"வெள்ளிக்கிழமை அன்று ஜி20 மாநாட்டு தலைவர்களை வரவேற்பதற்காக தில்லி நகரம் ஜொலிக்கையில், தில்லியின் விளிம்புகளில் வாழ்பவர்களின் உலகம் இருளானது. யமுனா ஆற்றின் வெள்ள அகதிகளாக வெளியேறிய விவசாயிகள் தற்போது யார் பார்வையும் படாதபடிக்கு அகற்றப்பட்டிருக்கிறார்கள். கீதா காலனி மேம்பாலத்துக்குக் கீழே அவர்கள் தங்கியிருந்த தற்காலிக குடில்களிலிருந்து வெளியேற்றப்பட்டு ஆற்றின் ஓரங்களில் இருக்கும் காட்டுப் பகுதிகளில் விடப்பட்டு, யார் கண்ணிலும் படாமல் மூன்று நாட்கள் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
"எங்களில் சிலரை போலீஸ் கட்டாயப்படுத்தி வெளியேற்றியது. 15 நிமிடங்களில் வெளியேறவில்லை எனில் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்படுவோம் என்றார்கள்," என்கிறார் ஹிராலால்.
காட்டுப் பகுதியில் உயர்ந்து நிற்கும் புற்களுக்குள் பாம்புகளும், தேள்களும் பிற ஆபத்துகளும் இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. "நீரும் மின்சாரமுமின்றி எங்களின் குடும்பங்கள் இருக்கின்றன. யாரையாவது தேளோ பாம்போ கொட்டியோ கொத்தியோ விட்டால், மருத்துவ உதவி கூட கிடையாது," என்கிறார் விவசாயியான அவர்.

















