மாட்டுச்சாணம், களிமண் மற்றும் மூங்கில் ஆகியவை இங்கு மஜுலியில் முகமூடி தயாரிக்க ஒன்றாகின்றன. பிரம்மபுத்திராவின் இத்தீவில் பல தலைமுறைகளாக கலைஞர்களால் செய்யப்பட்டு வரும் கலை இது. “எங்கள் கலாசாரத்தில் முகமூடிகள் முக்கியமானவை. அவற்றை செய்யும் கடைசி குடும்பம் நாங்கள்தான்,” என்கிறார் கைவினைஞரான அனுபம் கோஸ்வாமி. இங்கு தயாரிக்கப்படும் எளிய மற்றும் நுட்பமான முகமூடிகள், இத்தீவில் கொண்டாடப்படும் வருடாந்திர நிகழ்வுகளிலும் நாடு முழுக்க நடக்கும் பல விழாக்களிலும் அணியப்படுகின்றன.
”என் குடும்ப பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்ல நான்தான் பொறுப்பு,” என்கிறார் 25 வயது அனுபம். அவரின் குடும்பம் இதை பல தலைமுறைகளாக செய்து வருகிறது. ஒன்பது பேர் கொண்ட குடும்பத்தில் அனைவரும் இக்கலையில் ஈடுபடுகின்றனர்.
“பல சுற்றுலாவாசிகள் உலக நாடுகளிலிருந்து மஜூலிக்கு வருகின்றனர். முகமூடிகளை நினைவுப் பரிசாக வாங்கி செல்கின்றனர்,” என்கிறார் திரன் கோஸ்வாமி. அவர் அனுபமின் 44 வயது மாமா. பல அளவுகளிலான முகமூடிகளை அவர் குடும்பத்துக்கு சொந்தமான கடையில் விற்கிறார். ஒரு முகமூடியின் விலை ரூ.300. பெரிய, பிரத்யேக வேலைப்பாடுகளுடன் கூடிய முகமூடிகளின் விலை ரூ.1000 வரை கூட செல்லும்.
மஜுலி இந்தியாவின் பெரிய ஆற்றுத் தீவு. ‘அசாமிய வைணவ மதத்தின் நரம்பாக கருதப்படுகிறது. 62 சத்திரங்கள் (வைணவ மடங்கள்) இருந்த கலாசாரம் கொண்டது’ என சுட்டிக் காட்டுகிறது 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு.












