குர்பிரதாப் சிங் 11ம் வகுப்பு படிக்கிறார். அவரின் 13 வயது உறவினர் சுக்பிர் ஏழாம் வகுப்பு படிக்கிறார். இருவரும் பஞ்சாபின் அம்ரிட்சர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இப்போது அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. வேறு வகை கல்வியை பயின்று கொண்டிருக்கின்றனர்.

“நாங்கள் ஒவ்வொரு இரவும் விவசாயிகளின் எல்லையை இங்கு காத்து நிற்கிறோம்,” என ஹரியானாவின் சிங்கு தில்லி எல்லைப்பகுதியிலிருக்கும் 17 வயது குர்பிரதாப் சொல்கிறார்.

தில்லி எல்லையின் பல்வேறு பகுதிகளில் திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களில் அவர்களும் அடக்கம். சில விவசாயிகள் சில வாரங்களுக்கு முன்பே தலைநகருக்குள் நுழைந்துவிட்டனர். வடக்கு தில்லியின் புராரி மைதானத்தில் முகாமமைத்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு களங்களில் இருந்து பெரியளவில் அவர்கள் நடத்தும் அறவழிப் போராட்டங்கள் தொய்வு அடைவதற்கான அறிகுறியே தென்படவில்லை. ஒரு நீண்ட போராட்டத்துக்கு தயாராகியே விவசாயிகளும் வந்திருக்கின்றனர். அவர்களின் கோரிக்கைகளில் தெளிவாக இருக்கின்றனர். நோக்கத்திலும் உறுதியாக இருக்கின்றனர்.

இரவு ஆகிவிட்டது. சிங்கு மற்றும் புராரி பகுதி முகாம்களினூடாக நான் செல்கையில் பலர் உறங்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர். சில விவசாயிகள் அவர்களின் ட்ரக் வாகனங்களில் தங்கி இருக்கின்றனர். சிலர் பெட்ரோல் பம்ப் நிலையங்களில் உறங்குகின்றனர். சிலர் குழுவாக பாடல்கள் பாடி இரவை கழிக்கின்றனர். கதகதப்பு, தோழமை, தீர்வுக்கான உறுதி, போராட்டவுணர்வு யாவும் இப்பகுதிகளில் தெளிவாக புலப்படுகின்றன.

விவசாயிகள் இந்த மூன்று சட்டங்களை எதிர்த்துதான் போராடுகின்றனர் : வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவித்தல் மற்றும் வசதி ஏற்படுத்துதல்) சட்டம் ; விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் (அதிகாரம் அளிப்பு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) சட்டம் 2020 .

இந்த சட்டங்களின் வழியாக தங்களுக்கு இருக்கும் உரிமையையும் மொத்த விவசாயத்தையையும் தூக்கி நாட்டின் வலிமையான நிறுவனங்களுக்கு கொடுப்பதாக விவசாயிகள் நினைக்கிறார்கள். பெருவணிகங்களின் காலடியில் சட்டங்கள் விவசாயிகளை விழச் செய்வதாக எண்ணுகின்றனர். “இது துரோகம் இல்லை என்றால், வேறு எது துரோகம்?” என இருளுக்குள்ளிருந்து ஒரு குரல் கேட்கிறது.

“இந்த பெருநிறுவனங்களுடன் விவசாயிகளான எங்களுக்கு ஏற்கனவே அனுபவம் இருக்கிறது. நாங்கள் அவர்களை நம்புவதாக இல்லை. எங்களை அவர்கள் முன்பே ஏமாற்றியிருக்கின்றனர். நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. எங்களின் உரிமைகள் என்னவென்பது எங்களுக்கு தெரியும்,” என ஒரு குரல் சிங்குவின் முகாம்களுக்கு இடையே நான் நடந்தபோது கேட்டது.

விவசாயிகள் கேட்பது போல் சட்டங்களை ரத்து செய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கும் அரசின் நிலை அவர்களுக்கு கவலையை தரவில்லையா? தாக்குப்பிடிப்பார்களா?

