தான் 28 வயதாகும் ராஜிவின் வேலை. “ஊரடங்கு தொடங்கிய புதிதில் எந்த உணவகங்களும் திறக்கப்படாததால் மிகவும் கஷ்டப்பட்டேன். என் அம்மா அதிகாலை எழுந்து மதிய உணவை தயார் செய்து கொடுப்பார்” என்கிறார் அவர். “இப்பகுதியை சுற்றியே என் பெரும்பாலான டெலிவரி இருப்பதால் இக்கடை எனக்கு உதவியாக உள்ளது. எனக்கு மாதம் ரூ. 500க்கு மதிய உணவு கிடைக்கிறது. ஊரடங்கிற்கு பிறகும் இது தொடரும் என நம்புகிறேன். என்னைப் போன்ற பலருக்கும் இது உதவும்.”
கிருஷ்ண குமார் மற்றும் அவரது வருமானத்தை சார்ந்துள்ள வயதான பெற்றோருக்கும் ஜானகீயா உணவு உதவுகிறது. நகரின் தெற்கு பகுதியில் உள்ள ஸ்ரீவராஹம் பகுதியில் அக்குடும்பம் வசிக்கிறது. “எங்கள் மூவருக்கும் தினமும் நான் இரண்டு பொட்டலம் உணவு வாங்குகிறேன்“ என்கிறார் அவர். “ஞாயிற்றுக்கிழமைகளில் நாங்கள் தோசை, ஓட்ஸ் கஞ்சி போன்றவற்றை சமைத்துக் கொள்கிறோம்.”
ஊரடங்கிற்கு முன் ஒப்பந்த அடிப்படையில் குமார் பிளம்பராக பணியாற்றினார். வேலைக்கு அழைக்கும் போது தினக்கூலியாக ரூ. 800 என மாதம் ரூ. 16,000 வரை சம்பாதித்து வந்தார். “இந்த இரண்டு மாதங்களில் [ஏப்ரல், மே மாதங்கள்] ஒப்பந்தக்காரர் அரை மாத சம்பளம் கொடுத்தார். ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்று கேள்விப்பட்டேன். அவர் எத்தனை காலம் இப்படி தருவார் என தெரியவில்லை” என்கிறார் அவர்.
2020ல் தொடங்கப்பட்ட மாநில அரசின் பசியற்ற கேரளா திட்டத்தின் ஒரு பகுதியாக குடும்பஸ்ரீ ஹோட்டல்கள் தொடங்கப்பட்டன. பிப்ரவரி 7ஆம் தேதி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் இந்த உணவுத் திட்டம் குறித்து அறிவித்தார்.
ஆலப்புழை மாவட்டத்தின் மண்ணச்சேரி நகரில் பிப்ரவரி 29ஆம் தேதி முதல் கடை திறக்கப்பட்டது. தேசிய ஊரடங்கு மார்ச் 24ஆம் தேதி நீட்டிக்கப்பட்ட பிறகு மாநில இடதுசாரி ஜனநாயக முன்னணியின் முயற்சியில் பல உணவகங்கள் திறக்கப்பட்டன. மே 26ஆம் தேதி வரை ஜானகீயா உணவகங்கள் கூட்டாக கிட்டதட்ட 9.5 லட்சம் சாப்பாட்டை ரூ. 20க்கு விற்றுள்ளன.
பல அரசு அலுவலகங்களில் கேன்டீன்களையும் குடும்பஸ்ரீ நிர்வகிக்கின்றன. ஜானகீயா கடையைப் போன்று இத்தகைய பெருமளவில் எதையும் இந்த உறுப்பினர்கள் இதற்கு முன் கையாண்டதில்லை. இத்திட்டத்தை முதலில் கேள்விப்பட்டபோது சரோஜம் சந்தேகம் கொண்டதாக ஒப்புக் கொள்கிறார். சமையலறையை நிர்வகிக்கும் அனுபவம் இல்லாத அவர், இப்போது தனியாக ஓர் உணவகத்தை நிர்வகிக்கிறார்.
NHGயின் தலைவராக கடந்த காலங்களில் கூட்டங்கள் நடத்துவது, கடன்களை நிர்வகிப்பது, குரியாத்தி NHG உறுப்பினர்களின் சோப் செய்தல், ஊறுகாய், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்றவற்றிற்கு உதவி வந்துள்ளார். "இத்தகைய பெரிய அளவிலான பணியை ஒருபோதும் செய்ததில்லை. இதை முறையாக நிர்வகிக்க முடியுமா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை" என்கிறார் அவர்.
குடும்பஸ்ரீ இயக்கம் கொடுத்த நிதியுதவியை கொண்டு ஜானகீயா உணவகத்தை குரியாத்தி NHG குழு தொடங்கியது. கேரள அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருட்களை மானிய விலையில் விநியோகம் செய்கிறது. வாடகை, மரப் பொருட்கள் போன்ற செலவுகளை திருவனந்தபுரம் கார்ப்பரேஷன் செய்கிறது. விற்கப்படும் ஒவ்வொரு உணவு பொட்டலத்திற்கும் மானியமாக குடும்பஸ்ரீ இயக்கம் ரூ.10 தருகிறது. “அனைத்து மானியங்களுடன் ஒரு உணவு பொட்டலத்தின் விலை சுமார் ரூ.20க்கு மேல் வரும் (குடும்பஸ்ரீயிடம் இருந்து ரூ.10 மானியம் கிடைப்பதற்கு முன்)” என்கிறார் சரோஜம்.
விற்கப்படும் ஒவ்வொரு மதிய உணவு பொட்டலத்திற்கும் ரூ.10 வரை NHG குழு ஈட்டுகிறது. கடையை நிர்வகிக்கும் 10 உறுப்பினர்களிடையே அவை சரிசமமாக பங்கிட்டு கொள்ளப்படுகிறது என்கிறார் சரோஜம்.
தங்களின் கடை இத்தகைய வெற்றியை அடையும் என்று எதிர்பார்க்கவில்லை என்கிறார் அவர். “எங்களைப் பற்றி நல்ல விதமாக மக்கள் சொன்னபோது நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். தயக்கமாக இருந்தபோதும், நாங்கள் முன்னெடுத்தோம். இப்போது இதற்காக மகிழ்ச்சி கொள்கிறோம்.“
எம்.ஜி சாலை கடையில் மதியம் 3 மணியளவில் வரிசை குறையத் தொடங்குகிறது. சமையலறையை சுத்தம் செய்தல், அடுத்த நாளுக்கான காய்கறிகளை நறுக்குதல் போன்ற பணிகளை அனைத்து பெண்களும் ஒன்றாக செய்கின்றனர்.
தனது சைக்கிளுடன் நின்றுக் கொண்டு ராஜூ பொட்டலத்தை காட்டி சொல்கிறார், “இப்பெண்கள் யாரையும் பசியோடு இருக்க விடமாட்டார்கள்.”
தமிழில்: சவிதா