“என் தாயும் நானும் இது குறித்து நேற்று இரவு சண்டை போட்டோம்,” என்கிறார் 21 வயது ஆஷா பஸ்ஸி. “கடந்த மூன்றரை வருடங்களாக, கல்வியை நிறுத்திவிட்டு மணம் முடித்துக் கொள்ளும்படி என் பெற்றோர் என்னை சொல்லி வருகின்றனர்,” என்கிறார்.
யவத்மால் நகரத்திலுள்ள சாவித்ரி ஜோதிராவ் சமாஜ்கர்யா மகாவித்யாலயாவில் இறுதி ஆண்டு படிப்பு படித்துக் கொண்டிருக்கும் ஆஷா, சமூகப்பணியில் இளங்கலை பயின்று வருகிறார். குடும்பத்திலேயே முதன்முறையாக முறையான கல்வி பெறுபவர்களில் அவரும் ஒருவர். “இளம்வயதில் மணம் முடிக்கும் சிறுமிகள் பாராட்டப்படுகின்றனர்,” என்கிறார் அவர். “ஆனால் நான் கல்வி பெற விரும்புகிறேன். அது ஒன்று மட்டும்தான் என் விடுதலைக்கு வழி,” என்கிறார்.
மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்திலுள்ள ஜெவாலி கிராமத்தை சேர்ந்த ஆஷா சீர்மரபினராக வரையறுக்கப்பட்டிருக்கும் மதுரா லபன் சமூகத்தை சேர்ந்தவர். விவசாயிகளான அவரின் பெற்றோர் சோயா, பருத்தி, கோதுமை, தானியங்கள் போண்றவற்றை அவர்கள் கொண்டிருக்கும் நிலத்தில் விளைவிக்கின்றனர்.
மூன்று மகள்களையும் ஒரு மகனையும் வளர்க்க குடும்பம் விவசாயத்தை சார்ந்திருக்கிறது. ஆஷாதான் மூத்த மகள். யவத்மால் நகரில் தாய்மாமன் மற்றும் அத்தை ஆகியோருடன் வசித்து வருகிறார்.
வீட்டருகே இருக்கும் ஜில்லா பரிஷத் பள்ளியில் சில ஆசிரியர்கள் வற்புத்தியதன் பேரில் ஆஷாவின் பெற்றோர் ஏழு வயதாக இருக்கும்போது அவரை சேர்த்துவிட்டனர். அங்கு 3ம் வகுப்பு வரை படித்த அவர், பிறகு 112 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் யவத்மால் நகருக்கு இடம்பெயர்ந்தார். அங்கு அவர் மகாராஷ்டிரா மாநில பாடத்திட்டம் கொண்ட பள்ளியில் படித்து இறுதியில் அருகே இருந்த ஒரு கல்லூரியில் சேர்ந்தார்.
”எங்களின் சமூகத்தில் பெண்கள் 7ம் வகுப்பு வரை படிப்பது வழக்கம். அதற்குப் பிறகு மெல்ல அவர்களது படிப்பு நிறுத்தப்படும். மிகச் சிலர் மட்டும்தான் கல்லூரி வரை செல்வார்கள்,” என்கிறார் ஆஷா. அவரின் தங்கையும் கூட மூன்று வருடங்களுக்கு முன் மணம் முடித்து வைக்கப்பட்டார்.
”எங்களின் சமூகம் பழமைவாதம் மிகுந்த சமூகம்,” என்கிறார் அவர். வேறு சாதி மணம் அல்லது காதல் மணம் போன்றவை குறித்த அச்சமும் சீக்கிரம் பெண்களை மணம் முடித்து கொடுத்து விட காரணமாக இருக்கிறது. “காதலனோடு ஒரு பெண் ஓடிப் போய்விட்டால், அவளின் தோழிகளின் படிப்பும் நிறுத்தப்படும்,” என்கிறார் ஆஷா. “எனக்கு தெரிந்து எங்கள் சமூகப் பெண்கள் எவரும் வேறு சாதியில் மணம் முடிக்கவில்லை.”
கோவிட் தொற்று சமயத்தில் மணம் முடிப்பதற்கான அழுத்தம் அதிகமானதாக ஆஷா கூறுகிறார். அச்சமயத்தில் அவர் ஜெவாலி கிராமத்திலுள்ள அவரது வீட்டில் இருந்தார். சில மணமகன்கள் கூட வந்து பார்த்து சென்றனர். “தொற்று சமயத்தில் எங்கள் பகுதியின் 30-க்கு மேற்பட்ட 21 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் மணம் முடித்து வைக்கப்பட்டனர்,” என்கிறார் ஆஷா.
