உழைக்கும் மக்கள் பிய்ந்து போன காலணிகளையும் பாதுகாத்து வைக்கிறார்கள். சுமை சுமப்பவர்களின் காலணிகள் பள்ளமாக இருக்கும். மரவெட்டியின் காலணிகளில் முட்கள் தைத்திருக்கும். என் சொந்த காலணிகளை நான் அடிக்கடி ஊக்கு குத்தி வைப்பேன்.
இந்தியா முழுவதுமான என் பயணங்களில் காலணிகளின் பல படங்களை பிடித்திருக்கிறேன். அவற்றின் கதையாடல்களையும் அவதானிக்கத் தொடங்கியிருக்கிறேன். அந்த காலணிகளின் கதைகள் வழியாக என் சொந்த பயணமும் வெளிப்படுகிறது.
சமீபத்தில் ஒடிசாவின் ஜெய்ப்பூருக்கு சென்றிருந்தபோது, பராபங்கி மற்றும் புராணமந்திரா கிராமங்களின் பள்ளிகளுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பழங்குடி மக்கள் கூடியிருக்கும் அறைக்கு வெளியே ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காலணிகளை எப்போதும் நான் பார்த்திருக்கிறேன்.
தொடக்கத்தில் நான் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. ஆனால் பயணம் தொடங்கிய மூன்று நாட்களில், பிய்ந்து போன காலணிகளையும் ஓட்டைகள் கொண்டவற்றையும் நான் கவனிக்கத் தொடங்கினேன்.
காலணியுடனான என்னுடைய உறவு மனதில் பதிந்திருக்கிறது. என் ஊரில் அனைவரும் V ஸ்ட்ராப் செருப்புகளை வாங்குவார்கள். எனக்கு 12 வயதான போது, மதுரையில் இவற்றின் விலை 20 ரூபாயாக இருந்தது. காலணிகள் எங்கள் வாழ்க்கைகளில் முக்கியம் என்பதால் எங்களின் குடும்பங்கள் அவற்றை வாங்க கடுமையாக உழைத்தது.
புது காலணிகள் விற்பனைக்கு வரும்போதெல்லாம், கிராமத்தில் இருக்கும் சிறுவர்களில் ஒருவன் அதை வாங்குவான். மிச்சமுள்ள நாங்கள் அனைவரும் அதை அவனிடமிருந்து கடன் வாங்கி, விழாக்களும் ட்ரிப்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கு அணிந்து கொள்வோம்.
ஜெய்ப்பூர் பயணத்துக்கு பிறகு, என்னை சுற்றி தென்படும் காலணிகளை அதிகம் நான் கவனிக்கத் தொடங்கினேன். சில ஜோடி செருப்புகள் என் கடந்த கால வாழ்க்கை சம்பவங்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றன. நானும் என் வகுப்புத் தோழர்களும் ஷூக்கள் அணியவில்லை என்பதற்காக வகுப்புக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டது நினைவில் இருக்கிறது.
காலணிகள் என் புகைப்படக் கலையையும் பாதித்திருக்கிறது. முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு பல காலமாக காலணிகள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாகதான் அவற்றை பற்றிய என் அவதானிப்பு தொடங்கியது. உழைக்கும் மக்களின் போராட்டத்தையும் இரவு பகல் பாராமல் உழைத்து தேயும் அவர்களின் காலணிகளையும் பிரதிபலிக்க எனக்கு விதையாக இருந்தது அந்த சிந்தனைதான்.
தமிழில் : ராஜசங்கீதன்