வீட்டின் ஜன்னலிலிருந்து பார்க்கும் தூரம் வரை, எங்கும் நீர்தான். இந்த வருட வெள்ளம் இன்னும் வடியவில்லை. ருபாலி பெகு, சுபன்சிரி ஆற்றிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் வாழ்கிறார். பிரம்மப்புத்திராவின் துணை ஆறான சுபன்சிரி, வருடந்தோறும் அஸ்ஸாமின் நிலப்பரப்புகளில் வெள்ளச்சேதத்தை ஏற்படுத்துகிறது.
சுற்றுப்பகுதி முழுக்க நீர் இருந்தாலும் குடிநீர் கிடைக்கவில்லை என்கிறார் அவர். அஸ்ஸாமின் லகிம்பூர் மாவட்டத்டின் போர்துபி மலுவால் கிராமத்தில் இருக்கும் குடிநீர் அசுத்தமாக இருக்கிறது. “எங்கள் ஊரின் அடிகுழாய்களில் பெரும்பாலானவை நீரில் மூழ்கி கிடக்கிறது,” என விளக்குகிறார் ருபாலி.
சாலைக்கருகே இருக்கும் அடிகுழாயில் நீர் எடுக்க அவர் ஒரு சிறு படகில் செல்கிறார். மூன்று பெரிய ஸ்டீல் பாத்திரங்களுடன், ருபாலி சாலையை நோக்கி படகில் செல்கிறார். சாலையும் ஒரு பகுதி மூழ்கி கிடக்கிறது. ஒரு பெரிய மூங்கில் குச்சியை பயன்படுத்தி அவர் படகை வெள்ளத்தினூடாக செலுத்துகிறார். “மோனி, என்னோடு வா!” என அவர் பக்கத்து வீட்டுக்காரரை அழைக்கிறார். இருவரும் பாத்திரங்களை நிரப்ப ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வார்கள்








