“மேடாபுரத்தில் நாங்கள் உகாதி கொண்டாடுவது போல் வேறு எந்த இடத்திலும் கொண்டாடப்படுவதில்லை,” என்கிறார் பசலா கொண்டன்னா. 82 வயது விவசாயியான அவர், பெருமையுடன் தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி விழாவை விவரிக்கிறார். வழக்கமாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் வரும் விழா ஆந்திராவிலிருக்கும் அவரது கிராமத்தில் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீசத்யசாய் மாவட்டத்திலிருக்கும் மேடாபுரம் கிராமத்தில் கொண்டாடப்படும் விழாக்கு பட்டியல் சமூகம்தான் தலைமை தாங்குகிறது.
உகாதிக்கு முந்தைய இரவில் கடவுள் சிலையுடனான ஊர்வலத்துடன் விழா தொடங்குகிறது. குகையிலிருந்து கோவிலுக்கு சிலை கொண்டு செல்லப்படும் பயணம், பெரும் எதிர்பார்ப்புடனும் உற்சாகத்துடனும் பக்தர்களால் பார்க்கப்படுகிறது. 6,641 பேர் (கணக்கெடுப்பு 2011) வசிக்கும் மேடாபுரத்தில் பட்டியல் சாதியினர் சிறுபான்மை என்றாலும் கோவிலின் பொறுப்பில் இருக்கும் எட்டு பட்டியல் சாதி குடும்பங்கள்தான் விழாவில் பிரதான பங்கு வகிக்கிறது.
உகாதி அன்று, கிராமம் உயிர்கொள்கிறது. வண்ணமயமான அலங்காரங்களுடன் வண்டிகள் கொண்டாட்டத்தின் அடையாளமாக கோவிலை சுற்றி வருகின்றன. ஒருங்கிணைந்த சமூகத்தை அடையாளப்படுத்தும் வகையில் பக்தர்கள் பிரசாதம் விநியோகிக்கின்றனர். வரும் வருடத்துக்கான ஆசிர்வாதத்தை பெறுகின்றனர். வாகன ஊர்வலம் முடிவுறுகையில், பஞ்சு சேவை சடங்கு பிற்பகலில் நடக்கிறது. இச்சடங்கில், பங்குபெறுபவர்கள் ஊர்வலம் சென்ற அதே வழியில் செல்கின்றனர். முந்தைய இரவில் சென்ற பாதையை புனிதப்படுத்துகின்றனர்.
கிராமத்துக்கு சிலையை கொண்டு வந்த மொத்த சம்பவத்தின்போதும் மடிகா சமூகம் எதிர்கொண்ட ஒவ்வொரு போராட்டத்தையும் இந்த விழா மீட்டுருவாக்கம் செய்கிறது.
தமிழில் : ராஜசங்கீதன்