"ஆங்கிலம்" என்று வகுப்பில் உள்ள அனைத்து குழந்தைகளும் ஒரு சேர சொன்னார்கள். நாங்கள் அவர்களிடம் உங்களுக்கு பிடித்த பாடம் எது என்று தான் கேட்டோம். இந்திய வகுப்பறையில் கேட்கப்பட வேண்டிய புத்திசாலித்தனமான கேள்வி இது அல்ல. முதலில் இரண்டு குழந்தைகள் "ஆங்கிலம்" என்று சொன்னால் மொத்த வகுப்பறையும் அதைத் தான் சொல்லும். முதல் இரண்டு குழந்தைகள் அவர்களது பதிலுக்காக தண்டிக்கப்படவில்லை என்றால் அப்படியே நாமும் செல்வோம் என்று பதில் கூறுவர்.
ஆனால் இது வேறு எந்த இடமும் அல்ல. எடலிபராவில் உள்ள ஒற்றை ஆசிரியர் கொண்ட ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு திட்ட பள்ளி. இது கேரளாவின் தொலைதூர மற்றும் ஒரே பழங்குடி பஞ்சாயத்தான எடமால்குடியில் அமைந்துள்ளது. பள்ளிக்கு வெளியே எங்கும் ஆங்கிலம் பேசுவதை நீங்கள் கேட்க முடியாது. அந்த மொழியில் பலகைகளையோ, சுவரொட்டிகளையோ அல்லது அடையாளக் குறியீடுகளையோ கூட கண்டுபிடிப்பது கடினம். இருப்பினும், அது தான் தங்களுக்கு பிடித்தமான பாடம் என்று குழந்தைகள் கூறுகின்றனர். பல பள்ளிகளை போலவே, இடுக்கி மாவட்டத்தில் உள்ள இந்த பள்ளியிலும் 1 முதல் 4 வகுப்புகளில் வரை உள்ள மாணவர்களை ஒரே அறையில் வைத்து பள்ளி நடைபெறுகிறது. உண்மையிலேயே, ஒரு அற்புதமான ஆசிரியையின் தலைமையில், ஆனால் மிகக் கடுமையான குறைந்த ஊதியம் வழங்கப்படுகின்ற, அதேவேளையில் அதிக வேலைப்பளு, சாத்தியமற்ற நிலைமைகளை எதிர்த்துப் போராடுவது போன்ற சூழ்நிலையிலும் அவர் தன்னுடைய மாணவர்களை அர்ப்பணிப்புடன் கவனித்துக் கொள்கிறார்.
அதிலும் கூட ஒரு எதிர்ப்புணர்வு கொண்ட ஒரு குழந்தை இருந்தது. "கணக்கு" என்று அவன் தைரியமாக கூறி முன் வந்தான். உனது கணித திறமையை எங்களுக்கு காட்டு என்று நாங்கள் அவனிடம் கேட்டோம். அவன் தைரியமாக நெஞ்சை நிமிர்த்தி 1 முதல் 12 வரை உள்ள வாய்ப்பாட்டை மூச்சு விடாமல் கூறி முடித்தான். கைத்தட்டல்களுக்காக கூட நிற்கவில்லை. அவனை நாங்கள் நிறுத்தச் சொல்லும் போது அவன் இரண்டாவது தடவையாக ஒப்பிக்க ஆரம்பித்துவிட்டான்.