”நாங்கள் வலிமையாக இருக்கிறோம்,” என்கிறார் பஞ்சாபை சேர்ந்த விவசாயி ஒருவர். “நாங்களே உணவு சமைத்து பிறருக்கும் வழங்குகிறோம். நாங்கள் விவசாயிகள். எப்படி வலிமையாக இருப்பதென எங்களுக்கு தெரியும்.”

PHOTO • Shadab Farooq

அம்ரிட்சரை சேர்ந்த 17 வயது குர்பிரதாப் சிங்கும் 13 வயது சுக்பிர் சிங்கும் சிங்குவில் ‘விவசாயிகளின் எல்லையை ஒவ்வொரு இரவும் காக்கும் வேலை’யை செய்வதாக சொல்கிறார்கள்

இங்கு இருக்கும் போராட்டக்காரர்களுக்கு உதவவென ஹரியானாவிலிருந்தும் பலர் வந்திருக்கின்றனர். கைதால் மாவட்டத்தை சேர்ந்த 50 வயது ஷிவ் குமார் பபாத் சொல்கிறார்: “எங்களின் விவசாய சகோதரர்கள் அவர்களின் வீடுகளை விட்டுவிட்டு இத்தனை தூரம் கடந்து தில்லி எல்லைக்கு வந்திருக்கின்றனர். எங்களால் இயன்ற எல்லாவற்றையும் அவர்களுக்கு செய்து தருகிறோம்.”

சிங்கு மற்றும் புராரி பகுதியில் இருக்கும் விவசாயிகளும் சக குடிமக்களிடமிருந்து கிடைக்கும் அக்கறை மற்றும் ஆதரவை பற்றி குறிப்பிடுகின்றனர். “பலர் எங்களுக்கு உதவி செய்ய வருகின்றனர். எல்லையின் பல பகுதிகளில் சில மருத்துவர்கள் மருத்துவ முகாம் அமைத்து மருத்துவ உதவி எங்களுக்கு அளிக்கின்றனர்,” என்கிறார் ஒரு போராட்டக்காரர்.

“தேவையான உடைகளை நாங்கள் எடுத்து வந்திருக்கிறோம்,” என சொல்லும் ஒருவர், “ஆனாலும் மக்கள் பல உடைகளையும் போர்வைகளையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். இந்த இடத்தை நான் வீடு போல் உணர்கிறேன்.”

அரசை நோக்கியும் கார்ப்பரெட்டுகளை நோக்கியும் பெரும் கோபம் இருக்கிறது. பெரும் மனக்குறை இருக்கிறது. “அரசு விவசாயிகளை ஏமாற்றி விட்டது,” என்கிறார் ஒரு போராட்டக்காரர். “இந்த நாட்டுக்கு உணவை கொடுக்கிறோம். பதிலுக்கு கண்ணீர் புகைக்குண்டுகளும் நீர் பாய்ச்சும் வாகனங்களும் எங்களுக்கு கிடைக்கின்றன.”

“விவசாயிகள் பனிக்காலம் கூட பார்க்காமல் தங்களின் நிலங்களில் நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது, இந்த கார்ப்பரெட்டுகளும் அரசியல்வாதிகளும் சொகுசாக அவர்களின் படுக்கைகளில் உறங்கிக் கொண்டிருந்தனர்,” என்கிறார் மற்றொருவர்.

போராடுவதற்கான உறுதியும் தீர்க்கமாக இருக்கிறது: “ஒவ்வொரு வருடத்தின் குளிர்காலத்தையும் நாங்கள் தாங்கியிருக்கிறோம். இந்த குளிர்காலத்தில் எங்களின் இதயங்கள் நீறு பூத்த நெருப்பாக தகிக்கிறது,” என்கிறார் கோபத்துடன் ஒரு விவசாயி.

“இந்த ட்ராக்டர்களை பார்த்தீர்களா?” என ஒருவர் கேட்கிறார். “இவையும் எங்களுக்கு ஆயுதங்கள்தான். எங்கள் குழந்தைகளை போல் இவற்றை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.” தில்லியின் எல்லைகளில் ஆயிரக்கணக்கான ட்ராக்டர்கள் தற்போது இருக்கின்றன. அவற்றில் பொருத்திய ட்ராலிகளிலேறி பல்லாயிரக்கணக்கான பேர் இங்கு வந்திருக்கின்றனர்.

