மார்பக மறுவடிவமைப்பு அறுவை சிகிச்சை பற்றி விசாரிக்க ஹரியானாவின் ரோதாக் மாவட்டத்தின் அரசு மருத்துவமனைக்கு 18 வயது சுமிதி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) முதன்முறையாக சென்றபோது, தீக்காயம் பட்ட நோயாளியாக முதலில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.

இந்தியாவின் திருநர் தங்களின் விருப்பத்துக்குரிய பாலினத் தேர்வுக்கான அறுவை சிகிச்சையை பெற, மருத்துவமனை கொண்டிருக்கும் பல செயல்முறைகளை எளிதாக கடப்பதற்கென சொல்லப்படுகிற ஒரு பொய். ஆனாலும் அந்தப் பொய் உதவவில்லை.

எட்டு வருட ஆவண சேகரிப்பு, முடிவுறா உளவியல் பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள், ஒரு லட்சத்துக்கும் மேலான கடன், குலைந்து போன குடும்ப உறவுகள், முன்னாள் மார்பகங்கள் மீதான வெறுப்பு என பெரும் அலைக்கழிப்புக்கு பிறகு ‘டாப் சர்ஜரி’ என அழைக்கப்படும் அறுவை சிகிச்சையை ரோதாக்கிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஹிசாரின் தனியார் மருத்துவமனையில் செய்து கொண்டார் சுமிதி.

ஒன்றரை வருடங்கள் கழிந்து விட்டது. 26 வயது சுமிதி நடக்கும்போது இன்னும் கூன் போட்டுதான் நடக்கிறார். அறுவை சிகிச்சைக்கு முந்தைய காலத்தில், மார்பகம் கொடுத்த அவமானம் மற்றும் சிரமம் ஆகியவற்றால் ஏற்பட்ட பழக்கம் அது.

இந்தியாவில் சுமிதிதை போல வேறு பாலினம் கொண்டு தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் எத்தனை பேர் என்பதை குறித்த சமீபத்திய கணக்கெடுப்பு எதுவுமில்லை. தேசிய மனித உரிமை ஆணையத்துடன் இணைந்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 2017ம் ஆண்டில் இந்தியாவில் திருநரின் எண்ணிக்கை 4.88 லட்சம் .

2014 National Legal Services Authority v. Union of India case வழக்கில், “மூன்றாம் பாலினத்தவரை” அங்கீகரித்து, அவர்களாகவே தங்களின் பாலினத்தை “அடையாளம் காணும்” உரிமையையும் அங்கீகரித்து, அவர்களுக்கான மருத்துவத்தை அரசாங்கம் அளிக்க வேண்டுமென தீர்ப்பை வழங்கியது. ஐந்து வருடங்களுக்கு பிறகு, பாலினம் உறுதிபடுத்தும் அறுவை சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை, உளவியல் சேவைகள் உள்ளிட்ட முழுமையான மருத்துவச் சேவைகளை அரசாங்கங்கள்  அச்சமூகத்தினருக்கு வழங்குவதை திருநர் உரிமை சட்டம், 2019 உறுதி செய்தது.

PHOTO • Ekta Sonawane

சுமித், பிறப்பால் ஒரு பெண். ஹரியானாவின் ரோதாக் மாவட்டத்தில் பிறந்தார். மூன்று வயதிலேயே பாவாடைகள் அணியும்போது அடைந்த பதட்டத்தை சுமித்தால் நினைவுகூர முடிகிறது

சட்டரீதியான இந்த மாற்றங்களுக்கு முந்தைய வருடங்களில், அறுவை சிகிச்சையின் வழியாக பாலின மாற்றத்துக்கான வாய்ப்பு (பாலினம் உறுதி செய்யும் அறுவை சிகிச்சை) பல திருநருக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. அதில் முக அறுவை சிகிச்சையும் மார்பு அல்லது பாலுறுப்புகளை மாற்றும் ‘மேல்’ அல்லது ‘கீழ்’ அறுவை சிகிச்சைகளும் அடக்கம்.

