டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் புகைப்படம் ஜார்கண்டில் உள்ள செச்சாரியா கிராமத்தில் உள்ள சவிதா தேவியின் மண் வீட்டு சுவரில் தெரிகிறது. “பாபாசாகேப் எங்களுக்கு [வாக்களிக்கும் உரிமையை] கொடுத்திருக்கிறார். அதனால்தான் நாங்கள் வாக்களிக்கிறோம்,” என்கிறார் சவிதா.
சவிதாவுக்கு ஒரு பிகா (0.75 ஏக்கர்) நிலம் உள்ளது. சம்பாப் பருவத்தில் நெல் மற்றும் மக்காச்சோளத்தையும், குறுவைப் பருவத்தில் கோதுமை, சுண்டல் மற்றும் எண்ணெய் வித்துக்களையும் பயிரிடுகிறார். வீட்டு முற்றத்தில் உள்ள நிலத்தில் காய்கறிகள் பயிரிட எண்ணியிருந்தார். ஆனால், இரண்டு ஆண்டுகளாக தண்ணீர் இல்லை. தொடர் வறட்சியால் அவரது குடும்பம் கடனில் தத்தளிக்கிறது.
முப்பத்திரண்டு வயதான சவிதா, தனது நான்கு குழந்தைகளுடன், பலமு மாவட்டத்தில் உள்ள இந்தக் கிராமத்தில் வசிக்கிறார். அவரது கணவரான 37 வயது பிரமோத் ராம், 2,000 கிலோமீட்டர் தொலைவில், புலம்பெயர் தொழிலாளியாக பெங்களூரில் பணிபுரிகிறார். "அரசாங்கம் எங்களுக்கு வேலை தருவதில்லை," என்று கூறும் சவிதா, ஒரு தலித் தினசரி கூலித் தொழிலாளி. "குழந்தைகளுக்கு உணவளிக்கக் கூட போதுமான வருமானம் இல்லை."
கட்டுமானத் தளங்களில் பணிபுரியும் பிரமோத், மாதம் சுமார் ரூ.10,000-12,000 சம்பாதிக்கிறார். சில நேரங்களில் அவர் ஒரு டிரக் டிரைவராகவும் பணிபுரிகிறார், ஆனால் அந்தப் பணி, வருடம் முழுவதும் கிடைப்பதில்லை. “வீட்டு ஆண்கள் நான்கு மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால், நாங்கள் பிச்சை எடுக்க வேண்டியது தான். வேறு என்ன செய்ய முடியும் [இடம்பெயர்வதை தவிர]?” என்று கேட்கிறார், சவிதா.
960 பேர் வசிக்கும் கிராமமான (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011) செச்சாரியாவில் உள்ள பெரும்பாலான ஆண்கள், "இங்கு வேலை வாய்ப்புகள் இல்லை," என வேலை தேடி வெளியேறுகிறார்கள். ”வேலை இருந்தால், மக்கள் ஏன் வெளியில் செல்ல வேண்டும்?” என கேட்கிறார், சவிதாவின் 60 வயதான மாமியார், சுர்பதி தேவி.












