நுட்பமாக நெய்யப்படும் கமால்கோஷ் பாய் கலையை கொண்டாடுபவர் சிலர் உண்டு.
அதை நெய்பவர்களும் சிலர் உண்டு.
மேற்கு வங்கத்தின் கூச் பெகார் மாவட்டத்தில், உரிக்கப்பட்ட பிரம்பின் தோல் துண்டுகளை கொண்டு செய்யப்படும் இந்த நுட்பமான பிரம்பு பாய்கள், அவை கொண்டிருக்கும் பண்பாட்டு வடிவங்களுக்காக பிரபலமானவை.
“பாரம்பரிய கமால்கோஷ் பாய், மங்களகரமான கோலா காச் (வாழை மரம்), மயூர் (மயில்), மங்கல் காட் (தேங்காய் ஜாடி), ஸ்வஸ்திக் (ஆரோக்கியத்துக்கான குறியீடு) போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்,” என்கிறார் பிரபாதி தார்.
இந்த வடிவங்களை நெய்யும் வெகுசில கமால்கோஷ் நெசவாளர்களில் பிரபாதியும் ஒருவர். 10 வயதிலேயே அவர் இந்த வேலையைத் தொடங்கி விட்டார். “இந்த கிராமத்தில் இருக்கும் (கெகிர்காட் கிராமம்) அனைவரும் இளம் வயதில் இருந்தே பாய் நெய்யத் தொடங்கி விடுவார்கள்,” என்கிறார் 36 வயதாகும் அவர். “என் தாய் கமால்கோஷை பகுதிப் பகுதியாகதான் நெய்வார். ஆனால் என் தந்தை வடிவம் நெய்வதில் திறன் கொண்டவர். நன்றாக விளக்கவும் செய்பவர். ‘இந்த வடிவத்தை இப்படி நெய்,’ என நன்றாக விளக்கக் கூடியவர். அவர் நெசவாளர் இல்லையென்றாலும், அந்த விளக்கங்களிலிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாக பிரபாதி நினைக்கிறார்.
கெகிர்காட்டிலுள்ள அவரது வீட்டின் வராண்டாவில் நாம் அமர்ந்திருக்கிறோம். தாழ்வாரத்தில்தான் நெசவாளர்கள் வேலை செய்ய விரும்புவார்கள். சுற்றியிருக்கும் அவரின் குடும்பத்தினர் வேலை சார்ந்த பல பணிகளை செய்து உதவுகின்றனர். பாயின் இழைகளுக்குள் வடிவங்கள் நெய்வதை அவராக சிந்தித்து நெய்வார். “எங்களின் நினைவிலிருந்து இவற்றை செய்ய பழகி விட்டோம்,” என்கிறார் அவர்.


























