நான்காம் நாள் நான் சென்றடைந்தேன். நான் சென்றபோது பிற்பகல் ஆகியிருந்தது.
சென்னையிலிருந்து வயநாடுக்கு சென்றபோது, தன்னார்வலர்கள் இயங்கும் பகுதிகளை கடந்து சென்றேன். பேருந்துகள் இல்லை. தெரியாதவர்களிடம் ‘லிஃப்ட்’ கேட்டு சென்றேன்.
அவசர ஊர்திகள் வந்து சென்று கொண்டிருந்த அந்த இடம் ஒரு போர்ச்சூழலை போல இருந்தது. கனரக கருவிகளின் உதவியில் மக்கள் மும்முரமாக சடலங்களை தேடிக் கொண்டிருந்தனர். சூரல்மலா, அட்டமலா மற்றும் முண்டக்கை டவுன்கள் முற்றிலும் அழிந்திருந்தன. வசிப்பிடம் என எதுவும் இல்லை. வசித்தவர்களின் வாழ்க்கைகள் சுக்குநூறாகி இருந்தது. உற்றாரின் சடலங்களை அவர்களால் அடையாளம் காணக் கூட முடியவில்லை.
ஆற்றங்கரைகளில் இடிபாடுகளும் சடலங்களும் குவிந்திருந்தது. உயிர் காக்கும் வீரர்களும் சடலங்களை தேடும் குடும்பங்களும் ஆற்றங்கரைகளினூடாக செல்கையில் புதையாமல் இருக்கும் பொருட்டு குச்சிகளை பயன்படுத்தி சென்றனர். என் கால் மண்ணுக்குள் சிக்கியது. சடலங்களை அடையாளம் காண முடியவில்லை. உடலின் அங்கங்கள்தான் சிதறிக் கிடந்தன. எனக்கு இயற்கையுடன் ஆழமான பிணைப்பு உண்டு. ஆனால் இந்த அனுபவம் பயங்கரமாக இருந்தது.
மொழி வித்தியாசத்தால், பேரழிவுக்கு வெறும் சாட்சியாக மட்டும்தான் நான் இருக்க முடிந்தது. அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்க ஒதுங்கிக் கொண்டேன். முன்பே வர நினைத்த எனக்கு உடம்பு முடியாமல் போய்விட்டது.
கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர், ஓடும் நீரை பின்தொடர்ந்து நடந்தேன். வீடுகள் புதைந்து கிடந்தன. பல அடையாளமே தெரியவில்லை. பார்க்கும் இடமெங்கும் தன்னார்வலர்கள் சடலங்களை தேடிக் கொண்டிருந்தனர். ராணுவமும் தேடுதல் பணியில் இருந்தது. இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன். அச்சமயத்தில் எந்த சடலுமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் தேடல் தொடர்ந்தது. அனைவரும் ஒன்றாக, தளராமல் பணி செய்து கொண்டிருந்தனர். தேநீர், உணவு போன்றவற்றை பகிர்ந்து கொண்டனர். ஒற்றுமை உணர்வு எனக்கு ஆச்சரியம் அளித்தது.































