“இந்த புகைப்படம்தான் எனது பாதுகாப்பு, இதுவே எனது வலிமையும்" என்கிறார் 35வயதேயான விவசாயி  அலிவேலம்மா. அனந்தபூர் மண்டலத்தில் உள்ள குருகுந்தா கிராமத்தில் இருந்து வந்துள்ளார் அவர். தனது கணவரின் புகைப்படத்தை வங்கி அட்டையுடன் (ஏ.டி.எம் கார்டு) சேர்த்து ஒரு சிறிய கவரில் வைத்துக் கொண்டு வந்திருக்கிறார் அவர்.

"இனி விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்பதற்காக நீதி கேட்டு இங்கே வந்துள்ளோம்" என்கிறார்.

அலிவேலம்மாவின் கணவர் சி. வெங்கடராமுடு, ஒரு குத்தகை விவசாயி. 2013ல் நிலக்கடலையைப் பதப்படுத்த பயன்படும் இரசாயன உருண்டைகளை உண்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

"வாங்கிய கடன் தொகையும் ஏறிக்கொண்டே போகிறது, விதைத்த பயிரும் நினைத்த இலாபத்தை ஈட்டித்தரவில்லை. கடன்கொடுத்தவர்களும் பணத்தை திருப்பிக் கேட்கிறார்கள். என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்து நிற்கிறேன். விதைகடலைக்காவது பணம் கிடைக்குமா எனத் தெரியவில்லை என்று அவர் என்னிடம் புலம்பிக் கொண்டேயிருந்தார்” என்று சொல்கிறார் அலிவேலம்மா. பலமுறை நிலக்கடலை விதைப்பதை நிறுத்தச் சொல்லி கணவரிடம் அலிவேலம்மா மன்றாடியுள்ளார். ஆனால் அவரோ "தொலைத்ததை தொலைத்த இடத்தில்தான் தேடவேண்டும்" என்று சொல்லி நிலக்கடலையையே பயிர் செய்துள்ளார்.

“அவர் செலவு செய்து கொண்டேயிருக்கிறார், பணத்தை இழந்துக் கொண்டேயிருக்கிறார்” என்று திடீரென்று கணவரைப் பற்றி நிகழ்காலத்தில் பேசுகிறார் அலிவேலம்மா – அவரை இழந்து விட விரும்பாதவராக.  சமீபத்தில்தான் தன் கணவருக்குச் சொந்தமான ஒரு புத்தகத்தை தூக்கித் திரிவதை நிறுத்தியிருக்கிறார். யார் யாருக்கு எவ்வளவு கடன் தொகை நிலுவையில் உள்ளது என்பது பற்றிய குறிப்பை அவரது கணவர் அந்த புத்தகத்தில் எழுதிவைத்திருந்தார்.

C. Alivelamma
PHOTO • Rahul M.

அலிவேலம்மா இப்போது அனந்தபூரில் உள்ள ஒரு அரசுசாரா நிறுவனத்தில் எட்டு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். தொழிற் பயிற்சிப் பள்ளியில் (ஐ.டி.ஐ) பயின்றுவரும் மகனையும் அவரே கவனித்துக் கொள்கிறார். அவருடைய பண்ணை, கூட்டுறவு விவசாயப் பண்ணையின் ஒரு பகுதியாகும், அங்கே உள்ள 10 விவசாயப் பெண்மணிகளும் கணவனை இழந்தவர்களாகவோ, கணவனால் கைவிடப்பட்டவர்களாகவோ தான் உள்ளனர்.

நான் நவம்பர் 28, 2018 அன்று அலிவேலம்மாவை டில்லியிலுள்ள இராம்லீலா மைதானத்தில் சந்தித்தேன். "இனி விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்பதற்காக நீதி கேட்டு இங்கே வந்துள்ளோம்" என்றார் அவர்.

மொழிபெயர்ப்பு: சோனியா போஸ்

Rahul M.

ராகுல் M. ஆந்திரப் பிரதேசம் அனந்தபூரிலிருந்து இயங்கும் சுதந்திர ஊடகவியலாளர்.

Other stories by Rahul M.
Translator : Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.

Other stories by Soniya Bose