எட்டு வருடங்களாக சுமித்தால் இந்த அறுவை சிகிச்சையை பெற முடியவில்லை. 2019ம் ஆண்டுக்கு பிறகும் பெற முடியவில்லை.

ஹரியானாவின் ரோதாக் மாவட்டத்தின் தலித் குடும்பத்தில் பெண் குழந்தையாக பிறந்த சுமிதி, உடன் பிறந்த மூன்று பேருக்கும் பெற்றோர் ஸ்தானத்தில் இருந்தவர். முதல் தலைமுறை அரசுப் பணியாளரான சுமித்தின் தந்தை, பெரும்பாலும் வீட்டில் தங்குவதில்லை. சுமித்தின் பெற்றோருக்குள் சுமூகமான உறவு கிடையாது. அவரின் தாத்தா, பாட்டி தினக்கூலி விவசாயத் தொழிலாளர்களாக இருந்து சுமிதி இளைஞராக இருந்தபோது இறந்து விட்டனர். விளைவாக, பெண் என்பதால் வழக்கமாக விழும் பெண்ணின் கடமைகள் சுமிதிதின் மீது மூத்த மகள் என்பதால் விழுந்தன. ஆனால் சுமிதிதின் அடையாளத்துடன் அது பொருந்தவில்லை. “அந்த பொறுப்புகள் எல்லாவற்றையும் ஓர் ஆனாக நான் நிறைவேற்றினேன்,” என்கிறார் அவர்.

மூன்று வயதிலேயே, பாவாடை அணியும்போது ஒரு வகை பதற்றம் ஏற்பட்டதை சுமிதி நினைவுகூருகிறார். நல்வாய்ப்பாக, ஹரியானாவின் விளையாட்டு பண்பாடு ஓரளவு ஆறுதல் அளித்தது. பெண் குழந்தைகள் பொதுவான, சமயங்களில் ஆண்களின் விளையாட்டு உடைகளை கூட அணியும் வாய்ப்பு இருந்தது. “விரும்பிய உடைகளை எப்போதும் நான் அணிந்திருக்கிறேன். என்னுடைய (டாப்) அறுவை சிகிச்சைக்கு முன்பே நான் ஓர் ஆணாக வாழ்ந்திருக்கிறேன்,” என்னும் சுமிதி, அதே நேரத்தில் ஏதோ ஒரு விஷயம் இல்லாததை போல் உணர்ந்ததாகவும் கூறுகிறார்.

13 வயதில், தான் விரும்பும் வகையில் ஓர் ஆணின் உடலை வரித்துக் கொள்ள வேண்டுமென்கிற ஆவல் சுமித்தை ஆக்கிரமித்தது. “நான் ஒல்லியாக இருந்தேன். மார்பகத்துக்கான திசு குறைவாகவே இருந்தது. ஆனால் அவமானப்படுவதற்கு காரணமாக அது மட்டும் இருக்கவில்லை,” என்கிறார் அவர். பாலினமும் பாலின விருப்பமும் வேறு வேறாக இருப்பதால் ஏற்படும் குழப்பவுணர்வை குறித்து தகவல் கொடுக்கக் கூட யாரும் அவருக்கு இல்லை.

ஒரு நண்பர் உதவிக்கு வந்தார்.

ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் சுமித் வாழ்ந்து வந்தார். உரிமையாளரின் மகளுடன் நண்பர் ஆனார். இணைய வசதி கொண்டிருந்த அவர், மார்பக அறுவை சிகிச்சை குறித்த தகவலை பெற உதவினார். மெல்ல பல அளவுகளிலான குழப்பத்துடன் இருந்த திருநருடன் பள்ளியில் சுமிதிதுக்கு தொடர்பு ஏற்பட்டது. அடுத்த ஐந்து வருடங்களுக்கு அந்த பதின்வயது இளைஞர், இணையத்திலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் தகவல்களை பெற்றார். பிறகு மருத்துவமனைக்கு செல்வதற்கான தைரியத்தை உருவாக்கிக் கொண்டார்.