ஜெவாலியில் சிறுமிகள் மேற்படிப்பு படிக்க வைக்கப்படாததால், திருமணத்தை தள்ளிப் போட, கல்வி ஒரு காரணமாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. “என்னுடைய தங்கை மணம் முடித்ததாலும் நான் முடிக்காததாலும், என்னை அனைவரும் சந்தேகத்துடன் பார்க்கின்றனர்,” என்கிறார் ஆஷா.
“என்ன (கல்விக்கு) நான் செய்தாலும், நானேதான் செய்து கொள்கிறேன்,” என்கிறார் ஆஷா அதிருப்தியோடு. மேற்படிப்பு படிப்பது குடும்பத்திலேயே அவர்தான் முதல் நபர் என்பதால், குடும்பத்தினர் அவருக்கு அதிகம் உதவி செய்யவில்லை. அவரின் தந்தை, பால்சிங் பஸ்ஸி 11ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். தாய் விமல், 5ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். “இப்போது கூட, நான் பெண் என்பதால் என் கல்வியிலிருந்து அவர்கள் பெரிய எதிர்பார்ப்பை கொண்டிருக்கவில்லை,” என்கிறார் ஆஷா. கல்வி பெறுதல் உடல் மற்றும் மனப் போராட்டம் கொண்டதாக இருப்பதாக சொல்கிறார் அவர்.
“என் கல்விக்கு குடும்பத்தில் யாரும் உதவவில்லை,” என்கிறார் ஆஷா. “என் தாய், ‘நீ படி, நான் பார்த்துக் கொள்கிறேன்,’ என சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.” ஆனால் அவர் கல்வி பெறுவதற்கு பெரும் தடையாக இருப்பதே தாய்தான் என்கிறார்.
ஜெவாலிக்கு அருகாமையில் இருக்கும் கல்லூரி 12 கிலோமீட்டர் தொலைவில் பிட்டர்காவோன் கிராமத்தில் இருக்கிறது. “பள்ளிக்காக தூரமாக மகள்கள் செல்வது பாதுகாப்பாக இருக்காது என பெற்றோர் நினைக்கின்றனர். எனவே சிறுமிகள் வழக்கமாக குழுவாகதான் செல்வார்கள்,” என்கிறார் ஆஷா. “ஒரு சிறுமி படிப்பை நிறுத்தினால், மற்ற சிறுமிகளின் பெற்றோர் அவர்களின் மகள்களையும் படிப்பை நிறுத்த சொல்லி விடுவார்கள்.”
பள்ளிப் படிப்புக்காக யவத்மால் நகருக்கு வருவது எத்தனை சிரமமாக இருந்தது என்பதை ஆஷா நினைவுகூருகிறார். அவர் பேசிய மதுரா லபன் வட்டார வழக்கு, பள்ளியில் கல்வி வழங்கப்படும் மராத்தியிலிருந்து வேறுபட்டது. வகுப்பிலோ பள்ளி நிகழ்வுகளிலோ பங்கு பெறுவது இதனால் சிக்கலாக இருந்தது. “என் பேச்சை வகுப்புத் தோழர்கள் கிண்டல் செய்வார்கள்,” என்கிறார் ஆஷா. “என் பாணி பேச்சை பேசினால் அவர்கள் சிரிப்பார்களென்ற பயம் எனக்கு இருந்தது.”
அந்த தயக்கம் ஆஷாவின் வளர்ச்சியை வகுப்பறையில் தடுத்தது. “6ம் வகுப்பு வரை மராத்தி எழுத்துகள் மட்டும்தான் எனக்கு எழுதத் தெரியும். முழு வாக்கியங்களை எழுதத் தெரியாது. குத்ரா (நாய்) மற்றும் மஞ்சார் (பூனை) போன்ற சாதாரண வார்த்தைகள் கூட 5ம் வகுப்பு வரை என்னால் வாசிக்க முடியாமல் இருந்தது.”
ஆனால் அவரின் சந்தேகங்கள் யாவும் மகாராஷ்டிரா மாநிலப் பாடத்திட்டத்தின் கீழான பத்தாம் வகுப்புப் பள்ளித் தேர்வில் (SSC) 79 சதவிகிதம் எடுத்ததும் நீங்கியது. மேலே படிக்க தாய்மாமாவை இணங்க வைக்கவும் அது உதவியது. 12ம் வகுப்பில் அவர் 63 சதவிகிதம் எடுத்து தேர்ச்சி அடைந்தார்.