இன்னொருவர் பேசுகிறார்: “நான் மெக்கானிக்காக பணிபுரிகிறேன். ஒவ்வொரு விவசாயியின் ட்ராக்டரையும் இலவசமாக பழுது நீக்கிக் கொடுப்பதென உறுதி பூண்டிருக்கிறேன்.”

அங்கிருக்கும் ஒவ்வொரும் ஒரு நீண்டகால போராட்டத்தில் இருப்பதாகவே கருதுகின்றனர். இந்த இக்கட்டு நிலை பல மாதங்களுக்கு நீடிக்கலாம் என சிலர் கூறுகின்றனர். ஆனால் யாரும் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை.

ஒருவர் முடிவாக சொல்கிறார்: “மூன்று வேளாண் சட்டங்கள் ரத்தாகும் வரையிலோ அல்லது எங்களின் மரணம் வரையிலோ நாங்கள் இங்குதான் இருக்கப் போகிறோம்.’

PHOTO • Shadab Farooq

புராரி மைதானத்தில் இருக்கும் இந்த 70 வயது போராட்டக்காரர், அரசு விவசாயிகளை ஏமாற்றுவதாக குற்றஞ்சாட்டுகிறார். மூன்று வேளான் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை அடிபணிய மாட்டோம் என உறுதியாக சொல்கிறார். ‘எங்களின் மரணம் வரை இங்குதான் இருப்போம்’ என்கிறார்

PHOTO • Shadab Farooq

வடக்கு தில்லியின் புராரி மைதானத்தில் ஓர் இளைய போராட்டக்காரர்

PHOTO • Shadab Farooq

ஹரியானாவின் சிங்கு எல்லையில் மாலை நேர பிரார்த்தனையில் விவசாயிகள். பல குருத்வாராக்கள் சமையற்கூடங்கள் அமைத்து உணவளிக்கின்றன. பல காவல்துறையினரும் அங்கு உணவெடுத்துக் கொள்கின்றனர்

PHOTO • Shadab Farooq

சிங்கு எல்லையில் இருக்கும் ஒரு விவசாயிகள் குழு தங்கள் பிரிவு போராட்டக்காரர்களுக்கு உணவு தயாரிக்கும் வேலையில் இருக்கின்றனர்

PHOTO • Shadab Farooq

சிங்கு எல்லையில் இருக்கும் சமையற்கூடத்தில் இரவு வேளை உணவு

PHOTO • Shadab Farooq

ஒரு முதிய விவசாயி புராரி மைதானத்திலிருக்கும் ஒரு ட்ரக்கில் ஏறுகிறார். சில விவசாயிகள் ட்ரக்குகளிலேயே உறங்குகின்றனர்

PHOTO • Shadab Farooq

ட்ரக்கில் ஓய்வெடுக்கும் விவசாயிகள்

PHOTO • Shadab Farooq

பெட்ரோல் நிலையத்தில் உறங்கும் போராட்டக்காரர்கள்

PHOTO • Shadab Farooq

போராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கான ட்ராக்டர்களை எடுத்து வந்திருக்கின்றனர். புராரியில் இருக்கும் ஒருவர், ‘இந்த ட்ராக்டர்கள் எங்களுக்கு ஆயுதங்களும் கூட’ எனக் கூறுகிறார்

PHOTO • Shadab Farooq

‘எனக்கு தூக்கம் வரவில்லை. இந்த அரசு என் தூக்கத்தை கெடுத்துவிட்டது,’, என்கிறார் வடக்கு தில்லியில் இருக்கும் இந்த விவசாயி

தமிழில்: ராஜசங்கீதன்

Shadab Farooq

ஷதாப் ஃபரூக் டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர். இவர் காஷ்மிர், உத்தராகண்ட், உத்தர பிரதேசங்களில் செய்தி சேகரித்து வருகிறார். அரசியல், பண்பாடு, சுற்றுச்சூழல் குறித்து இவர் எழுதி வருகிறார்.

Other stories by Shadab Farooq
Translator : Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Other stories by Rajasangeethan