2014ம் ஆண்டில் 18 வயது சுமித், வீட்டுக்கருகே இருக்கும் ஒரு பெண்கள் பள்ளியில் 12ம் வகுப்பு முடித்தார். தந்தை வேலைக்கு சென்றிருந்தார். தாய் வீட்டில் இருந்தார். தடுக்க யாருமில்லாத நிலையில் தனியாக அவர் ரோதாக் மாவட்ட மருத்துவமனைக்கு சென்று தயக்கத்துடன் மார்பக அகற்றம் அறுவை சிகிச்சை குறித்து விசாரித்தார்.

PHOTO • Ekta Sonawane

திருநம்பிகளுக்கான சாத்தியங்கள் மிகக் குறைவாக இருக்கிறது. அவர்களுக்கான பாலின உறுதி அறுவை சிகிச்சைகளுக்கு பெண்ணியல் நோய் மருத்துவர், சிறுநீரக மருத்துவர், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர் ஆகியோர் தேவைப்படுவர்

அவருக்கு கிடைத்த பதிலின் பல அம்சங்கள் முக்கியமானவை.

தீக்காயம் பட்ட நோயாளியாக அனுமதி பெற்றால்தான் மார்பக நீக்க அறுவை சிகிச்சை அவர் பெற முடியும்.பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்கள், தீக்காயத்துக்கான இலாகாவின் வழியாக கொண்டு செல்லப்படுவது அரசாங்க மருத்துவமனைகளில் வழக்கம். ஆனால் சுமித் வெளிப்படையாக ஆவணத்தில் பொய் சொல்ல வேண்டுமென நிர்பந்திக்கப்பட்டு, தீக்காயம் ஏற்பட்ட நோயாளியாக பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டார். பணம் ஏதும் அவர் தர வேண்டியதில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் மார்பக நீக்க அறுவை சிகிச்சைக்கோ தீக்காய அறுவை சிகிச்சைக்கோ அரசாங்க மருத்துவமனைகள் பணம் வாங்கக் கூடாது என எந்த விதியும் இல்லை.

இந்த காரணம் கொடுத்த நம்பிக்கையில்தான் அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு மருத்துவமனை சென்று வந்து கொண்டிருந்தார் சுமிதி. ஆனால் அவர் வேறொரு விலை கொடுக்க வேண்டியிருந்தது. உளவியல்ரீதியிலான விலை.

“அங்கிருந்த மருத்துவர்கள் மிகவும் பாரபட்சமாக இருந்தார்கள். நான் கற்பனை செய்து கொள்வதாக சொன்னார்கள். ‘எதற்கு அறுவை சிகிச்சை?’ என்றும் ‘நீ விரும்பும் பெண்ணுடன் இப்படியே நீ இருந்து கொள்ளலாமே’ என்றும் சொன்னார்கள். அவர்களில் ஆறேழு பேர் கேட்ட கேள்விகளால் நான் அச்சுறுத்தப்பட்டேன்,” என நினைவுகூருகிறார் சுமித்.

“500-700 கேள்விகள் கொண்ட படிவங்களை இரண்டு-மூன்று முறைகள் நிரப்பிய ஞாபகம் இருக்கிறது.” கேள்விகள் நோயாளியில் உடல்நலம், குடும்பம், உளநலம், போதைப் பழக்கங்கள் குறித்து இருந்தன. ஆனால் இளம் சுமித்துக்கு, தவிர்ப்பதற்காக அது செய்யப்படுவதாக தோன்றியது. “என் உடலால் எனக்கு சந்தோஷமில்லை என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதற்குதான் நான் அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்பினேன்,” என்கிறார் அவர்.

பரிவு இல்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்திய திருநர் சமூகத்துக்கு பாலின உறுதி அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவத்தை அளிக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளன.

ஆணிலிருந்து பெண்ணுடலுக்கு மாறும் அறுவை சிகிச்சையில் இரண்டு முக்கிய (மார்பகம் மற்றும் பாலுறுப்பு) அறுவை சிகிச்சைகள் இருக்கின்றன. பெண்ணிலிருந்து ஆணுக்கு மாறும் மருத்துவத்தில் நுட்பமான ஏழு முக்கியமான அறுவை சிகிச்சைகள் உண்டு. முதலாவதாக உடலின் மேல்பகுதியின் ‘டாப்’ அறுவை சிகிச்சை, மார்பக நீக்கம் அல்லது மறுவடிவமைப்பை கொண்டிருக்கும்.