ஆஷாவின் கல்வி சாதனைகள் இன்னுமே கூட அவரை சுற்றியிருப்பவர்களுக்கு பெரிய விஷயமாக இருக்கவில்லை. “என் பெற்றோர், தம் மகள் நகரத்தில் பட்டப்படிப்பு படிக்கிறாள் என்பதில் இன்னும் கூட பெருமை கொள்ளவில்லை. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை எங்களின் சமூகத்தில் இது வீண்.”
சீக்கிரமே மணம் முடிக்கும் போக்கு கல்வி சார்ந்த உற்சாகத்தை இளம்பெண்களிடம் இல்லாமலாக்கி விடுகிறது. “16 வயதில் உறுதியாக மணம் முடித்து கொடுக்கப்படுவார்கள் என்கிற நிலையில், கல்வி கற்க ஏன் சிறுமிகள் உழைக்க வேண்டும்?” எனக் கேட்கிறார் ஆஷா. இருந்தும் அவரின் லட்சியங்கள் கனன்று கொண்டுதான் இருக்கிறது. கல்வி தரக்கூடிய ஆதாயங்கள் குறித்த விழிப்புணர்வு கொண்டிருக்கும் அவர், “பாதுகாப்பான எதிர்காலம் குறித்து நான் கனவு காண முடிவதற்கு கல்விதான் காரணம்,” என்கிறார்.
ஆஷாவுக்கு படிக்க பிடிக்கும். சரிதா அவ்ஹாதின் ஹம்ராஸ்தா நகர்தனா மற்றும் சுனிதா பார்டேவின் ஃபின்றி போன்ற விளிம்புநிலை பெண்கள் பற்றிய புத்தகங்கள் அவருக்கு பிடித்தவை. பெண்கள் கல்வியில் முதுகலை பட்டம் பெற விரும்புகிறார். சோனிபட்டின் அஷோகா பல்கலைக்கழகத்தின் யங் இந்தியா மானியப் பணியாளராக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
யவத்மால் நகரத்துக்கு சென்றது, ஆஷாவின் நம்பிக்கையை பெரியளவில் வளர்த்தெடுத்தது. “என் உறவினர்களுக்கு என்னுடைய சமூகப்பணி பட்டம் ஒரு பொருட்டாக இல்லையென்றாலும், எனக்கு அது பெரும் பலன்களை அளித்தது,” என்கிறார் அவர். ஜெவாலியில் ஆஷாவின் மதுரா லபன் சமூகத்தை சேர்ந்த குடும்பங்கள் மொத்தமாக டாண்டே என அழைக்கப்படுகிறது. இவை வழக்கமாக ஊருக்கு வெளியே இருக்கும். “இந்தத் தனிமைப்படுத்துதலால், நவீன முற்போக்கு சிந்தனையுடனான தொடர்பு எங்களுக்கு ஏற்படாமலே இருக்கிறது,” என்கிறார் ஆஷா. கல்லூரியில் இருக்கும் ஆசிரியர்கள் - குறிப்பாக அவருக்கு மராத்தி கற்றுக்கொடுத்த கன்ஷியாம் டரானே பேராசிரியர் - அவரின்பால் சிரத்தை எடுத்து வழிகாட்டுகின்றனர்.
“பெண்களால் ஒன்றையும் சாதிக்க முடியாது என்கிற நம்பிக்கை பரவலாக இருக்கிறது,” என்கிறார் ஆஷா கோபத்தோடு. “அதை நான் மாற்ற விரும்புகிறேன்,” என்னும் அவர், “நான் பெரிய ஆளாக ஆனதும் என் கிராமத்துக்கு திரும்பி வந்து, பெண்களுக்கான முற்போக்கு மாற்றத்தை கொண்டு வருவேன். நான் ஓடிப் போக விரும்பவில்லை,” என்கிறார்.
ஆனால் அதற்கு முன், நெருங்கிக் கொண்டிருக்கும் திருமண காலத்தில் மணம் முடித்து வைப்பதற்கான அழுத்தத்தை அவர் சமாளிக்க வேண்டும். “எதிர்த்து நிற்க நிறைய வலிமை தேவைப்படுகிறது,” என்கிறார் ஆஷா.
தமிழில்: ராஜசங்கீதன்