”முதலில் ஒரு ஹங்குலை பார்த்தபோது, பரவசத்தில் அசையாமல் நான் நின்று விட்டேன்,” என நினைவுகூருகிறார் ஷபிர் ஹுசேன் பட். மீண்டும் மீண்டும் அதே இடத்திற்கு சென்று அந்த மான் வகையை பார்த்து விட முயன்றிருக்கிறார். காஷ்மீரை சேர்ந்த அந்த மான்வகை, அருகி வருகிற இனமாகும்.
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகும் கூட, 141 சதுர கிலோமீட்டர் பரப்பளவு பூங்காவிலுள்ள விலங்குகள், பறவைகள், மரங்கள் மற்றும் பூக்கள் ஆகியவற்றின் மீதான பரவசம குறையவில்லை என்கிறார் ஷபிர். “நிச்சயமாக ஹங்குல்தான் எனக்குள் ஆர்வம் கிளம்பக் காரணம். இமயத்தின் கருங்கரடி கூட ஆர்வத்தைத் தூண்டியது.”
பூங்காவில் அவர் செல்லமாக ‘தச்சிகமின் அகராதி’ என குறிக்கப்படுகிறார். “இதுவரை 400 வகை செடிகளையும் 200 பறவை வகைகளையும் கிட்டத்தட்ட எல்லா விலங்கு வகைகளையும் நான் அடையாளம் கண்டிருக்கிறேன்,” என்கிறார் அவர். இப்பூங்காவில் கஸ்தூரி மான், இமய பழுப்புக் கரடி, பனிச் சிறுத்தை, தங்கக் கழுகு ஆகிய வன விலங்குகளும் இருக்கின்றன.
