“நான் மாணவனாக (2012-ல்) இருந்தபோது, மருத்துவ பாடத்திட்டத்தில் இந்த சிகிச்சைகள் இடம்பெறக் கூட இல்லை. பிளாஸ்டிக் மருத்துவ பாடத்திட்டத்தில் ஆணுறுப்பு மறுவடிவமைப்பு சிகிச்சைகள்தான், காயங்கள் அல்லது விபத்துகள் ஏற்படும் பட்சத்தில் செய்வதற்கென இடம்பெற்றிருந்தன. ஆனால் இப்போது நிலை மாறிவிட்டது,” என்கிறார் புது தில்லியின் சர் கங்கா ராம் மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறையின் துணைத் தலைவரான டாக்டர் பீம் சிங் நந்தா.

PHOTO • Ekta Sonawane

2019 திருநர் சட்டம், மருத்துவப் பாடத்திட்டம் மற்றும் ஆய்வு குறித்த பரிசீலனையை பரிந்துரைத்தது. ஐந்து வருடங்கள் ஆகியும், பாலினம் உறுதி செய்யும் அறுவை சிகிச்சை போன்ற மருத்துவம் திருநர் சமூகத்தினருக்கு பெரிய அளவில் கிடைக்காமலே இருக்கிறது

2019 திருநர் சட்டம் ஒரு முக்கியமான மைல்கல். மருத்துவப் பாடத்திட்டம் மற்றும் திருநர் பற்றிய ஆய்வு குறித்த பரிசீலனையை அது பரிந்துரைத்தது. ஐந்து வருடங்கள் ஆகியும், பாலினம் உறுதி செய்யும் அறுவை சிகிச்சை போன்ற மருத்துவம் திருநர் சமூகத்தினருக்கு பெரிய அளவில் கிடைக்காமலே இருக்கிறது. அரசு மருத்துவமனைகளும் பெருமளவில் பாலின உறுதி அறுவை சிகிச்சைகளிலிருந்து தள்ளியே இருந்தன.

திருநம்பிகளுக்கான மருத்துவ வாய்ப்புகள் குறைவு. அவர்களுக்கு செய்யப்பட வேண்டிய அறுவை சிகிச்சைகளுக்கு பெண்ணியல் நோய் மருத்துவர், சிறுநீரக மருத்துவர், மறுவடிவமைப்பு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர் போன்றோர் தேவைப்படுகிறார்கள். “இதில் பயிற்சியும் திறனும் பெற்ற மருத்துவர்கள் குறைவுதான். அரசாங்க மருத்துவமனைகளில் இருக்கும் அத்தகைய மருத்துவர்கள் இன்னுமே குறைவு,” என்கிறார் தெலங்கானா ஹிஜிரா இண்டெர்செக்ஸ் ட்ரான்ஸ்ஜெண்டர் சமிதியின் செயற்பாட்டாளரும் திருநம்பியுமான கார்த்திக் பிட்டு கொண்டையா.

திருநருக்கான உளவியல் சிகிச்சைகளின் நிலையும் இதே அளவுக்கு கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது. பாலனி உறுதி அறுவை சிகிச்சைகளுக்கு முன்பு உளவியல் ஆலோசனை ஒரு சட்டப்பூர்வமான தேவை. திருநர் மக்கள் பாலின அடையாள குறைபாடு சான்றிதழை பெற வேண்டும். உளவியல் ஆலோசகர்கள் மற்றும் மருத்துவர்களிடமிருந்து தகுதி சான்றிதழ் பெற வேண்டும். சம்பந்தப்பட்டவரின் ஒப்புதல், உறுதி செய்யப்பட்ட பாலின அடையாளத்தில் வாழ்ந்த காலம், பாலின குழப்பவுணர்வின் நிலை, வயது மற்றும் புத்தி சுவாதீனத்தை உறுதிபடுத்துவதற்கான முழுமையான உள ஆரோக்கிய பரிசோதனை ஆகியவை தேவை. இவற்றுக்கு மொத்தமாக நான்கு முறை வரையேனும் உளவியல் ஆலோசகரை சந்திக்க வேண்டியிருக்கும்.

