அச்சிறுமியை வீட்டில் இறக்கி விடுவதாக ஓட்டுநர் உறுதியளித்தார். ஆனால் கார் எதிர்திசையில் விரைந்து கொண்டிருந்தது. முதல் U வளைவில் அவர் திரும்பாதபோது, கவனிக்கத் தவறியிருப்பாரென நேகா நினைத்தார். இரண்டாம் U வளைவும் கடக்கப்பட்ட போது 15 வயது சிறுமியின் சந்தேகம் வளர்ந்தது. மூன்றாம் முறையும் அது நடந்ததும், அவர் அச்சமுற்றார். கண்கள் கலங்கின. உடல்நலம் குன்றியது.
உறுதியற்ற தன்மையுடன் இருந்த அவர், பெற்றோரை பார்க்க வேண்டுமென அழுதார். காரில் அவருக்கருகே அமர்ந்திருந்த பெண்ணும் ஓட்டுநரும் அவரை அமைதிப்படுத்த முயற்சித்தனர். கவலைப்பட வேண்டாம் என்றனர்.
ஆனால், பெரும் சிக்கலில் இருப்பதை நேகாவால் உணர முடிந்தது. வீட்டை விட்டு வெளியேறுவது அவருடைய தன்னிச்சையான முடிவுதான். அதற்கு இப்போது வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.
மே 2023-ல், அவருக்கும் அவரின் பெற்றோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. படிப்பில் கவனம் செலுத்தாமல் அதிகம் செல்பேசியில் நேரம் கழிக்கிறாரென பெற்றோருக்கு கோபம். இறுதியில் நேகாவின் செல்பேசி பறிக்கப்பட்டது.
“செல்பேசியை என் பெற்றோர் பறித்ததும் நான் கடும் கோபம் கொண்டேன்,” என்கிறார் அவர் சன்னமான குரலில் நேரடியாக முகத்தை பார்க்காமல். “அங்கிருந்து சென்று விடத் தோன்றியது.”
எனவே அதிகாலை ஆறு மணிக்கு கிளம்பினார். அவரிருந்த பகுதியின் குறுகலான தெருக்களின் வழியாக நடந்து நெடுஞ்சாலையை அடைந்தார். பெற்றோர் மீது இருந்த கோபத்தில் 7-8 கிலோமீட்டர் தூரம் நெடுஞ்சாலையில் நடந்தார். பிறகுதான் ரொம்ப தூரம் வந்து விட்டதை அவர் உணர்ந்தார். வெயில் ஏறியிருந்ததால், அவருக்கு தாகம் எடுத்தது. ஆனால் தண்ணீர் பாட்டில் வாங்க காசில்லை.
பளபளப்பான ஒரு கறுப்பு செடான் கார் அவரின் முன் வந்து நின்றது. “ஒரு ஆண் காரை ஓட்டிக் கொண்டிருந்தார். ஒரு பெண் பின்னால் அமர்ந்திருந்தார்,” என நேகா நினைவுகூருகிறார். கண்ணாடியை இறக்கிய பெண், வீட்டுக்கு செல்ல லிஃப்ட் வேண்டுமா என நேகாவை கேட்டார். “நல்லவர்கள் போல இருந்தனர். அத்தனை தூரம் நடந்ததில் நான் களைத்திருந்தேன். பேருந்தில் டிக்கெட் எடுக்க என்னிடம் காசில்லை.”
நேகாவும் ஒப்புக் கொண்டார். குளிர்சாதனம் அவரை சாந்தப்படுத்தியது. தலையை சாய்த்து, நெற்றியில் இருந்த வியர்வையை கைக்குட்டையில் துடைத்துக் கொண்டார். தண்ணீர் பாட்டிலை அவருக்குக் கொடுத்தார் அப்பெண்.
ஆனால் அந்த நிம்மதி விரைவிலேயே அச்சமாக மாறவிருந்தது. அந்த ஆண், வீடு இருக்கும் இடத்துக்கு எதிர்திசை நோக்கி காரை ஓட்டி சென்றார். நேகா கத்த முயன்று போராடினார். ஒரு மணி நேரத்துக்கு பிறகுதான் கார் நின்றது. போபாலுக்கு வந்துவிட்டனர். நேகா கடத்தப்பட்டிருந்தார்.
குழந்தைகள் காணாமல் போகும் எண்ணிக்கையில் மத்தியப்பிரதேசம் தொடர்ந்து முன்னணி வகிக்கிறது. 2016 தொடங்கி 2021 வரை, அம்மாநிலத்தில் அதிகாரப்பூர்வமாக 60,031 பேர் (தேசிய குற்றத் தரவுகள்) காணாமல் போயிருந்தனர். 2022-ல், 11,717 பேர் காணாமல்போனதாக தெரிவித்தது CRY என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் அனுப்பிய தகவல் அறியும் உரிமை மனுக்கு பெறப்பட்ட பதில். சராசரியாக வருடத்துக்கு 10,250 குழந்தைகள். அதாவது ஒருநாளுக்கு 28 பேர். இந்தியாவின் வேறெந்த மாநிலத்தைக் காட்டிலும் அதிக எண்ணிக்கை.




