அக்டோபர் பாதியிலிருந்து டிசம்பர் வரை மேற்கு வங்கத்தில் வசிக்கும் பாபன், பிறகு பிகாருக்கு குறைந்த காலம் திரும்புகிறார். மீண்டும் பிப்ரவரி மாதத்தில், அவர் அஸ்ஸாமின் தேயிலைத் தோட்டங்களுக்கு புலம்பெயர்ந்து அடுத்த ஆறிலிருந்து எட்டு மாதங்களுக்கு வசிக்கிறார். ”அஸ்ஸாமில் நான் செல்லாத இடமே இல்லை. திப்ருகர், தேஜ்பூர், தின்சுகியா, கோலாகத், ஜோர்ஹாத், குவஹாத்தி எனப் பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன்,” என பெயர்களை பட்டியலிடுகிறார்.
அஸ்ஸாமில் அவர் தயாரிக்கும் மூங்கில் கூடைகளுக்கு தோகோ என பெயர். துலியோடு ஒப்பிடுகையில், தோகோ உயரம் குறைவு. மூன்றடிதான். தேயிலை பறிக்க உதவுபவை. ஒரு மாதத்தில் 400 கூடைகள் வரை அவர் தயாரிக்கிறார். பெரும்பாலான தேயிலை தோட்டங்கள் ஆர்டர் கொடுத்து, வசிப்பிடமும் மூங்கிலும் கொடுக்கின்றன.
“மூங்கில் வேலை செய்திருக்கிறேன். மண் வேலையும் செய்திருக்கிறேன். மாட்டுச் சாணத்திலும் வேலை செய்திருக்கிறேன். விவசாயம் பார்க்கிறேன். கொஞ்ச காலம் ஐஸ் விற்று கூட பிழைத்திருக்கிறேன்,” என்கிறார் பாபன், வருடம் முழுக்க தான் செய்யும் வேலைகளை குறிப்பிட்டு.
அஸ்ஸாமில் கூடை ஆர்டர்கள் குறைந்ததும் அவர் ராஜஸ்தானுக்கோ டெல்லிக்கோ செல்வார். ஐஸ் க்ரீம் விற்பார். அவரின் கிராமத்தை சேர்ந்த பிறரும் இந்த வேலை செய்கின்றனர். எனவே தேவைப்படும்போது அவர்கள் செல்லும் வண்டியில் அவர் ஏறிக் கொள்கிறார். “ராஜஸ்தான், டெல்லி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய இடங்களுக்கு இடையேதான் என் மொத்த வாழ்க்கையும் நடக்கிறது,” என்கிறார் அவர்.