2014ம் ஆண்டின் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, இச்சமூத்துக்கென ஒருங்கிணைந்த, பரிவு கொண்ட உளவியல் சேவைகள், அன்றாடத்தை ஓட்டுவது தொடங்கி, பாலின உறுதி அறுவை சிகிச்சை வரை தேவை என்பதில் ஒத்தக் கருத்து ஏற்பட்ட பிறகும் நடக்காமலே இருக்கிறது.

“மேலே அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கான உளவியல் ஆலோசனை எனக்கு மாவட்ட மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் வரை கொடுக்கப்பட்டது,” என்கிறார் சுமித். இறுதியாக 2016ம் ஆண்டில் அவர் செல்வதை நிறுத்தினார். “ஒரு கட்டத்துக்கு மேல் சோர்வாகி விடுவோம்.”

பாலினத்தை உறுதி செய்வதற்கான முயற்சி அவரின் சோர்வை விஞ்சியது. தான் அனுபவிக்கும் மனநிலையை குறித்தும் அது வழக்கமான அனுபவம்தானா என்பது குறித்தும் அறுவை சிகிச்சைக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளவும் சுமிதி ஆய்வு செய்யத் தொடங்கினார்.

இவை யாவும், குடும்பத்துடன் அவர் வாழ்ந்த காலத்திலேயே, ரகசியமாக செய்யப்பட்டது. மருதாணி கலைஞராகவும் தையற்காரராகவும் பணிபுரிந்து, அறுவை சிகிச்சைக்கான பணத்தை அவர் சேமித்தார்.

PHOTO • Ekta Sonawane
PHOTO • Ekta Sonawane

மூன்று வேலைகள் பார்த்தாலும், சுமித்தால் பிழைக்க முடியவில்லை. தொடர் வேலை அவருக்குக் கிடைக்கவில்லை. 90,000 ரூபாய் கடன் இருக்கிறது

2022ம் ஆண்டில் மீண்டும் சுமித் முயன்றார். ரோதாக்கிலிருந்து நூறு கிலோமீட்டர் தாண்டி ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்துக்கு நண்பரான ஒரு திருநம்பியுடன் பயணித்தார். அவர் சந்தித்த தனியார் உளவியல் ஆலோசகர் இரண்டு அமர்வுகளிலேயே முடித்துக் கொண்டார். 2,300 ரூபாய் கட்டணம் பெற்று, டாப் அறுவை சிகிச்சையை அடுத்த இரு வாரங்களில் அவர் பெற்றுக் கொள்ளலாம் என சான்றளித்தார்.

ஹிசாரின் தனியார் மருத்துவமனை ஒன்றில் நான்கு நாட்களுக்கு அவர் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மற்றும் வசிப்பிடம் சேர்த்து ஒரு லட்சம் ரூபாய் ஆனது. “மருத்துவர்களும் பிற பணியாளர்களும் பரிவுடன் நடந்து கொண்டனர். அரசாங்க மருத்துவமனையில் பெற்ற அனுபவத்திலிருந்து இது முற்றிலும் வேறு அனுபவமாக இருந்தது,” என்கிறார் சுமித்.

ஆனால் இதுவும் நீடிக்கவில்லை.

ரோதாக் போன்ற சிறு டவுனில், டாப் அறுவை சிகிச்சை செய்து கொள்வதென்பது ‘வெளிப்படையாக தன்னை அறிவித்துக் கொள்வதற்கு’ சமம். LGBTQIA+ சமூகத்தினர் பலருக்கும் இது நேரும். சுமித்தின் ரகசியம் வெளிப்பட்டுவிட்டது. குடும்பத்தினரால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அறுவை சிகிச்சை முடிந்த சில தினங்களில் வீடு திரும்பியபோது, அவரது உடைமைகள் வெளியே கிடந்தன. “என் குடும்பம் என்னை வெளியேறச் சொன்னது. எந்த பொருளாதார, உளவியல் ஆதரவையும் வழங்கவில்லை. என்னுடைய நிலையை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.” டாப் அறுவை சிகிச்சை முடிந்தாலும் சட்டப்பூர்வமாக இன்னும் பெண்ணாக நீடித்த சுமித்தால், சொத்துப் பிரச்சினை நேருமே என்கிற சந்தேகம் எழுந்தது. “சிலர் நான் வேலைக்கு செல்லத் தொடங்கி ஆணுக்கான கடமைகளை செய்ய வேண்டுமென என்றும் கூறினர்.”

பாலின உறுதி அறுவை சிகிச்சைக்கு பிறகு, சற்று ஓய்வு எடுக்க வேண்டுமென நோயாளிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மருத்துவமனைக்கு அருகேயே தங்கும்படியும் கூறப்படுகிறார்கள். இது, விளிம்புநிலை மற்றும் குறைந்த வருமான பின்னணிகளில் இருந்து வரும் திருநருக்கு பொருளாதார சுமையைக் கூட்டுகிறது. சுமித்தை பொறுத்தவரை, ஹிசாருக்கு ஒவ்வொருமுறையும் சென்று வர, மூன்று மணி நேரமும் 700 ரூபாயும் ஆகும். கிட்டத்தட்ட பத்து முறை அவர் சென்று வந்துவிட்டார்.

டாப் அறுவை சிகிச்சைகளை செய்து கொண்ட பிறகு, சிகிச்சை பெற்றவர்கள் மார்பை இறுக்கி கட்டும் கச்சைகளை பயன்படுத்த வேண்டும். “இந்தியாவின் வெப்ப வானிலையில், குளிர்சாதனம் நோயாளிகளுக்கு இல்லாத சூழலால், அவர்கள் அறுவை சிகிச்சையை குளிர்காலத்தில் செய்து கொள்ள விரும்புகின்றனர்,” என விளக்கும் டாக்டர் பீம் சிங் நந்தா, வியர்வை அதிகரித்தால் தையல் போட்ட இடங்களில் தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்.

சுமித் அறுவை சிகிச்சை பெற்றதும் வட இந்தியாவின் மே மாத கொளுத்தும் வெயிலில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். “அடுத்து வந்த வாரங்கள் வலி மிகுந்தவை. மார்பு கச்சை அசைய முடியாமல் செய்தது,” என நினைவுகூருகிறார். “என் திருநர் அடையாளத்தை மறைக்காமல் ஒரு இடத்தை வாடகைக்கு எடுக்க முயன்றேன். ஆனால் ஆறு இடங்களில் நிராகரிக்கப்பட்டேன். அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதம் கூட என்னால் ஓய்வு எடுக்க முடியவில்லை,” என்கிறார் சுமித். டாப் அறுவை சிகிச்சை முடிந்து ஒன்பது நாட்கள் கழித்து, வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நான்கு நாட்கள் கழித்து, தன்னுடைய அடையாளம் குறித்து பொய் பேசாமல் வசிக்கக் கூடிய இரு அறை கொண்ட தனி வீட்டுக்கு சுமித் குடி புகுந்தார்.

தற்போது சுமித் மருதாணி கலைஞராகவும் தையற்காரராகவும் தேநீர் கடை ஒன்றில் உதவியாளராகவும் இருக்கிறார். மாதந்தோறும் கிடைக்கும் 5-7,000 ரூபாயில் பிழைப்பது அவருக்கு கடினமாக இருக்கிறது. அதில் பெரும்பகுதி வீட்டு வாடகைக்கும் உணவுக்கும் சமையல் எரிவாயுவுக்கும் மின்சாரத்துக்கும் கடனுக்கும் சென்றுவிடுகிறது. அறுவை சிகிச்சைக்கு சுமித் கட்டிய ஒரு லட்சம் ரூபாயில் 30,000 ரூபாய், அவர் 2016-2022 இடையில் சேமித்தது. மிச்ச 70,000 ரூபாயை அவர் ஐந்து சதவிகித வட்டிக்கு கடனாக வாங்கியிருக்கிறார்.

PHOTO • Ekta Sonawane
PHOTO • Ekta Sonawane

இடது: சுமித் டாப் அறுவை சிகிச்சைக்கு பணம் சேமிக்க ஒரு மருதாணி கலைஞராகவும் தையற்காரராகவும் பணிபுரிந்தார். வலது: வீட்டில் சுமித் மருதாணி வடிவங்களை போட்டு பழகுகிறார்

ஜனவரி 2024-ல் சுமித்துக்கு 90,000 ரூபாய் கடன் இருந்தது. ஒவ்வொரு மாதமும் 4,000 ரூபாய் வட்டி சேருகிறது. “நான் சம்பாதிக்கும் சிறு பணத்தில் வாழ்க்கை ஓட்டுவதையும் வட்டி கட்டுவதையும் ஒன்று சேர எப்படி செய்வதென தெரியவில்லை. எனக்கு வழக்கமான வேலையும் கிடைக்கவில்லை,” என்கிறார் சுமித். பத்தாண்டு காலமாக அவர் மேற்கொண்ட கடினமான பயணமும் உழன்ற தனிமையும் தூக்கமின்மையையும் பதற்றத்தையும் அவருக்கு அளித்திருக்கிறது. “மூச்சடைப்பது போல் இருக்கிறது. வீட்டில் தனியாக இருக்கும்போது, பதட்டமாகி தனிமையால் பயம் ஏற்படுகிறது. இதற்கு முன் இப்படி இருந்ததில்லை.”

வீட்டை விட்டு வெளியேற்றிய ஒரு வருடம் கழித்து மீண்டும் அவருடன் பேசத் தொடங்கி இருக்கும் குடும்பத்தினர், அவ்வப்போது அவர் கேட்கும்போது பண உதவி செய்கின்றனர்.

இந்தியாவில் வெளிப்படையாக பெருமையுடன் திருநராக சொல்லிக் கொள்ளும் வாய்ப்பில்லாத நிலையில், தலித்தான சுமித்துக்கு இன்னும் சிரமம் அதிகம். உண்மை வெளியாகி, ‘உண்மையான ஆண் இல்லை’ என முத்திரை குத்தப்படுமோ என்ற பயம் அவரை அலைக்கழிக்கிறது. மார்பகங்கள் இன்றி, ஆணுக்குரிய வேலைகள் எல்லாவற்றையும் அவரால் சுலபமாக ச்ய்ய முடிகிறது. ஆனால் ஆணுக்கான பிற அடையாளங்களான மீசை, அடித்தொண்டை குரல் போன்றவை இல்லாமல், சந்தேகமான பார்வைகள் விழுவதை அவரால் தவிர்க்க முடியவில்லை. அதே போல அவரின் பெயரும் இன்னும்  மாற்ற முடியாமல்தான் இருக்கிறது.

ஹார்மோன் மாற்று சிகிச்சைக்கு அவர் இன்னும் தயாராகவில்லை. அதன் பக்கவிளைவுகள் என்னவென அவருக்கு தெரியவில்லை. “ஓரளவுக்கு பொருளாதாரம் வளர்ந்ததும் நான் அதை செய்து கொள்வேன்,” என்கிறார் சுமித்.

அவர் அளந்து தன் அடிகளை வைக்கிறார்.

டாப் அறுவை சிகிச்சை முடிந்த ஆறு மாதங்களுக்கு பிறகு, திருநம்பி என சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தில் பதிவு செய்து, தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட திருநர் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை பெற்றுக் கொண்டார். இந்தியாவின் முன்னோடி திட்டமான ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பாலின உறுதி அறுவைசிகிச்சை உள்ளிட்ட சேவைகளை, வாழ்வாதாரம் மற்றும் தொழிலுக்கான விளிம்புநிலை மக்களுக்கான ஆதரவு ( SMILE ) திட்டம் வழங்கச் செய்கிறது.

”மாற்றம் முழுமை பெற இன்னும் எத்தனை அறுவை சிகிச்சைகளை நான் செய்து கொள்ள வேண்டுமென தெரியவில்லை,” என்கிறார் சுமித். “அவற்றை மெல்ல நான் செய்து கொள்வேன். என் பெயரையும் மாற்றிக் கொள்வேன். இது தொடக்கம்தான்.”

இந்தியாவில் பாலியல் மற்றும் பாலின ரீதியிலான வன்முறைக்கு (SGBV) ஆளாகி மீண்டவர் ஆதரவு பெற சமூகத்திலும் நிறுவனங்களிலும் அமைப்பிலும் எத்தகைய தடைகள் இருக்கின்றன என்பதை பற்றிய நாடு முழுவதிலுமான செய்தி சேகரிக்கும் பணியில் ஒரு பகுதிதான் இக்கட்டுரை. இது இந்தியாவின் எல்லை கடந்த மருத்துவர்கள் அமைப்பின் முன்னெடுப்பு ஆகும்

மீண்டவர்களில் பெயர்களும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களும் அவர்களின் பாதுகாப்பு கருதி மாற்றப்பட்டிருக்கிறது

தமிழில் : ராஜசங்கீதன்

Ekta Sonawane

ਏਕਤਾ ਸੋਨਵਾਨੇ ਇੱਕ ਸੁਤੰਤਰ ਪੱਤਰਕਾਰ ਹਨ। ਉਹ ਜਾਤ, ਵਰਗ ਅਤੇ ਲਿੰਗ ਦੇ ਅੰਤਰਾਲ 'ਤੇ ਲਿਖਦੀ ਅਤੇ ਰਿਪੋਰਟ ਕਰਦੀ ਹਨ।

Other stories by Ekta Sonawane
Editor : Pallavi Prasad

ਪੱਲਵੀ ਪ੍ਰਸਾਦ ਮੁੰਬਈ ਅਧਾਰਤ ਸੁਤੰਤਰ ਪੱਤਰਕਾਰ, ਯੰਗ ਇੰਡੀਆ ਫੈਲੋ ਅਤੇ ਲੇਡੀ ਸ਼੍ਰੀ ਰਾਮ ਕਾਲਜ ਤੋਂ ਅੰਗਰੇਜ਼ੀ ਸਾਹਿਤ ਵਿੱਚ ਗ੍ਰੈਜੂਏਟ ਹਨ। ਉਹ ਲਿੰਗ, ਸੱਭਿਆਚਾਰ ਅਤੇ ਸਿਹਤ ਬਾਰੇ ਲਿਖਦੀ ਹਨ।

Other stories by Pallavi Prasad
Series Editor : Anubha Bhonsle

ਅਨੁਭਾ ਭੋਂਸਲੇ 2015 ਦੀ ਪਾਰੀ ਫੈਲੋ, ਇੱਕ ਸੁਤੰਤਰ ਪੱਤਰਕਾਰ, ਇੱਕ ਆਈਸੀਐਫਜੇ ਨਾਈਟ ਫੈਲੋ, ਅਤੇ ਮਨੀਪੁਰ ਦੇ ਮੁਸ਼ਕਲ ਇਤਿਹਾਸ ਅਤੇ ਆਰਮਡ ਫੋਰਸਿਜ਼ ਸਪੈਸ਼ਲ ਪਾਵਰਜ਼ ਐਕਟ ਦੇ ਪ੍ਰਭਾਵ ਬਾਰੇ ਇੱਕ ਕਿਤਾਬ 'ਮਾਂ, ਕਿੱਥੇ ਮੇਰਾ ਦੇਸ਼?' ਦੀ ਲੇਖਿਕਾ ਹਨ।

Other stories by Anubha Bhonsle
Translator : Rajasangeethan

ਰਾਜਸੰਗੀਥਨ ਚੇਨਈ ਅਧਾਰਤ ਲੇਖਕ ਹਨ। ਉਹ ਤਾਮਿਲ਼ ਦੇ ਪ੍ਰਮੁੱਖ ਨਿਊਜ਼ ਚੈਨਲ ਨਾਲ਼ ਇੱਕ ਪੱਤਰਕਾਰ ਵਜੋਂ ਕੰਮ ਕਰਦੇ ਹਨ।

Other stories by Rajasangeethan